Announcement

Collapse
No announcement yet.

அக்ரஹாரத்துக்கோயில்கள் – 3 – தரங்கன்பாடி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அக்ரஹாரத்துக்கோயில்கள் – 3 – தரங்கன்பாடி

    அக்ரஹாரத்துக் கோயில்கள் - 3 - தரங்கம்பாடி



    அக்ரஹாரத்துக்கோயில்கள் – 3 – தரங்கன்பாடி











    பழைய தஞ்சை மாவட்டம் இன்றைய நாகைப்பட்டினம் மாவட்டம் “தரங்கம்பாடி” கிராமம்1620-1845 வரை டச்சுக்காலனியாகவும், வாணிபத் துறைமுகமாகவும் இருந்தது. பின்பு ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குச் சென்று 1845-ல் ஆங்கிலேயர்களால் விற்கப்பட்டது.


    வேதத்தின் ஆறு அங்கங்களினை குறிக்கும் வண்ணம் ”ஷட் அங்கன்பாடி” என்று “மாறவர்மன் குலசேகர பாண்டியன்” ஆட்சியில் (1300களில்) சிறப்புற்று விளங்கிய இக்கடற்கரை கிராமம் “குலசேகரப்பட்டினம்” என்று இந்த மன்னனின் பெயராலும் வழங்கப்பட்டு வந்தது


    தரங்கன்பாடிக்கு கி.பி.1606 இல் “டேனிஷ் பாதிரிகள்” வந்தனர். இவ்வூரின் அக்ரஹாரத்திற்கு அருகே இன்றும் உள்ள “டேனிஷ் கோட்டை” 1620 இல் “ஒவ்கிட்” என்னும் டென்மார்க் தளபதியால் கட்டப்பட்டது.


    விக்ரமாவிதச்செட்டியார் என்பவர் இந்த பெருமாள் கோயில் ஸம்ப்ரோஷணத்திற்காக(குடமுழுக்கு) சீன வணிக கப்பல்களுடன் வியாபாரத் தொடர்பு கொள்ளும் “சாம்பன்” என்னும் உரிமையை பெற்றதையும் அத்துடன் தரங்கம்பாடியில் மீன்பிடித்தொழில் செய்யும் “ஆர்ய நாட்டார்” என்னும் மீனவர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையும் பெற்றிருந்தார் என்பதினையும் “சேனைத்தலைவர் குல வரலாறு“ நூல் பக்கம் 47 உறுதி செய்கிறது.


    700 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இந்த பெருமாள் கோயிலில் “மச்சாவதார உற்சவம்” நடைபெற்றதை “ஜான் ஒலோப்சன்” என்னும் “டென்மார்க் தளபதி” தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    1706 இல் ஜெர்மன்நாட்டில் பிறந்த டென்மார்க் நாட்டினை சார்ந்த கிருஸ்துவ திருச்சபை சார்பாக மதப்ரசாரம் செய்ய தரங்கம்பாடி வந்த “சீகன் பாலக்” என்பவர் தரங்கம்பாடியில் தான் முதல் தமிழ் அச்சு இயந்திரத்தினை உருவாக்கி பைபிளை அச்சிட்டார். பின்னாட்களில் ஆங்கிலேயர்களின் வியாபார ஸ்தலமாக மாறிவிட்ட இவ்வூர் அந்நிய மத ப்ரசாரங்களுக்கும், கட்டிடங்களுக்கும் உள்ளாகி பல மாற்றங்களை பெற்றது.


    தேசபக்த அமைப்பு ஒன்று மதமாற்றத்தினைத் தடுக்க இவ்வூர் மாசிலாமணிநாதர் (சிவன்) கோவிலை புதிப்பிக்க முயன்று பல முறை தடங்கல் ஏற்பட்டு, பின் பிரசன்னம் பார்த்தபோது பெருமாள் கோவிலினை முதலில் குடமுழுக்கு செய்யவேண்டும் என பிரசன்னம் பார்த்தவர்கள் சொல்ல, 125 வருடங்களுக்கு முன் ஸம்ப்ரோஷ்ணம் (குடமுழுக்கு) நடைபெற்று, பின் 1966இல் ஒருமுறை பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் நடைபெறாது நின்று போன இந்த பெருமாள் சன்னதிக்கு 16/9/2011 அன்று சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது.


    அக்ரஹாரத்தின் அமைப்புக்கு ஏற்றவாறே மேற்கே ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி ஸமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலும், கிழக்கே சற்று வெளியே மாசிலாமணிநாதர் சிவன் கோயிலும் உள்ளது. 1591இல் விக்ரமாவிதச் செட்டியார் என்பவர் தரங்கம்பாடி அக்ரஹாரத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு ஸம்ப்ரோஷணம் செய்துள்ளார் என்பதை இக்கோயில் கல்வெட்டுகள் செய்தியாக தருகிறது.











    ஸ்ரீவைஷ்ணவ தென்னாச்சார்ய ஸம்ப்ரதாய திருமண்ணுடன், வைகானஸ ஆகம விதிகளுடன் உள்ளது இச்சன்னதி. ஸ்தல விருட்சம் வில்வம், பெருமாள் கோயிலில் வில்வம் ஸ்தல விருட்சமா? என ஐயமுரவேண்டாம். “வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோsத2 பி3ல்வ:” என்கிற ஸ்ரீ ஸூக்த வேத வாக்கியப்படி “பில்வம் ஸ்ரீ லக்ஷ்மிக்கு உரியது”. அதனாலேயே பெருமாளுக்கு திருப்பதியில் வில்வ இலையால் அர்ச்சனை அதை போன்று தரங்கம்பாடியிலும் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை.


    மணிமண்டபம் வசந்தமண்டபம், வடக்கு வாசல், ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கருவறை, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி என அமைந்துள்ளது இத்திருக்கோயில்.


    மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இக்கிராம மீனவ மக்கள் மீன் பிடித்து விட்டு நல்லபடியாக கடலிலிருந்து திரும்ப வேண்டும் என்பதற்காக இந்தப் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் முன் பெருமாள் சன்னதியில் விளக்கேற்றிச் செல்வதை வழக்கமாக செய்து வந்தனர், என்பதும் மீனவர்கள் சார்பாக நடைபெற்ற “மச்சாவதார உற்சவம்”இக்கோவிலின் தனி சிறப்பு.


    1305இல் மாறவர்மன் குலசேகர பாண்டியனனின் 38வது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இங்குள்ள மாசிலாமணி நாதர் சிவன் கோயிலுக்கு, பெருமாள் கோயில் ஸம்ப்ரோஷ்ணம் நடைபெற்ற அதே ஆண்டான 2011ம் ஆண்டிலேயே சிறப்பான முறையில் குடமுழுக்கு நடந்தது.


    இங்குள்ள சிவனுக்கு “மணிவண்ணீசுவரமுடையான்” என்ற பெயரும் உண்டு, தஞ்சையை ஆண்டு வந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் கி.பி. 1567ல் “சடங்கன்பாடி” என்று ஊர் பெயரும் “மாசிலாமணீஸ்வரர்” என்று சிவனின் பெயரும் மாறின.


    கடற்கரை நோக்கி உள்ள இச்சிவன் சன்னதியை கடல் அலைகள் வந்து தாலாட்டுகிறது இக்காட்சி மாசிலாமணியானின் திருவடிகளை வந்து வணங்கி செல்வது போல் உள்ளது.


    அப்பர், சுந்தரர் வாக்கில் உள்ள வைப்புத்தலம் இச்சிவன் சன்னிதி. அக்ரஹாரத்தில் அமைந்துள்ள இந்த இரு பெருமாள் மற்றும் சிவன் சந்நிதிகள் மதம் மாறியவர்களின் மனமாற்றத்திற்கு வழிகாட்டுகிறது என்கிற நிலையில் போற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய ஸ்தலம் தரங்கன் பாடி.








    இருப்பிடம்


    மயிலாடுதுறையிலிருந்து (மாயூரம்) 25 கிலோமீட்டர். சஷ்டியப்தபூர்த்திக்கு புகழ் பெற்ற திருக்கடையூரிலிருந்து 10 கிலோமீட்டர்.


    கடல் உள்புகுவதால் 150அடி தூரம் பல கட்டடங்கள் கடலுக்குள் உள்ளது. ஆங்கிலேயர்கள் உச்சரிக்க சிரமப்பட்டு பலவாறாக மாறிவிட்ட இந்த ஊரின் பெயர் இப்போது “தரங்கன்பாடி“ ஆம்! “அலைகள் கவி பாடும் இடம்“ எனப்பொருள்.


    பெயருக்கு ஏற்ப அலைகள் கவி பாடுகின்றன. பழமையான அக்ரஹாரத்தின் பண்டைய புகழ் பாடுகின்றன. நீங்களும் கேட்க வாருங்கள், சேவிக்க வாருங்கள் மாசிலாமணி ஸ்ரீவரதராஜனின் அருள் பெற தரங்கன்பாடிக்கு...
Working...
X