பும்ஸவநம் என்றால் புருஷ ப்ரஜை ஜநிக்க (பிறக்க) வேண்டும் என்பது. கர்பம் தரித்த 4ம் மாதத்தில் இதைச் செய்யவேண்டும் என்று ரிஷி விதித்திருக்கிறார். கர்பத்தில் உருவாகியுள்ள சிசு ஆண்பாலா பெண்பாலா என்பதை தீர்மானிக்கும் விஷயங்கள் (லிங்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது) உருவாவதற்கு முன் பும்ஸவனத்தைச் செய்தால்தான் ஆண் சிசுவை எதிர்பார்க்க முடியும். பகவனால் லிங்கம் ஏற்பட்ட பின்னர் இதைச் செய்தால் அது பலிக்காது.
ஸீமந்தோந்நயனம் என்றால் வகுடு பிரித்தல் உள்ள கர்மாவாகும். இது 6 அல்லது 8ம் மாதத்திற்குள் செய்யவேண்டியது. இப்போது இவ்விரு கர்மாக்களும் சேர்த்தேதான் அநுஷ்டிக்கப்படுகிறது. இவை சிசுவுக்கும் கர்பிணிக்கும் சேர்ந்து உத்தேசமானது. இதை ஒவ்வொரு கர்பத்திற்கும் அநுஷ்டித்தல் நலம் என்பது பல ரிஷிகளின் அபிப்ராயம். ஏனெனில் முன் மந்த்ரப்படி, கணவன் - ஒவ்வொரு கர்பத்திலும் உனக்கு புருஷ ப்ரஜையே ஜநிக்க வேண்டும் என்று ப்ரார்தித்துக்கொண்டிருக்கிறான்.

மந்த்ரார்த்தம் 2ம் ப்ரச்னம் 11-ம் கண்டம்
இங்கு மந்த்ர ஆரம்பம் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. நாமிங்கு முழுவதையும் எழுதுவோம். இது தைத்ரீய யஜூர் ஸம்ஹிதை காண்டம் 3, ப்ரச்நம் 3, அநுவாகம் 11ல் வருகிறது.

1. உலகத்திற்கு ரக்ஷகனும், ச்ருஷ்டி, ஸம்ஹாரங்களைச் செய்ய வல்லவனுமான ப்ரஹ்மதேவன் நமக்கு தனத்தைத் தரட்டும்.
2. ப்ரஹ்ம தேவன்தான் தனத்திற்கும், ப்ரஜைகளுக்கும் அதிபதி. அவர்தான் இந்த உலகத்தை ச்ருஷ்டி செய்தவர். அவர் இந்த ஸீமந்த ஹோமம் செய்கிற யஜமானனுக்கு புத்ரனைக் கொடுக்கிறவர். அந்த ப்ரஹ்ம தேவனுக்கு நெய் நிறைந்த ஹவிஸ்ஸைக் கொடுக்கிறேன். ஹோமம் செய்கிறேன்.

3. ப்ரஹ்ம தேவன்தான் குறைவற்ற தனத்தை பரம்பரை பரம்பரையாய் கொடுத்து வருகிறார். அவர் ஸத்யஸங்கல்பர் (எண்ணியது எண்ணியாங்கு எய்தப்பெறுபவர்). அவர் நிச்சயமாய் அநுக்ரஹிப்பார் என்பதை த்யானம் செய்கிறோம்.

4. புத்ர காமனும் (பிள்ளைச் செல்வத்தை விரும்புகிறவனும்), கர்பாதானம் செய்திருப்பவனும், தற்போது (இந்த ஸீமந்த ஹோமத்தில்) ஹவிஸ்ஸை (தேவ ஆஹாரம்) வழங்குகிறவனுமான எனக்கு ப்ரஹ்ம தேவன் ஸந்தாந ஸம்பத்தை (ஸந்தானம் என்றால் குழந்தை, ஸம்பத் என்பது சொத்து அல்லது பாக்யம் என்று பொருள்படும்) அநுக்ரஹிக்கட்டும். மேலும், மரணமில்லாதவர்களான விச்வே தேவர்கள் (எந்த தேவருக்கும் மரணம் கிடையாது, அதனால் அவர்களுக்கு அமரர்கள் என்று பெயர்) மற்ற தேவர்களைப்போல் என்னிடம் ப்ரியமாய் இருக்கும் 'மதிதி' தேவியும் எனக்கு ஸத்புத்ரனை உண்டு பண்ணட்டும்.
"தாத்ர இதம் நமம" என்று ஒவ்வொரு ஹோம முடிவிலும் சொல்லப்படும் "தாத்ரு ஹோம மந்த்ரார்த்தம்" முடிவடைந்தது.

இனி வரப்போகும் ரிக்குகள் (மந்த்ரங்கள்) முதல் காண்டம், 4ம் ப்ரச்நம், 46ம் அநுவாகம்.
1. ஓ! அக்நிதேவனே! நான் என்றைக்காவது மரிக்கக் கூடியவன், நீரோ மரணமற்றவர். ரக்ஷணார்த்தம் (காப்பதற்காக) உம்மை அழைக்கிறேன். ஓய் ஜாதவேதஸே (பிறந்த யாவற்றையும் அறிபவர்)! எனக்குக் கீர்த்தியைக் கொடும். ஸந்ததிகளை அடையும் பாக்யத்தை அளித்து என்னை(யும்) மரணமற்றவன் ஆகச்செய்யும். (ஆத்மாவை புத்ர நாமாஸி" என்னும் மந்த்ரம், ஒருவன் தானே மகன் ரூபத்தில் பிறக்கிறான் என்று கூறுகிறது. எனவே ஒரு மகனைப் பெறுவதன் மூலம் அவன் மரணத்திற்குப் பின்னும் மகன் உருவில் வாழ்வதால் மரித்தும் மரியாதவனே ஆகிறான்).

2. உம்மை உபாஸிப்பவருக்கு இஹத்தில் (இவ்வுலகில்) ஸந்ததி, ஸம்பத் (சொத்துக்கள்), பசுக்கள், தாஸபூதர்கள் (வேலையாட்கள்) ஆகியவையும், பரத்தில் (மரித்தபின் செல்லும் உலகில்) ஸுகமும் உமது கடாக்ஷத்தால் (அருளால்) ஏற்படும்.

3. பலம் மிக்கவனான சவஸ்" என்ற தேவனின் மைந்தனான அதிக பலமுள்ள ஓ இந்த்ர தேவனே! உம்மிடம் போக்ய வஸ்துக்கள் (இன்பத்தை அளிப்பவை) ஸம்ருத்தியாக (தேவைக்கும் மிகுதியாக) இருக்கின்றன. ஆகையால், (இன்பத்தை விரும்பும்) யாவரும் உம்மையே உபாஸிக்கின்றனர். உம்மைவிட மேலான ஒருவரும் இன்மையால் (தக்காரும் மிக்காரும் இல்லாததால்) எனக்கு பலமான (வலிமையுள்ள) புத்ரனை ஸங்கல்பியும் (ஆசீர்வதியும்).

4. ஒருவன் பெற்ற பிள்ளைகளுக்குள் சண்டை ஏற்பட்டால், அவர்கள் தம் தந்தையிடம் முறையிட்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வது போல, மற்ற தேவர்களுக்குள் வழக்கு (பிரச்சினை) ஏற்படும்போது, அவர்கள் உம்மை (பிதாவாக எண்ணி) நாடி, நீதி கிடைக்கப் பெறுகின்றனர். ஒவ்வொரு ஹோமமும் உம்மையே வந்தடையட்டும்.

ஸீமந்தத்தில் வீணை கானம்
3ம் காண்டம், 3ம் ப்ரச்னம், 11ம் அநுவாகம்
பூ லோகம், புவர்லோகம், ஸ்வர்லோகங்களும் (மூவுலகும்) ப்ரணவ ப்ரதிபாத்யனான (ப்ரணவ மந்திரத்தின் பொருளானவனான) ஸ்ரீமந் நாராயணனால் நியமநம் செய்து வரப்படுகிறது. ஆகையால் அவரே வகுடு பிரிக்கும் இச்சுப காரியத்திலும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்.
(வகுடு பிரிக்கும்போது சொல்லப்படும் இரு மந்த்ரங்களுக்கான அர்த்தம்)
1. ராகா என்னும் பௌர்ணமாஸி தேவதையை இந்த சுபமான ஸ்துதியால் அழைக்கிறேன். அவள் என் ப்ரார்த்தனைக்குச் செவிசாய்க்கட்டும். அவள் இந்தக் கர்மாவை நியூநம் - அதிரிக்தம் (குறைவுபட்டது - மிகைப்படுத்தப்பட்டது) (தாழ்வு - உயர்வு) இல்லாததாகச் செய்யட்டும். (அதாவது சாஸ்த்ரப்படி சரியாக அநுஷ்டிக்கப்பட்டதாகச் செய்யட்டும்.) பிறகு விசேஷ தாதா (வள்ளல்) என்று கீர்த்தி (புகழ்) பெறக்கூடிய புத்ரனைத் தரட்டும்.

2. ஹோமத்தால் உபாஸிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அருள் புரியும் ஓ ராகா தேவதையே! அதே அநுக்ரஹ ஸங்கல்பத்துடன் (அருள்புரியும் நோக்கத்துடன்) எங்களை வந்தடைவாயாக. நாநா (பலவிதமான) பாக்யங்களை அளித்து அருள்வாயாக.

பிறகு வீணா கானம் செய்வதற்கான இரு மந்த்ரங்கள்.
இக்கடைசீ மூன்று மந்த்ரங்களையும் யஜனானன் (கர்த்தா) சொல்லியான பிறகு அக்னிக்கு மேற்கே தன் பார்யையை (மனைவியை கிழக்கு நோக்கி) உட்காரவைத்து, தான் மேற்கு நோக்கி நின்று கொண்டு, மூன்றிடங்களில் வெண்மை உள்ள முள்ளம்பன்றியின் முள், தர்பங்கள், காயுடன் கூடிய பேயத்திக் கொத்து, முளைவிட்ட நெற்பயிர் இவற்றை ஒன்றாக (கட்டி) வைத்துக்கொண்டு, மனைவியின் (கர்பிணியின்) சிரசின் (தலையின்) நடு பாகத்தில் மேல் நோக்கிச் செல்லும்படி ஒரு கோடு கிழிக்கவேண்டும். இதுவே ஸீமந்தோந்நயனமாகும். இது கர்பிணி பெண்ணிற்குச் செய்யப்படும் கர்மா. என் பிள்ளைக்கு ஸீமந்தம் என்று அஜ்ஞர் (விஷயம் தெரியாதவர்) கூறுவர்.
பிறகு வீணை வாசிக்கத் தெரிந்தவர்களை வீணா கானம் செய்யச் சொல்லவேண்டும். பிறகு இதில் முதல் ரிக் (மந்த்ரம்) ஸால்வ தேசத்தைச் சேர்ந்தவருக்காகும். இரண்டாவது மற்ற ப்ரதேசங்களைச் சேர்ந்தவருக்காகும். இதில் அஸெள" என்ற பதத்திற்குப் பதிலாக யஜமானன் (கர்த்தா) தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ப்ரபலமான (தாமரபரணி, வைகை, காவேரி, பாலாறு, கோதாவரி, க்ருஷ்ணா, யமுனா) நதியின் பெயரைச் சொல்லவேண்டும்.

வீணாகான மந்த்ரம்
1. ஓ யமுனா நதியே! உனது கரையில் வஸிப்பவர்களான ஸால்வ தேசத்து வாஸிகள், அக்கம் பக்கத்து ராஜாக்களைப் பார்த்து, யுகாந்தர ராஜபுத்ரனே தங்களுக்கேற்ற ராஜா" என்று கானம் செய்கின்றனர்.
2. மற்ற நதிகளின் கரையில் வஸிப்பவர்களான ப்ராஹ்மணர்கள், ஸோம தேவதைதான் எமக்கு ராஜா" என்கின்றனர்.

பிறகு முளையுடன் கூடிய நெற்பயிரை நு}லில் கட்டி, அதை கர்பிணியின் தலையில் கட்டி, நக்ஷத்ரம் உதிக்கும்வரை மௌனமாய் இருந்து, பிறகு கன்று பசுவை (பெண்பால் கன்றுக்குட்டியை) கிழக்காகவோ, வடக்காகவோ முன் நடக்கவிட்டு, அதைத் தொடர்ந்து சிறிது து}ரம் நடந்தபின் மௌனத்தைக் கலைக்கவேண்டும்.