தித்திப நியாயம் என வழங்கப்படும் இது தித்திப பறவை பற்றிய அற்புத நியாயம்.

இந்த நியாயம் எழுந்ததற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு. தித்திபம் என்னும் பறவை ஒன்று கடற்கரை ஓரத்தில் கூடு ஒன்று கட்டி முட்டை ஒன்றை இட்டுக் காத்து வந்தது. ஒரு நாள் கடற்கரை பொங்கி எழ, அந்தக் கூடு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மனம் கலங்கிய பறவை சமுத்திரத்தின் மீது போர் தொடுத்தது. தன் மூக்கால் நீரை எடுத்ததோடு தன் சிறகுகளை கடலில் நனைத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து கரையில் உதறியது. இப்படியே மீண்டும் மீண்டும் அது செய்ய ஆரம்பித்தது. சமுத்திரத்தை வற்ற வைக்கும் தன் முயற்சியை அது கைவிடவே இல்லை! பறவையின் உறுதியைக் கண்ட சமுத்திர ராஜன் வியந்து பறவையிடம் அதன் முட்டையைத் திருப்பித் தந்தான்.
எவ்வளவு தான் கஷ்டம் ஒருவனுக்கு இருந்த போதிலும் மனதில் உறுதி இருந்தால் அது கரைந்து வெற்றி கிடைத்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
விடாமுயற்சி வெற்றி தரும் என்பது பழமொழி.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - திருக்குறள் 619

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
செவ்வி காலம்
குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கத்தில் 53வது பாடல் இது.
இதை விளக்க அழகிய கதை ஒன்று உண்டு. ஒரு முறை சர்ச்சில், ஹிட்லர், ஸ்டாலின் ஆகிய மூன்று பேரும் ஒரு நீச்சல் குளத்தின் அருகே நின்று கொண்டு தம்மில் யார் பெரியவர், யார் வெற்றியாளர் என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். முடிவில்லாத விவாத்தின் முடிவில் ஒரு போட்டி மூலமாக வெற்றி பெற்றவர் யார் என்று முடிவு செய்யப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒரே ஒரு குட்டி மீனை யார் பிடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.
முதலில் ஹிட்லர் தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். மீனை நோக்கிச் சுட்டார். அது துள்ளி ஓடியது. எத்தனை முறை சுட்டாலும் அதைப் பிடிக்கவே முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக் கொண்ட ஹிட்லர் ஸ்டாலினை அதைப் பிடிக்குமாறு கூறினார். ஸ்டாலின் உடனே குளத்தில் குதித்தார். மீனைத் துரத்தினார். ஆனால் ஸ்டாலின் இந்தக் கோடியில் இருக்கும் போது மீன் குளத்தின் மறு கோடிக்கு ஓடியது. நீந்தி நீந்திக் களைத்த ஸ்டாலின் மேலே வந்து சர்ச்சிலை நோக்கி, "இனி உங்கள் முறை" என்றார்.
சர்ச்சில் பதற்றமின்றி ஒரு சிறிய ஸ்பூனை கையில் எடுத்துக் கொண்டார். நீச்சல் குளத்தின் நீரை ஸ்பூனால் எடுத்து வெளியே விட்டு ஒன்று என்றார். இப்படியே அவர் எண்ணிக் கொண்டு போவதைப் பார்த்த ஹிட்லரும் ஸ்டாலினும்." என்ன செய்கிறீர்கள்" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். "குளத்தின் நீர் வற்றினால் மீன் தானாகப் பிடிபடப் போகிறது. அது தான் இந்த நீரை எடுத்து வெளியில் விட்டுக் குளத்தைக் காலி ஆக்குகிறேன். மீன் நிச்சயம் சிக்கி விடும் இல்லையா?" என்றார் சர்ச்சில்!

இது தான் விடாமுயற்சியின் வெற்றியைச் சொல்லும் துணுக்கு.
இந்த விடாமுயற்சியின் மேன்மையை விளக்க ஆயிரக்கணக்கான செய்யுள்கள் உண்டு,
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் - திருக்குறள் 611
என்பது உள்ளிட்ட நூற்றுக் கணக்கான பாடல்கள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends