Announcement

Collapse
No announcement yet.

மரமான மங்கை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மரமான மங்கை!

    இறைவனிடம் நாம் வைக்கும் வேண்டுதல்கள் பலவாக இருந்தாலும், 'அதைக் கொடு, இதைக் கொடு...' என்பதே அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால், உத்தமர்களான ஞானிகளின் வேண்டுதல்களோ, நம்மைப் போன்றோரின் வேண்டுதல்களை போன்றதாக இருக்காது என்பதற்கு இக்கதை உதாரணம்:
    இறை பக்தியில் சிறந்தவளான சியாமளா தேவிக்கு, கானோபா என்ற மகள் இருந்தாள். இவள், சிறுவயதில் இருந்தே தெய்வ பக்தி உடையவளாக திகழ்ந்தாள்.அவள் மனதில், கடவுள் மட்டுமே இருந்தார்; அவள் எது செய்தாலும், அது, அந்த கடவுளின் பொருட்டே இருந்தது.
    இயல்பிலேயே இசை ஞானம் கொண்டிருந்த கானோபா, நாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் பக்தியில் கரைந்து பாடும் போது, கல் மனது கூட கரைந்து விடும். நற்குணவதியான அவள், அழகிலும் ஈடு இணையற்றவளாக இருந்தாள்.
    மகளின் திறமையை அறிந்த சியாமளாதேவி, 'மகளே... அரசன் முன், உன் கலைத் திறனை வெளிப்படுத்தினால், அரசர் பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுப்பார்; இதனால், உன் வாழ்வும் வளப்படும்...' என்று கூறினாள்.
    'அம்மா... என் ஆடலும், பாடலும் ஆண்டவனுக்கு மட்டுமே அர்ப்பணம்; மாறாக, வேறு எந்த ஆடவனுக்காகவும் அல்ல; பொருள் மற்றும் புகழ் மீது எனக்கு ஆர்வமில்லை; கண்ணனின் அருளைத் தவிர, வேறு எந்த மானிடனையும் மனதாலும் தீண்ட மாட்டேன்...' என்றாள்.
    ஒருநாள், பண்டரிபுரம் செல்லும் பக்தர்கள், கானோபா வசிக்கும் ஊருக்கு வந்தனர். அவர்களிடம் பாண்டுரங்கனின் மகிமையை தெரிந்து கொண்ட கானோபா, பாண்டுரங்கனையே தன் பதியாக அடைய முடிவு செய்தாள். தாயின் அனுமதியுடன், பக்தர்களுடன் சேர்ந்து பண்டரிபுரம் சென்ற கானோபா, பாண்டுரங்கனை தரிசனம் செய்து, பாடியும், ஆடியும் அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினாள்.
    இந்நிலையில், பண்டரிபுரத்திற்கு, பாண்டுரங்க தரிசனம் செய்ய வந்த அரசன், கானோபாவை பார்த்தான். அவள் அழகில் மயங்கியவன், தன் வீரர்களை அழைத்து, 'அவளை அந்தப்புரத்திற்கு அழைத்து வாருங்கள்...' என்று கட்டளை இட்டான்.
    கானோபாவிடம் தகவலைக் கூறி, 'மறுத்தால் பலாத்காரமாக தூக்கி சென்று விடுவோம்...' என்று மிரட்டினர் வீரர்கள்.
    'சற்றுப் பொறுங்கள்; இறுதியாக இறைவனை தரிசித்து வருகிறேன்...' என்று கூறி, கோவிலுக்குச் சென்றவள், 'பாண்டுரங்கா... உன் உடமையான என் கரத்தை, மற்றொருவன் தீண்டலாமா... என்னை ஏற்றுக் கொள்...' என்று கூறி, கண்ணீர் விட்டாள்.
    உடனே, அவள் உடலில் இருந்து மின்னலைப் போல ஒரு ஒளி வெளிப்பட, அப்படியே தரையில் சாய்ந்தாள் கானோபா.
    அவளிடம் வெளிப்பட்ட ஒளி, பாண்டுரங்கனின் விக்கிரகத்திற்குள் புகுந்து மறைந்தது. தான் விரும்பியபடியே, இறைவனுடன் கலந்து விட்டாள் கானோபா.
    அவள் உடலை, பிரகாரத்தின் தெற்கு பகுதியில், சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர். சிறிது நேரத்திலேயே அதிலிருந்து ஒரு மரம் முளைத்தது. இன்றும், பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் கோவிலில் இருக்கும் அந்த மரத்தை, பக்தர்கள் வணங்கி, வழிபட்டு வருகின்றனர். அதை, 'தாட்டி மரம்' என அழைக்கின்றனர்.
    ஆண்டவனிடம், பொன், பொருள் மற்றும் புகழை கேட்போர் மத்தியில், ஆண்டவனையே கேட்டு, அவரையே அடைந்த ஒரு சிலரில், கானோபா முக்கியமானவள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருந்திருக் கின்றனர் என்று நினைக்கவாவது செய்யலாம்.


    பி.என்.பரசுராமன்


    திருமந்திரம்!
    தூய்மை அருள் ஊண்சுருக்கம் பொறை செவ்வை
    வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
    காமம் களவு கொலை எனக்காண்பவை
    நேமி ஈரைந்து நியமத்தனாமே!
    விளக்கம்: தூய்மை, அன்பு, குறைவான உணவு, பொறுமை, நேர்மை, சத்தியம், நல்லவற்றில் உறுதிப்பாடு எனும் ஏழு குணங்களையும் கடைப்பிடித்து, அடுத்தவர் பொருளுக்கு ஆசை, திருட்டு மற்றும் கொலை எனும் மூன்றையும் விலக்கி வாழ்வதே, துயரம் தீர்ந்து உயர்வு பெற வழி.
    கருத்து: கடைபிடிக்க வேண்டியவை ஏழு; தள்ள வேண்டியவை மூன்று. இயன்றவற்றை கடைபிடித்து, தள்ள வேண்டியதை தள்ளினால், இறையருள் பெருகும்!
Working...
X