'தூங்குகிறவன் தொடையில் திரித்த வரை லாபம்...' என்பது பழமொழி. ஒருவன் வாய் மூடி இருந்தால், அவனை என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் மனோபாவங்களை கொண்டோருக்கான பழமொழி இது.
இப்பழமொழியின்படி செயல்பட்டால் ஏற்படும் விபரீதத்தை சொல்லி, நம்மை எச்சரிக்கிறது இவ்வரலாறு.
தீர்த்த யாத்திரை புறப்பட்டார் பக்தர் ஒருவர். அவருக்கு ஏராளமான செல்வங்களைத் தந்து, வழியனுப்பி வைத்தார் அரசர்.
இத்தகவல், திருடர்கள் சிலருக்குத் தெரிந்து, அவர்களும், பக்தர்களைப் போல வேஷம் போட்டு, அவருடன் இணைந்து கொண்டனர்.
பயணத்தின் போது, ஆள்நட மாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததும், பக்தரிடம் இருந்த செல்வங்களைக் கவர்ந்து, அவரது கையையும், காலையும் வெட்டி, பாழுங்கிணற்றில் தள்ளி விட்டுப் போய் விட்டனர்.
சற்று நேரத்தில், அப்பக்கமாக வந்த லட்சுமணசேன் என்ற அரசர், பக்தரை காப்பாற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சை செய்து, குணப்படுத்தி, தன் குலகுருவாகவும் வைத்துக் கொண்டார்.
அத்துடன், 'உங்கள் கை, கால்களை வெட்டியவர்கள் யார்?' என்று, பல முறை அரசர் கேட்டும், பதில் சொல்லவில்லை பக்தர்.
நாட்கள் கடந்தன; அந்நாட்டு வழக்கப்படி, அரண்மனையில் கொண்டாடப்படும் திருநாள் நெருங்கியது. அதை முன்னிட்டு தேசாந்திரிகள், சாதுக்கள் என, பலருக்கும் அரண்மனையில் உணவளிக்கப்பட்டது. கும்பலோடு கும்பலாக, பக்தரின் கை, கால்களை வெட்டிய திருடர்களும், சாதுக்கள் வேஷத்தில் புகுந்தனர்.
அங்கே, அரசகுருவாக பக்தர் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், 'நமக்கு என்ன நேருமோ...' என, எண்ணிப் பயந்தனர்.
இந்நிலையில், பக்தரும், திருடர்களை பார்த்தார். அவர்களுடைய நிலைமை அவருக்குப் புரிந்தது. 'பாவம்... இல்லாத கொடுமை, இவர்களை, இரக்கமற்றவர்களாக ஆக்கிவிட்டது...' என நினைத்தவர், 'மன்னா... இவர்கள் என் பழைய நண்பர்கள்; இவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே செல்வம் கொடுத்தனுப்புங்கள்...' என்றார் இரக்கத்துடன்!
அதன்படி, திருடர்களுக்கு ஏராளமான செல்வம் தந்து, சில வீரர்களையும் அவர்களுக்கு துணையாக அனுப்பி வைத்தார் அரசர்.
தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியேறிய திருடர்கள், வழியில், கூட வந்த காவலர்களிடம், 'உங்க ராஜகுரு இருக்காரே... அவரும், நாங்களும் ஒண்ணாத்தான், ஒரு ராஜாகிட்ட சேவகர்களாக வேலை பாத்தோம்; இவன் ஒரு பெரிய தப்பு செய்துட்டதாலே ராஜா, இவனுக்கு மரண தண்டனை கொடுத்தார். நாங்க தான் இரக்கப்பட்டு இவரைக் கொல்லாம, கை, கால் மட்டும் வெட்டிட்டு உயிரோட விட்டோம். இத நாங்க ராஜாகிட்ட சொல்லிடுவோம்ன்னு பயந்துதான், உங்க ராஜகுரு எங்களுக்கு இப்படி மரியாதை செஞ்சு அனுப்பியிருக்கான்...' என்றனர்.
அவர்களின் அபாண்டத்தை, ஆண்டவனாலேயே பொறுக்க முடியவில்லை. பூமி பிளந்து, திருடர்களை அப்படியே விழுங்கியது. இதை அறிந்த பக்தர் வருந்தி, நடந்ததை மன்னரிடம் விவரித்து, 'திருந்தி நலம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவி செய்தேன். என்னால் அல்லவா அவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. தெய்வமே... அவர்களுக்கு நற்கதியைக் கொடு...' என்று மனமாற வேண்டினார்.
பகைவனுக்கும் இரங்கிய அவரின் நல் உள்ளத்தை போற்றும் விதமாக, வெட்டப்பட்ட கை, கால்களை பழையபடி அடைய அருளினான் இறைவன். அரசரும், ஊராரும் அந்த உத்தமரைப் போற்றி, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
அந்த உத்தம பக்தர், கீதகோவிந்தம் எழுதிய ஸ்ரீ ஜயதேவர்!
பொறுமை காக்கும் நல்லவர்களை, அவமானப்படுத்தி சீண்டினால், தெய்வம் அவர்களை சும்மா விடாது என்பது புரிகிறதா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பி.என்.பரசுராமன்


திருமந்திரம்!
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறம் என்னும்
கற்றன் போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே!
விளக்கம்: கடல் எவ்வளவு தான் பெரியதாக இருந்தாலும், தாகத்தை தீர்த்துக் கொள்ள, கடலை தேடிப் போக மாட்டார்கள் மக்கள். சிறியதாக இருந்தாலும், கிணறு மற்றும் குளங்களை தேடிப் போய் தான், தாகத்தை தணிப்பர். அதுபோல், அறநூல் சொன்னபடி, ஏழை, எளியோருக்கு உணவளிப்பவரையே பெரிதாக மதிப்பர். அறத்தின் பெருமை அறியாதோர் எவ்வளவு தான் செல்வந்தராக இருந்தாலும், மக்கள், அவர்களை மதிக்க மாட்டார்கள்.
கருத்து: அறம் செய்வது உயர்வைத் தரும்