பெருமாள் பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகச் சிறந்த வழிபாடு, வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது.

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை அந்த நாளில் நடைபெறுகிறது. மோட்சத்துக்கு எப்படிப் போவது? இப்பிறவியில் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காது வாழ்ந்தால் போகலாம். சரி, யார் அழைத்துப் போவார், நம்மை? அந்த பரந்தாமனேதான். அவ்வாறு பரந்தாமன் அழைத்துப் போகும் அந்த சம்பவம்தான் இப்போது ஒரு ஒத்திகையாக ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் நடத்தப்படுகிறது.
அதாவது சொர்க்க வாசல் திறக்க, அதனுள் முதலில் பெருமாள் புக, பின்னால், அவர் அழைத்துவரும் அத்தனை பக்தர்களும் புகும் புண்ணிய வைபவம். பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும் இந்த உற்சவம் விமரிசையாக நடந்தேறும் என்றாலும், ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை திருவல்லிக்கேணி போன்ற தலங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇங்கே ஸ்ரீரங்கத்து வைகுண்ட ஏகாதசி உற்சவ காட்சிகளைக் காணலாம். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக மார்கழி பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் உற்சவம் ராப்பத்து உற்சவம் என அழைக்கப்படுகிறது. அப்போது அரங்கனுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. பகல்பத்துக்கு முதல் நாள் இரவு திருமங்கையாழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம், அரங்கன் முன் பாடப்படுகிறது.

இந்த உற்சவ நாட்களில் திருமால் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார். பெருமாளை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீபாதம் தாங்கிகள் ஒரே மாதிரியான தலைப்பாகையைக் கட்டியிருப்பது கண்களைக் கவரும். சன்னதி திரும்பும்போது ஒய்யாளி சேவையில் சர்பகதி எனும் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி பாம்பு போல் செய்வது கண்களுக்கு விருந்தாகும். தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும்.
நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து. அரங்கன் சொர்க்க வாசல் கதவுக்கு நேர் எதிரே வந்து நின்றதும், பட்டர், திற என குரல் கொடுக்க, பரமபதவாசலில் பக்தர்களோடு அந்த பக்தவத்சலனும் நுழைவான். அப்போது ரங்கா! ரங்கா! கோஷம் விண்ணை முட்டும். ஏகாதசியன்றும், அதையடுத்த தினங்களிலும், முத்தினாலான முத்தங்கியை தரித்திருக்கும் மூலவரை கருவறையில் தரிசிக்கலாம்.

ஆடி ஏகாதசி பண்டரிபுரத்திலும், கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியிலும், விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் இருபது நாட்கள் திருவிழா விசேஷமாக நடைபெறுகிறது. பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார். சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார். இங்கே யோகத்தை அப்பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார். இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.

பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இது பிரம்மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும். பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும். அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது.
சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ணமுடியாது. ஆனால், யோகிகளால் முடியும். எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசிவடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும். அன்று நம் பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார். அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும். அதை நினைவுறுத்த குதிரை வாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும்.

ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது. யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் ஓய்யாளி சேவை நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில், ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர். (ஒரு வருடத்தின் எல்லா ஏகாதசி நாட்களிலும் இவ்வாறு விரதம் இருப்பதும் அவர்கள் வழக்கம்). அன்று முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள். வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.

Source: Maalai Malar