அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ தெரியவில்லை. எந்த வேலையும் இன்றி, இன்று ஶ்ரீராமாநுஜர் ஜெயந்தி என்பதையும் மறந்து சில
மராமத்து வேலைகளைச் செய்து, வெயிலுக்காக சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, சுமார் மாலை 4.30 தொலைபேசி அழைத்தது.

"ஶ்ரீமத் ராமாநுஜர் தேவரீர் க்ருஹத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார் தயாராக இரும் என்று" என்று தகவல் கூறப்பட்டது.
திகைத்துப்போய் விழித்துப்பார்த்தேன். ப்ரஜ்ஞையே இல்லாதவனுக்கு எப்படி இந்த அநுபவம் வாய்த்தது?

அடுத்த திகைப்பு, சுமார் 5.45 மணியளவில் மிக மிக அழகிய தேசுபொருந்திய திருமேனியுடன் கூடிய ஶ்ரீமத் ராமாநுஜரை
அடியேனுடைய அத்தான்கள் (அத்தை பிள்ளைகள்) ஏளப்பண்ணிக்கொண்டு வாசலில் சில பக்தர்களுடன் வேனில் வந்து
இறங்கினார்கள்.

அவசர அவசரமாக தேவிகளைக் கொண்டு ஆரத்தி எடுத்து உள்ளே ஆத்து ஸந்நிதியில் ஏளப்பண்ணி சில மணித்துளிகள்
அடியோங்களுக்குத் தெரிந்த சில பாசுரங்களைச் சேவித்து, அர்க்ய, பாத்யம் ஸமர்ப்பித்து, சிறு அர்சனை செய்து,
பழங்களை அமிசை செய்துவைத்து ஹாரத்தி எடுத்து பக்தர்களுக்கு சிறிது பானங்கள் பருகக் கொடுத்து,
முடிந்த அளவிற்கு ஸம்பாவனையும் செய்து அனுப்பி வைத்தோம்.

தாம்பரம், கேம்ப்ரோடு வழியாகச் சென்றால், திருவஞ்சேரி என்ற ஒரு கிராமம் உண்டு,
அங்கே ஶ்ரீராமர் ஸந்நிதியில் 04-05-2012ல் ப்ரதிஷ்டை செய்வதற்காக ஏளப்பண்ணப்பட்ட ஶ்ரீமத்ராமாநுஜரை
இன்று ஶ்ரீமத்ராமாநுஜ ஜெயந்தி என்பதால் ஸத் கைங்கர்யம் பண்ணும் உமது க்ரஹத்திற்கு
முதலில் ஏளப்பண்ணவேண்டும் என்று அடியோங்களுக்குத் தோன்றியது - என்றார்கள்.

இதோ அந்தக்க காட்சிகளையும் இதனால் அடியேனுக்கு ஏதேனும் புண்ணிய பாக்யம் கிட்டியிருக்குமானால்
அந்தப் புண்ணியங்களையும், இந்த இணையதளஸேவைக்காக மனமுவந்து நன்கொடை அளித்துவரும்
அனைவருடனும், மற்றும் ஆதரவளித்துவரும் அனைத்து உறுப்பினர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
தாஸன்