Announcement

Collapse
No announcement yet.

Thus spoke Raghavendra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thus spoke Raghavendra

    Courtesy: Sri.GS.Dattatreyan
    இராகவேந்திரரின் இறுதியுரை'
    1671-ம் வருஷம், ஷ்ரவண கிருஷ்ண பக்ஷ த்விதீய திதியன்று, மந்திராலயத்தில் தமது ஜீவ ஸமாதியைக் காணக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே ஸ்வாமிகள் உள்ளமுருக்கும் அருளுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் அருளிய முக்கியச் செய்திகள் பின்வருமாறு:
    1. நேர்மையான முறையில் வாழாது, நேரிய சிந்தனை வர இயலாது.
    2. நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.
    3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.
    4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
    5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.
    மேற்கூறிய அந்தப் புனித தினத்தில் ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி எய்தினார். அந்த இடம் பிருந்தாவனம் என அழைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் இந்த நன்னாளில் பிருந்தாவனத்திலும், உலகெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் பிற பிருந்தாவனங்களிலும் ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மந்திராலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் அருளை இன்றும் பெறுகின்றனர்.
    ஸ்ரீ இராகவேந்திரர் என்னும் சன்னியாசி
    இராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. இராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.
    மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆசார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்), ஸுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், ஸுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு இராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.
    1595-ல் புவனகிரியில் பிறந்த இராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விரிகிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. அவர் தொட்டார், கண் பார்வை வந்தது; அவரை நினைத்ததும் படிப்பறிவு வந்தது என்பன போன்றவை. ராகவேந்திரரின் அக்கா மகனால், ராகவேந்திரரின் காலத்திலேயே எழுதப்பட்ட ஸ்ரீ ராகவேந்திர விஜயம் என்னும் நூலே ராகவேந்திரர் பற்றி அறிய உதவும் நூலாக உள்ளது. ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல், ராகவேந்திரர் ஜீவ சமாதிக்குச் செல்லும் முன்பு ஆற்றிய உரையாகச் சொல்லப்படும் உரையில் அவரே தனது மகிமைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த 'மகிமை'களையெல்லாம் விட்டுவிட்டு, அந்த நூலில் இருந்து ராகவேந்திரரின் வரலாற்றைத் தேடித்தான் அறியவேண்டியுள்ளது. இத்தனைக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
    மகிமைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ராகவேந்திரர் மிக முக்கியமான சன்னியாசியாக, பெரும் ஞானியாக வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. ராகவேந்திரர் 64 கலைகளில் வல்லவர் என்கிறது ராகவேந்திர விஜயம். இது எத்துணை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் வீணை வாசிப்பதில் தேர்ந்தவராக விளங்கியிருக்கிறார். அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வீணை வாசிப்பவராக இருந்திருக்கிறார். (விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் போது, வாழ்வாதாரம் தேடி கும்பகோணத்திற்கு இடம் பெயர்கிறது ராகவேந்திரரின் குடும்பம். அங்கேதான் ராகவேந்திரர் பிறக்கிறார்.) ராகவேந்திரரின் அப்பாவுக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. இதனால் ராகவேந்திரருக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கலாம் என்று யூகிக்கலாம். சமிஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார். அவர் சமிஸ்கிருத நூல்களுக்கு உரைகளும், வேறு சில சிறிய சிறிய உரைகளும் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கிடைக்கவில்லை. நிறைய பாடல்களும் இயற்றியிருக்கிறார். அவர் இயற்றிய பாடல்களில் நமக்குக் கிடைக்கும் ஒரே கன்னடப் பாடல் 'இந்து எனகே கோவிந்தா நிந்நய பாதாரவிந்தவ தோரோ முகுந்த' என்ற பாடல் மட்டுமே என்கிறது ஒரு குறிப்பு.
    தனது திருமணத்துக்குப் பின் சன்னியாசம் மேற்கொள்ளுகிறார். சன்னியாசம் பற்றிய விவரணைகள் ஸ்ரீ ராகவேந்திர விஜயம் நூலில் உள்ளன. சன்னியாசம் மேற்கொண்டதால் அவரது மனைவி சரஸ்வதி தற்கொலை செய்து கொள்கிறார். (அவர் திருமணம் செய்துகொண்ட வருடம், அவர் சன்னியாசம் மேற்கொண்ட வருடம் பற்றிய குழப்பங்கள் நூல்களில் காணப்படுகின்றன.) அவரது சன்னியாச வாழ்க்கையில் ஒரு சன்னியாசிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகிறார். க்ராம ஏக ராத்ரி வாஸ! என்பதற்கிணங்க தொடர்ந்து தென்னிந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நிறைய வியாக்யானங்கள், நிறைய பாடல்கள் இயற்றுகிறார். மீமாஸத்திலும், த்வைதத்திலும் நிறைய பேரை வாதில் வெல்கிறார். (இவ்வளவுதான் சொல்கின்றன ராகவேந்திரரைப் பற்றிய நூல்கள். எவையும் அவர் அப்படி என்ன பேசி வாதில் வென்றார் எனச் சொல்லுவதில்லை!) சேது, திருவனந்தபுரம், மதுரை, ஸ்ரீரங்கம், வேலூர், உடுப்பி, மைசூர், மீண்டும் கும்பகோணம், கதக், பண்டரீபுரம், பீஜப்பூர், அல்லூர், ராய்ச்சூர், ஆதோனி, மான்சாலி எனத் தொடர்கிறது அவரது பயணம்.
    அவர் இயற்றிய பாட்ட ஸங்கரஹம் என்னும் நூலை யானையில் வைத்து பெருமைப்படுத்தி அழைத்துச் சென்றார் நீலகண்ட சாஸ்திரி – இது நடந்தது மதுரையில். ராய்ச்சூரில், தாழ்த்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட ஒருவர் ராகவேந்திரரிடம் பேசுகிறார். அவரை, தான் பூஜித்து வந்த மூல ராமருக்கு பூஜை செய்வாயாக என்கிறார் ராகவேந்திரர். அந்த மனிதர் நிறைய கடுகைக் கொண்டுவந்து பூஜை செய்கிறார். கடுகை விரதகாலத்தில் சேர்க்கக்கூடாது என்ற முறை இருந்தும், அதனை மறுத்து, கடுகைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.) இப்படி கடுகைப் பயன்படுத்தியதால் வெறுப்படையும் ஆசார்யர்களைக் கண்டிக்கிறார் ராகவேந்திரர்.
    ஆதோனியில் வெங்கண்ணா என்பவர் ராகவேந்திரரின் சீடராகிறார். (ராகவேந்திரரின் மகிமையால் அவர் சுல்தான் மசூன் கானிடம் திவனாகிறார். அதனால் அவர் ராகவேந்திரரின் சீடராகிறார்.) ராகவேந்திரரைச் சோதிக்க நினைக்கும் சுல்தான், பின்னர் ராகவேந்திரரைப் புரிந்துகொண்டு, அவருக்கு தானமாக என்ன வேண்டும் எனக் கேட்க, ராகவேந்திரர் மன்சாலி கிராமத்தைக் கேட்கிறார். அது ஏற்கெனவே ஒரு ஹாஜிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், ராகவேந்திரர் அக்கிராமமே வேண்டும் எனக் கேட்க, சுல்தான் அந்த ஹாஜிக்கு வேறொரு கிராமத்தைக் கொடுத்துவிட்டு, மன்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுக்கிறார். அது பிரகலாதன் யாகம் செய்த இடம் என்று நம்பிய ராகவேந்திரர் அந்த இடத்தைக் கேட்டிருக்கிறார். 1671-ல் தான் சமாதி அடையும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். பின்னர் வேறொரு இடத்தை, தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகிலேயே தேர்ந்தெடுக்கிறார். முதலில் தேர்ந்தெடுத்த இடம், தனது அண்ணனின் கொள்ளுப் பேரப்பிள்ளையான வாதீந்தருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். (அப்போது வாதீந்தரருக்கு வயது 2.) தான் ஜீவ சமாதி அடையும் முன்பாக, தனது அண்ணனின் பேரப்பிள்ளையான யோகீந்திரரை மடாதிபதியாக்குகிறார்.
    உடலுடன் பிருந்தாவனம் புகும் நாள் வருகிறது. பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. துங்கபத்திரை நதியின் கரையில் அமைந்திருக்கிறது ராகவேந்திரர் சமாதி அடைந்த இடம். அதன் இன்னொரு கரையில் பிச்சாலய என்னும் ஊரில் (தற்போதும் உள்ளது) அப்பண்ணா என்பவர் – ராகவேந்திரரின் சீடர் இருக்கிறார். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டுவிடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார். வழியில் துங்கபத்திரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமிஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கிக் கரையேறுகிறார். அதற்குள் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணா பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுத்துவிடுகிறது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து "ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி" என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் மேலும், தெய்வீகத்தின் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் நெகிழ்ந்துவிடும் இடம் இது. இது நடந்திருக்குமா இல்லையா என்பதையெல்லாம் மீறி, நானும் நெகிழ்ந்த இடம் இதுவே.
    இன்றும் ராகவேந்திரர் சமாதிக்கு அருகிலேயே, அவரது அண்ணனின் கொள்ளுப் பேரனான வாதீந்திரரின் சமாதியும் உள்ளது.மான்சாலியில் இன்னொரு முக்கியமான விஷயம், மாஞ்சாலம்மா என்னும் கிராம தேவதை பற்றியது. ராகவேந்திரரை தரிசிக்கச் செல்லும் முன்பு, மாஞ்சாலம்மாவை தரிசிப்பது அவசியம் என்கிறது நடைமுறை. ஆனால் இதைப் பற்றிய குறிப்பே இல்லை மடம் வெளியிட்டிருக்கும் நூலில். கிராம தேவதை பற்றிய வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ராகவேந்திரருக்குத் தெரிந்திருக்கிறது. ராகவேந்திரருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது! அதேபோல் ஆதோனியிலும் கிராம தேவதை வழிபாடு முக்கியமாக உள்ளது.
    சில முக்கியமான, சுவாரஸ்யமான குறிப்புகள்
    1. ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை:
    * சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
    * நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
    * சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
    * கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
    இதில் "நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்" என்னும் வரி முக்கியமானது. அன்றைய, அவரது காலகட்டத்தில் அவர் பிராமணர்கள் என்றே சொல்லியிருக்கலாம். ஆனாலும் சொல்லவில்லை என்பது முக்கியமானது. இதனை இன்றைய மடங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் மேல் மட்டுமன்றி இதர தேவதைகளிடமும் என்னும் வரியும் முக்கியமானது.
Working...
X