Courtesy:Sri.JK.Sivan


பிருந்தாவனத்தை விட்டு கிளம்பும் நேரம் வந்து விட்டது. பிருந்தாவனம் களை இழந்து விட்டது. ராதையும் கோபியர்களும் கண்களில் கண்ணீர் மல்க ஸ்தம்பித்து நின்றனர். நந்தகோபனும் யசோதையும் செய்வதறியாது விழித்தனர். பிருந்தாவனமே சோகத்தில் ஆழ்ந்தது. ஜீரணிக்க முடியாத உண்மை, என்ன செய்வது. கிருஷ்ணன் போகிறான். உடலை விட்டு உயிர் பிரிகிறதோ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கிருஷ்ணனை அவன் கடமை உணர்ச்சி ராதையிடமிருந்தும் பிருந்தாவனத்திலி ருந்தும் பிரித்து மதுராவுக்கு கொண்டு சேர்த்தது. இதைப்பற்றி ஒரு கதை உலவுகிறதே கேள்விப்பட்டதுண்டா? ஒருநாள் கிருஷ்ணன் யசோதையிடம் சென்று '' நீ உடனே ராதையின் வீட்டுக்கு போய் அவளை எனக்கு பெண் கேள். அவளை என் மனைவியாக்கு'' என்றான்.


''இதெப்படி முடியும். ராதை உனக்கு கொஞ்சமும் பொருத்தமானவள் அல்ல. உனக்கு நாங்கள் அழகான மிகப்பெரிய ராஜகுமாரியை அல்லவோ மணமுடிப்போம்''


''ராதா தான் என் அழகிய ராஜகுமாரி. அவளுக்கு வேறு யார் ஈடாகமுடியும்?''
வாக்கு வாதம் பலத்தது. விஷயம் நந்தகோபருக்கு சென்று அவரும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். கண்ணனை வாதத்தில் அவரால் வெல்ல முடியுமா.


''சரி கிருஷ்ணா. நாளை இங்கு கர்க ரிஷி வருகிறார் அவரிடமே இது பற்றி பேசுவோம். ''


மறுநாள் கர்கர் வந்தார். அவரும் விஷயங்களை க்ரஹித்துக்கொண்டார். கண் மூடினார், கிருஷ்ணனை வணங்கினார். பளீரென்று உண்மை தெரிந்தது.


''கிருஷ்ணா உனக்கு நினைவூட்டவே என்னை இங்கு அழைத்திருக்கிறாய். நீ இங்கு தோன்றியதின் காரண நேரம் வந்துவிட்டது என்று இவர்களுக்கு உணர்விக்க என்னை வரவழைத்திருக்கிறாய். நீ ராஜகுமாரனோ, கோபனோ அல்ல சாக்ஷாத் பரந்தாமன். உன் கிருஷ்ணாவதார கடமை உன்னை எதிர்நோக்கி யிருக்கிறது. ராதை உன் மாயை என்று இவர்கள் அறிய மாட்டார்கள். உனக்காக அக்ரூரர் காத்திருக்கிறார். பாலராமனோடு மதுராவுக்கு செல். ''


பிருந்தாவனத்தை விட்டு சென்ற கிருஷ்ணன் மீண்டும் பிருந்தாவனம் வரவில்லை. ராதை கண்ணனை ஒவ்வொரு செடியிலும் கொடியிலும் காற்றின் அசைவிலும் பிருந்தாவனத்தில் கண்டு ஆனந்தித்தாள். நாம் இப்போது பிருந்தாவனத்தில் கண்ணனைத் தேடுகிறோமே அது போல்.


பிற்காலத்தில் ஒருநாள், துவாரகைக்கே சென்றாள் . துவாரகை மன்னன் கிருஷ்ணன் தனது 8 பட்ட மகிஷிகளும் அவளைக்கான விரும்பியதால் அவளை அழைத்ததால். அங்கு நடந்ததென்ன


கிருஷ்ணனின் ராணிகளுக்கு அவனுக்கு ராதையிடம் அலாதி ப்ரியம் உண்டு என்ற சேதி ஊரறிந்த உண்மை. சிறு வயதிலிருந்தே அவர்கள் பிருந்தாவனத்தில் இணை பிரியாத ஜோடிகள். ராதை க்ரிஷ்ணனைவிட கொஞ்சம் பெரியவள். இருப்பினும் கிருஷ்ணனின் நிழலாக வளர்ந்தவள். துவாரகையில் வாழ்ந்தபோதும் ராதையின் நினைவிலேயேகிருஷ்ணனும் கிருஷ்ணனின் நினைவாகவே ராதாவும் தனித்தனியாகவே "சேர்ந்து" வாழ்ந்தனர் என்பது அவர்கள் அறிந்ததே அல்லவா? கிருஷ்ணனின் மனைவியருக்கு கிருஷ்ணனின் மனத்தை ஏகதேசமாக கொள்ளை கொண்ட ராதாவின் மீது பிரியமா இருக்கும். உள்ளூர அவள் மேல் வெறுப்பு இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருமுறை கிருஷ்ணனிடம் சென்று "எங்களுக்கு உங்கள் பிரியமான ராதாவை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆவலும் அதிகமாக இருக்கிறதே. அவளை அழைத்து வாருங்கள்"
என்று கேட்டனர்.
"அதற்கென்ன உங்களுக்கு ராதையை பார்க்கும் விருப்பம் இருந்தால் அவ்வாறே ஒருநாள் அவளை இங்கு வரவழைக்கிறேன்" என்றான் கிருஷ்ணன்.
எனவே தான் ராதை ஒருநாள் துவாரகைக்கு வந்தாள். ஆயர்குல மங்கை, ஆடையோ ஆபரணங்களோ ஒன்றும் விலையுயர்ந்தவை அல்ல. சாதாரணமாகவே இருந்த அவளிடம் அப்படி என்ன கிருஷ்ணன் ஸ்பெஷலாக கண்டான்? . ஏன் இப்படி ஒரு மோகம்? அடக்கமாக இருந்த ராதை அவர்களுடன் அன்பாக பேசினாள். மூச்சுக்கு முன்னூறு தடவை கிருஷ்ணனை புகழ்ந்து கொண்டிருந்தாள். வந்தவளுக்கு உபசாரம் செய்யக்கூட மறந்து போய்விட்டனர் ருக்மணியும் மற்ற அனைத்து மனைவியரும்.


வெகுநேரம் அவர்களோடு பேசி முடித்த ராதா நான் விடை பெறுகிறேன் என்று சொன்னதும் தான் ராணிகளுக்கு சுரீர் என்று உரைத்தது. வந்தவளுக்கு ஒரு உபசாரமும் செய்யவில்லையே? திடீரென்று ருக்மணி உள்ளே ஓடி வெகுவேகமாக பாலைகாய்ச்சி எடுத்து கொண்டு வந்தாள் . பேசிக்கொண்டே ராதையிடம் அந்த கொதிக்கும் பாலை கொடுத்தாள்.


" கிருஷ்ணனின் பிரியையான உனக்கு கிருஷ்ணனுக்கு பிடித்த பசும் பாலே கொண்டு வந்திருக்கிறேன். இது கிருஷ்ணனின்
பிரசாதமாக ஏற்று குடி". என்றாள்.


அவர்களது பால்ய வாழ்க்கை ப்ருந்தாவனத்தில் எவ்வாறெல்லாம் இருந்தது என்ற இனிய நினைவுகளை ராதா ருக்மணியுடனும் மற்ற மனைவியருடனும் மகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டிருந்தாள் அப்போது. அவளது வார்த்தைகளில் கிருஷ்ணனின்
மீது அவள் கொண்டிருந்த பற்றும், பாசமும், தூய அன்பும், தியாகமும் பிரேமையுமே வெளிப்பட்டது. இந்த நேரத்தில் சுடச் சுட ஆவி பறக்கும் கொதிக்கும் பாலை ருக்மிணி "இந்தா கிருஷ்ணபிரசாதம்" என்று கொடுத்த அடுத்த கணமே ராதா அந்த கொதிக்கும் நெருப்பு போன்ற சூடான பால் அத்தனையும் ஒரே வாயில் ஆனந்தமாக பருகினாள். பிறகு சிறிது நேரத்தில் ராதா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு பிருந்தாவனம் சென்று விட்டாள். ராதையின் வரவு ருக்மிணிக்கும் மற்ற மனைவியருக்கும் அவள் மீது முன்பிருந்த வெறுப்பை கொஞ்சம் குறைத்திருந்தது. அவர்கள் ராதையுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கிருஷ்ணன் அங்கு இல்லை. தனது அறையில் உறங்கி கொண்டிருந்தான்.

ராதை சென்றவுடன் ருக்மிணியும் மற்றோரும் கிருஷ்ணனின் அறைக்கு சென்றனர். உறங்கி எழுந்த கிருஷ்ணன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த போது சிரமத்துடன் இருப்பதையும், வாய் பேசமுடியாமல், வாய் முதல் கால்வரை கொப்புளங்களுடன் காட்சியளிப்பதையும் கண்டு திகைத்தனர்.
"கிருஷ்ணா, உனக்கு என்ன ஆயிற்று, என்ன செய்தாய்? எங்கு சென்றாய், ஏன் உடல் தீயில் வெந்தது போல் ஆகிவிட்டது?" என்று பதறினாள் ருக்மணி. அனைவருமே ஆடிப்போய் விட்டனர்.
"ஒன்றுமில்லையே, நான் எங்கும் செல்லவில்லையே"
"எதற்கு உன் வாய் உடல் எல்லாம் வெந்து இருக்கிறது, கால் வரை கொப்புளங்கள்?"
"சூடான என்னுடைய பிரசாதம் செய்த வேலையாயிருக்கும்" பரவாயில்லை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்" என்றான் கிருஷ்ணன்.
யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆயிற்று ருக்மணிக்கு. கொதிக்கும் பாலை சற்று நேரத்துக்கு முன் அவள் தானே கவனிக்காமல் "கிருஷ்ண பிரசாதம் உனக்கு" என்று ராதைக்கு கொடுத்தாள் . ராதை அதை சந்தோஷமாக பருகினாளே. அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லையே?"
"கிருஷ்ணா, நீ எப்போது சூடான பால் பருகினாய். ராதைக்கல்லவோ நான் பாலை கொடுத்தேன்"
"ஒ அப்படியா. அது ஒன்றுமில்லை. ஒருவேளை நீங்கள் அனைவரும் ராதைக்கு அளித்த சூடான பால் அவள் வாயிலும்
வயிற்றிலும் இறங்கி அதன் வேலையை எனக்கு காட்டி விட்டிருக்கலாம்"


கிருஷ்ணனும் ராதையும் வேறல்ல. தன் பக்தை பருகிய சூடான கொதிக்கும் பால் அவளை ஒன்றும் செய்யாமல் அவள் பூஜிக்கும் கிருஷ்ணனின் வாயிலும் உடலிலும் மட்டுமே தீக் கொப்புளங்கள் உண்டாக்கிய அதிசயத்திலிருந்து அவர்கள் உறவு எவ்வளவு தெய்வீகமானது என்று புரிந்துகொண்டு அனைவரும் கிருஷ்ணனை வணங்கினர். தங்கள் தவறுக்கு வருந்தினர்