Announcement

Collapse
No announcement yet.

திருமூலர் அருளிய திருமந்திரம் காட்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமூலர் அருளிய திருமந்திரம் காட்டும்

    அந்தணர் ஒழுக்கம்




    1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
    செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
    நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
    சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.


    அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவோர் அறவோர். அவர் பிறப்பற முயலும் பெற்றியர். இறைபணி நிற்கும் முறையினர். அதனால் அவர் தம்முனைப்பற்று அருள் முனைப்பால் செய்யும் இருளில் தொழிலினர். அதனால் அத் தொழில் அறு தொழில் என வழங்கப்பட்டது. அறுதொழில் என்பது தொழிற்பயன் செய்தாரைச் சாராது அற்றதொழில் என்பதாம். இத் தொழிலினை ஏறுவினை என்பர். ஏறுவினை எனினும் ஆகாமியம் எனினும் ஒன்றே. இதற்கு அற்றதொழிலெனப் பொருள் கொள்ளாது, ஆறுவகைத் தொழிலெனக் கூறுதலுமுண்டு. அவை வருமாறு: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல் என்பன. இவற்றுள் ஈவித்தலை விடுத்து ஏற்றல் எனக் கூறுவாரும் உளர். செய்ய வேண்டுங் காலங்களில் எல்லாம் செந்தழல் ஓம்பும் செம்மையர். உரிய காலங்கள் எல்லாம் என்பதே முப்போதும் என்பது. நியமம் செய்தல் என்பது இயம நியமம் எனக் கூறப்படும் எண்வகை யோகவுறுப்புக்களுள் ஒன்று. அதனை இயற்றல் என்பதாம். அல்லது தவறாது செய்வேமென மேற் கொண்ட செய்கை எனினுமாம். அவர்கள் குறிக்கோள் கொள்ளுதலாகிய நியமத்தினைப் புரிந்து, சிவனை வழிபடும் அழகிய நற்றவத் தொண்டில் உறைத்து நின்று தங்களை அதற்கே ஒப்புவித்து ஓதவேண்டிய காலங்களிலெல்லாம் திருமுறைகள் ஓதிச் செய்யும் பணியில் முட்டின்றிச் செய்வா. சடங்கு - செய்யும் பணி, கரணம். அறுத்தல் - முட்டின்றிச் செய்தல்.


    2. காயத் திரியே கருதுசா வித்திரி
    ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
    நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
    மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.


    காயத்திரியாகிய உமையம்மையாரையும், ஆராயப் பெறுகின்ற சாவித்திரியாகிய நாமகளையும் வழிபட்டுப் பயன் பெறுதற்குரிய வழிவகைகளை ஆராய்தற்கு உவப்பர். அவற்றிற்குரிய மந்திரங்களையும் தூய நெஞ்சிடத்து நினைப்பர். நினைத்துப் பேரன்பாகிய காதலாக இருந்து அம் மறையே நினைவாய் உறைத்து நிற்பதால் ஏனை மாயாகாரியப் பொருள்களைச் சிறிதும் பொருந்தார். அத்தகையோரே செந்தமிழ்ச் சிவமறையோர் எனப்படுவர்.






    3 பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து
    குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
    இரு நெறி ஆன கிரியை இருந்து
    சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.




    ஓமொழியானது ஏனை மந்திரங்களின் விரிவிற்கும் அவற்றின் ஒலிப்பிற்கும் தாயாய் அமைந்தது. அதனால் அம் மறை பெருநெறியெனப்படும். அதனை அருள் வலத்தால் ஓர்ந்து, சிவகுருவின் திருவருள் நெறியால் திருவைந்தெழுத்தின் அருமறை கேட்டு, அக் கேள்வியாகிய உபதேசத்தினால் திருநெறியான திருவருளைக் கை ஏற்று நடப்பர். அத்தகையோரைச் சிவவடிவினராக அம் மறை செய்யும். அங்ஙனம் சிவவடிவானோர் குற்றமற்ற சிவமறையோராவர். இவரே தமிழகத்துப் பார்ப்பாராவர். துகள் - குற்றம்.


    4 சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
    எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
    ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப்
    பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.


    முப்பொருள் உண்மை காண்டலாகிய திருவடியுணர்வும், சிவத்தைப் பேணுதலாகிய நற்றவமும் செந்நெறியொழுகுவார் தானவனாதலாகிய சிவவடிவிற்கு உறுப்புக்களாகும். அவ்வருந் தவத்தினை மேற்கொள்வார் ஐம்பொறியடக்குதலை முதற்கண் செய்தல் வேண்டும். அப்பொறிகள் தன்வழி மீளாத இடத்து அருள் துணையால் வாட்டி நல்வழிப்படுத்துதல் வேண்டும். கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டுள்ள உடம்பும் அவ்வுடம்பகத்து வினைக்கீடாகப் பொருந்திப் பிறந்து இறந்து உழலும் உயிரும் வெவ்வேறென்று கருதாது ஒன்றென்றே கருதிய மருளுணர்வு நீங்கப்பெற்று வெவ்வேறென்னும் உண்மை தோன்றிக் கட்டறுத்து நின்ற நிலையில் சிவ வடிவாகுவர்.


    5 வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்
    வேத அந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
    வேத அந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
    வேத அந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.


    முப்பொருள் நாட்டும் தமிழ்மறை முடிவாம் வேதாந்தங் கேட்க அயற்புல மாந்தராம் வேதியர் விரும்பினர். வேதாந்தத்தைக் கேட்டும் நெடுநாள் நிலையாகச் செய்துவரும் கொலைபுலை வேள்வியினை விட்டொழியார். உண்மை வேதாந்தமென்பது தன்னைச் சிவனுக்கு அடிமையெனக் கொண்டு அவன் அருள்வழி நிற்பதே வேட்கையாய்த் தனக்கென ஒரு சிறிதும் எவ்வகை வேட்கையும் இலனாயிருத்தல். வேட்கை அகன்ற இடமே வேதாந்தங் கேட்டுப் பயனடைதற்குரிய நயன்சேர் தகுதியிடமாகும். அந் நிலையில் வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட்ட சிவநாட்டமுற்ற விழுமியோராவர். கொலைபுலை வேள்வியால் எய்தும் பயன் நிலையிலாச் சிறுபயனும் பாவவாயிலுமாகும்.




    6 நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
    நூல் அது கார்ப் பாச நுண்சிகை கேசம் ஆம்
    நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
    நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே.


    பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் ஆதலின் சிறப்பாகிய பெயர் பெறுவது தூய அகம்புற வொழுக்கத்தினாலேயாம். புறவடையாளங்கள் அகவொழுக்கத்தைக் காட்டும் அறிகுறியேயாம். அகவொழுக்கமில்லாமல் புறவொழுக்கமாகிய அடையாளம் மட்டும் கொள்வது தன்னையும் பிறரையும் வஞ்சிக்கும் பாவச் செயலேயாம். அம்முறையில் பேர்கொண்ட பார்ப்பார் பூணூலும் உச்சிக் குடுமியும் விடாது பற்றிக் கொண்டு தம்மைப் பார்ப்பார் என்பர். இவை பிரமத்தன்மையுணர்த்தும் உண்மையாகா. அக் குறிப்பே நுவலிற் பிரமமோ வென்பது. நூலென்பது கயிறு. சிகை என்பது மயிர்முடி. இவற்றின் அக அடையாளமாக நீங்கா உயிர் ஒழுக்கமாகவுள்ளன முறையே மறை முடிவும், அம் முடிபால் பெறப்படும் முப்பொருள் உண்மைத் திருவடியுணர்வுமேயாம். தெய்வ அருள் நூலுடை அந்தணரைக் காணின், இவை ஒவ்வொருவர்க்கும் செவ்விதிற் புலனாதல் வேண்டும்.




    7 சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
    ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
    பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
    பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.




    உலகியல் ஒழுக்கவுண்மையும், அருளியல் ஆய்வாம் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையும் சத்தியம் எனப்படும். அத்தகைய சத்தியமின்றி, ஒப்பில்லாத சிவபெருமானே முழுமுதல் என்னும் தனி ஞானமாகிய திருவடி உணர்வின்றி, மனம் போனவாறே பொறிகளில் சென்று புலன்களை நுகர்வதாகிய வேட்கையினை விட்டுத் திருவடியினை யுணரும் உணர்வின்றி, இவற்றான் ஆருயிர்க்கொழுநனாம் சிவபெருமான் மாட்டு விளையும் அழியாக் காதலாம் பத்தியுமின்றி, மிக எளியவரும் நம்பியொழுகும் கடவுள் உண்மைக் கோளுமின்றி, ஐம்புலன் நுகர்விலே மருள் கொண்டு இருளுக்கு அடிமையாய், மெய்ப்பொருளை நாடாது திரியும் மூடர்கள் எங்ஙனம் பிராமணர்கள் ஆவார்கள்? ஒரு காலத்தும் பிராமணர் ஆகார்






    8 திருநெறி ஆகிய சித்த சித்து இன்றிக்
    குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
    கரும நியம் ஆதி கை விட்டுக் காணும்
    துரிய சமதி ஆம் தூய் மறை யோர்க்கே.


    ஆருயிர் சுட்டுணர்வோடும் சிற்றுணர்வோடும் கூடியுணர்வதாகிய சித்தும், இருள் மலத்துடன் கிடந்து ஏதும் அறியாததாகிய அசித்தும் முற்றுணர்வாகிய திருவடியுணர்வைச் சார்ந்த இடத்து இலவாயொழியும். அப் பேற்றினைக் கைவரச் செய்வது திருநெறியாகும். அதுவே குருநெறியென்றும் சொல்லப்படும். இந் நெறியாலே சிவகுருவின் திருவடியினைச் சேர்ந்து நாட்கடன் வழிபாடு முதலிய படிமுறைப் பயிற்சிகளெல்லாம் நிட்டையாகிய சமாதியின்கண் ஏற்படும் நாலாம் நிலையாம் பேருறக்கத்தின்கண் (துரியநிலை) தாமே பகல் விளக்குப்போல் அடங்கிவிடும். அந்நிலைக்கண் சிவவுணர்வாகவே இருப்பர். அத்தகையோரே தூய சிவமறையோராவர்.






    9 மறையோர் அவரே மறைவர் ஆனால்
    மறையோர் தம் வேத அந்த வாய்மையில் தூய்மை
    குறையோர் தன் மற்று உள்ள கோலாகலம் என்று
    அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே.




    சிவமறையின் மெய்ப்பொருளைச் சிவகுருவால் உணரும் அவரே சிவமறையவர். ஆனால் அவர்கட்குரிய மறைமுடிவால் பெறப்படும் வாய்மை தூய்மை இவற்றில் குறைவுடையோர் செய்யும் புறச் செயல்களனைத்தும் பிறர் மெச்சச் செய்யும் ஆகுல நீர என்று மெய்யறிவுடையோர் கூறுவர். அங்ஙனம் அஞ்சாது கூறும் வஞ்ச நெஞ்சமிலாரே சிவமறை தெரிந்த சிவ அந்தணராவர். குறையோர் என்பதற்கு அயன்மொழி நூல் வழி யொழுகுவோர் என்றலும் ஒன்று. கோலாகலம் - சந்தை கூட்டிரைச்சல்; ஆகுலம்.






    10 அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
    சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
    நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
    அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.




    சிவ வழிபாடு செய்யும் செந்நெறியினர் இயற்கை அந்தண்மையுடையோராவர். 'வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்' என்பதனாலும், 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பதனாலும் அருமறையந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் ஆகமத்தராவர். அத்தகையோர் சிவனை மறவாத் திருவுடை நல்லோராவர். நல்லோர் - சிவஞானி. அத்தகையோர் சேரும் புண்ணியத் தென்புலம் எவ்வாற்றானும் கேடெய்துதல் இல்லை. மாந்தர் ஆட்சித் தலைவனாம் வேந்தனும் செந்நெறியொழுகி நன்றாகுவன். அந்தியும் சந்தியுமாகிய சிவவழிபாட்டுக் காலங்களில் தவறாது வழிபாடு புரிதலாகிய ஆகுதியினை அந்தணர் செய்வர். ஆகுதி - தூய ஆன்பால்.
Working...
X