Announcement

Collapse
No announcement yet.

மறதி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மறதி!

    வாழ்க்கையின் எதார்த்தமான உண்மையை கதைவாயிலாகப் படித்தததும் நல்லவற்றை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தில் பகிரும் கதையிது

    ''விஜி... எனக்கு இன்னும் காபி தரலயேமா...'' என, மெல்லிய குரலில் கேட்டார் கோபாலன்.
    ''இப்பத்தானே மாமா சாப்டீங்க... அதுக்குள்ள மறந்துட்டீங்களா,'' என்றாள் விஜி.
    ''ஸ்ரீதரா... என் கண்ணாடிய பாத்தியாப்பா... காலையில இருந்து தேடிட்டே இருக்கேன்; கிடைக்கவே இல்ல,''என்றார்.
    ''எப்படிப்பா கிடைக்கும்... அதான், உங்க மூக்கு மேலயே இருக்கே...''
    ''நந்து... நான் மாத்திரை போட்டேனா... எனக்கு சுத்தமா நினைவுல இல்லயே...'' என, நெற்றிப் பொட்டில் விரலைத் தேய்த்து, ஞாபகத்துக்கு கொண்டு வர முயல்வதை பார்க்கையில், எல்லாருக்கும் ரொம்ப வேதனையாக இருந்தது.
    எல்லா மனிதர்களுக்குமே முதல் கதாநாயகன் அப்பா தான். சிறுவயதில், அப்பா என்ற அந்த மாயச் சொல்லுக்கு மயங்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள். அதிலும், கோபாலன் நிஜத்திலும் கதாநாயகன் தான்!
    கும்பகோணத்து மிராசுதாரர் வீதியில், படிய வாரிய கிராப்புடன் இவர் சைக்கிள் ஓட்டி வரும்போதே, மூன்று தெருத் தள்ளி இருக்கும் தேரடி வீதியில் இருந்து, 'அப்பா வர்றாரு...' என்று கத்துவான் ஸ்ரீதரன். அத்தனை இணக்கமான உறவு அப்பாவோடு!
    அப்படிப்பட்ட அப்பா, இன்று, நினைவு சுழற்சி வியாதியில் துன்பப்படுவதை பார்க்கும் போது மனசு பரிதவித்தது. ஆனாலும், குழந்தையைப் போன்று, அப்பாவை பராமரிக்கும் பாக்கியம், தனக்கு கிடைத்திருப்பதாய் எண்ணி, தன்னைத் தானே தேற்றிக் கொள்வான்.
    அரசு பணி புரிந்த கோபாலன், ஓய்வு பெற்றதும், சென்னையில் இருக்கும் தன் ஒரே மகன் ஸ்ரீதரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
    வந்த வேகத்தில் மனைவி தவறிப் போக, ஸ்ரீதரனே அவருக்கு சாஸ்வதமானான்.
    ''தாத்தா... நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் போறேன் வர்றீங்களா?'' என்று கேட்ட பேரனை, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கோபாலன் நிமிர்ந்து பார்த்தார்.
    ''நேத்து நாம எங்கயோ போனோமே... எங்க போனோம்ன்னு ஞாபகம் வரலயே...'' என்றார் அப்பிராணியாய்!
    ''ராகவேந்திரா கோவிலுக்கு போனோம்; கவலப்படாதே தாத்தா, எல்லாம் சரியாயிடும்!''
    பக்கத்தில் இருந்த கைத்தடியை பார்த்தார். நடை தடுமாறாமல் இருக்க, பற்றிக் கொள்ளும் பக்கத்துணை. அதைப் போன்றே, அவருடைய குடும்பமும், அவருடைய நினைவு தடுமாறும்போது பற்றிக் கொள்கின்றன.
    ''தாத்தா... கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோமா...'' என்றான் நந்து.
    'சரி' என்று அவர் தலையாட்ட, ஓரிடத்தில் அமர்ந்தனர்.
    ''வணக்கம்... நீங்க கோபாலன் தானே,'' சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
    கோபாலனை ஒத்த வயசு, வழுக்கை தலை, தும்பைப்பூவைப் போன்ற வேட்டி, சட்டை; செழுமையான நபராக தோன்றினார்.
    அவரையே உற்றுப் பார்த்தார் கோபாலன். பரிச்சயப்பட்ட முகமும், படிந்து போன பழைய நினைவுகளும், முட்டி மோதி வெளியில் எட்டிப் பார்த்தது.
    ''தாத்தா பேரு கோபாலன் தான்; நீங்க யாரு?'' சாப்பிட்டுக் கொண்டிருந்த சுண்டல் காகிதத்தில் கையை துடைத்து வீசியபடியே கேட்டான் நந்து.
    பதில் சொல்லாமல் நின்றிருந்த அந்த மனிதரை உற்றுப் பார்த்த கோபாலன், ''நீ... நீ... நாணா தானே?'' அத்தனை நினைவுகளையும் ஒன்று திரட்டி கண்களில் கொண்டு வந்து கேட்டார்.
    ''நாணாவே தான்; கோபாலா... எப்படி இருக்க, எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து...''
    இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர். அவர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கினான் நந்து.
    ''நீ எப்போ கும்பகோணத்துல இருந்து சென்னை வந்தே?''
    ''நாலஞ்சு வருஷமாச்சுன்னு நினைக்கிறேன்; வந்த கையோட என் மனைவி தவறிட்டா,'' என்றார் கவலையுடன்!
    ''ஐயாம் சாரிடா... நீ கும்பகோணத்துல இருந்தபோது கூட நாம பாத்துக்கிட்டது குறைவு தானே,'' என்றார் வருத்தத்துடன்!
    ''அப்போ நீ எங்க இருந்தே?''
    ''எங்க இருந்தேனா... நாந்தான் கல்யாணம் ஆன கையோட, கோயமுத்தூர்ல இருக்குற என் மாமியார் வீட்டுக்கே போய்ட்டனே... உனக்கு எல்லாம் மறந்து போச்சா...'' என்றார் விசித்திரமாய் பார்த்தபடி!
    ''அப்படியா... எனக்கு இப்பெல்லாம் எதுவும் ஞாபகத்துல இல்ல. நாள் ஓட ஓட காலண்டர்ல தேதி எல்லாம் உதிரத் தொடங்குற மாதிரி, என் நினைவுகளும் உதிரத் தொடங்கிருச்சு...'' என்றார்.
    ''வருத்தப்படாத... எல்லாம் சரியாகும்,'' என, கோபாலனின் கைகளை அன்பாக பற்றிச் சொன்னார் நாணா.
    ''நானும், சீதாவும் தான் இங்க வந்தோம்; உறவுக்காரங்க வீட்டில கல்யாணம். அது சரி உனக்கு சீதாவை ஞாபகம் இருக்கா?'' என்று கேட்டார் ஆவலுடன்!
    ''எதுவும் சரியா நினைவுக்கு வரல... ஏதோ கோடு போட்டு வரைஞ்ச மாதிரி இருக்கு. ஆனா, எதுவும் நினைவுக்கு வரல'' என்றார்.
    ''எங்க கல்யாணம், அது சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஏதாவது மனசுல வந்து போகுதா...'' கொஞ்சம் பதட்டமும், மிதமிஞ்சிய எதிர்பார்ப்புமாய் அவர் கேட்டபோது, நந்துவுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது.
    கோபாலன் இன்னும் தீவிரமாய் யோசனை செய்து, ''ம்ஹூம்... எதுவும் நினைவுக்கு வரல. எதுவானா என்ன... நீ எனக்குள்ள நின்ன மாதிரி எதுவும் நிக்கல. உன்னை மாதிரி நண்பன், மனைவி, மகன், மருமகள், பேரன் எல்லாமே என் வாழ்க்கையின் வரங்கள். அப்படிப்பட்ட நிலையில, எனக்கு எது வந்தாலும் எந்த பாதிப்பும் இல்ல.'' என்றவர், ''தப்பா நினைக்காதே நாணா... எனக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. உனக்கு எத்தனை குழந்தைகள்...'' என்றார்.
    மெல்ல எழுந்து வெளியே வந்த நந்து, கோவில் பிரகாரத்தை ஒட்டிய டீக்கடையில், காபி வாங்கி வந்தான்.
    ''சாப்பிடுங்க தாத்தா,'' என, உரிமையோடு நீட்டிய நந்துவை, ஏக்கத்துடன் பார்த்தார் நாணா. காபியை வாங்கி ஒரு மிடறு குடித்தவரின் முகம் மலர்ந்தது.
    ''பரவாயில்லயே... சொன்னால் செய்பவன் அறிவாளி; சொல்லாமலே செயல் புரிபவன் புத்திசாலி. எனக்கு சர்க்கரை வியாதி இருக்குன்னு தெரிஞ்சு, சர்க்கரை இல்லாத காபி வாங்கிட்டு வந்திருக்கியே...'' என்று பாராட்டினார்.
    ''அப்போ நீங்க ரெண்டு பேரும் தனியாத் தான் இருக்கீங்களா...'' இவன் காப்பி வாங்க போன இடைவேளையில், நடந்து முடிந்த பேச்சை மீண்டும் துவக்கினார் கோபாலன்.
    ''ஆமா கோபாலா... பையன் கனடால இருக்கான்; பொண்ணு சவுத் ஆப்ரிக்கால இருக்கு. அப்பப்போ வெப் கேமரால பேசிக்கறதோட சரி. அவங்க முகத்தை பாத்து நாலஞ்சு வருஷம் ஆச்சு! என்கிட்ட இல்லாத காசா, வசதியா... என் சொத்துகளை நிர்வாகம் செய்யவே பத்து ஆள் வேணும்... இதுகள் வெளிநாட்டு மோகத்தில அங்க போய் உட்காந்திருக்குக.
    ''சரி விடு... என் கவலை என்னோட போகட்டும். முடிஞ்சா என் மனைவியை அழைச்சுட்டு, உன்னை வீட்டில வந்து பாக்குறேன்,'' என, விடை பெற்ற நாணா, நந்து முகத்தையே ஏக்கமாய் பார்த்து, அவன் மோவாயை தடவி, முத்தமிட்டு நகர்ந்தார்.
    அவர் போகிற திசையையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் கோபாலன்.
    ''போகலாமா தாத்தா... உங்க பால்ய நண்பரைப் பாத்ததுல இன்னக்கி உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இல்லயா...'' என்றான் அன்புடன்!
    ''ஆமாம்... ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நாணாவுக்கு அப்பா கிடையாது; அம்மா மட்டும் தான். இவனை வளர்த்து ஆளாக்க வேண்டி, மாமா வீட்டிலேயே அடிமை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தாங்க. நாணா படிப்பில படுசுட்டி; ஆளு ரொம்ப அழகு. எப்பவும் எங்க வீட்டிலயே தான் இருப்பான். எங்க அம்மாக்கு, அவன் இன்னொரு பிள்ளை மாதிரி. மூணு வேளையும் அவனுக்கும் சேர்த்து தான் சமைப்பாங்கன்னா பாத்துக்கோயேன்,'' என்றார்.
    மடை திறந்த வெள்ளமாய் பேசிய தாத்தாவை, ஆச்சர்யத்துடன் பார்த்தான் நந்து.
    ''நாங்க படிப்பை முடிச்சுருந்த சமயம் அது! அம்பலவாணன்ணு எங்க ஊர்ல இருந்த மிராசுதாரர் வீட்டுக்கு, அவங்க உறவுக்கார பொண்ணு சீதா வந்திருந்தா. ஒரு விபத்துல தாய், தந்தையை இழந்த அவ, பெரும் பணக்காரி. அந்த நாள்லயே அவளுக்கு பல லட்சம் மதிப்புள்ள மில்கள் கோயமுத்தூர்ல இருந்தது. ஆள் கருப்பா, வெகு சுமாரா இருப்பா...
    ''மிராசுதாரும் எங்க அப்பாவும் சினேகிதர்கள். அதனால, அந்த சீதாவை எனக்கு கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டார். ஆனா, எதையும் எளிதா அடையணும்ன்னு நினைக்கிற நாணாவுக்கு, அந்த நிமிஷம் என்ன தோணுச்சோ கோவில்லயும், படித்துறையிலயும் சீதாவை சந்திச்சு, அவ மனச கலைச்சுட்டான். மன்மதனா இருந்த நாணாவோட அழகுல மயங்கிய சீதாவும், மிராசுதாரர்கிட்ட தனக்கு நாணாவை கட்டி வைக்க சொல்லிட்டா.
    ''நல்ல வாழ்க்கை எனக்கு கிடைக்காம போயிடுச்சேங்கிற வேதனை இருந்தாலும், எங்க அப்பாவும், அம்மாவும் தான் முன்னே நின்னு அவன் கல்யாணத்த நடத்தி வச்சாங்க...'' என்றார் கோபாலன்.
    இதையெல்லாம் கேட்ட போது, சீதாவையோ, அது சார்ந்த விஷயமோ நினைவில் இல்லை என்று சொன்ன தாத்தா, இப்போது தன்னிடம் எல்லாவற்றையும் விலாவாரியாக பேசுவது ஆச்சர்யமாய் இருந்தது.
    ''கல்யாணம் ஆனதும், நாலு மில்லுக்கு சொந்தக்காரன் ஆயிட்டான் நாணா. ஆனா, நான் வேலை தேடி அலைஞ்சு, உங்க பாட்டியை கல்யாணம் செய்து, எல்லாம் ரொம்ப சாதாரணமாய் நடந்தது.
    ''நான் வாழ வேண்டிய குபேர வாழ்க்கைய, நாணா வாழ்ந்துட்டு இருக்கிறதா சொல்லி, எங்க அம்மா தான் புலம்பிட்டே இருப்பாங்க. ஆனா, நான் அப்படி நினைக்கல. யாருக்கு கிடைக்க வேண்டிய நல்லதையும், யாரும் தடுக்க முடியாது இல்லயா... எனக்கு மகாங்கிற அற்புதமான மனுஷி, மனைவியா, தோழியா வாய்ச்சா. எனக்கு பிடித்த உத்யோகம் கிடைச்சது. நீ, உங்கப்பா, உங்கம்மா எல்லாமே எனக்கு பெஸ்ட் தான். எங்க தமிழ் வாத்தியார் சொல்வார்... 'எதையாவது இழக்கும் போது எண்ணிக் கொள்... இதை விட சிறந்த ஒன்றுக்காக இறைவன் உன்னை தயார் செய்கிறார்'ன்னு! அது என் வாழ்க்கையில் நிஜமாயிடுச்சு.
    ''நாணா நல்லவன் தான்; அவன் குழந்தைகளுக்கு இந்த பணம் தேடும் ஆசை, அவன் வழியாகத் தான் வந்திருக்கணும். உறவுகளை விட பணம் தான் பெரிசுன்னு அவன் அப்போ நம்பினான். இப்போ அவன் பிள்ளைகள் அதை செய்யுதுக. இதையெல்லாம் பாக்கும்போது, நான் சரியா வாழ்ந்திருக்கேன்; அதனால, என் குழந்தைகள் சரியா இருக்கு,'' என, நீண்ட பெருமூச்சை விட்டார்.
    ''தாத்தா... உங்க மறதி நோய் என்னாச்சு... இப்படி அவிழ்த்து விட்ட நெல்லிக்கா மூட்டை மாதிரி பேசறீங்க... வாவ் தாத்தா... நீங்க குணம் ஆயிட்டீங்க...''
    ''நந்து... குளத்துல கல் எறிஞ்சா, மேல் பரப்பில தான் சலசலப்பிருக்கும். ஆழ புதைஞ்ச மணல் படிமத்துல எந்த சலசலப்பும் வராது. அது மாதிரித்தான் இதுவும்! இன்னைக்கு காலையில என்ன சாப்பிட்டேன்னு கேட்டா நினைவில வராது. ஆனா, உங்கப்பா ஸ்ரீதரனுக்கு முதல் சோறூட்ட, கும்பகோணம் கோவில்ல போட்ட படையல் விருந்து ருசி இன்னும் தொண்டைக்குழியில அப்படியே இருக்குது. இப்போ புரியுதா... என் மறதி நோயோட தன்மை! எனக்கு வடிவத்துல தான் குழப்பம்; படிமத்துல இல்ல,'' என்றார்.
    ''எல்லாம் சரி தாத்தா... அவர்கிட்ட ஏன் எதுவும் நினைவில்லன்னு சொன்னீங்க...''
    ''நான் மறந்திட்டேன்னு சொன்னாத்தான், அவன் நெருங்கி வருவான். வாழ்க்கையின் கடைசி கட்டத்துல என் நண்பனை சந்திச்சிருக்கேன். அவன் அன்பும், அன்யோன்யமும் எனக்கு வேணும். எதுவா இருந்தாலும், அவன் ஒரு அற்புதமான நண்பன்,'' என, குரல் தழுதழுக்க சொன்ன தாத்தாவை, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் பேரன் நந்து.


    எஸ்.ஹயாத்
Working...
X