Announcement

Collapse
No announcement yet.

பத்து ரூபாய் டாக்டர்...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பத்து ரூபாய் டாக்டர்...

    பத்து ரூபாய் டாக்டர்...

    உடம்புக்கு முடியாமல் போனால் டாக்டரிடம் காண்பிக்கும் பழக்கம் கொஞ்ச காலத்திற்கு முன் வரை இருந்தது ஆனால் இப்போது முடிந்த வரை நமக்கு நாமே பாணி வைத்தியத்திலும் அது முடியாமல் போகும் போது மருந்து கடைக்காரர்கள் ஆலோசனையின் அடிப்படையிலும் வைத்தியத்தை தேடிக்கொள்கிறார்கள்.இதற்கு காரணம் இன்றைய தேதிக்கு டாக்டர்களிடம் கன்சல்டிங் என்று போனால் ஆயிரம் ரூபாய்க்கு குறைவின்றி செலவு வந்துவிடுகிறது, அதே டாக்டர் ஆஸ்பத்திரி வைத்திருந்தால் எக்ஸ்ரே ஸ்கேன் இசிஜி என்று பணம் பஞ்சாய் பறக்கும்இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு எம்பிபிஎஸ் படித்த, பல ஆண்டு அனுபவம் உள்ள டாக்டர் ஒருவர் வரக்கூடிய பேஷண்ட்களிடம் பத்து ரூபாய்க்கு மேல் கன்சல்டிங் வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

    யார் அவர்? என்ற உங்கள் கேள்விக்கு விடை காண தென்காசிக்கு(திருநெல்வேலி மாவட்டம்) பயணம் செல்லவேண்டும்.

    தென்காசியில் உள்ள புகழ்பெற்ற பழமையான குலசேகரநாதர் கோவில் தெருவில் கிளினிக் வைத்து நடத்திவருகிறார் டாக்டர் கே.ராமசாமி.தென்காசி பஸ் நிலையத்தில் இற்ங்கி பத்து ரூபாய் டாக்டரை பார்க்கவேண்டும் என்றால் போதும் எந்த ஆட்டோக்காரராக இருந்தாலும் கொண்டு போய் அவரது கிளினிக்கில் இறக்கிவிடுவர் அந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளார்.நான் போகும் போது கிளினிக் பூட்டியிருந்தது.' டாக்டரய்யா வீட்டிலேதான் இருப்பார்கள் வாங்க' என்று அடுத்த தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கே கொண்டு போய் ஆட்டோக்காரர் இறக்கிவிட்டார்.

    சின்ன வீடு எளிமையாக காணப்பட்டது, டாக்டரின் துணைவியார் பகவதி அன்போடு வரவேற்றார் வீட்டின் உள்அறையில் இருந்து 'வாங்கோ' என்று வாய்நிறைய சிரிப்போடும் வரவேற்றபடி வந்தார் டாக்டர்.அறிமுக சம்பிரதாயம் எல்லாம் முடிந்த பிறகு, இண்டர்நெட் பேஷ்புக் ஸ்மார்ட் போன் என்றெல்லாம் இல்லாமலம் வாழும் என் எளிய வாழ்க்கைக்கு ஒரு நோயாளியிடம் பத்து ரூபாய் வாங்கினால் போதும் என்று நினைப்பதால் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு இருக்கிறேன், அதற்கு எதற்கு விளம்பரம் எல்லாம் என்று கூச்சப்பட்டார்.இது விளம்பரம் அல்ல மருத்துவத்தை மகத்துவமாக பார்க்கும் உங்களை போன்றவர்களை அடையாளம் காட்டுவது எங்கள் கடமை என்ற பிறகு பேசஆரம்பித்தார்.

    நான் திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ்ம் சென்னையில் மேற்படிப்பும் படித்தேன் படித்து முடித்த உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக வேலை. பல ஊர்களில் வேலை பார்த்துவிட்டேன் தென்காசி வந்த பிறகு ஊர் பிடித்துப்போனதால் இங்கேயே ஒரு வீட்டை வாங்கி நிரந்தரமாக இருந்துவிட்டேன், வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் என்ற போது கூட இங்கிருந்து போய்விட்டு திரும்பிவிடுவேன்.ஒரே மகள் திருமணம் செய்து கொடுத்த பிறகு என்னுடைய தேவைகள் குறைந்துவிட்டது அதற்கு மேல் என் துணைவியார் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற வார்த்தைக்கு வாழ்க்கை கொடுத்துகொண்டு இருப்பவர்.

    இந்த நிலையில் அரசு பணி வேண்டாம் என்று விட்டுவிட்டு தென்காசியில் சிறிதாக கிளினிக் வைத்து மக்களுக்கான மருத்துவத்தை தொடர்கிறேன்.கிளினிக் காலை பத்து மணியில் இருந்து ஒரு மணிவரையிலும் பின் மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணிவரையிலும் திறந்து இருக்கும்.தென்காசியில் இருந்து மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் பலரும் என்னை தேடி வருவார்கள்.நான் நோயின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளை வழங்கி மருந்து மாத்திரைகளை எழுதிதருவேன்.
    பெரும்பாலும் ஒருமுறை நான் எழுதிதரும் மருந்து மாத்திரைகளிலேயே நோய் சரியாகிவிடும் அதன்பிறகு வந்தால் நன்றி சொல்லதான் வருவார்கள்.

    இப்படித்தான் கடந்த 33 வருடங்களாக இயங்கிக்கொண்டு இருக்கிறேன், இப்போது எனக்கு வயது அறுபத்தாறு ஆகிறது.எனது அனுபவமும் படிப்பும் மக்களுக்கு உதவட்டுமே என்ற மனநிலைதான் எனக்கு, ஒரு போதும் மருத்துவத்தை காசாக்கி பார்க்க விரும்பியது இல்லை. இலவசமாக பார்த்தால் ஒரு மரியாதை இருக்காது என்பதால் இந்த பத்து ரூபாய் வாங்குகிறேன் அது கூட எனது உதவியாளர்களுக்கான சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. ஆரம்பத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தேன் ரொம்பகாலம் அதுதான் ஒடிக்கொண்டு இருந்தது பிறகு எனக்கு உதவியாளர்கள் நியமித்தபிறகுதான் பத்து ரூபாயானது அந்த பத்து ரூபாயைக்கூட நான் கையில் வாங்குவது இல்லை கிளினிக் பக்கத்தில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கும்போது கடைக்காரர்கள் டாக்டர் பீஸ் பத்து ரூபாய் எடுத்துக்கொள்ளலாமா? எனகேட்டு எடுத்துக்கொள்வார்கள் அதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த முறை முடிந்தால் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

    இதுதான் என்கதை என்றவர் கிளினிக்கிற்கு நேரமாச்சு கிளம்பலாமா? என்றவர் கூடவே நானும் கிளம்பினேன்.வீட்டிலிருந்து நடந்தே கிளினிக்கிற்கு வருகிறார் வழியில் பார்க்கக்கூடிய பலரும் வணக்கம் டாக்டர் என மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்துகின்றனர் பதிலுக்கு வணக்கத்தையும் சிலரிடம் வாஞ்சையுடன் உடல் நலனையும் விசாரித்தபடி கிளினிக்கை அடைகிறார்.

    கிளினிக் என்பது வீட்டைவிட மிக எளிமையாக இருக்கிறது,இரண்டு சிறிய அறைகள் கொண்ட பழமையான வாடகை கட்டிடம்.டாக்டர் வந்ததும் நோயாளிகள் வரிசைக்கிரமமாக அவரைப்பார்த்து தங்கள் குறைகளை சொல்லி மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர் நோயாளிகளிடம் அவர் பேசும் அந்த அன்பிலும் அக்கறையிலுமே பாதி நோய் குணமானதாக நோயாளிகள் உணர்கிறார்கள்.டாக்டர் தோல் சிகிச்சையில் மேற்படிப்பு படித்தவர் என்பதால் பொது மற்றும் தோல் சிகிச்சை தொடர்பான நிறைய நோயாளிகள் அன்றைக்கு வந்திருந்தனர்.மேலும் நிறைய பேர் காத்துக்கொண்டிருந்தனர் அவர்களது மருத்துவத்திற்கு இடையூறாக இல்லாமல் டாக்டரிடம் இருந்து விடைபெற்றேன்.

    டாக்டரிடம் பேசவிரும்புவர்கள் அவரது வீட்டு லேண்ட் லைனில் (கிளினிக் நேரம் தவிர்த்து) தொடர்பு கொள்ளவும் எண்:04633-224922.-எல்.முருகராஜ்.
    Last edited by S Viswanathan; 15-01-16, 09:01.

  • #2
    Re: பத்து ரூபாய் டாக்டர்...

    நல்ல சேவை நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை

    Comment

    Working...
    X