தூய்மையான பக்தியால் கிடைக்கும்பேறு!
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும், மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில், கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன் அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்; அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:
ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு தம்பதியினர், அங்கிருந்த மகான் ஒருவர் முன், தங்கள் குழந்தையை கிடத்தி, 'சுவாமி... நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த எங்களின் துயர் தீரப் பிறந்த இவனுக்கு, பார்வை இல்லை; இவன் குறையைத் தீர்த்து, எங்கள் கவலையைப் போக்க வேண்டும்...' என வேண்டினர்.
குழந்தையை பார்த்தார் மகான். அது, பொக்கை வாயைக் காட்டி சிரித்தது. அச்சமயம், பஜனையில் ஒரு பாடல் முடிந்து, அடுத்த பாடலுக்காக இடைவெளி ஆரம்பித்ததும், குழந்தை அழத் துவங்கியது. பாட ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தி, சிரித்தது.
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மகான், குழந்தையை தொட்டார். அடுத்த நொடி, மின்சாரத்தை தொட்டது போல் அதிர்ந்து, 'இது, சாதாரண குழந்தை அல்ல; பார்வை இல்லாவிட்டாலும், இக்குழந்தை கண்ணனை தரிசிக்கும்...' என, ஆசி கூறி, 'சூர்தாஸ்' எனப் பெயர் சூட்டினார்.
தன் அகக் கண்ணாலேயே பகவான் கண்ணனை தரிசித்த சூர்தாசர், அதை பாடல்களாக பாடினார். அவரது பாடல்கள் நாடெங்கும் பரவலாயின.
ஒருமுறை, அவந்தி புரத்தை ஆட்சி செய்த சிற்றரசர், சூர்தாசரை அரண்மனைக்கு அழைத்து வந்து, ஆண்டவனைப் பற்றி பாட வேண்டினார்.
சூர்தாசரும் பாட ஆரம்பித்தார். அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்த வேளையில், கண்ணனே அங்கு வந்து பாடல்களைக் கேட்டார். இந்த அற்புதக் காட்சியை அனைவரும் தரிசித்து, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தபோது, சூர்தாசரின் பாடல்கள் நிறைவுற்றன; கண்ணனும் மறைந்தார்.
அதன்பின், மற்றொரு சமயம், அரசியின் வேண்டுகோளின்படி, சூர்தாசரை அழைத்து வந்து, அந்தப்புரத்தில் பாடச் சொன்னார் அரசர்.
சூர்தாசர் பாடத் துவங்கியதும், அந்தப்புரப் பெண்கள், எழுந்து நடனமாடத் துவங்கினர். இச்சமயம், பகவான் கண்ணன், ராதையுடன் தோன்றி, சூர்தாசரின் பாடலுக்கு ஏற்ப ஆடினார்.
இதைக் கண்ணுற்ற பெண்கள் ஆச்சரியமடைந்தனர். அத்துடன், ராதையையும், கண்ணனையும் தன் இரு விழிகளால் தரிசித்து, அதற்கேற்ப சூர்தாசர் பாடுவதையும் கண்டனர்.
பாடல் முடிந்ததும், கண்ணனின் வடிவமும், கூடவே, சூர்தாசரின் பார்வையும் மறைந்தது.
தன் பாடல்களால், பகவானையே ஆட வைத்த சூர்தாசரின் படம் தான், இன்றும் கோவில் சுவர்களில் ஓவியமாக மிளிர்கின்றன.
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன், தூய்மையான பக்திக்கு தானே ஆடுவான்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பி.என்.பரசுராமன்


திருமந்திரம்!
கொள்ளினும் நல்லக் குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக
எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே!
விளக்கம்: சிவனருளை பெற வேண்டுமானால், சத்குருவை நாடி, அவருக்கு உடல், பொருள், ஆவியை சமர்ப்பணம் செய்ய வேண்டும். குருநாதருக்கு பணிவிடை செய்யும் போதும், அவர் அருகில் இருந்து உபதேசங்களை கேட்கும் போதும், வேறு எந்த நினைவும் வரக்கூடாது.
கருத்து: குருவின் உபதேசங்களை, உள்ளத்தை விட்டு பிரியாது நிறுத்தி, தெளிவைப் பெற வேண்டும்; அவ்வாறு பெற்றால் சிவனருள் தானே சித்திக்கும்.