courtesy: Smt.Uma Balasubramanian


புகழ்த் துணை நாயனார் - உமா பாலசுப்ரமணியன்

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்;
அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார்; உலகத்துப் பரந்து ஓங்கிப்
பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்.

செருவில்லிபுத்தூர் என்பது ஒரு சிவஸ்தலம் . அங்கு சிவபெருமான் கோயிலில் முப்பொழுதும் திருமேனி தீண்டிப் பூசனையும் , விழாவும் சிறப்பாக நடைபெறும். சிவமறையோர் திருக்குலத்தில் உதித்த புகழ்த்துணையார் என்னும் சிவபக்தர். இறைவனுக்கு அன்பால் பூசித்தல் , வாயால் அருச்சனை செய்தல் , உடம்பால் வழிபாடு செய்தல் , போன்ற மனம் , வாக்கு , காயம் என்ற மூன்றாலும் இறைவனை வழிபட்டால் அதற்கு நிகர் வேறு சிறந்த தவம் இல்லை என்ற எண்ணம் கொண்டு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.


ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.பல ஆண்டுகளாக மழை பொழியாத காரணத்தால் , நீர் நிலைகள் வறண்டன. வயல்கள் காட்டாந்தரையாகி , ஆடுகளும் , மாடுகளும் தவித்தன. மக்களும் ஊர்விட்டு ஊர் சென்றார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ற சொல்லுக்கு இணங்க, உறவினர்கள் யாவரும் பிரிந்தனர்.


அதன் பின் செருவில்லிபுத்தூர் மயானமாகத் திகழ்ந்தது. கோவிலுக்குள் செல்பவர்கள் இல்லை . ஆனால் இன்னிலையிலும் புகழ்த்துணையார் மாத்திரம் ஊரைவிட்டுச் செல்லாமல் இருந்தார். அவருக்குத் தாம் வழிபடும் சிவபெருமானை விட்டுச் செல்ல மனம் இல்லை. எத்தனை துன்பம் வந்தாலும் சரி , இந்த உடலில் உயிருள்ளவரை எங்கேயிருந்தேனும் பூவும் , நீரும் கொண்டு வழி படுவேன் என்ற திண்ணமான குறிக்கோள் கொண்டிருந்தார்.


எப்பொழுதுமே குடத்தில் நீர் கொண்டு வரும் அவர் ஒருநாள் அவ்வாறு செய்யும் பொழுது , அங்கங்கே உட்கார்ந்து கொண்டு வந்தார் . ஏனெனில் அவர் வெகு நாட்களாகச் சாப்பிடவில்லை , அதனால் போதுமான தெம்பும் இல்லை . இருந்தாலும் மெல்லச் சிவலிங்கத்தை அடைந்தார். கஷ்டப்பட்டு கையை மேலே உயர்த்தி குடத்திலுள்ள புனலால் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்தார். அவ்வாறு செய்யும் பொழுது அவரால் குடத்தைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. தடாலென்று குடத்தைச் சிவலிங்கத்தின் மேலே போட்டுவிட்டு அவரும் மூர்ச்சையானார்.

மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சால உறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்.

ஆனால் அவரது மயக்கத்தைத் தெளிவிக்க அங்கு யாரும் இல்லாத நிலை. அப்படி யாரேனும் அங்கு இருந்திருந்தாலும் , இந்நிகழ்ச்சியைக் கேட்டு ஊரார் , " பைத்தியக்கார பிராம்மணர் . ஊரார் செய்வதுபோல் எங்கும் ஓடாமல் இந்தக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுகிறாரே!" என்றுதான் சொல்லியிருப்பார்கள்.


ஆனால் அப்போது அந்தப் பேரன்பரைத் தெளிவிக்க சிவபிரானின் திருவருள் ஒன்றே முன் வந்தது. கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். ' அன்பா! உன் தவத்தை வெகுவாக மெச்சினோம் ! உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உன் உறுதியைக் கண்டு மகிழ்ந்தோம் ! . இனி நீ கவலையுற வேண்டாம் . ஒவ்வொரு நாளும் காலையில் இந்தப் பீடத்தின் கீழே ஒரு பொற் காசைக் காண்பாய் . அதை எடுத்துச் செலவு செய்து உன் உடலைப் பேணிப் பின் நமக்கு வழிபாடு செய்துவருவாயாக ! " என்று மலர்ந்தருளினார்.


மயக்கத்திலிருந்து எழுந்த அன்பர் கண்ணைத் துடைத்துக் கொண்டார். " என்ன காரியம் செய்தோம்! எம்பெருமான் திருமுடியின் மேல் குடத்தைப் போட்டுவிட்டோமே " என அங்கலாய்த்து வருந்தினார். பிறகு தாம் கண்ட கனவைப் பற்றிய நினைவு வந்தது. இறைவன் பீடத்தைப் பார்த்தார். இறைவன் கூறியது போல் அங்கே பள பளவென்று ஒரு பொற்காசு மின்னியது, அதைக் கண்டு இறைவன் கருணையை நினைந்து அவர் நெஞ்சம் பாகாய் உருகியது. " என்னுடைய எம்பெருமான் என்னளவில் பஞ்சத்தைப் போக்கிவிட்டான். ஓடாமல் , உழைக்காமல் ஊதியம் அளித்துவிட்டான். தன்னைப் பூசனை செய்தால் கைமேல் பலன் உண்டு என்பதைக் காட்டிவிட்டான்" . என்று அரற்றிக் கூத்தாடினார்.

அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின் ஆர் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்நாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார்.

அந்தக் காசைக் கொண்டு , உணவுப் பொருள்களையும் , இறைவன் பூசைக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கினார். அவர், முன் இருந்ததைவிடப் பன் மடங்கு உடலும் , உள்ளமும் வலிமை பெற்றார். " என் பசியைப் போக்கவேண்டும் என்ற கவலை என் ஐயனுக்கு இருக்கும் போது எனக்கு என்ன கவலை?" என்று பெருமிதம் கொண்டார்.


தன் தொண்டிலே சிறிதும் குறைவறாது மேன்மேலும் சிறப்பாகப் பூசனை செய்து இறைவன் அருள் பெற்று, இறுதியில் அவனடி சேர்ந்தார்.

பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்
வந்து அணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்
சந்தம் அணியும் மணிப் புயத்துத் தனிவீரர் ஆம் தலைவர்
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends