காஷ்யபன்கிலத்தில் அனந்தகோடி க்ஷேத்திரங்கள் இருக்க, 'பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம்' என்று கயாவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு மகத்துவம் எப்படி வந்தது? கயாவுக்கு மட்டுமே இது பொருந்துமா? அல்லது, வேறு ஏதாவது க்ஷேத்திரங்கள் உள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பீட்டாபுரம் குக்குடேஸ்வரர் ஆலயம்.
தட்சனின் ஆணவம் அழிக்க, அவனது யாகத் தீயில் பாய்ந்தாள் தாட்சாயினி. அதையறிந்து கோபம் கொண்ட சிவனார், தட்ச யாகத்தை அழித்ததுடன், சக்தியின் சடலத்தைத் தோளில் சுமந்தபடி, தாண்டவம் ஆடினார். இதனால் உலகம் அல்லலுற, மகாவிஷ்ணு சக்ராயுதத்தை ஏவி தாட்சாயினியின் உடலை துண்டு துண்டாக வெட்டிவீழ்த்த, அந்த பாகங்கள் பூமியில் எங்கெங்கு வீழ்ந்தனவோ அவை யாவும் சக்தி பீடங்களாயின என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான். அவ்வாறு, அன்னையின் பிருஷ்ட பாகம் வீழ்ந்த இடமே பீட்டாபுரம்.
ஒருகாலத்தில், இந்த நகரை தலைநகராகக் கொண்டு அகிலத்தையே ஆட்சிசெய்து வந்த கயாசுரன், சிறந்த விஷ்ணு பக்தனாகத் திகழ்ந்தான். தனக்குப் புனிதமான தேகம் அமைய வேண்டும் என்று பெருமாளிடம் வரம் பெற்றவன் இவன். இதனால், கயாசுரனின் தேகத்தைத் தீண்டிய தென்றல் லேசாக தங்கள் மீது பட்டாலே, கொடும் பாவம் செய்தவர்களும் பாபவிமோசனம் பெற்றனர். பற்பல தானங்களையும், எண்ணிலடங்கா அசுவமேத யாகங்களையும் ஆற்றி வந்த பவித்ரமான கயாசுரனுக்கு பூலோகம் மட்டுமல்லாது, இந்திரலோகத்தை ஆளும் வாய்ப்பும் கிட்டியது. இதனால் பதறிப்போன இந்திரன், மும்மூர்த்தியரை நோக்கித் தவமிருந் தான். 'நானே மீண்டும் மூவுலகுக்கும் அதிபதியாக வேண்டும். தேவரும் முனிவரும் தங்கள் கடமைகளைத் தங்கு தடையின்றி ஆற்றிட அருள வேண்டும் என்று யாசித்தான்.இந்திரனின் கோரிக்கையை ஏற்ற மும்மூர்த்தி களும் அந்தணர்களாக உருவெடுத்து, கயாசுரனைச் சந்தித்தனர். அவர்களைச் சிறப்பாக வரவேற்று உபசரித்தவனிடம், ''கயாசுரா, மண்ணுலகில் மழைவளம் குன்றிவிட்டது. எனவே, பவித்ரமான பிரதேசத்தில் அக்னி வளர்த்து யாகம் நிகழ்த்த வேண்டும். இந்த மூவுலகிலும் பவித்ரமான பிரதேசம் எதுவென்று கேட்டால், அது உன் தேகம்தான். எனவே, ஏழு நாட்களுக்கு உன் தேகத்தின் மீதே யாகம் நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு, கயாசுரனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.
ஆனால், அந்தணர்களோ அடுத்த நிபந்தனையை விதித்தனர். ''அசுரர்கோனே! ஏழு நாட்களும் யாகம் முடியும் வரை நீ அப்படி இப்படி இம்மியள வும் அசையக்கூடாது, அப்படி அசைந்தால், யாகத்தைக் குலைத்த காரணத்தால் நாங்களே உன்னை வதம் செய்ய வேண்டியிருக்கும்'' என்றனர். கயாசுரன் சற்றும் தயங்காமல் அதற்கும் ஒப்புதல் அளித்தான். ஏழு தினங்களின் எண்ணிக்கைக்கு, ஞாலத்தில் ஞாயிறு முகிழ்க்கும் பொழுதில் சேவல் கூவுவதைக் கணக்காக வைத்துக்கொள்ளலாம் என அந்தணரும், அசுரர் கோனும் இணைந்து முடிவெடுத்தனர்.
வாக்களித்தபடியே கயாசுரன் தனது தேகத்தைப் பெரிதாக்கி, தலைப்பகுதியை பீகாரில் கயா க்ஷேத்திரத்திலும், வயிற்றுப் பகுதியை ஒரிசாவில் ஜிஜாப்பூரிலும், கால் பகுதியை கிழக்கு கோதாவரி யில் ஆந்திர பீட்டாபுரம் பகுதியிலும் இருக்குமாறு படுத்தான். அசுரனின் சிரப்புறத்தில் விஷ்ணுவும், பாதப்புரத்தில் மகேஸ்வரனும், நாபிப்புரத்தில் பிரம்மாவும் யாகத்தைத் தொடங்கினர். யோக வலிமையால் கயாசுரன் தனது தேகம் அசையா மல் நிலைநிறுத்தினான். சேவலின் கூவலைக் கணக்காகக் கொண்டு, ஆறு நாட்கள் யாகம் சிறப்பாக நடைபெற்றது.மீதமுள்ள ஒரு நாளும் யாகம் குந்தகமின்றி நிறைவேறினால் மும்மூர்த்திகள் தனக்கு அளித்த வரம் வாய்க்காது போய் விடுமே என்று தேவேந்திரன் நினைவுபடுத்தினான். எனவே, ஏழாம் நாள் இடையிலேயே ஈஸ்வரன் சேவல் வடிவெடுத்து, 'கொக்கரக்கோ என்று கூவ, கயாசுரனோ ஏழு நாள் யாகமும் இனிதே பூர்த்தியானதாக எண்ணி எழுந்தான். அதன் விளைவாக யாகம் தடைப்பட்டது.அந்தண வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளும் ரௌத்ர மூர்த்திகளாக மாறி, 'யாகம் குலைத்த உன்னை சம்ஹாரம் செய்தே ஆகவேண்டும் என்றனர்.
நடந்த உண்மைகள் அனைத்தும் அசுரர் கோனுக்கு அக்கணமே தெரியவந்தன. அவன் மனமகிழ்ந்தான். இயல்பான மரணம் எய்துவதைவிட திரிமூர்த்திகளின் திருக்கரங்களால் மரணம் நிகழ்வதைப் பெரும்பேறாகக் கருதினான். கூடவே, தான் கிடந்திருந்த மூன்று கயா பாகங்களிலும், மக்கள் தங்களைப் பெற்றவர்களுக்கும், பெரியோர்களுக்கும் பிண்டம் படைத்து வேண்டினால், அவர்தம் பித்ருக்களுக்கு முக்தி அருளவேண்டும் என்றும்
இறைஞ்சினான். மும்மூர்த்திகளும் அவ்வாறே வரம் அளித்து, அவனை வதம் செய்து, தங்களோடே இணைத்துக் கொண்டனர்.
அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தின்படி கயாசுரனின் சிரம் இருந்த கயா மாங்கல்ய கௌரி திகழும் சக்தி பீடமாகவும், நாபி இருந்த ஜிஜாப்பூர் கிரிஜாதேவி சக்தி பீடமாகவும், பாதம் இருந்த பீட்டாபுரம் ப்ருஹூதிகா சக்தி பீடமாகவும் விளங்கத் தொடங்கின. உலகின் உன்னதத் தலங் களாக அறியப்படும் இந்த மூன்று தலங் களிலும், பெரியோர்களுக்குப் பிண்டம் படைத்தால் அவர்கள் முக்தி அடைவது திண்ணம்.
மூன்று கயா க்ஷேத்திரங்களில், பாதகயா வான பீட்டாபுரம் முதன்மையானது, மிகப் பழைமையானது. இந்தத் தலத்தில் தான், கயாசுரனை சம்ஹாரம் செய்ய ஈசன் சேவல் உருவெடுத்திருக்கிறார்.
ஆலய வளாகத்தின் உள்ளே நுழைந் ததும், பிரமாண்டமான தீர்த்தக் குளம் வரவேற்கிறது. இந்தக் குளம்தான் கயா சுரனின் பாதம் இருந்த இடம். இதன் வடக்குக்கரையில் சிவபெருமானின் சுதைச் சிற்பம். கிழக்குக் கரையில், ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குக்குடேஸ்வரரைத் தரிசிக்கும் நிலையில் அமைக்கப்பட்ட ஒரு சுதை நந்தி. தென்கரையில் மயானம். குளத்தின் மேற்குக் கரையில் ஐந்து நிலை ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே நுழைந்தால், முதலில் ப்ருஹூதிகா அன்னையின் தரிசனம். தனிக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இந்த அன்னைதான் இந்தத் தலத்தில் முதலில் எழுந்தருளியவள். சக்தி பீட நாயகி. இவளின் இடது மேல்கரத்தில் அமிர்த கலசம், வலது மேல் கரத்தில் ஜபமாலை, வலது கீழ்க் கரம் அபயஹஸ்தமாக விளங்க, இடது கீழ்க் கரம் வரதான நிலையில் தொடையில் பதிந்து, அழகு தரிசனம் அளிக்கிறது. அவளை அடுத்து, அன்னை துர்கைக்கு ஒரு சந்நிதி. அடுத்து மூலவர் கருவறை. கயாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க ஈசன் சுயம்பு மூர்த்தியாக குக்கூட்ட லிங்கம் என்ற பெயரில், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.
கர்ப்பக்கிரகத்துக்கு நேர் எதிரே தனி மண்டபத்தில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார். மேனி முழுவதும் மணிப் பட்டைகள் அலங்காரமாய்ச் செதுக்கப்பட்டுள்ள இந்த நந்தி, எந்தப்பொழுதிலும் எழுந்துகொள்ளும் தயார் நிலையில் அமர்ந்திருக்கிறார்.
இந்த நந்தி பகவானின் அருகில் நின்று, எதிரில் தரிசனம் அளிக்கும் குக்குடேஸ்வரர் மீது கவனத்தைப் பதித்தால், சில விநாடிகளில் உடலில் அதிர்வுகள் ஏற்படுவதை அனுபவபூர்வமாக உணர முடிகிறது.
கருவறையின் பின்புறச் சுவரில் லிங்கமும், சேவலும் கற்சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. சீதாராமர், சங்கராச் சாரியார், காசி விசுவநாதர், அன்னபூரணி, சுப்ரமணியர் ஆகியோரின் ஒற்றை தளக் கோயில்கள், ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளன. கர்ப்பக்
கிரகத்துக்கு வலப் பக்கத்தில் ஒற்றை தளக் கோயிலில், சிறியதொரு மூஞ்சூறை வாகனமாகக் கொண்டு, திகம்பர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.
அவரை அடுத்து, தத்ராத்ரேயர் சந்நிதி. பாரதத்தின் பிற தத்ராத்ரேய க்ஷேத்திரங்களான கரஞ்சை, குருபுரம், நரசோபவாடி, கங்காபூர் மற்றும் உடும்பரா ஆகிய அனைத்துக்கும் முதன்மையானது இந்த பீட்டாபுரம் தத்ராத்ரேயர் க்ஷேத்திரம். இதுவே மூல க்ஷேத்திரமும்கூட! தத்ராத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் பிறவி எடுத்ததும் பீட்டாபுரத்தில்தான் என்பதால், மூலவரை தரிசிக்க வருகிறார்களோ இல்லையோ, தத்ராத்யேயரைத் தரிசிக்காமல் யாரும் செல்வதில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendscourtesy:சக்தி விகடன் - 18 Aug, 2015