Announcement

Collapse
No announcement yet.

சாஸ்தாவின் முதல் கோவில்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சாஸ்தாவின் முதல் கோவில்!

    ஆக., 14 ஆடி அமாவாசை


    தர்ம சாஸ்தாவே, ஐயப்பனாக மனித அவதாரம் எடுத்தார். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்பனுக்கும், பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் போன்ற படை வீடுகள் உள்ளன. இதில், நாம், சபரிமலைக்கே முக்கியத்துவம் தந்தாலும், இந்த படை வீடுகளில் முதலாவதாக விளங்குவது பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தர்மசாஸ்தா, பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.
    கைலாயத்தில், சிவபார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். பொதிகை மலையில் அகத்தியர் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப் போக்கில், அந்த லிங்கத்தை மணல் மூடிவிட்டது.
    பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள், ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி, அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அங்கே தோண்டிய போது, உள்ளே லிங்கம் இருந்தது. அங்கு, கோவில் எழுப்பினர். பின், தர்ம சாஸ்தாவுக்கும் சன்னிதி எழுப்பப்பட்டது.
    சாஸ்தாவை கிராமப் புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன்; மரியாதைக்காக, 'ஆர்' விகுதி சேர்த்து அய்யனார் என்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால், இவர், சொரிமுத்து அய்யனார் ஆனார். பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோவிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம்.
    பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதியில், வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்கு முதன் முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் தகவல் உண்டு.
    பாபநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் வசித்த முத்துப்பட்டன் என்ற பிராமணர், தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த பொம்மக்கா, திம்மக்கா என்ற பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம், பசுக்களைப் பாதுகாக்கும் போரில் பங்கேற்று மரணமடைந்தார். அவரை, பட்டவராயன் என்று அழைத்த மக்கள், இக்கோவிலின் ஒரு பகுதியில், அவருக்கு சன்னிதி எழுப்பினர்.
    தம் மனைவியருடன் பட்டவராய சுவாமி அருள்கிறார். இவர் பிராமணராயிருந்தும், தன் மாமனார் உத்தரவுப்படி செருப்பு தைக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக, இவரது சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக கட்டுகின்றனர்.
    கோவில் வளாகத்தில் உள்ள இலுப்பை மரத்தை, 'மணி விழுங்கி மரம்' என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகள், இந்த மரத்திற்குள் பதிந்து விடுகின்றன. இதனால், மணி விழுங்கி மரம் என்ற பெயர் வந்தது.
    ஆடி அமாவாசையன்று, இக்கோவிலுடன் சம்பந்தப்பட்ட சிங்கம்பட்டி ஜமீன்தார், ராஜதர்பார் உடையில் காட்சி தருகிறார். ராஜதரிசனம் பல யோகங்களைத் தரும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
    தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோவிலில், ஆடி அமாவாசையன்று, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த புண்ணியம் தரும்.
    திருநெல்வேலியில் இருந்து, 45 கி.மீ., தூரத்தில் பாபநாசம்; அங்கிருந்து மலைப்பாதையில், 10 கி.மீ., சென்றால், சொரிமுத்து அய்யனார் கோவிலை அடையலாம்.


    தி.செல்லப்பா
Working...
X