குழந்தை வரத்திற்கு கோயம்பேடு வாங்க!
லவகுசருக்கு அருள்புரிந்த பெருமாள் சென்னை கோயம்பேட்டில் வைகுண்ட வாசராக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர்.
தல வரலாறு: அயோத்தியில் ராமன் ஆட்சி பொறுப்பேற்றதும், சீதையின் கற்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் சிலர் அவதூறு பேசினர். அவளது கற்பின் திறத்தை நிரூபிக்க ராமர், அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்தில் இருந்த வால்மீகி, சீதைக்கு ஆதரவு அளித்தார். கர்ப்பவதியான அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் பிள்ளைகளைப் பெற்றாள். தந்தையான ராமர் பற்றி அறியாமல் அவர்கள் வளர்ந்தனர்.
இச்சமயத்தில் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடந்தது. யாகத்தில் இருந்த குதிரை லவகுசர் வசித்த வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அதைக் கட்டிப் போட்டதோடு, சத்ருக்கனன், லட்சுமணரை தன் சித்தப்பாக்கள் என அறியாமல், போரிட்டும் வென்றனர். இதையறிந்த ராமன், வனத்திற்கு ஒற்றனை அனுப்பி சீதை, வால்மீகியை அழைத்து வர கட்டளையிட்டார்.
இதனிடையே வால்மீகி லவகுசரிடம், சீதா ராமரே அவர்களின் பெற்றோர் என்ற உண்மையைத் தெரிவித்தார். அதன்பின், லவகுசர் ராமரிடம் மன்னிப்பு வேண்டினர். அப்போது திருமால் லவகுசருக்கு வைகுண்டவாசராக காட்சியளித்தார். இதன் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது.
வால்மீகி மகரிஷி: பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் தாயார்களுடன் காட்சியளிக்கிறார். உற்சவர் "பக்தவத்சலர்' எனப்படுகிறார். தாயார் கனகவல்லி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். முன் மண்டபத்தில் வால்மீகி மகரிஷியுடன் லவகுசர் காட்சி தருகின்றனர். பித்ரு தோஷம் உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டு, லவகுச தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்கின்றனர். தீர்த்தக் கரையில் ஆஞ்சநேயருக்கு தனிக் கோவில் உள்ளது. "கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்' என்னும் இரும்பு வேலியால், லவகுசர் கட்டி வைத்ததால் இத்தலம் "கோயம்பேடு' எனப்பட்டது. "பேடு' என்றால் "வேலி' எனப் பொருள். வைகுண்டவாசரை வழிபட்டால், லவகுசர் போல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.

மரவுரியில் ராமர்: ராமன், அரசராக இல்லாமல் மரவுரி ஆடை தரித்து துறவி கோலத்தில் இருக்கிறார். வைகானஸ ஆகமத்தை ஏற்படுத்திய விகனஸருக்கு சன்னிதி உள்ளது. பிரகாரத்தில் இரண்டு வில்வ மரம், ஒரு வேம்பு மரம் சேர்ந்து உள்ளது. இதனை "பார்வதி சுயம்வர விருட்சம்' என்கின்றனர். இதை சிவன், விஷ்ணு, அம்பிகையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.
இருப்பிடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.,
நேரம்: காலை 5.30- மதியம்12.00 மணி, மாலை 4.30- இரவு 8.30 மணி
தொலைபேசி: 044- 2479 6237.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends