நடந்தால் போதும்...செல்போன் சார்ஜ் ஆகும்!
செல்போனில் சார்ஜ் குறைகிறதே என்று பிளக் பாடின்ட் தேடி ஓடவேண்டிய அவசியம் இனி இல்லை. செல்போனை பாக்கெட்டில் வைத்து நடந்தாலே போதும்... சார்ஜ் ஆகிவிடும்.
மொபைல் ஜெனெரேட்டர் ஜேனியோ ( mobile generator genneo ) என்ற சாதனம் நாம் நடப்பது, ஓடுவது, குதிப்பது, கையாட்டுவது போன்ற மனித அசைவுகளிலிருந்து பெறப்படும் சக்தியை வைத்து செல்போன்களை சார்ஜ் செய்கிறது. பத்து இஞ்-க்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சாதனத்தை சட்டைப் பையிலோ, கைப்பையிலோ வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நமது அசைவுகளை சக்தியாக மாற்றி அதன் பேட்டரியில் சேமித்துகொள்ளும். இந்த சாதனத்துடன் கொடுக்கப்படும் யு.எஸ்.பி. கேபிளைக் கொண்டு தொடுதிரை செல்போன்கள், டேப்லட்கள், ஐ-பாட், கேமரா போன்ற தொழில்நுட்ப சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
அமெரிக்காவின் ஜெனியோ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாதனம் இரண்டு விதங்களாக அறிமுகப்படுத்தப்படுகிறது. G4000 என்ற வடிவம் 9.7 இஞ்ச் நீளம் கொண்டது. இதை ஐந்து மணி நேரம் பையில் வைத்து எடுத்துச் சென்றால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும். மற்றொன்று G3000. இது 8.2 இஞ்ச் நீளமுள்ளது. இதை ஏழு மணி நேரம் பையில் வைத்திருந்தால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும்.
எதிர் காலத்தில் சூரிய மற்றும் மனித நடவடிக்கைகளின் சக்திகளை நோக்கித்தான் உலகம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைகளை ஆட்டுவது, நடப்பது போன்ற செயல்களால் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பு இருந்தன. அதேபோல, இப்போது வரும் சாதனமும் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
ஆபத்தான நேரங்களில் உடனடியாக சார்ஜ் வேண்டுமானால் அந்த சாதனத்தை ஒரு நிமிடம் வேகமாக ஆட்டினால் மூன்று நிமிடங்கள் வரை பேச முடியும். மின்சார வசதி இல்லாத மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகளிலும், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற அவசரக் காலத்திலும் இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-- வி.சாரதா.
-- ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர், 22, 2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends