Announcement

Collapse
No announcement yet.

First stanza with meaning of 12 thirumurai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • First stanza with meaning of 12 thirumurai

    Courtesy:https://drdayalan.wordpress.com/2015...%8D-%E0%AE%AA/


    HRE-6: பன்னிரு திருமுறை:முதல் பாடல்கள்
    Continues

    (7)ஏழாம் திருமுறை:சுந்தரர் தேவாரம்-1026பாடல்கள்
    பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
    எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே
    ***பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
    (D)திருமுறை-8 (1058 பாடல்கள்; மாணிக்கவாசகர்): திருவாசகம்-658, திருக்கோவையார்-400
    (8)எட்டாம் திருமுறை: மாணிக்கவாசகர்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
    ***திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க!
    திருமுறை-9 (301 பாடல்கள்)
    (9) ஒன்பதாம் திருமுறை-301 பாடல்கள் (பல சிவ பக்தர்கள்)
    ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
    தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே
    அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக
    வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
    ***இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திரு உள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.
    திருமுறை-10 (3000 பாடல்கள்)
    (10)பத்தாம் திருமுறை: திருமூலர்–திருமந்திரம்-3000 பாடல்கள்
    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தி னிளம் பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
    ***ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
    ***பாயிரம் வரிசையில் முதல்பாடல்
    ஒன்றவன்றானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தான் இருந்தான் உணர்ந்தெட்டே.
    ***ஒரு பொருளாய் உள்ளவன் முதற்கடவுள் ; அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். மூன்றுநிலைகளில் (இலயம், போகம், அதிகாரம்) நிற்பான் .அறம், பொருள், இன்பம், வீடு நான்கனையும் உலகிற்கு உணர்த்தினான். ஐம்பொறிகளின்வழி நுகரப்படும் ஐந்து அவாவினையும் வென்றான். ஆறு அத்துவாக்களாக விரிந்தான். ஏழு உலகங்களுக்கும் மேற்சென்று இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
    திருமுறை-11(1385 பாடல்கள்)
    (11) பதினொன்றாம் திருமுறை-1385 பாடல்கள்(பல சிவ பக்தர்கள்)
    மதிமலி புரிசை மாடக் கூடற்
    பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு
    அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
    மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
    பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
    கொருமையின் உரிமையின் உதவி ஒளி திகழ்
    குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
    செருமா உகைக்கும் சேரலன் காண்க
    பண்பால் யாழ் பயில் பாணபத்திரன்
    தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
    காண்பது கருதிப் போந்தனன்
    மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
    இறைவனின்-சிபாரிசு கடிதம் (Recommendation letter):-
    ***சந்திரன் மகிழ்தல், நிறைந்த திங்கள் மாடக் கூடல்(நான்மாடக் கூடல்) `கூடற் பதிமிசை நிலவு ஆலவாய் (அருட்டுறை) , பூங்கோயில்` மன்னியசிவன் யான் மொழிதரும் மாற்றம்.
    ***பால் நிறம் போலும் உரிய கார் காலம் மேகம் ஒப்பு உரிமையின் – `உதவுதல் தனக்குக் கடன் என மனத்தினாலே கொண்ட உரிமையினால்`. அழகு. பெரிய சந்திரன்(பூரணச் சந்திரன்) ; குலவிய குடை` எனத் தனித் தனி இயைக்க. ஒத்த விளங்குகின்ற `குடைக் கீழ்ச் `உகைக்கும் தனித்தனிச் சென்று இயையும் போர்க்கு ஏற்ற நடைகளைக் கற்ற குதிரை ஏறிச் செல்லுதல் சேரலன் காண்க.
    ***பண்பால்-யாழ் இசைக்கும் பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் , அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன்அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து அனுப்பு.
    திருமுறை-12 (4272 பாடல்கள்)
    (12) பனிரெண்டாம் திருமுறை: சேக்கிழார்–பெரியபுராணம்-4272 பாடல்கள்
    உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அழகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
    ***எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்


    ……>>>HRE-6:பன்னிரு திருமுறைகள்
Working...
X