4 types of bhakti - BG - 7:16 - Periyavaa
Courtesy:Sri.GS.Dattatreyan


இந்த நாள் இனிமையாக அமைய நம் ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்னது, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.'
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 211
எதற்கு வேண்டுவது?
பகவானை எதற்காக ப்ரார்த்தனை பண்ணவேண்டும் என்பதில் அபிப்ராய பேதங்கள் உண்டு.
இந்த லோக வாழ்க்கையில் நமக்கு எண்ணி முடியாத கஷ்டங்கள், ச்ரமங்கள், க்லேசங்கள், துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீரக் கஷ்டம், மன சஞ்சலம், பண முடை, பயம், அவமானம் இப்படியாகக் கணக்கேயில்லாமல் அவதிப்படுகிறோம். இவை தீருவதற்கு வேறு வேறு வழிகளைத் தேடுகிறோம். உடம்பு ஸரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். பணக் கஷ்டம் என்றால் கடன் கொடுக்கக் கூடியவர்களிடம் போகிறோம். ஆவிகள் சேஷ்டை என்றால் மாந்த்ரிகரிடம் போகிறோம். பலவிதமான ப்ரச்னைகள் தீர ராஜாங்க அதிகாரிகளிடம் போகிறோம். இப்படிப் பல பேரிடம் போனாலும், இந்தக் கஷ்டங்கள் தீர பகவானையும் ப்ரார்த்தனை பண்ணிக்கொள்கிறாம். நாம் கஷ்டம் தீர யாரைத் தேடிப் போகிறோமோ அவர்கள் நமக்கு அநுகூலமாக இருப்பதற்கு பகவானை ப்ரார்த்திக்கிறோம். டாக்டர் மருந்துதான் கொடுப்பார். அது நமக்குப் பலிக்க வேண்டுமே! இதற்காக பகவானை வேண்டிக்கொள்கிறோம். ஒருத்தர் ஸஹாயம் செய்வார் என்று அவரிடம் போகிறோம். ஆனால் போகிற வழியிலேயே நமக்கு ஒரு விபத்து வந்துவிட்டால் என்ன பண்ணுவது? இதற்காக ப்ரார்த்தனை பண்ணுகிறோம்.
இந்த மாதிரியெல்லாம் ப்ரார்த்தனை பண்ணுவது தப்பு என்று சிலபேருக்கு அபிப்ராயம். 'நம் கர்மாவுக்காகத்தான் கஷ்டம் வருகிறது. பகவானேதான் இந்தக் கஷ்டங்களைக் கொடுத்துத் தண்டித்து, கர்மாவைத் தீர்க்கிறான். அதனால் இந்த மாதிரி லௌகிக விஷயங்களுக்கு ப்ரார்த்தனை பண்ணவே கூடாது. பகவானுக்கே நமக்கு எதை எப்போது, எப்படித் தரவேண்டும் என்று தெரியும். அதனால் அவனை எதுவும் ப்ரார்த்திக்கவே கூடாது. அவனை ஸ்மரித்தால் அது ஆனந்தமாக இருக்கிறதல்லவா? இந்த ஆனந்தம் ஒன்றுக்காக மட்டுமே ஸ்மரிக்க வேண்டும். பக்தி பண்ணுவதற்குப் பலன் பக்தியில் கிடைக்கிற மன நிறைவேதான். இந்தப் பெரிய நிறைவை விட்டுவிட்டு, பக்தியைச் சின்னச் சின்ன தற்காலிக நிறைவுகளுக்கு ஒரு உபாயமாக வைத்துக்கொள்வது ரொம்பவும் தப்பு. ஆகையால், அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டவே கூடாது. எதற்காகவாவது ப்ரார்த்தனை பண்ணலாமானால் அது நம்முடைய ஆத்ம பரிசுத்தி ஒன்றுக்காகத்தான்' என்று இப்படிச் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள்.
பகவானின் கருத்து
பகவானே சொல்கிற வாக்குதான் நமக்குப் பெரிய ப்ரமாணம். கீதையில் இவ்விஷயமாக ஸ்வாமி என்ன சொல்கிறார்?
கீதையில் க்ருஷ்ண பரமாத்மா இப்படிச் சொல்கிறார்:
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிந: அர்ஜுந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப || (7-16)
'என்னை நாலு தினுஸான (சதுர்விதமான) ஜனங்கள் பஜிக்கிறார்கள், அதாவது வழிபடுகிறார்கள். யார் யார் இந்த நாலு வகைக்காரர்கள்? ஒன்று ஆர்த்தன், இரண்டாவது ஜிஜ்ஞாஸு, மூன்றாவது அர்த்தார்த்தி, நாலாவது ஞானி' என்கிறார்.
முதலில் சொன்ன 'ஆர்த்தன்' என்பதற்கு 'கஷ்டப்படுகிறவன்', 'துக்கமுற்றவன்' என்று அர்த்தம். மனக் கஷ்டம், சரீரக் கஷ்டம் இவற்றுக்கு ஆளானவன் ஆர்த்தன். வ்யாதி, வலி, தாரித்ரியம் (வறுமை) , மாளாத கஷ்டங்கள், ப்ரச்னைகள், மன க்லேசம் தருகிற உபத்ரவங்கள் இவை எல்லாம் ஆர்த்தியில் அடக்கம். இந்தக் கஷ்டம் தீருவதற்காக, துக்க பாரம், துயரச் சுமை தீருவதற்காக இவர்கள் பகவானை வழிபடுகிறார்கள். 'அப்பா இந்த பாரத்தை இறக்கி வையப்பா' என்று ப்ரார்த்தனை பண்ணுகிறார்கள்.
பக்தர்களில் இரண்டாவது வகை (category) யார் என்றால், ஜிஜ்ஞாஸு, அதாவது ஞானம் அடைய விரும்பி ஸாதனை செய்கிற ஸாதகன். பகவான்தான் ஞான விதை போட வேண்டுமாதலால், ஞானாம்பாள்தான் ஞானப்பால் கொடுப்பாளாதலால், இவன் பகவானை வழிபடுகிறான். ஆர்த்தன் மாதிரி இவன் 'ஞானம் தா', 'ஞானம் தா' என்று வேண்டி ப்ரார்த்தனை பண்ணினாலும் பண்ணுவான்; அல்லது இப்படிக் கேட்காமல், பகவானின் திவ்ய ரூபத்தையும், கல்யாண குணத்தையும் வெறுமனே த்யானம் பண்ணிக்கொண்டேயிருப்பான். அதுவே ஆனந்தமாக இருப்பததோடு இவனுடைய சித்தம் சிதறிப்போகாமல் இழுத்துக் கட்டி ஒருமுகப்படுத்தும். ஆசார்யாளும் இந்த சித்த ஜகாக்ரியத்துக்காகத்தான் உபாஸைனையைச் சொன்னார். இவன் 'ஞானம் தா' என்று கேட்கவே வேண்டாம். பகவானை த்யானம் பண்ணிக்கொண்டு ஸந்தோஷமாக இருந்தாலே போதும். இவனுடைய சித்தம் ஒருமுகப்பட்டு, தானே அந்த பகவானின் நிர்குணமான, அரூபமான ஸத்ய நிலையில் இவனை இரண்டறக் கரைத்துவிடும். அப்படி, ஜீவாத்மா என்று கொஞ்சம்கூடத் தனியாகப் பிரிந்திருக்காமல் ஸத்ய வஸ்துவோடு ஐக்யமாய் இருப்பதுதான் ஞானம். அந்த நிலையிலே பூஜையும் இல்லை; த்யானமும் இல்லை. அந்த ஸ்டேஜுக்குப் போவதற்காகவே முதலில் இந்த ஜிஜ்ஞாஸு பகவானை பஜிக்கிறான்.
மூன்றாவதாக அர்த்தார்த்தி. முதலில் சொன்ன 'ஆர்த்தி'யில் வருகிற 'தி ' வேறே, இங்கே 'அர்த்தார்த்தி'யில் சொல்கிற 'தி'யும் 'தா'வும் வேறே. ஸம்ஸ்க்ருதத்தில் 'க' வர்க்கம். 'ச' வர்க்கம், 'ட' வர்க்கம், 'த' வர்க்கம், 'ப' வர்க்கம் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் நாலுவிதமான சப்தங்கள் உண்டு. 'க'வை எடுத்துக்கொண்டால் முதலில் Ka; அப்புறம் அதையே அழுத்தி Kha; மூன்றாவதாக Ga– கங்கை என்பதில் வருகிற மாதிரி; நாலாவதாக இதையும் அழுத்தி Gha. இப்படியே ச, ட, த, ப-விலும் நன்னாலு உண்டு. 'த'வில் முதல் சப்தம் Ta தான் 'ஆர்த்தி'யில் வந்தது. 'அர்த்தார்த்தி' என்பதில் வருகிற 'தா'வும் 'தி'யும் இரண்டாவது 'த' -Tha. 'அர்த்தார்த்தி' என்றால் 'பொருளை இச்சிக்கிறவன்' என்று அர்த்தம், 'அர்த்தம்' என்றால் பொருள்; அதாவது பணம். 'அர்த்தி' என்றால் அதை வேண்டுகிறவன்.
முதலில் துன்புற்றவனைச் சொன்னாரே, அதிலேயே பொருள் இல்லாமல் கஷ்டப்படுகிறவனும் அடக்கம்தான். அதனால் இங்கே பிரித்துச் சொல்லியிருக்கிற அர்த்தார்த்தி என்பவன் வறுமையால் கஷ்டப்படுகிறவன் அல்ல, வாழ்க்கை நடத்தவே முடியாமல் இவன் ச்ரமப்படவில்லை. ஆனாலும் இது போதாது, இன்னும் நிறைய ஸுபிக்ஷம் வேண்டும் என்று பகவானை ப்ரார்த்தனை பண்ணுகிறான். நம்மில் பலபேர் இப்படித்தான் இருக்கிறோம். காலக்ஷேபம் நடக்க நமக்கு ச்ரமமில்லைதான். இருந்தாலும் இன்னும் நிறைய ஸெளகர்யம், வீடு வேண்டும், கார் வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஸப் கலெக்டர் கலெக்டராக ப்ரமோஷன் கிடைக்கவேண்டும் என்று ப்ரார்த்தனை பண்ணுகிறார். கலெக்டர் மாகாணம் பூராவுக்கும் ஏதாவது ஒர் அதிகாரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். 'அர்த்தம்' என்றதில் பணம் மட்டுமில்லாமல் பதவி, கௌரவம், புகழ் எல்லாவற்றையுமே சேர்த்துக்கொள்ளலாம்.
நாலாவதாக ஞானியைச் சொன்னார். ஞானியும் தன்னை பஜிப்பதாக ('பஜந்தே மாம்' என்று) சொல்கிறார். சற்று முன்னாடிதான் சொன்னேன், ஞானியாகி விட்டால் அப்புறம் பகவான், பக்தன் என்ற வித்யாஸமேயில்லாமல் பராமார்த்த ஸத்யமான ஒரே ஏகத்தில் இவன் கரைந்து அங்கே பூஜை, த்யானம் எல்லாம் நின்றுபோய் விடுகிறது என்று. இங்கே இப்படி ஞானியும் பக்தி பண்ணுவதாக பகவானை quote பண்ணுகிறேனே (மேற்கோள் காட்டுகிறேனே) என்றால்; ஞான ஸமாதி நிலையில் பகவானுக்கு வேறாக பக்தன் இல்லைதான். ஆனால் ஞானி எப்போதுமே இப்படி லோக ப்ரக்ஞை இல்லாமல் நிர்விகல்ப ஸமாதியில் இருப்பதில்லை. அவனுக்கு வெளி உணர்வு இருக்கிற – அல்லது இருக்கிற மாதிரி வெளி உலகத்துக்குத் தோன்றுகிற – ஸமயங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஸமயங்களில், ஸமாதி நிலையில் எந்த நிர்குண நிராகார (குணமும் உருவமும் இல்லாத) ஸத்ய வஸ்துவோடு இரண்டறக் கலந்திருந்தானோ, அதே வஸ்து லீலா நிமித்தமாகப் பல குணங்களோடு, ரூபங்களோடு லோக நிர்வாஹம் பண்ணுகிறதை ஞானியானவன் ரஸிக்கிறான். 'வாஸுதேவஸ்ஸர்வமிதி' என்று அந்த வாஸுதேவனே கீதையில் சொன்ன மாதிரி இந்த ஞானி லோகத்தில் எதைப் பார்த்தாலும் அதைப் பரமாத்மாவாகவே பார்த்து, 'இதுவும் அதன் இன்னொரு வேஷம், இன்னொரு விதமான 'லீலை' என்று அதை ரஸிக்கிறான். ஆசார்யாள் 'பஜ கோவிந்த'த்தில் 'நந்ததி நந்ததி நந்ததி ஏவ' என்று மூன்று தடவை திரும்பத் திரும்பச் சொன்னது மாதிரி எதிலும் எப்போதும் பரமாத்ம ரஸத்தையே ருசித்துக்கொண்டு ஆனந்த மயமாக இருக்கிறான். இந்த ஞானி (வெளி ப்ரக்ஞையற்ற) நிர்விகல்ப ஸமாதியில் இல்லாமல் பஹிர்முகமாக (வெளி ப்ரக்ஞையுடன்) இருக்கிறபோதுகூட அவனுக்கு வெளி-உள் எல்லாம் ஒன்றுதான். வேதத்தில் சொன்னதுபோல் உள்ளே வெளியே எல்லாம் அந்த ஒரே நாராயணன், வாஸுதேவன், பரமாத்மாதான் வ்யாபித்திருக்கிறது என்ற உள்ளுணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
ஞானி அடைய வேண்டியது எதுவுமே இல்லை. ஆகவே, 'அதைத் தா, இதைத் தா' என்று ப்ரார்த்திக்க வேண்டிய அவச்யம் அவனுக்கு இல்லை. ஒரு ப்ரார்த்தனையும், காரணமும் இல்லாமல், தன்னால் அன்பாகத்தான் இருக்கமுடிகிறது என்பதாலேயே பரமாத்மாவிடம் அன்பாயிருக்கிறானே, இது தான் பரம பரிசுத்தமான பக்தி. 'அஹைதுகீ பக்தி' (ஹேது அல்லது காரணம் இல்லாத பக்தி) என்று இதை ப்ரஹ்ம ஞானியான சுகாசார்யாள் பாகவதத்தில் சொல்கிறார். இவனை ஒருத்தர் கத்தியால் வெட்டினால்கூட அதிலிருந்து காப்பாற்றும்படி இவன் ப்ரார்த்தனை பண்ணமாட்டான். ஏனென்றால், தான் சரீரமில்லை, ஆத்மாதான் என்ற உள் அநுபவம் இவனை விட்டு அப்போதும் விலகியிருக்காது. அந்த நிலையிலும் பரார்த்தனை பண்ணாமலே பகவானிடம் பக்தியாக அன்புமயமாக இருப்பான்.
'இப்பேர்ப்பட்ட பக்தி எங்கே? கஷ்டம் தீருவதற்காக பகவானை ப்ரார்த்திக்கிற ஆர்த்தனின் பக்தி எங்கே? அதை விட மட்டமாக, போதுமென்கிற அளவுக்கு சௌகர்யம் இருந்தும் இன்னும் வேண்டும் என்று கேட்கிற அர்த்தார்த்தியின் பக்திக்கு பக்தி என்று பேர் கொடுப்பதே தப்பு மாதிரி இருக்கிறதே!' என்று தோன்றலாம்.
ஆனால், ஸாக்ஷாத் பகவான் ஞானத்தை வேண்டுகிற ஜிஜ்ஞாஸுவையும், ஞானத்தை அடைந்தே விட்ட ஞானியையும் சொன்னாற்போலவே இந்த ஆர்த்தன், அர்த்தார்த்தி இரண்டு பேரும்கூடத் தன்னை பஜிப்பதாகத்தான் சொல்கிறார். அது மட்டுமில்லை. இந்த நாலு தினுஸானவரையும் 'ஸுக்ருதின : ஜனா' அதாவது ஸுக்ருதம் பண்ணினவர்கள் – புண்யம் பண்ணினவர்கள் என்று ச்லாகித்துச் சொல்கிறார். இரண்டு ச்லோகங்களுக்குப் பிறகு, மறுபடியும் இந்த நாலு வகையான பக்தர்களும் ச்ரேஷ்டமானவர்களே (உதாரமானவர்களே). (உதாரா : ஸர்வ ஏவைதே) என்கிறார்.
ஏன் இப்படிச் சொன்னார்?
'ஞானியையும், ஞானத்தைத் தேடுகிறவனையும் மட்டுமில்லாமல், லௌகிக கஷ்டம் தீருவதற்காகவே ப்ரார்த்தனை பண்ணுகிறவனையும், ஓரளவு ஸெளக்யமாயிருந்தும்கூட இன்னும் ஜாஸ்தி ஸெளக்யம் வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறவனையும்கூட ஏன் பகவான் தன் பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டார்? ஏன் அவர்களை 'ஸுக்ருத்', 'உதாரர்கள்' என்றெல்லாம் ச்லாகித்தார்?' என்பது கேள்வி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends