"நான் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவன்.......
அரங்கன் குடிகொண்டு இருக்கும் புனித மண்ணை மிதித்திடேன்...." என்றான் பாணன்.


"குலமாவது ....மண்ணாவது....!!!! தங்களை எங்கள் தோள் மீது சுமந்து ஆலயத்தினுள்ளே அழைத்துவரும்படி அரங்கனின் ஆணை அய்யா...".............. என்றனர் அரங்கனின் சேவையில் அன்றாடம் ஈடுபட்ட ஆலய பட்டர் குழுவினர்.


கி.பி. 8ம் நூற்றாண்டு .....துன்மதி வருஷம், கார்த்திகை மாதம், கிருஷ்ணபக்ஷ த்விதீயை திதி , புதன் கிழமை கூடிய ரோகிணி
நக்ஷத்திரம்.....திருமாலின் ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக ஓர் அவதாரம் நிகழ்ந்தது.....

ஈன்றவர் யார் என்ற மாயை இன்றுவரை மாதவனின் மாயையாகவே உள்ளது !!!!

சோழ மாமன்னர்களின் தலைநகராக ஒருகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய "உறையூர்" என்னும் பதியில் செந்நெல் பயிர்களிடையே அழகானதொரு குழந்தையை கண்டான் பஞ்சம ஜாதியில் அடையாளம் காணப்பட்ட பாணன் ஒருவன். பிறந்த குழந்தைதனை செந்நெல் பயிரிடை விட்டுசென்ற பெற்றோர் யாவர் என சுற்றுமுற்றும் தேடி ஒருவரையும் காணாமல்........

கவலை கொள்ள வில்லை......மாறாக மட்டில்லா மகிழ்ச்சி கொண்டான். மகப்பேறு இல்லாத மலட்டு தன்மை இனி தனது இல்லாளுக்கு இல்லை என்ற உவகையுடன் ..அந்த குழந்தையை எடுத்து சென்று மனைவியிடம் கொடுத்தான். மனையாளுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

பச்சிளம் குழந்தை மீது பாசத்தை பொழிந்தனர் இருவரும். மாலவன் தங்களுக்கு அருளியதை எண்ணி மகிழ்ந்து ...பழுதற்ற பசும்பால் கொண்ட தூய உணவினை கொடுத்து குழந்தையை வளர்த்தனர். பாணர் குலத்துக்கு ஏற்ற ...பண் அமைத்து பரந்தாமனின் புகழ் பாட பயிற்று வித்தனர்.


ஆண்டுகள் ஓடின . அவதாரத்தின் ரகசியம் வெளிவர வேண்டுமல்லவா ?

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பண் அமைப்பதில் சிறப்பு பெற்று ..."திருப்பாணர் " என்றே அழைக்கப்பட்டார். ஸ்ரீரங்கனாதருக்கு திருத்தொண்டு செய்யவே தமது பிறப்பின் சிறப்பு என்று முடிவு செய்தார்.

ஆனால் மனத்தில் ஒரு நெருடல்....தீராத நெருடல்...
பண் அமைத்தார்....பாட்டிசைத்தார். தாழ்ந்த குலத்தில் வளர்ந்த தாம் எவ்வாறு ஸ்ரீரங்கநாதன் குடிகொண்டு இருக்கும் புனித மண்ணை தீண்டுவது ...இந்த உணர்வினின்று விடுபட்டு வர இயலவில்லையே..? என்று பரிதவித்தார்.

அதனால் என்ன ...... காவிரியின் தென்கரையில் அரங்கனின் திருமுகத்துக்கு எதிரான துறைக்கேதிரில் நின்று அரங்கனை யாழ் கொண்டு பாடி இன்புறலாமே இன்று மனத்தினை தேற்றிக்கொண்டார். நாட்கள் உருண்டன .
நாள்தோறும் அரங்கனை குறித்து பக்தி மணம் கமழ யாழினை மீட்டினார்...பாடினார். மனம் தேறினார். தினம்தோறும் பக்தி பரவசத்தால் யாழ் இசைத்து லயித்து மகிழ்ந்து தன்னை மறந்து நிலை கொண்டு இருப்பது இவரது வழக்கமாயிற்று.

பரமனின் திருவிளையாடல் துவங்கியது.

லோகசாரங்கர் என்ற வைதீகமான ஸ்ரீ வைஷ்ணவர். அரங்கனுக்கு தினம் தோறும் ஆராதனை செய்து
தனது வாழ்வுதனை அலங்கரித்து கொள்ளும் பேறு கொண்டவர். தினமும் காவிரியில் ஸ்நானம் செய்து, திருமண் அணிந்து, துளசிமாலையும் தாமரை மணிமாலையும் அணிந்து கொண்டு ...ஸ்ரீரங்கநாதனின் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுத்துச்சென்று ..ஆலய கைங்கர்யம் செய்து வரும் கோஷ்டியினர்.

ஒரு நாள் லோகசாரங்கர் அனுஷ்டானம் முடித்து குடத்தில் தீர்த்தம் ஏந்தி திருமஞ்சனம் செய்ய புறப்படுகிறார். கரை ஏறும் சமயம் வழியில் பாணன் ஒருவன் தன்னையும் சுற்றத்தையும் மறந்து யாழ் மீட்டிக்கொண்டு இருப்பதை கண்டார். .....பாணனை நோக்கி கை தட்டி அழைத்தார்......விலகி செல். அரங்கனின் திருமஞ்சனத்திற்கு வழி விடு.....என்று கூவினார். தன்னையும் சுற்றத்தையும் மறந்து யாழ் மீட்டிக்கொண்டு இருந்த பாணன் எந்த சலனமும் இல்லாமல் அரங்கனின் லயிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு இருந்தான்.

உலகத்தையே மறந்து இருந்தவனுக்கு ஒரு மனிதனின் கூப்பாடு உணரப்படாமல் இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து விலகி செல் ...என்று கூறியும் தம்மை மதிக்காமல் இருந்த பாணன் மீது ஒரு உறுதியான கல்லை எடுத்து வீசினார் லோகசாரங்கர்.

பாணனின் நெற்றியில் வேகமாக தாக்கியது வீசி எறியப்பட்ட கல். குருதி பெருகியது. பாணன் அப்போதுதான் தெளிவுற்றான். ...ஒரு நொடியில் எதிரே திருமஞ்சனம் தாங்கி நின்ற பட்டரை கண்டு தான் செய்த தவற்றுக்காக மனம் வெதும்பி உடல் நடுங்கி ..வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான் .....
..
அரங்கனின் கருவறைக்கு திருமஞ்சனம் வரப்பெற்றது. ஆனால் ..ஸ்ரீரங்கநாதனின் நெற்றியில் இருந்து ரத்தம் .வழிந்து கொண்டு இருந்தது.

ஆலயபணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி கொண்டனர். !!
என்ன கொடுமை இது... ஸ்ரீரங்கநாதனின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிகின்றதே. இதென்ன உற்பாதம்....என்று ஒன்றும் புரியாமல் ஆலயத்தின் அதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அரசனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அமைச்சர்கள், ஆஸ்தீக பெருமக்கள், ஆரூடம் கூறுவோர் போன்ற அனைவரும் ஆராய்ந்தனர் ...விடை கிட்ட வில்லை..

(சம்பவம் நடந்த முதல்நாள் பிராட்டியார் பெருமாளிடம் ...பலகாலமாக நம்மை பாடி வரும் பாணனை ஊருக்கு வெளியே நிற்கவைத்து பார்த்து இருப்பது நியாயமோ என்று கேட்டாராம். விரைவிலேயே தன அருகில் பாணனை அழைத்துக் கொள்வதாக அருளினாராம்.எம்பெருமான் - இது ஆன்றோர் கண்ட செவிவழி செய்தி )

பாணனுடய பக்தியையும் பெருமையையும் உலகத்தினர் உணர்வதற்காக திருவுள்ளம் கொண்டார் திருமால்.
ஆலயம் தொடர்பான அனைவரும், ஆன்மீக உவகை கொண்ட அதீத பக்தர்களும், அமைச்சர் குழுவும் அரசன் வரை.....நிம்மதி இழந்து குழப்பம் நிரம்பிய இரவு ....

லோகசாரங்கரின் கனவில் தோன்றினார் எம்பெருமான் ......ஓர் ஆணையும் பிறப்பித்தார். .."நீர் உடனே சென்று, என்மீது கொண்ட பக்தியே சத்தியம் என்று உறுதி பூண்டு வாழும், பாணனை, இழிகுலத்தவர் என்று கருதாமல் ...உம்முடைய தோள் மீது சுமந்து இங்கு எழுந்தருள செய்வீராக. ..."

கனவில் கிடைத்த ஆணையை கண்டு கலங்கினர் லோகசாரங்கர். பரிதவித்தார் பதறினார். ...கண் விழித்து எழுந்ததும் தம்முடைய பரிவாரங்களுடன் காவிரியின் கரைதனை அடைந்தார்......பாணரைக்கண்டார் ....மும்முறை வலம் வந்தார். வணங்கி எழுந்து தேவரீர் மன்னிக்க வேண்டும். தம்மை தோளினில் சுமந்து ஆலயத்திற்கு எழுந்தருளப்பண்ண வேண்டும் எனபது அரங்கனின் கட்டளை என்றார்.

திகைத்து நின்றார் பாணன். குழப்பம் மேலிட ......"அடியேன் நீசன்,..."நான் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவன்.......அரங்கன் குடிகொண்டு இருக்கும் புனித மண்ணை மிதித்திடேன்...." என்றார்.


"குலமாவது ....மண்ணாவது....!!!! தங்களை எங்கள் தோள் மீது சுமந்து ஆலயத்தினுள்ளே அழைத்துவரும்படி அரங்கனின் ஆணை அய்யா...".............. என்றனர் அரங்கனின் சேவையில் அன்றாடம் ஈடுபட்ட ஆலய பட்டர் குழுவினர்.

தொடர்ந்து பட்டர் குழுவினர், " தேவரீர் மனம் போன்று புனித மண்ணை மிதித்திட வேண்டா....எங்களின் தோள் மீது அமர்ந்து எழுந்தருள வேண்டும் "..என்றனர்.

மனம் பதைத்த பாணர் தொடர்ந்து மறுத்த வண்ணம் இறைஞ்சினார். இதற்கு நான் உடன் படேன் என்று உறுதியாக மறுத்தார். பட்டர் குழுவினர், .."இது அரங்கனின் கட்டளை...இதை புறக்கணிக்கலாமோ "..என்று வாதிட்டனர். உயிர் உடல் அனைத்தையும் அரங்கனுக்கே அர்ப்பணித்து இருந்த பாணருக்கு அரங்கனின் கட்டளைதனை மீற மனம் வருமோ...." என்ன செய்வதென்று புரியாது நின்றார்.

பட்டர்கள் அவரை தோளில் சுமந்தனர் ..அரங்கனின் ஆணை என்று அமைதியானார் பாணர்.

தூரத்தே நின்று அரங்கனின் அழகைஅனுபவித்தவர் .....அரங்கனின் அருகிலே சென்றவுடன் மெய் மறந்தார். ஆழ்ந்த பக்தி அரங்கனது அழகை ......"அமலனாதி பிரான்" என்ற தலைப்பில் பத்து பாசுரமாக அவரது நாவிலி இருந்து புறப்பட்டு நிலை கொள்ள செய்தது.

இதுவே திருப்பாணாழ்வார் அருளிச்செய்த .."அமலனாதி பிரான்" என்ற பத்து பாசுரங்கள் கொண்ட மங்களா சாசனம். இவரால் மங்களா சாசனம் பெற்ற ஸ்தலங்கள் மூன்று. ஸ்ரீரங்கம், திருமலை, மற்றும் பரமபதம்.

நாராயண.............நாராயண....................நாராயண
"

(வீ.சீதாராமன், இயக்குனர் - இதிஹாசமயம், சென்னை - 9894526302)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends