Courtesy:Si.GS.Dattatreyan


பாடம் நடந்து கொண்டிருந்தது. குரு போதித்துக் கொண்டிருந்தார்..
கார்மேகக் கண்ணனைப் பற்றி வர்ணிக்கும் ஒரு ஸ்லோகம் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மட்சிணி" என வந்தது.
குருவானவர் அதை வர்ணிக்கும் வேளையில் கப்யாஸம் என்னும் சொல்லுக்குக் "குரங்கின் ஆசனவாய்" என்ற அர்த்தம் வரும் என விவரித்து விட்டு,பகவானின் கண்களைக் குரங்கின் ஆசனவாய்க்கு ஒப்பிட்டார்.


கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சீடனுக்குக் கண்ணீர் பொங்கி வந்தது.


கண்ணீர் விட்டு அழுதான். குருவானவர் தன் பாடம் அவ்வளவு உருக்கமாய் இருந்ததாய் நினைத்தார்.
ஆனால் சிஷ்யன் விம்மி, விம்மி அழவே குருவுக்குச் சந்தேகமாய் இருந்தது. மற்றவர்களை அனுப்பி விட்டு அந்தச் சீடனிடம்,
"அப்பனே, ஏன் அழுகின்றாய்? என்ன நடந்தது? இன்றைய பாடம் உனக்குப் புரியவில்லை என்றால் விட்டு விடு!
பின்பொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்," என்று சொன்னார்.


சீடனோ வணக்கத்துடனேயே , "குருவே, தாங்கள் அதி மேதாவி, எனக்கு அதில் சந்தேகமே இல்லை,
ஆனால் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கின்றது. என்னவென்று புரியவில்லை." என்று பணிவுடனேயே தெரிவித்தான்.
குருவுக்குக் கோபம் ஏறிக் கொண்டிருந்தது. பாடம் புரிந்து கொள்ள முடியாதவன் இங்கே வந்து ஏதோ உளறுகின்றான் என்றே நினைத்துக் கொண்டார்.


சீடனைப் பார்த்து, "என்ன, விஷயம்? சொல்லு, பார்ப்போம், அந்த வேடிக்கையையும்!" எனக் கேலியாகவே சொன்னார். சீடனோ குருவைப் பார்த்து,"இப்போது தாங்கள் நடத்திய சாந்தோக்ய உபநிடத்தின் முதல் அத்தியாயம்,
ஆறாவது பகுதியின் ஏழாவது மந்திரப் பாடத்தில் தான், "கப்யாஸம்" என்னும் சொல்லுக்குத் தாங்கள் சொன்ன அர்த்தம் தான்,
கொஞ்சம் தவறோ என்று மனதில் பட்டது!" மிகுந்த வணக்கத்துடனும், பணிவுடனுமே சொன்னார் சீடர்.


"என்ன, நான் சொல்லும் அர்த்தத்தில் உனக்குச் ச்ந்தேகமா? வேறு அர்த்தம் சொல்லப் போகின்றாயா? என்ன துணிச்சல்?"
எனக் கண்கள் சிவக்கக் கேட்கின்றார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
"குருவே! பரமாத்வாவின் கண்களைத் தாங்கள் குரங்கின் ஆசனவாயோடு ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமே அல்ல!
மேலும் கப்யாஸம் என்னும் சொல்லைப் பிரிப்பது எவ்வாறெனில் தாங்கள் அனுமதி அளித்தால் சொல்லுகின்றேன்!"
என்று வணக்கத்துடனேயே சீடர் கேட்கின்றார். குருவும் கூறச் சொல்லி ஆணையிடச் சீடன் சொல்கின்றார்:"
குருவே "ஆஸ" என்றால் மலருதல் என்று அர்த்தம் வரும் இல்லையா? "கப்யாஸம்" என்றால்
ஆதவனால் மலர்ந்தது என்று தானே பொருள் கொள்ள முடியும்? சகல கல்யாண குணங்களும் நிறைந்திருக்கும்
எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனை கண்டதுமே அன்றாடம் மலரும் தாமரையைப் போல்
அல்லவோ இருக்க வேண்டும்? இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கொள்வது தானே சரியானது?
மாறாகக் குரங்கின் ஆசனவாயோடு பொருள் கொள்வது சரியாக இருக்காது என்பதே என் தாழ்மையான கருத்து!"
எனத் தெரிவிக்கின்றார்.


கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய குருவும் சீடனை அணைத்துக் கொண்டு தன் தவற்றுக்கு வருந்துகின்றார்.
மிக, மிகப் பெருந்தன்மையோடேயே அந்தச் சீடன் தன் தவற்றைத் திருத்தியமைக்கு அனைவரிடமும் சொல்லி ஆனந்தமும்,
பெருமையும் கொள்கின்றார். சீடனின் புகழோ உலகெங்கும் பரவியதோடல்லாமல், ஒரு மாபெரும் தத்துவத்தையே இவ்வுலகுக்குத் தருகின்றான்.


அந்த சீடன் தான் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்களை இயற்றியவரும்,வேதாந்த நெறிகளைக் காவிய நடையில் மெருகூட்டி "விசிஷ்டாத்வைதம்" என்னும் தத்துவ தரிசனமாய் உலகுக்கு ஈந்தவரும் ஆன ஸ்ரீ ராமானுஜாச்சாரியார்.


குருவானவரின் பெருந்தன்மையும், அன்பும், மன்னிக்கும் குணமுமே சீடனையும் பெருமை கொள்ளச் செய்யும் என்பது இங்கே நிதரிசனம் ஆகி விட்டது.