Announcement

Collapse
No announcement yet.

Sri Appayya Dikshitar charitram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Appayya Dikshitar charitram

    Sri Appayya Dikshitar charitram
    courtesy:www.shaivam.org

    சிவமயம்
    ஸ்ரீ மஹாதேவ ஜயம்


    ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர்
    திவ்ய சரித்ரம்
    (Sri appayya dIkshitar divya charthram)
    வக்ஷஸ்தலாசாரியர்
    புண்ணியம் செய்து பிறந்து வசிக்கும் உத்தமர்களுடன் பிரகாசிக்கும் துண்டீர (தொண்டை) மண்டலம் என்ற நாட்டுக்கு அமராவதி போலவும், பாரத பூமிக்கு ஒட்டியாணம் போலவும், காஞ்சீபுரம் என்ற பெயருடைய ராஜதானி உள்ளது அதில் கருணாஸமுத்ரமான ஸ்ரீ ஏகாம்ரநாதரும், கல்பதரு-சிந்தாமணியான ஸ்ரீ காமாக்ஷியும் ஸாந்நித்யமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இந்த புண்யபுரியின் ஸமீபத்தில் ஆரணி என்ற நகரம் உள்ளது. அதன் ஸமீபத்தில் அடையப்பலம் என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆசாரம், அனுஷ்டானம், எப்போதும் அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் போன்ற புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்துவரும் வித்வான்கள், கவிதா ஸாமர்த்யம், ஸகலபாஷாஞானம், ஸகலவேதசாஸ்த்ர ஸம்பத்துடன் விளங்கி வந்தார்கள். அங்கு வசித்துவந்த ஜனங்களுடைய பாண்டித்யம் பிருஹஸ்பதி, வஸிஷ்டரிஷி போன்ற மஹரிஷிகளும் போற்றும்படி விளக்கத்துடன் இருந்தது.
    இத்தகைய பெருமைகள் வாய்ந்த அந்த அடையப்பலம் என்ற கிராமத்தில் வக்ஷஸ்தல கணபதியை உபாசனம் செய்து கொண்டு இருக்கும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தஆசார்யதீக்ஷீதர் என்ற பெயருடன் அத்வைத சாஸ்த்ர உபதேசகர் ஒருவர் இருந்தார். அவர் விஜயநகர ராஜாவான கிருஷ்ணதேவராயரது ஆஸ்தான வித்வானாக அவரால் மிகவும் போற்றப்பட்டு வந்தார்.
    ரங்கராஜாத்வரி
    வக்ஷஸ்தலாசார்யர் என்ற இந்த மஹானுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களில் முத்தவரான ரங்கராஜார்வரி என்றவர்தான் ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷிதர் அவர்களின் தந்தையாராவர். ரங்கராஜாத்வரி 'அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்' முதலான கிரந்தங்களை இயற்றியவர். இவரது மாதாமஹர் (தாயின் தந்தை) வைஷ்ணவகுலத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைகுண்டாசார்யர் என்பவராவர். அந்தக் காலம் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லாமல் ஸ்நேஹமாக இருந்தமையால் வக்ஷஸ்தலாசாரியர் அந்த வைஷ்ணவரின் பெண்ணை மணந்து கொண்டார். அந்த வைஷ்ணவ மனைவிக்குப் பிறந்த பிள்ளை தான் ரங்கராஜாத்வரி. மாமனார் இஷ்டப்படி பெயர் வைத்தபடியால் வைஷ்ணவப் பெயருடன் விளங்கினார். வக்ஷஸ்தலாசாரியார் கலிபிறந்து 4630-ம் ஆண்டு சிவஸாயுஜ்யம் அடைந்தார்.
    ஸ்ரீமார்க்கஸஹாயப் பெருமானின் அனுக்கிரஹம்
    அந்த ஸமயம் இந்த நாட்டை சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா ஆண்டு வந்தார். சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தனர். நமது ஸ்ரீரங்கராஜாத்வரியையும் இவர்கள் ஆதரித்து வந்தனர். ஸ்ரீரங்கராஜாத்வரியின் வயது இருபத்து நான்கு தான் என்றாலும் உசிதகாலத்தில் விவாஹமாகி இல்லறம் நடத்தி வரும்போது குழந்தை பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்தி, ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாயரான தனது குலதெய்வத்தை வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ மார்க்கஸஹாயர் என்ற பெயருடன் விரிஞ்சீபுரம் என்ற க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் மூர்த்தியாக விளங்குகின்றார். சிவபெருமான் எங்குக் கோயில் கொண்டாலும், அங்கு ஒரு திருநாமம் ஏற்று நாமரூபமில்லாத மூர்த்தியாக ஞானிகளுக்கும், நாம ரூபத்தை ஏற்று ஒன்றும் அறியாத மனித சமூகத்திற்கும் தமது திருவருளைப் பொழிகின்றார். பிள்ளைப் பேறுவேண்டிய ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு பரம கருணையுடன் ஸ்ரீமார்க்கஸஹாயர் அசரீரியாக "குழந்தாய் ரங்கராஜ! சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிகின்றேன். நீ அங்கு வருவாயாக" என்று அருளிச்செய்தார். இந்த அசரீரி வாக்கைக் கேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி ஆனந்தத்தில் மூழ்கினார்.
    சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் அனுக்கிரஹம்
    அசரீரி வாக்குகேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி உடனே மனைவியுடன் சிதம்பரம் சென்றார். அவர்கள் சிதம்பரம் சென்றவுடன் அவர்களது புத்ரலாப ப்ரதிபந்தகம் அவர்களை விட்டு விலகியது. அந்த தம்பதிகள் தினந்தோறும் சிவகங்கையில் ஸ்நானம் செய்து மூன்று வேளைகளிலும் சிவதரிசனம் செய்து ஸ்ரீநடேசப்பெருமானை ஆராதனம் செய்தார்கள். இப்படி ஐந்துவருஷம் சென்றது. நாள்தோறும் நடராஜ மூர்த்தியின் சன்னிதியில் இருந்து இந்த தம்பதிகள், "ஹே ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைக்கப்போகிறீர்கள்" என்று மனமுருக வேண்டினார்கள். ஒருநாள் இம்மாதிரி மனங்கரைந்து திருவருளைவேண்டிய பிரார்த்தித்து நின்ற அந்த தம்பதிகட்கு திடீரென்று ஆகாசத்தில் ஒரு சத்தம் கேட்டது. "ஹே பக்தசிகாமணியே! உன்னுடைய தவத்தினால் நான் மனம் மகிழ்ந்தேன். உனக்குச் சீக்கிரமாகப் புத்திரர்கள் இருவரும், பெண் ஒருத்தியும் பிறக்கப் போகிறார்கள்" என்று அருளிச்செய்தார். இதனைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ஸ்ரீரங்கராஜாத்வரி தனது இல்லம் சேர்ந்து அன்று இரவு இருக்கும்போது ஸ்ரீநடராஜப் பெருமான் பூஜகர் உருவத்தில் வந்து பகவானின் அபிஷேக தீர்த்தம் என்று கூறி பழரசத்தைச் சாப்பிடும்படி ஸ்ரீரங்கராஜாத்வரியின் பத்தினியிடம் கொடுத்து மறைந்தார். அந்தப் பழரசத்தை அந்த அம்மையார் சாப்பிட்டதும் சிவபெருமானின் திருவருளால் கர்ப்பம் ஏற்பட்டது.
    தீக்ஷிதேந்திரரின் திருவவதாரம்
    ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவருளால் கர்ப்பம் தரித்து, பத்து மாதங்கள் பூரணமாக ஆனதும் ஒரு பிரமாதீச வருஷத்தில், புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்திரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் மஹாபாக்கியமான புண்ணிய ஸமயத்தில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் திருஅவதாரம் செய்தார்கள். இது கலிவருஷம் 4634 என்றும், ஆங்கில ஆண்டு 1554 என்றும் ஸ்ரீசிவானந்தயோகி என்பவர் தமது தீக்ஷிதேந்திர சரிதத்தில் நிரூபித்துள்ளார். திருவவதாரத்தை விளக்கும் இரண்டு ச்லோகங்கள் பின் வருமாறு:
    வீணாதத்வக்ஞ ஸங்க்யாலஸித கலிஸமாபாக் ப்ரமாதீசவர்ஷே கன்யாமாஸே(அ) த க்ருஷ்ணப்ரதமதியுதே (அ) ப்யுத்தர ப்ரோஷ்டபாத்பே | கன்யாலக்னே(அ) த்ரிகன்யாபதிரமிததயாசேவர்திர் வைதிகேஷு ஸ்ரீதேவ்யை ப்ராக்ய்தோக்தம் ஸமஜநி ஹி விரிஞ்சீசபுர்யாம் மஹேச:|| லக்னே ரவீந்துஸுதயோ: மகரே ச மாந்தெள மீனே சசின்யத வ்ரூஷே ரவிஜே ச ராஹெள | சாபே குரெள க்ஷிதிஸுதே மிதுனே துலாயாம் சுக்ரே சிகின்யலிகதே சுபலக்னஏவம் ||
    கன்யா லக்னத்தில், லக்னத்தில் சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாத்தில் சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் அமைந்த இந்த அற்புதமான ஜாதக அமைப்பில் நமது ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் அவதரித்து அருளினார்கள்.
    இப்படிப் பிறந்து விசேஷமாய் பிள்ளை பிறந்த சந்தோசஷத்தை ஸ்ரீரங்கராஜாத்வரி கொண்டாடினார். ஸ்னானம் செய்து கோதானம், பூதானம் ஆகியவைகளை விசேஷமாகச் செய்து, ஜாதகர்மா செய்து, பதினொன்றாம் நாளில் குழந்தைக்கு 'விநாயக சுப்ரமணியன்' என்று திருநாமம் சூட்டி, நாமகரணத்தை வைதிக முறையில் நன்கு செய்தார். அருமையாகப் பெற்ற குழந்தையை அப்ப என்றழைத்தும், அப்பய்ய, அப்பய, அப்ப என்றெல்லாம் அழைத்தும் பரமானந்த நிலையை அடைந்தார். குழந்தை அப்பய்யன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தாய் தந்தையரின் மனம் மகிழ்ச்சியடையும்படி தாலாட்டுதலையும், பாராட்டுதலையும் பெற்று அவர்களுடைய அரும்பெரும் முத்தங்களையும் பெற்று வளர்ந்து வந்தார். இரண்டு வருஷங்கள் சென்றதும், ஸ்ரீரங்க ராஜாத்வரிக்கு இன்னொரு பிள்ளையும் பிறந்தது. அந்தப் பிள்ளைக்குத் தனது தந்தையார் பெயரான ஆசார்ய தீக்ஷிதர் என்ற பெயரை வைத்தார். இவர் ஆச்சா தீக்ஷிதர் அல்லது ஆச்சான் தீக்ஷிதர் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு ஞானாம்பிகை என்று பெயரிட்டார்.


    Continued in part 2
Working...
X