மாத்ரு தேவோ பவ என்கிறது வேதம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


notice

Notice

அம்மாவைப் போற்றிய ஆத்மஞானிகளில் அத்வைதத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்.
ஒருவர் கேரளத்தில் காலடியில் பிறந்து பாரத தேசத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரர்.
இரண்டாமவர், திருவெண்காட்டில் பிறந்து திருவொற்றியூரில் ஈசனோடு இரண்டறக் கலந்தவர் பட்டினத்து ஸ்வாமிகள்.
மூன்றாமவர், திருச்சுழியில் பிறந்து ஆத்ம விசாரணை செய்து அம்மாவிற்கு கோவில் கட்டிய ஸ்ரீரமண பகவான் ஆவார்.


இந்த மூவரும் அன்னையைப் போற்றிய ஆத்மஞானிகள் ஆவர்.
பூர்ணா நதியில் ஸ்நானம் பண்ண இறங்கிய சங்கரரை முதலை பிடித்தது. ஆழத்துக்குக் கொண்டு போகப் பார்த்தது. 'அம்மா! அம்மா!' என்ற சங்கரரின் உச்சக்குரல் தாய் ஆர்யாம்பிகைக்குக் கேட்டது. ஓடோடி வந்தாள். "அம்மா! உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். நான் சந்நியாசம் பெற நீ அனுமதித்தால் முதலை என் காலை விடும்" என்றார் சங்கரர். பிள்ளை பிழைத்தால் போதும் என்று சம்மதம் தெரிவித்தாள் ஆர்யாம்பிகை. முதலை காலை விட்டது. அவள் தன்னை மறந்து "சங்கரா! வீட்டிற்கு வா" என்றாள். சற்று முன் நடந்ததை நினைவுபடுத்தினார் சங்கரர். "அம்மா! நான் புறப்பட வேண்டும்." என்று சொல்லிவிட்டு தன் குருநாதரைத் தேடிப் புறப்பட்டார்.
ஆர்யாம்பிகை சொன்னாள்: "சங்கரா! என்னுடைய அந்திமகாலத்திற்கு மறக்காமல் வந்து விடு" என்றாள். "சரி" என்றார் சங்கரர். சிறிது காலத்தில் காலடியில் ஆர்யாம்பாவிற்கு உடல்நிலை மோசமாயிற்று. இறுதிக் கட்டம் நெருங்கியது.
இதைத் தன் ஞான திருஷ்டியால் ஆசார்யாள் உணர்ந்தார். தாயாரைக் காணக் காலடிக்கு வந்தார். ஞானப் புதல்வனை ஈன்றதால் ஆத்ம ஞானம் பெற்றவளாக முக்தி நிலையை அடைய வேண்டிய நேரம். சங்கரரின் கையை மெல்லத் தடவிக் கொடுத்தாள். தாய்க்கு சங்கரர் ஞானோபதேசம் செய்தார். "என்றும் இருப்பது ஒரே வஸ்து. அது அழியாதது. அதுவே பிரம்மம்" என்றார். பக்தி பூர்வமாக சிவ தோத்திரங்கள் சொன்னார் சங்கரர். ஆர்யாம்பாள் கேட்டுக் கொள்ள கிருஷ்ணாஷ்டகம் பாடினார். ஆர்யாம்பிகை கண்களை மூடினார். கண் திறந்து பார்த்த போது பரமபதமான வைகுண்டத்தில் இருந்தார்.
அம்மாவின் சரீரத்திற்கு ஈமச் சடங்குகள் செய்ய சங்கரர் முற்பட்டபோது "சந்நியாசியாகிய உமக்கு இது தேவைதானா?" என்றனர் அவ்வூர் மக்கள். சங்கரர் சொன்னார் "நான் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க வந்தேன்" என்று சொல்லி வாழை மட்டைகளை அடுக்கி சிதைக்குத் தீ மூட்டி மாத்ரு பஞ்சகம் பாடினார்.
ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸூதிஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தனுசோஷணம் மலமயீசய்யா ச ஸாம்வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்பபாரவஹநக்லேசஸ்ய யஸ்ய க்ஷம:
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோஸபி தநயஸ்தஸ்யை ஜகந்யை நம:
குருகுலமுபஸ்ருத்யஸ்வப்நகாலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசிதவேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை:
குருகுலமதஸர்வம் ப்ராருதத் தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்துப்ரணாம:
ந நத்தம் மாதஸ்தே மரணஸமயே தோயமபிவா
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமனு:
ந தேயா ஸ்வாதாவா மரணதிவஸே ச்ராத்தவிதினா
அகாலே ஸம்ப்ராப்தே மயி குருதயாம் மாதரதுலாம்
முக்தாமணிஸத்வம் நயனம் மமேதி
ராஜதி ஜீவேதி சிரம்ஸுதத்வம்
இத்யக்தவத்யாஸ்தவவாசிமாத:
ததாம்யஹம் தண்டுலமேவ சுஷ்கம்
அம்பேதி தாதேசி சிவேதி தஸ்மின்
ப்ரஸூதிகாலே யதவோச உச்சை:
க்ருஷ்ணேதி கோவிந்தஹரே முகுந்தே
த்யஹோ ஜகந்யை ரசிதோய மஞ்ஜலி:
இரண்டாமவர் பட்டினத்தார்:
இதே போலத்தான் பட்டினத்தாரும் செய்தார். தாயார் மேல் அடுக்கி வைத்த விறகு கட்டைகளை எடுத்து விட்டு வாழை மட்டைகளை அடுக்கி அதன் மேல் தாயை வைத்து ஆதிசங்கரர் பாடியது போல் தமிழில் பாடினார்.


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து-செய்யவிரு
கைப்புறத்திலேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி?
"பத்துமாதம் என்னைச் சுமந்து பெற்றவளே! என் நலன் கருதி உன்னை உருக்கிக் கொண்டாயே! கனகமுலை என்கிறார் பட்டினத்தார். எனக்குப் பால் புகட்டி என்னை அருமையாக வளர்த்தவளே! நான் அம்மா என்று உன்னை இனி எப்படி எந்தப் பிறப்பில் காணப்போகிறேனோ?" என்று கதறி அழுதார்.
அள்ளியிடுவது அரிசியோ தாய்தலை மேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடியென்று என்
மகனே என அழைத்த வாய்க்கு
ததாயேஹம் தண்டுலமேவ சுஷ்கம்: என்ற சங்கரரின் வார்த்தைகளை பட்டினத்தார் அள்ளியிடுவது அரிசியோ தாய் தலைமேல் என்றார். ஆதிசங்கரரின் தாக்கம் பட்டினத்தாருக்கும் இருந்தது.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ (மூள்க) மூள்கவே
முன்னை என்றால் சிவபெருமான். முழுமுதற் கடவுளான அவன் வைத்த தீயால் திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது. பின்னை என்றால் நப்பின்னை. சீதா பிராட்டியின் கற்பு என்னும் தீ ஆஞ்சனேயர் மூலமாக இலங்கையை எரித்தது. அன்னை இட்ட தீ: குண்டலினி சக்தியாக இருப்பவள். "இவை எல்லாம் உண்மையானால் யானும் இட்ட தீ மூள்கவே" என்றார். வாழைமட்டை பற்றி எரிந்தது.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின் பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ என்கிறார்.
சோணகிரி என்றால் திருஅண்ணாமலை. அண்ணாமலையானே! என் அன்னை வெந்தாளோ. உன்னுடைய திருவடியை வந்து அடைந்தாளோ என்னையும் மறந்தாளோ என்கிறார்.
ஸ்மரணாத் அருணாசலம் என்ற கூற்றுப்படி உன்னுடைய திருவடியை அவளுக்குக் காட்டி முக்தியைக் கொடுத்திருப்பாய் என்று ஈசனிடம் முறையிட்டார்.
மூன்றாமவர் ஸ்ரீரமண பகவான்
ரமண பகவானுடைய தாயார் பெயர் அழகம்மையார். இவருடைய தாய்பக்தி சற்று வித்தியாசமானது. தாயார் அழகம்மையார் ரமண பகவானை அழைத்தபோது முதல் உபதேசத்தை அன்னைக்கு சமர்ப்பணம் செய்தார்.
அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது. என்ன முயற்சி செய்யினும் நடவாது. நடப்பது, என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று.
1914ஆம் ஆண்டில் தன் பிள்ளைப் பாசத்தின் காரணமாக அழகம்மையார் மீண்டும் திருஅண்ணாமலைக்கு வந்தார். தன் அம்மாவுக்குக் கொடிய காய்ச்சல் வந்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார் பகவான். தன்னுடைய தாயாரைக் காப்பாற்ற தன் வாழ்நாளில் முதன் முறையாக அருணாசலேஸ்வரரை நான்கு வெண்பாக்களால் பாடினார். இது அவர் அம்மாவின் மீது வைத்த அன்பும், பக்தியும் ஆகும்.
அலையாவரு பிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே - தலைவா நின்
தாள்கதியாய் வாழும்என் தாய்தாபம் மாற்றியே
ஆள்வதும் உன் கடனேயாம்.
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரேசயனம் என்பதைத் தான் ரமண பகவான், "அலையா வருபிறவி அத்தனையும் மாற்ற" என்றார். "பிறவி அலைகளைத் தோற்றுவிக்கும் பவப்பிணியை முற்றிலும் தீர்க்கும் மலையாக எழுந்து அருளும் மருந்தே! அருணாசலேஸ்வரா! என் தாயாரை குணமாக்குவது உன் கடமை ஆகும்" என்கிறார்.
காலகாலா உன் கமல பதம் சார்ந்த
பாலன் என்னை ஈன்றாள்பால் அந்த - காலன்தான்
வாராவகை உன்கால் வாரிசமே காட்டுவாய்
யாராயிற் காலனுமே யார்?
அருணாசலேஸ்வரா! காலனுக்கும் காலனாக விளங்குபவனே! உன்னுடைய தாமரைத் திருவடியை வணங்குகிறேன். என்னை ஈன்றவள் உன்னுடைய சக்திக்கு முன் காலன் எம்மாத்திரம்? என் அன்னையைக் காப்பாற்று.
ஞானாங்கியாய் ஓங்கும் நல்லருணை ஓங்கலே!
ஞானாங்கியால் அன்னை நல்லுடலை - ஞானாங்கம்
ஆகச் செய்து உன் பதத்தில் ஐக்கியமாக்கிக் கொள்வாய்
சாகத் தீ மூட்டுவதேன் சாற்று.
"ஞான நெருப்பாக ஓங்கி உயிர்களுக்கு நன்மை பயக்கும் அருணாசலேஸ்வரனே! ஞான அக்கினியில் என் அன்னையின் நல் உடலை உன் ஞான நெருப்பில் ஓர் அங்கமாகச் செய்து உன்னுடைய திருவடிகளில் ஒன்று சேர்ப்பாய். அன்னை மரணம் அடைந்து விடுவாளோ என்ற கவலைக்கு இடம் அளிக்கும்படி ஏன் அவள் உடலில் கொடிய சுரத்தை உண்டாக்கினாய்" என்கிறார்.
மாயா மயக்கமதை மாற்றருண மாமலையென்
தாயார் மயக்ககற்றத் தாமதமேன் - தாயாகித்
தன்னை அடைந்தார் வினையின் தாக்கு அறுத்து ஆள்வார் உலகில்
உன்னை அல்லால் உண்டோ உரை.
அகந்தையை அழிக்கும் அருணாசலனே! ஞானத்தைத் தருபவனே! என் அன்னையின் அகந்தையை அகற்ற ஏன் தாமதம் செய்கிறாய்? உன்னைச் சரண் அடைந்தவர்களின் வினைகளை உடனே நீ நீக்குபவன்.
'அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே!' என்கிறார் ஞானசம்பந்தர். உன்னையே தாய் தந்தையாகப் போற்றுகிறேன். என் அன்னையின் துயர் தீர்ப்பாய் என்கிறார் அருணகிரிரமணன். பழம்பெரும் ரமணபக்தர் ஜி.ராமசாமிப் பிள்ளை அம்மாவின் மீது ரமணர் இயற்றிய பாடல்களைக்கண்டு மகிழ்ந்து தானும் ஒரு வெண்பா எழுதினார்.
அனைவருக்கும் அன்னை அருணை ரமணன்
தனதன்னை மெய்வருத்தம் தாளாது - அனை ஓங்கத்
தானே மலையாய் தனதருளே வெண்பாவாய்
பா நாலும் பாடினான் பார்.
பகவான் இந்த வரிகளைப் படித்து அகமகிழ்ந்தார்.
அன்னையின் சுரம் நீங்கியது. 19-05-22 அன்று மிகவும் கவலைக்கிடமாகி உடல்நலம் குன்றியது. அழகம்மையாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீபகவான் அன்னையின் மார்பில் ஒரு கரமும், சிரசில் ஒரு கரமுமாக வைத்து அமர்ந்திருந்தார். ஒரு பக்கம் வேத பாராயணமும் நடைபெற்றது. இராம நாம சப்தம் ஓங்கியது. அக்ஷரமணமாலை பாராயணமும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு பகவானின் அன்னை அழகம்மையார் மஹாசமாதி அடைந்தார். எவரோ "அம்மா போய்விட்டார்" என்று கூற பகவானோ "இல்லை. அம்மா அடங்கினார்" என்றார். பெற்ற அன்னைக்கு ஆதிசங்கரரைப் போல், பட்டினத்தாரைப் போல் ஸ்ரீரமண பகவானும் முக்தி கொடுத்து அருளினார்.
ஒரு ஞானி இதைவிட தாய்க்குச் சிறப்பான மரியாதை செய்யவே இயலாது. வீடுபேறு அடைந்த ஒரு பெண்ணின் உடலை எரிக்கக் கூடாது. அது ஆன்மவஸ்துவின் ஆலயமாக மாறிவிட்டதால் அடக்கம் செய்யப்பட்டார் அழகம்மையார். ஆன்மாவிற்கு ஆண்-பெண் பேதம் கிடையாது என்றார் பகவான். அண்ணாமலை சிவசொரூபமாக இருப்பதால் சமாதி வைக்கப்பட்டது. அதுதான் மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் ஆகும்.இப்படி அம்மாவிற்கு ஏற்றம் கொடுத்த இந்த மூன்று ஆத்ம ஞானிகளை அத்வைத அவதார புருஷர்களை நாமும் போற்றி மகிழ்வோம்.
அன்னையை (தாய், தந்தையை) வணங்குவோம்! அருள் பெறுவோம்! ஆத்மஞானம் அடைவோம்!