courtesy: N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan


சமஷ்டி வியஷ்டி பிரணவங்கள்
==================================
ஒங்காரம் சமஷ்டி பிரணவம். மற்ற பீஜங்கள்வியஷ்டி-குறிப்பாக பாலயின் பீஜங்கள்- ஐம் க்லீம் சௌஹு. த்ரிதாரியை சேர்த்து வரும் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லீம் சௌஹு என்ற் சடாக்ஷரியாக வரும் பாலையின் முன்னர் வரும் ஒங்காரம் சமஷ்டியாகவும் மற்ற ஆறு பீஜாக்ஷரங்களும் வியஷ்டியாகவும்
சொல்லப்பட்டதை படித்த நினைவு.
இங்கு அகார மகார உகாரங்களை வியஷ்டி என்று குறிப்பிட பட்டுள்ளது.
இஷ்டமுள்ள பெரியோர்கள் விளக்க வேண்டுகிறேன்.
ஓங்காரம் என்பதே பிரணவம்; முழுமுதற் கடவுளான விநாயகரே. பிரணவஸ்வரூபி விநாயகரின் தும்பிக்கையோடு கூடிய உருவத்தைக் கற்பனை
செய்தால் ஓங்காரத்துள் அடங்கியிருப்பதை உணரலாம்.
கருவில் குழந்தை: தாயின் கருவறையில் குழந்தை தலையும், கால்களும் ஒருசேர சுருண்டு படுத்திருக்கும் நிலையும் ஓங்கார வடிவமே. காதுகள்
இரண்டும் ஓங்கார வடிவமே (கர்ண பூஷணத்துடன்) அதனால் தான் குழந்தைகள் காதில் துளையிடும் (கர்ணபூஷண) விழா செய்கிறோம்.
ஓங்காரத்திலுள்ள மகரத்திற்கு புள்ளி வைப்பதே காதுகுத்துதல்!
ஞானபண்டிதன் பாலமுருகன் பிரம்மனிடம் "ஓங்காரம் என்னும் பிரணவத்தின் பொருள் அறிவாயோ? கூறு" என்றான். பிரம்மன் கூறமுடியாமல்
விழித்தான். அதனால் பிரம்மனை தலையில் குட்டி சிறையில் இட்டான் என்ற கதை யாவரும் அறிந்தது.
உண்மையிலேயே பிரம்மனுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாதா? பிறகு ஏன் சொல்லவில்லை? என்பதெல்லாம் தேவரகசியம். சிறுவனாகிய
முருகனிடம் அதை வெளிப்படுத்துவது தவறாகுமோ? சிவன் முதலிய தேவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ? என்ற அச்சத்தில் கூட பிரம்மன்
கூறாமலிருந்திருக்கலாம். மேலும் சீடனாக இருந்து குருவிடம் கேட்க வேண்டியதை சிறுபாலன் விளையாட்டாய்க் கேட்டதாலும்
சொல்லாமலிருந்திருக்கலாம். "அதை உன்னிடம் சொல்ல மாட்டேன்" என்று சொன்னாலும் குமரனின் கோபத்திற்காளாக நேரிடும் அதனாலும்
கூறாமலிருந்திருக்கலாம். ஆக இது ஞானவேலைக் கையிலேந்திய ஞானபண்டிதன் முருகன் யாவும் அறிந்தவன் என்பதை உலகிற்கு உணர்த்த
நடந்ததொரு திருவிளையாடலே! பிரம்மனைக் குட்டி சிறையிலடைத்தது முருகனின் சர்வ வல்லமையை வெளிப்படுத்தியது.
ஓங்காரத்தின் சிறப்பு. இச்சா சக்தி ஓர் அருள் வீழ்ச்சியாகும். அது சுத்தமாயை ஆகிய சக்கரத்தில் விழுந்து சக்கரத்தை சுழலச் செய்கிறது. இவ்வாறு
சுத்தமாயை சுழல்வதால் குடிலா சக்தி பிறக்கிறது. அந்தக் குடிலா சக்தியின் வடிவமே ஓம்.
நாதவிந்து. சுழலும் வட்டமான சுழிலே விந்து எனப்படும். சுழியுடன் நீண்டு பிறக்கும் கோடுதான் நாதம். விந்து சுழன்று நாதம் நேராய்ப் பிறக்கிறது.
சுழியும் கோடும் சேர்ந்துதான் 'உ' என்ற பிள்ளையார் சுழி.
'நாதவிந்து கலாதி நமோநம' -திருப்புகழ்
எனவே பராசக்தி ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, குடிலாசக்தி என்ற ஆறும் சிவபெருமானின் தனிப்பெருங்கருணையின் விளைவு!
அதனால் தோற்றுவிக்கப்பட்டதே பிரணவம்!
ஒடுக்கமும் தோற்றமும். ஊழிக்காலத்தில் ஒடுங்கும் அனைத்தையும் இறைவன் ஓங்காரத்தில் ஒடுக்குகிறார். ஓங்காரத்திலிருந்தே சராசரங்களும்
தோன்றுகின்றன.
"ஓங்காரத்தின் உள்ளே ஒடுங்கிய ஐம் பூதங்கள்
ஓங்காரத்தின் உள்ளே உதித்த சராசரம்"
-திருமந்திரம்.
பிரிவுகள் பிரணவம் இரண்டாகப் பிரிகிறது.
அவை சமஷ்டி பிரணவம்; வியஷ்டி பிரணவம்.
சமஷ்டி பிரணவம் 'ஓம்' என்பதன் தொகுப்பு. வியஷ்டி அகர, உகர, மகாரம் என வகுத்துக் கூறுவது.
'அ' என்னும்போது வாய்திறக்கிறது. 'உ' என்னும் போது குவிகிறது. அகரம் உயிர்களைப் பிறப்பிக்கிறது. உகரம் உயிர்களைக் காத்தல். அதிக முயற்சியின்றி
இயல்பாக ஒரு முறை வாய் திறந்து மூடுவதாலேயே பிரணவம் மனிதனை விட உயர்வு பெறுகிறது. இறைத்தன்மையுடைய ஒலியாகிறது!
ஐந்து நிலை. அகர, உகர, மகர, விந்து, நாதம் இவை ஐந்தும் பிரம்மா, திருமால், ருத்திரன், மகேசன், சதாசிவம் ஆவர். இதனை சிவஞானபோதம் கூறுவதைப்
பார்ப்போம்.
எண்ணிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவம்
தண்ணிய விந்துவொடு நாதத்து-கண்ணில்
பகர் அயன், மாலோடு, பரமன் ஆதிதெய்வம்
அகர, உகர, மகார மதாம்.
-சிவஞானபோதம்
திருமூலரும், மெய்கண்டாருமாகிய தமிழ் ஞானிகள் ஓங்காரத்தை விளக்கியது போல் உபநிஷதங்கள் உயர்வாய் கூறுவதையும் பார்ப்போம்.

நான்குபாகம். வியஷ்டி பிரணவம் அகர, உகர, மகாரம் என மூன்று பாகங்களால் சொன்னது. நான்காவது பகுதியாகிய துரியம் என்பதும் உள்ளதை
உபநிஷதங்களால் அறியலாம்.
உலகம் , ஜீவன், பிரம்மம். மாண்டூக்ய உபநிஷதத்தின்படி இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் ஓங்காரம்தான். முக்காலத்துக்கும் அப்பாற்பட்டதும் ஓங்காரமே!
ஓங்காரத்தின் பெருமையை இந்த உபநிஷதம் விரிவாகக் கூறுவதால் இதற்கு 'ஓங்காரோபநிஷதம்' என்ற பெயரும் உண்டு.
'அகரம்' நம் விழிப்பு நிலையான வைச்வானரன் என்று கூறப்படுகிறது. 'உகரம்' கனவு நிலையான 'தைஜனன்' என்றும்; மற்றும் 'மகரம்' ஆழ்ந்த
உறக்கநிலையான 'ப்ராக்ஞன்' என்றும் கூறுவார்கள்.
நான்காவது பகுதி செயல்களற்றதும் புரிந்து கொள்ள முடியாததும், பிரபஞ்ச உண்மையைக் கடந்ததும், மங்களமானதும், இரண்டற்றதுமாகும்.
ஜீவன்களும் பிரம்மமேயன்றி வேறில்லை என்பதை இந்த உபநிஷதம் ஓங்காரத்தின் மூலம் விளக்குகிறது (அத்வைத நிலை)
தியானமும் உச்சரிப்பும். "ஓங்காரத்தை முழுமன ஒருமைப்பாட்டுடன் தியானிப்பதால் வேதாந்த உண்மைகள் அனுபவ உண்மைகளாகின்றன" என்று
அருணகிரிநாதரின் திருப்புகழ் கூறுகிறது.
எப்படி மணியோசை அமைதியிலிருந்து எழுந்து உயர்ந்து, பின் அமைதியிலேயே கரைகிறதோ அதேபோல ஓங்காரத்தை உச்சரிக்கும் போது
மென்மையாக ஆரம்பித்து சிறிது சிறிதாக ஒலியை அதிகமாக்கி மீண்டும் மென்மையாக நிறுத்த வேண்டும். எண்ணெய் ஒழுக்குபோல். ஒருமுறை
உச்சரிக்கும்போது இடைவெளி வரக்கூடாது
"தைலதாராமி வாச்சிந்தம்:
கண்டா நிதாதத் தியானபிந்து |
-உபநிஷதம் 18
பிரணவ மந்திரத்தை மேலான ஒளி உருவில் தியானிக்க வேண்டுமென்று சாண்டில்ய உபநிஷதம் கூறுகிறது.
இறைவடிவமான ஓங்காரத்தை இதயத் தாமரையின் மத்தியில் கைப்பெருவிரல் அளவிலான அசைவற்ற தீபமாக தியானிக்க வேண்டும் என்று
தியானபிந்து உபநிஷதம் தெளிவு படுத்தியுள்ளது.
அகாராதி த்ரயாணாம் ஸர்வகாரண ஏகாக்ஷரம் பரம்ஜ்யோதி:
பிரணவம் பவதி தியாயேத் ||
-சாண்டில்ய உபநிஷதம் 1-6
ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே ஸ்திரதீப நியாக்ருதிய:
அங்குஷ்ட மாத்ர மசலம் த்யாயேத் ஓங்கார மீச்வரம் ||
-தியானபிந்து உபநிஷதம் 19
பலன்கள் "ஓங்காரத்தை வாழ்நாள் முழுவதும் தியானம் செய்யும் ஒருவன் எந்த உலகத்தை அடைகிறான்?" என்று சத்யகாமன் என்னும் சீடன் குரு
பிப்பலாதரிடம் கேட்டான்.
பிப்பலாதர் அளித்த பதில்: ஓங்காரமந்த்ரம் உயர்நிலை, சாதாரணநிலை என்று இறைவனின் இருநிலைகளாக உள்ளது. தியானிப்பவன் இரண்டு
நிலைகளில் ஒன்றை அடைகிறான்.
ஓங்காரத்தின் மூன்று பகுதிகளையும் தனித்தனியே உபாசித்தால் அடைவது அநித்யமான உலகங்கள். உலகங்கள் ஒன்று சேர்த்து உபாசித்தால்
அடைவது முத்தி.
உத்கீதம் சாந்தோக்ய உபநிஷதத்தின் முதல் அத்யாயம் 'உத்கீத' வித்தையில் ஆரம்பமாகிறது. எனவே ஓங்காரத்திற்கு உத்கீதம் என்று பெயர்.
இயற்கையில் ஓங்காரம் உலகில் எங்கும் உள்ள பஞ்சபூதங்களில் முக்கியமானவை காற்றும், நீரும். காற்றின் விசையால் கடல் நீரில் அலைகள் எழும்
அவை எழுப்பும் ஓசை அலை ஓசை. சற்றுத் தொலைவிலிருந்து அலை ஓசையை உற்றுக் கேட்டால் அதில் ஓங்காரநாதம் ஒலிக்கும்.
அதேபோல் காற்று வேகமாக வீசும்பொழுது ஓங்கார ஒலியைக் கேட்க முடியும். இவை மனிதர்கள் எழுப்பும் செயற்கை ஒலி அல்ல. இறைவனின்
குரலாக ஒலிக்கும் இயற்கை ஒலி; அருள் ஒலி; அருள் ஓசை.
இதையே நம் வாயால் ஒலிக்கும்போது காற்றுடன் கலந்து (இயற்கை) ஒலிக்கிறது; நம் இதயத்துள் சென்று பதிகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends