Announcement

Collapse
No announcement yet.

காதல் கொண்ட மனது!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காதல் கொண்ட மனது!

    கோலாலம்பூரிலிருந்து அதிகாலை, 4:30 மணிக்கு வந்த அழைப்பு, அன்றைய தினத்தின் கடுமையான வேலைச் சுமையை சொல்லாமல் சொல்லி விட்டது. தூக்கத்திற்காக கெஞ்சிய கண்களை உதாசீனப்படுத்தி குளியலறைக்குள் நுழைந்தாள் நிவிதா.
    பிரிஞ்சி ரைஸ், வானவில் ராய்த்தா என்று யோசித்து, இரவு தூங்குவதற்கு முன் நறுக்கி வைத்த காய்களை ஒரு தடவை பரிதாபத்துடன் பார்த்து, பின், கஞ்சி தயாரிக்க ஆரம்பித்தாள். தக்காளி சாஸ் தடவிய பிரட் துண்டுகளையும், பாலையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.
    விழிப்பு தட்டி, எழுந்து வந்த திவாகர், ''ஹாய் நிவி... இன்னும் விடியவே இல்ல, அதுக்குள்ள எந்திரிச்சு என்ன செய்திட்டிருக்க?'' என்று கேட்டவாறு அவளை செல்லமாக சீண்டினான்.
    ''அய்ய... விடு திவாகர் என்னை,'' சற்று எரிச்சலுடன் அவனைத் தள்ளி விட்டாள் நிவிதா.
    ''ஏய்... என்ன கோபம்டா உனக்கு?''
    ''மலேசியாவிலிருந்து கால்...அலுவலகம் போனதும் அது சம்பந்தமா உட்காரணும். அந்த சேல் பாயின்ட் சாப்ட்வேர்ல பெரிய பிரச்னை. சே... சரியா தூங்கக்கூட முடியல. பிரியாணி செய்யலாம்ன்னு ஆசையா காயெல்லாம் வெட்டி வெச்சேன்; ஐ.டி., வேலையே சாபமோன்னு தோணுது,''என்றாள் சிறு வெறுப்புடன்!
    ''சரி விடும்மா... இஷ்டமா செய்தாத் தான் எதுவுமே நல்லா இருக்கும். கடமைக்காக செய்ற எதுவும் சரியாவே வராது. உன் வேலை, உன் இஷ்டம்,'' என்று கூறி, மென்மையாக முதுகை தட்டிக் கொடுத்தான்.
    ''அதுக்காக, 70 ஆயிரம் ரூபா சம்பளத்த விட்டுட முடியுமா... சரி... ஓட்ஸ் கஞ்சியும், சாண்ட்விச்சும் வச்சிருக்கேன்; அட்ஜஸ்ட் செய்துக்கோ...'' என்றாள்.
    ''எனக்கு ஆபிஸ்ல நல்ல, 'கேண்டீன்' இருக்கு; நீ, உன் உடம்ப பாத்துக்க. சரி, நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா கண்ணு...''
    ''கொடுத்து வச்ச மகராசா, நீ தூங்குப்பா,'' என்று பெருமூச்சும், வேடிக்கையுமாக சொன்னாள் நிவிதா.
    மணி, 7:00க்கு ஆட்டோவில் சிறுசேரி நோக்கி பயணிக்கையில், மனம் ஏதேதோ சிந்தனையில் உழன்றது. திருமணமான இந்த இரண்டு ஆண்டுகள் வாழ்க்கையில், பணம், செல்வம், நகை, வாகனம் என்று எதற்கும் குறைவில்லை. ஆனாலும், வேலை வேலை என்று பரபரப்பு தான் நிரம்பியிருக்கிறது. பாவம் திவாகருக்கும் அப்படித் தான். பொறுப்பான பதவி, கை நிறைய காசு என்றாலும், 100 தொழிலாளர்களை நிர்வகிக்கிற டென்ஷனான வேலை.
    மொபைல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தாள்; மாமியார்!
    ''ஹலோ ஆன்ட்டி... எப்படி இருக்கீங்க? அங்கிள் சவுக்கியமா... உங்க கால்வலி குறைஞ்சதா...'' என்று உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டாள்.
    'நாங்க எல்லாரும் சவுக்கியம்; நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?''
    ''வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கோம். இப்பக்கூட ஆபிஸ் தான் போய்க்கிட்டிருக்கேன்,''என்றாள்.
    ''என்னது! இவ்வளவு சீக்கிரமா ஆபிஸ் கிளம்பிட்டே... சாப்பிட்டியா... கைல ஏதாவது எடுத்துக்கிட்டியா... திவாகர் வீட்டுல இருக்கானா?''
    ''அவர் வீட்ல தான் இருக்கார்; நான் கஞ்சியும், பிரட்டும் எடுத்துக்கிட்டேன்,'' என்றாள்.
    ''பத்து நாள் முன்னாடி பேசறப்ப கூட ஓட்ஸ், பிரட்ன்னு இதே தானே சொன்னே...''
    ''ஆமாம் ஆன்ட்டி... அதான் சொன்னேனே... இப்பல்லாம் வேலை ரொம்ப அதிகம்ன்னு! கவலைப்படாதீங்க நான் சமாளிச்சுக்குவேன்,'' என்று சிரித்தாள் நிவிதா.
    ஒரு கணம் இடைவெளி விட்டு, பின் மாமியாரே பேசினாள்...
    ''சொந்தக்காரங்க, அக்கம் பக்கம்ன்னு எல்லாரும், நல்ல செய்தி உண்டான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் உனக்கு வயிறு திறக்கலியே...''
    ''இல்ல ஆன்ட்டி.''
    ''ரெண்டு வருஷம் நல்லபடியா போனாலும், இன்னும் வயிறு காலியாவே இருக்குங்கிறது நல்ல விஷயம் இல்ல. ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போய், 'செக்' செய்துக்குங்க... திவாகர்கிட்ட பேசட்டுமா... ஏற்கனவே நான் சொன்னது தான். ரெண்டு பேரும் காதுலயே வாங்கல.''
    ''இல்ல ஆன்ட்டி, 'செக்' செய்தாச்சு, ஒரு பிரச்னையும் இல்ல; ஆரோக்கியமா இருக்கோம்ன்னு தான் சொல்லியிருக்காங்க,''என்றாள்.
    ''அப்படின்னா இன்னும் ஏன் ஒரு நல்ல செய்தியும் இல்ல... ஏதாவது சரி செய்யக் கூடிய குறையா இருந்தா கூட பரவாயில்ல. ஆனா, எல்லாம் நல்லா இருக்கும் போது, இப்படின்னா ரொம்ப பயமா இருக்கே...''என்றாள் மாமியார்.
    காலை நேரத்து குளிர்ச்சியையும் மீறி, அவளுக்குள் சூடு ஏறியது. சிரமத்துடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
    மாமியார் விடாமல் தொடர்ந்தாள்... ''இப்படியே விட்டா வயசு போயிடும். திவாகரோட அப்பா ஒரு பெரிய டாக்டரோட அட்ரசை வாங்கிட்டு வந்திருக்கார். நம்மால முடியாதத அவங்க செஞ்சு தருவாங்க, புரியுதா? திவாகர்கிட்டேயும் பேசறேன்; வெச்சுடறேன்.''
    ஏதோ பெரிய புயல் உருவானதைப் போல உள்ளே அமைதியிழந்தது. மனதெங்கும் பரவிய வெப்பம் அவளையே உருக்கி விடுமோ என்று அச்சமாக இருந்தது. விரல்கள் தாமாக வயிற்றைத் தடவின. இமைகள் நனைந்து, இரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
    மதியம், 12:00 மணிக்குத் தான் சற்று ஓய்வு கிடைத்தது. 'கபகப'வென்று இரைந்த வயிற்றுக்கு பதில் சொல்ல டப்பாவைத் திறந்தாள். காய்ந்து உலரத் தொடங்கியிருந்த பிரட்டை பிய்த்து வாயில் போட, மொபைலில் அம்மாவின் எண்கள் ஒளிர்ந்தன.
    ''சொல்லும்மா,'' என்றாள் சிறு அலுப்புடன்!
    ''லஞ்ச் நேரமா நிவி... சாப்பிட்டுக்கிட்டா இருக்கே?''
    ''ஆமாம்மா... நீ எப்படி இருக்கே, அப்பா நல்லா இருக்காரா?''
    ''எல்லாரும் நல்லா இருக்காங்க. என்னடா கண்ணு சாப்பிடறே?''
    ''பிரட், ஜாம், அப்புறம் ஓட்ஸ் கஞ்சி.''
    ''என்னம்மா இது! எப்ப கேட்டாலும் பிரட், சாஸ், நூடுல்ஸ்ன்னு இப்படியே சொல்றே... ஒரு பொங்கலோ, தோசையோ, இட்லியோ செய்யக் கூட நேரமில்லயா உனக்கு?'' அம்மாவின் குரலில் இருந்தது கோபமா இல்லை ஆற்றாமையா என்று உணரும் நிலையில் அவள் இல்லை.
    ''உனக்கென்னமா வீட்டுல உட்கார்ந்துகிட்டு ஆப்பம், இடியாப்பம்ன்னு தினமும் வகை வகையா சமைச்சு சாப்பிடறே... ஐ.டி., வேலையில இருந்து பார், என் கஷ்டம் தெரியும்,''என்றாள்.
    ''மாப்பிள்ள உதவி செய்யக் கூடாதா?''
    ''பாவம்மா அவர்; இரவு, 11:00 மணிக்கு வரார்... தினமும் சைட்டுல, வெயில்ல நின்னு வேலை வாங்கிற வேலை. அசந்து தூங்கறார். சரி சொல்லு, எதுக்கு போன் செய்த?''
    ''நிவி கண்ணு... கோபப்படாம நான் சொல்றதைக் கேக்கறியா...'' என்று குழைந்தாள் அம்மா.
    ''அப்ப... கோபப்படற மாதிரி தான் கேக்கப் போறே... சரி கேளு...''
    ''ஊர் கேக்குது, தெருவே கேக்குது... இப்ப உன் அத்தை, சித்தின்னு எல்லாரும், 'எப்ப பேரன், பேத்திய பாக்கப் போறே'ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு தெரியும்... உங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்னையும் இல்லன்னு! ஆனாலும் ஏன் பிள்ளை உண்டாகலன்னு பயமா இருக்கு.''
    ''இப்ப என்ன செய்யச் சொல்றே?''என்றாள் எரிச்சலை உள்ளடக்கி!
    ''நீங்க ரெண்டு பேரும் ரொம்ப படிச்சவங்க. எல்லாம் காலாகாலத்துல நடக்கணும்; வயசு போய்ட்டா அப்பறம் ரொம்ப கஷ்டமா போயிரும். இப்பெல்லாம் செயற்கை முறையில குழந்தை பேரு உண்டாக்குற ஆஸ்பத்திரிக நிறைய இருக்காம்; அதுல எதுக்காவது போகலாம். சட்டுன்னு ஒரு வருஷத்துல எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். யோசி; மாப்பிள்ளைகிட்டயும் இதப் பத்தி பேசு,'' என்று கூறி, தொடர்பை துண்டித்தாள்.
    'அய்யய்யோ விடுங்களேன் என்னை! பிள்ளை பெத்துக்கணுங்கிற ஆசை எனக்கு மட்டும் இல்லையா... அந்த அற்புதமான தருணத்திற்காக தானே நானும் காத்திருக்கேன். பின்னே ஏன் என்னை நிர்பந்திக்கிறீங்க...' என்று மனதுக்குள் புலம்பினாள்.
    ''நிவி... நிவி,'' என்று தோழி தோளைக் குலுக்கியதும், கண்களைத் திறந்தவளின் கண்களில் கண்ணீர்த் துளிகள்.
    ''என்ன மொபைல்ல மாமியாரா... இன்னும் ஏன் குழந்தை இல்லன்னு குத்திக் காட்டறாங்களா,'' என்று முகம் பற்றிக் கேட்டாள் வசுமதி.
    ''அம்மாவும் தான்,'' என்று தழுதழுத்தவள், ''செயற்கை முறை கருத்தரிப்பு மருத்துவமனைக்கு போக சொல்றாங்க. தலை சுத்துது... என்ன செய்றதுன்னே தெரியல.''
    ''சரியாத்தானே சொல்றாங்க... இதுக்கு எதற்கு இவ்ளோ பீல் செய்ற...''
    ''என்ன சொல்றே?''
    ''ஆமாம் நிவி... இது அறிவியல் யுகம். பெண் தொடர்பில்லாமல் ஆணும், ஆண் தொடர்பில்லாமல் பெண்ணும் பிள்ளை பெற்றுக் கொள்கிற காலம். 'லேப்'ல வெச்சு கருவை உண்டாக்கறாங்க டாக்டர்ஸ்... உன் கேஸ்ல, கர்ப்பப் பை வேலையை ஒரு கருவி செய்து தரப்போகுது. அவ்வளவு தான்! இதுல யோசிக்கவோ, கவலைப்படவோ எதுவுமே இல்ல.''
    ''என்ன வசு... இவ்வளவு சுலபமா சொல்லிட்டே! உண்மையிலேயே இது, சாதாரண விஷயம் தானா... நான் தான் குழப்பறேனா...''என்றாள் கண்கள் படபடக்க!
    ''ஆமா நிவி... இதுல பெரிசா யோசிக்க ஒண்ணுமே இல்ல. சொல்லப் போனா மகாபாரதத்துல வருமே... பூமியில இருந்த ராஜகுமாரி குந்திக்கும், வானத்துல இருந்த சூரியனுக்கும் கர்ணன் பிறந்தான்னு...'' என்று கூறி, சிரித்தாள் வசுமதி.
    மனசு மெல்ல தெளிவதை உணர்ந்தாள் நிவிதா. சிறிது நேரத்தில், மொபைல் போனில் திவாகரை அழைத்தாள்.
    ''சொல்லு நிவி... ஏதாவது அவசரமா... வேலை நேரத்துல கூப்பிட மாட்டியே...''என்றான் படபடக்கும் மனதுடன்!
    ''ஆமா திவாகர்... உடனடியா நமக்கு குழந்தை வேணும்,''என்றாள்.
    ''என்ன... பாப்பாவா... கடை பேர் சொல்லு, வாங்கிட்டு வரேன்,'' என்றான் சிரித்துக் கொண்டே!
    ''பீ சிரியஸ் திவாகர்... நம்ம ரெண்டு பேரோட அம்மாக்கள் தொல்லையும், பாக்கிறவங்க கேக்கிற கேள்விகளையும் தாங்க முடியலே. கருவாக்கம் மருத்துவமனையோட அட்ரஸ உங்க அம்மா கொடுத்துருக்காங்க. நாளைக்கே நாம அங்க போறோம்...''
    ''கருவாக்க மருத்துவமனையா! என்ன சொல்றே நிவி... புரியல,'' என்றான் திவாகர்.
    ''செயற்கை முறை கருத்தரிப்பு; நம்மால முடியாதத, மிஷின் செய்து தரும். நமக்கு வேற வழியில்ல,'' என்றாள் படபடப்புடன்!
    ''நிவி... நீயா இப்படி பேசறே...'' என்றவனின் குரலில், அதிர்ச்சி.
    ''ரெண்டு வருஷ வாழ்க்கையில ஒரு கரு கூட ஜனிக்கலே. இது நார்மல் இல்லன்னு நம்ம வீடுகள்ல பயப்படறாங்க. ஏன் எனக்கே இது மன உளைச்சலா இருக்கு.''
    ''எதுலயும் அவசரம் கூடாது; முதல்ல பொறுமையா உட்கார்ந்து பேசுவோம். கவலைப்படாதே சரியா... போனை வெச்சுடறேன்... பை பை.''
    பெருமூச்சுடன் கண்களை மூடினாள். திவாகர் உடனே சரி என்பான் என, எதிர்பார்த்தாள்.
    'இனி, அடுத்த போராட்டம் திவாகருடனா... என்ன வாழ்க்கை இது... எல்லார் பேச்சையும் கேட்டுக் கொண்டு... என் வயிறே... ஏன் என்னை இப்படி கதற வைக்கிறாய்...' என்ற மனப் போராட்டத்தில், தலை சுற்றியது.
    பசியிலும், குழப்பத்திலும் தேகத்தின் அவயங்கள் கெஞ்சின. யாராவது கிண்ணத்தில் ஒரு வாய் ரசம் சாதம் கலந்து நீட்ட மாட்டார்களா என்று அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வீடு நோக்கி விரைகிற இந்த பயணத்தில், காலம் முடிவுற்ற துயரக் காட்சியாய் பயமுறுத்தியது.
    வீடு, சந்தன ஊதுபத்தியின் நறுமணத்துடன், அதனுடன் தக்காளி ரசத்தின் வாசனையுடன் வரவேற்றது. தினசரிகள் அடுக்கி வைக்கப்பட்டு, தரையின் சுத்தம் கண்ணைப் பறித்தது. கண்ணாடிக் குடுவையில் பச்சைப் பசேலென்று மனதைத் தொட்ட மனி ப்ளாண்ட் ஒன்றே போதும், பாதி சோர்வை விரட்டியக்க! எப்படி! அம்மா வந்திருக்கிறாளா... சொல்லவே இல்லையே... இப்படி எல்லாவற்றிலும் இருக்கிற ஒழுங்கு இவ்வளவு அழகாகவா இருக்கும்! அதற்கென்று தனியாக ஆடம்பர ஓவியங்கள், சோபாக்கள், கார்ப்பெட்டுகள் என்கிற தேவையே இல்லாமல், தூய்மையும் ஒழுங்குமே அந்த அழகைக் கொண்டு வந்து விடுமா!
    ''வணக்கம் ராஜகுமாரி,'' என்ற திவாகரின் குரல் கேட்டு திரும்பினாள்.
    சிரித்தபடி சமையலறையிலிருந்து வந்தான் திவாகர்.
    ''திவா... நீயா? எப்படி இந்த நேரத்துல... இதென்ன நம்ம வீடா,'' என்று, சிறுமி போல கண்களை விரித்தாள் நிவிதா.
    ''எஸ் மேடம்... இது நம் வீடு தான். முதல்ல இந்த மாதுளைச் சாறை பருகுங்கள் தேவி,'' என்று டம்ளரை நீட்டினான். அப்படியே வாங்கி, கடகடவென குடித்து முடித்தாள்.
    இரவு, 9:00 மணிக்கு, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தால், காலில் ஒட்டும் தூசி, சிதறிக் கிடக்கும் தினசரிகள். சோபாவில், நாற்காலியில் இறைந்து கிடக்கும் துணிகள், சாப்பாட்டு மேஜையில் காய்ந்து கிடக்கிற கஞ்சி, வாணலி, தட்டுகள், பருக்கை, காய்கறித் தோல் என்று அருவருப்பான கிச்சன், ஆனால், இன்று அதே வீடு, ஆலயம் போல பளீரிட்டது. முக்கியமாக மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது.
    ''திவா,'' என்று அவன் கைகளைப் பற்றி, ''நன்றி திவா... பசி என்னை அப்படியே முழுங்கப் பாத்துக்கிட்டிருந்தது. வழியில எத்தனை ஓட்டல்கள்... ஆனால், அப்படியெல்லாம் போய் சாப்பிட்டு பழக்கமே இல்லயே... வீட்டுக்கு வந்து உப்புமா கிளறி சாப்பிட்டு, உயிரை மீட்டுக்கலாம்ன்னு ஓடி வந்தேன். நீ கொடுத்த ஜூஸ் என்னை மறுபிறவி எடுக்க வெச்சிட்டது.''
    ''ஓ மை டியர்,'' என்று அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.
    ''சரி, சொல்லு... ஏன் ஓட்டல்ல சாப்பிட உனக்கு பிடிக்கல?''என்று கேட்டான்.
    ''ஒரு வாய் சோறானாலும் நம் வீட்டு சாப்பாட்டுக்கு ஈடு வருமா... ஓட்டல்ல தயாரிக்கிற உணவுல அன்பு தான் இருக்குமா?''
    ''ரொம்ப சரியா சொன்னே... அப்படி ஒரே ஒரு வேளை சாப்பிடற உணவுக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற நீ, நமக்கே நமக்கான குழந்தைய கடையில வாங்கலாம்ன்னு எப்படி சொல்றே?''
    ''புரியல...''
    ''தற்போதைய நம் வாழ்க்கையில பரபரப்பைத் தவிர வேற எதுவுமே இல்ல. நம் ரெண்டு பேரொட தொழிற்படிப்பும் நமக்கு நல்ல வேலையையும், சம்பாத்தியத்தையும் கொடுத்திருக்கு. ஆனா, வாழ்க்கையின் அர்த்தத்தை கொடுக்கல.
    ''லேட்டா வீட்டுக்கு வந்து, எதையோ அவசரமா செஞ்சு, ஆரோக்கியமில்லாம சாப்பிட்டு, டென்ஷனோட படுத்து, தாம்பத்திய வாழ்க்கையையும் கடமைக்கு முடிச்சு, மறுபடி அடுத்த நாள் அதே யந்திர உலகத்துக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, இது மனித வாழ்க்கையே இல்லே. மொதல்ல இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்.''
    கவலையுடன் அவனையே பார்த்தாள்.
    ''யாராவது ஒருத்தர் வேலைய விடுவோம்... அட்லீஸ்ட், ரெண்டு, மூணு மாசத்துக்கு தற்காலிக விடுமுறையாவது எடுப்போம். அமைதி, சந்தோஷம் கொடுக்கிற விதமா வீட்டை அமைச்சுப்போம். நீ தான் லீவு எடுக்கணும்னு நான் சொல்லவே இல்ல... ரெண்டு பேர்ல யாரோட ஆபிஸ், நம்மை புரிஞ்சுக்கிற தன்மையோட இருக்கோ, அங்க சொல்லி லீவு எடுப்போம். ஒருத்தர் வீட்டுல இருந்து அருமையா சமைப்போம்; சின்ன தோட்டம் போடுவோம்; தூய்மையா பராமரிப்போம். இசை கேட்போம்... நல்ல சினிமா, கடற்கரைன்னு அழகுகளை சேத்துப்போம். மாசம் ஒரு முறை, இங்க பக்கத்துல இருக்குற சுற்றுலா தலங்களுக்கு சின்னதா டூர் போவோம்... சரியா?''
    அவள் தலை தானாக ஆடியது.
    ''செயற்கை கருவாக்கம், ஐ வி, டெஸ்ட் டியூப் பேபி இதெல்லாம் அறிவியல் உருவாக்கிக் கொடுத்த அற்புதங்கள். வேற வழியே இல்லை என்கிறபோது அந்த உதவிகளை நாம ஏத்துக்கலாம்; ஆனா, நமக்கு நாமளே பெரிய உதவி என்கிறது தான் என் எண்ணம். தவிர, நம் குழந்தை, காதல்ல, ஒருத்தர் மேலே ஒருத்தர் வெச்சிருக்கிற பேரன்பின் பிம்பமா உருவாகணும்; லேப்ல இருக்கிற குடுவையில வேணாம், அதுக்கான அவசியம் இல்லே; அன்பும், காதலும் அந்த சேவையை செய்யட்டும். சரியா என் கண்ணே...''
    நிவிதாவின் கண்கள் சரசரவென்று நீரைப் பொழிந்தன.
    ''குழந்தை இப்ப பொறக்குது இல்லே பத்து வருஷம் கழிச்சு பொறக்குது. அது போகட்டும்... இவ்வளவு பக்குவமா, கரிசனமா இருக்கிற கணவன் எனக்கு போதும். வாழ்க்கைத் துணைன்னா எப்படி இருக்கணும்ங்கிறத நான் உங்க கிட்ட கத்துக்கிட்டேன்; ஐ லவ் யூ திவா...''
    கண்களில் நீரோட உணர்ச்சிவசப்பட்டு பேசும் மனைவியை, இதமாக அணைத்துக் கொண்டான் திவாகர்.


    உஷாபாரதி

  • #2
    Re: காதல் கொண்ட மனது!

    Nicely written.Well done.
    Keep it up.
    varadarajan

    Comment

    Working...
    X