Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#2a. ஆதி பராசக்தி (1)
    சூத முனிவர் கூறினார் பிற முனிவர்களிடம்,
    “ஆதி பராசக்தியின் பாகவதம் கூறவேண்டும்.
    இது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்;
    வேத சாச்திரங்களுக்குச் சமமானது இது.
    கதைகள் நவரசம் பொருந்தி விளங்குபவை.
    முதன்மையான தேவி மனதைக் கவருபவள்;
    மும் மூர்த்திகளால் வணங்கப்பட உகந்தவள்;
    நம் அனைவராலும் பூஜிக்கப்பட உகந்தவள் ;
    வித்தை என்பவள் அவள்; ஆதிகாரணி அவள்;
    முக்தி தருபவள் அவள்; எல்லாம் அறிந்தவள்;
    இதயக் கமலத்தில் வீற்றிருப்பாள் என்றும்,
    அறியப் படமாட்டாள் துஷ்ட ஜனங்களால்;
    துறவிகளும் தொழுகின்ற பராசக்தி – தூய
    அறிவைத் தரவேண்டும் நமக்கு எப்போதும்.
    முக்குணங்களாக அமைந்த தன் சக்தியால்
    முயற்சியின்றிப் படைக்கிறாள் சிருஷ்டியை.
    காக்கின்றாள் பின் அழிக்கின்றாள் படைத்ததை!
    காலத்தை வென்ற தேவியை நாம் தியானிப்போம்.
    பிரமன் தோற்றுவித்தான் உலகினை என்றால்
    பிரமனே தோன்றினான் விஷ்ணுவின் நாபியில்!
    விஷ்ணு ஆகின்றார் பிரமனுக்கு ஓர் ஆதாரம்!
    விஷ்ணுவுக்கு ஆதாரம் ஆதிசேஷன் அல்லவா?
    ஆதாரப் பட்டு நிற்கும் இவர்களை எல்லாம்
    முதற்கடவுள் என்று நாம் கருதுவது சரியா?”


    1#2b. ஆதி பராசக்தி (2)
    “கடல் நீரில் உப்பு விரவி இருப்பதைப் போல,
    உடல்களில் உயிராக வியாபிப்பவள் தேவி.
    சகுண, நிர்குண உருவங்கள் உடையவள்,
    சரணடைகின்றேன் நான் அந்த தேவியிடம்!
    பந்தங்களை மாயையால் தருபவள் அவளே!
    பந்தம் நீக்கி மோக்ஷம் தருபவளும் அவளே!”
    சூதரின் மொழிகளைக் கேட்ட முனிவர்கள்
    சூதரிடம் உரைத்தார்கள் தங்கள் கதையை.
    ‘கலியின் கொடுமைக்கு அஞ்சினோம் யாம்!
    கலி அண்டாத ஓர் இடத்தைத் தேடினோம்!
    சக்கரம் ஒன்றைத் தந்தார் பிரம்மதேவன்;
    “சக்கரத்தைப் பின் பற்றிச் செல்லுங்கள்!
    சிதறுண்டு சக்கரம் விழுமிடம் புனிதத் தலம்;
    பதறாமல் வாழுங்கள் கலி அண்டாது அங்கே!
    தவம் செய்யுங்கள் கிருத யுகம் வரையில்!”
    தங்கு தடையின்றி முன்னேறியது சக்கரம்.
    சிதறுண்டு விழுந்தது இந்த வனத்தில் வந்து !
    சித்தர்கள், முனிவர்கள் வாழ்கின்றோம் இங்கு!
    யாகம் செய்கின்றோம் தாவர வர்க்கங்கள்,
    மாவால் செய்வித்த பசுக்களைக் கொண்டு,
    கதை கூறுவதில் சமர்த்தர் நீர் என்றறிவோம்!
    கதை கேட்பதில் யாம் சமர்த்தர் என்றறிவீர் .
    தேனமுதம் பருக வேண்டும் செவிகள் குளிர,
    தேவி பாகவதத்தை நீர் கூறக் கேட்டு!” என்றனர்.
    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X