Dear friends,
The Temple of Sri.Adhi Kumbeswarar, after whom the town was named as Kumbakonam,is known for its Masi Makam festival. Once in 12 years it celebrates the MahaMakam. The temple tank is huge. It is a must see temple.
Furnished below are some details regarding the temple.
Varadarajan


ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்,கும்பகோணம்

மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
உற்சவர் : -
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : மகாமகம், காவிரி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்குடமூக்கு
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.


திருவிழா:

மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.


உலகம் அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர்பெற்றார். கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து, பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து, சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும்.பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு, அஷ்ட புஜ துர்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர்,ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும். இதன்பிறகு, நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால், வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.பிரார்த்தனை

கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும்,நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது.

இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர்.

நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும்.

மங்கள நாயகி: இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மகாமக தீர்த்தம்: ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.

சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் "ஆதி விநாயகர்' எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.


தல வரலாறு:


முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், ""நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய்.

அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு,'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது.

கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91-435- 242 0276.

ஆதாரம்......தினமலர்