கேள்வி : சத்குரு, ஏழரை சனி வந்தால் துன்பம் நேரும் என்று கூறுகிறார்களே, அந்தப் பரிகாரம் செய்யுங்கள், இந்தப் பாடலை ஒன்பது தடவை உச்சரியுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?

சத்குரு : இங்கு எவ்வளவு பேருக்கு ஏழரை சனி இருக்கிறது? (பலர் கை உயர்த்துகிறார்கள்) இவர்கள் எல்லாம் ஆனந்தமாக நன்றாகவே இருக்கிறார்களே! வாராவாரம் சனி வந்தால் நல்லதுதானே? ஏனென்றால்... அடுத்த நாள் ஞாயிறு! நமக்கு மற்ற கிரகங்கள் பற்றி அதிக கவனம் வந்துவிட்டது. நீங்கள் வாழும் இந்த கிரகத்தைப் பற்றி கவனமே இல்லை. நமது உயிருக்கு அடிப்படையாக இருப்பது இந்த கிரகம். நமது உடல் இந்த கிரகத்திலிருந்து தானே வந்திருக்கிறது? இந்த பூமியிலிருந்துதானே இந்த உடல் வந்திருக்கின்றது? மண்தானே இது? ஆனால் இது பற்றி நமது கவனமில்லை. எங்கேயோ இருக்கும் சனி கிரகம் பற்றி கவனம் வந்துவிட்டது.
ஏமாற்றிய ஜோசியர்...
ஒரு முறை பீஜப்பூர் சுல்தான், கிருஷ்ணதேவராயர் மீது போர் செய்ய நினைத்து பெரிய படையுடன் வந்தார். ஆற்றில் மிகவும் அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அக்கரையில் கூடாரம் போட்டு அங்கேயே உட்கார்ந்தார்கள். கிருஷ்ணதேவராயர் ஆற்றின் இந்தப்பக்கத்திலிருந்து அந்த பெரிய சேனையைப் பார்த்தார். உடனே கிருஷ்ணதேவராயரின் ஆட்கள், "நாம் ஆற்றை சில இடங்களில் தாண்ட முடியும். நாம் உள்ளூர் மனிதராக இருப்பதால், நாமே இந்த ஆற்றைக் கடந்து அவர்களை முதலில் முடித்துவிடலாம். ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டால், அவர்கள் இங்கே வந்து நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்" என்றார்கள். இவருக்கும் ஒரு போர் வீரனாக இது தான் சரி என்று தோன்றியது. அவருடைய ஆஸ்தானத்தில் ஒரு ஜோசியர் இருந்தார். "நேரம் எல்லாம் நன்றாக இருக்கிறதா? இப்போது போகலாமா?" என்று அவரைக் கேட்டார்கள். அதற்கு அந்த ஜோசியர் "இப்போது நீங்கள் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து, நீங்கள் இப்போது போகவே கூடாது" என்று சொல்லிவிட்டார். அரசருக்கு ஒரே கவலை வந்துவிட்டது.
இது தெனாலிராமன் காதில் விழுந்தது. அவர் அந்த ஜோசியரை வரவழைத்து, "உங்கள் ஜாதகப்படி நீங்கள் எத்தனை வருடம் இருப்பீர்கள்?" என்று கேட்டார். "80 வருடம்" என்று ஜோசியர் பதில் சொன்னார். "சரி, நான் உன் உயிரை இப்போது எடுக்கப்போகிறேன். நீதான் எப்படியிருந்தாலும் சாக மாட்டாயே" என்று தெனாலிராமன் மிரட்ட, ஜோசியர் பயந்து தனது தப்பை ஏற்றுக்கொண்டார். "பீஜப்பூர் சுல்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்று சொன்னார். எப்படியும் அவர் தலையை துண்டித்துவிட்டார்கள்.
வாழ்க்கை யார் கையில்?
அந்த கிரகம் எங்கே போகிறது? இந்த கிரகம் எங்கே போகிறது? அவையெல்லாம் எங்கோ போகட்டும். அந்த கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? படைத்தலுக்கு மூலமானது உங்களுக்குள்ளேயே இருக்கும்போது ஜடப்பொருளைப் பார்த்து எதற்கு அதன் பின்னால் போகிறீர்கள்? ஏழரை வருடம் சனி இருக்கட்டுமே, அல்லது பதிமூன்று வருடம் இருக்கட்டுமே, நமக்கென்ன? இப்பொழுது உங்களுக்கெல்லாம் விசா கொடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினால், சனி இருந்தாலும் கவலைப்படாமல் போய்விடுவீர்கள்தானே?
மனதில் பயம் வந்துவிட்டால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம். எல்லாவற்றையும் தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? இதிலேயே சிக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? படைத்தலுக்கு மூலமானது நமக்குள்ளே இருக்கிறபொழுது, இந்த கிரகமோ, நட்சத்திரமோ நம்மைத் தடுக்க முடியுமா? நாம் உள்ளே இருக்கிற படைத்தவன் கூட தொடர்பு வைத்துக்கொண்டால், எந்த கிரகம் எங்கே போனாலும், நாம் எங்கு போக வேண்டுமோ, அங்குதான் போவோம். எப்பொழுது நீங்கள் ஆன்மீக வழியில் இருக்கிறீர்களோ பின்னர் அவையெல்லாம் பொருட்டல்ல. ஆன்மீகம் என்றால் என்னவென்றால் நம்முடைய விதியை நம் கையில் எடுத்துக் கொள்வது. "என்னுடைய கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். என் அப்பா கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முக்தி நோக்கத்தில் போகிறேன்!" அப்படியென்றால் என்ன அர்த்தம்? என்னுடைய விதியை என் கையில் எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றுதானே அர்த்தம். எப்பொழுது படைத்தலுக்கு மூலமாக இருக்கிற தன்மையுடன் உங்களுக்கு தொடர்பு வந்துவிட்டதோ, அதற்குப் பிறகு கிரகங்களோ, நட்சத்திரங்களோ, சுற்றியிருக்கிற சூழ்நிலையோ உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsdinamalar'