Announcement

Collapse
No announcement yet.

கண் திருஷ்டி நீக்குவார் கண் நிறைந்த பெரு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண் திருஷ்டி நீக்குவார் கண் நிறைந்த பெரு

    நீண்டப் பெரியவாய கண்கள் என்னை பேதமை செய்தனவே!’ இது திருப்பாணாழ்வாரின் வாக்கியம். உறையூர் அழகியமணவாளனை மட்டுமின்றி, மலையடிப்பட்டி கண் நிறைந்த பெருமாளையும் இது குறிக்கும். திருச்சி துவாக்குடி, பொய்குடி, ஆசூர் செங்கனூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பெருமாளின் திருநாமம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி. ஆனாலும் 'கண்ணிறைந்த பெருமாள்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர். தாயார் ஸ்ரீகமலவல்லி நாச்சியார்.

    சுமார் 2500 வருட பழைமை வாய்ந்த கோயில் இது. ஒருகாலத்தில், 'திருமால் அடிப்பட்டி’ என அழைக்கப்பட்டு, பின்னர் இந்த ஊர் 'மலையடிப்பட்டி’ என மருவியதாகச் சொல்வர். சிவனார் சந்நிதி கொண்டிருக்கிற இந்த தலம், மகான்கள் வாழ்ந்த இடமாகவும் திகழ்ந்ததால், திரு ஆலத்தூர் என்கிற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு. சிவனாரின் திருநாமம் திருவாகீசர். தல விருட்சம் அழிஞ்சில் மற்றும் வில்வம்.
    சீதை பெற்ற செல்வம் லவன். பின்னர் சீதைக்கு உதவியாக வால்மீகி முனிவர் குசனை தோற்றுவித்த தலம் இது. பராசக்தியின் அருள், இந்த சக்தி தீ்ர்த்தத்தில் விளையும் தர்ப்பைக்கு உண்டு என்பர்.
    நின்றான், அமர்ந்தான், கிடந்தான் எனும் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மதுரை கூடலழகர் கோயிலிலும் பெருமாள் இதுபோன்ற மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். சயனித்துள்ள மூலவர் அனந்தபத்மநாபனாகவும், அமர்ந்த நிலையில் உற்சவர் வைகுண்டநாதராகவும் அருள்கிறார். நின்ற கோல பெருமாள் புண்டரீகாட்சன் எனும் திருநாமத்தில் அழைக்கப் படுகிறார். தாயார் கமலவல்லி நாச்சியார், செல்வங்கள் அள்ளித் தந்து பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் தீர்க்கிறாள்.


    புகழ்பெற்ற திருவனந்தபுர அனந்தபத்மநாபனுக்கும் கண் நிறைந்த பெருமாளுக்கும் சில பொருத்தங்கள் உண்டு. அங்குள்ளது போன்றே, கருவறை.... மூன்று பாகங்களில் வாயில் கதவுகள் இல்லாமல், தூண்கள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. திருவரங்கத்து அரங்கன் புஜங்க சயனம், மலையடிப்பட்டி அரங்கன் அனந்த சயனம். பாதங்களில் பத்ம கமலங்கள் (தாமரை மலர்). திவாகர மகரிஷி தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்துப் பலன் பெற்றார். எனவே, தாமரை மலர்கள் கொண்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு. பாதத்துக்கு அருகில் ஸ்ரீமகாலட்சுமியும் நாபிக்கமலத்தில் பிரம்மாவும், நவகிரகங்களும், கந்தர்வர்களும் வீற்றிருக்கின்றனர். இறைவனின் பாதத்தையொட்டி ஸ்ரீபட்டாபிஷேக நரசிம்மரும், ஸ்ரீவைகுண்டநாதரும் வீற்றிருக்கிறார்கள்.
    மற்ற எந்த திருத்தலத்திலும் பட்டாபிஷேக நரசிம்மரைத் தரிசிப்பது அரிது என்கின்றனர். இரண்ய வதம் முடித்து பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் கோலத்தில் காட்சி அளிக்கிறார் இவர். ஸ்ரீவைகுண்ட நாதர் தரிசனம் முக்தி அளிக்கும்.
    இங்கு அருளும் ஸ்ரீசரணாகத வத்சலன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நற்கதி கிடைக்கச் செய்கிறார். ஸ்ரீஹயக்ரீவர் கல்விக்கு அதிபதி, வேதங்களின் தலைவர், சரஸ்வதியின் குரு. கல்விச் செல்வம் குறைவில்லாமல் அளிப்பவர்.


    பெருமாளின் திருமுடிக்கு மிக அருகில் இறக்கையை விரித்த வண்ணம் கருட பகவான் சேவை சாதிக்கிறார். எனவே, முக்தி தரும் தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.
    கண் திருஷ்டி, பில்லி சூனியம், ஏவல் மற்றும் சகல வித தோஷங்களும் பெருமாளை ஸேவித்தால் நீங்கும். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வேண்டிக்கொண்டால், பார்வை சீராகும். மேலும் இந்தத் தலத்தை கிரிவலம் வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம புண்ணியங்களைப் பெறலாம்.
    பக்தர்கள் முப்பது முழம் சாமந்தி அல்லது செவ்வந்திப் பூக்களை மாலையாகக் கோத்து அணிவித்தால் நன்மை கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.
    கோயிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக் குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும். தல விருட்சமான அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு இங்குள்ள சக்தி தீர்த்தத்திலிருந்து கால் படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, தூய குங்குமம் கொண்டு பொட்டிட்டு வணங்கினால், லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும்.
    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். திருச்சிதுவாக்குடிபொய்குடிஆசூர் செங்கனூர் மார்க்கமாகவும் மலையடிப்பட்டியை அடையலாம்.

    மு.கோதாஸ்ஸ்ரீ
Working...
X