Keezhapavoor


நரசிம்மருக்கு நாளை என்பதில்லை !


நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, எம்பெருமானின் நாமத்தை பிதற்றினாலே போதும், ஓடோடி வந்து காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.
அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பிவிட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச் சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக் காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால்.


அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசரஅவசரமாகத் திரும்பிவிட்டார். ஆகவே மீண்டும் பூலோகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் கருதினார் எம்பெருமான். அதே நேரத்தில் இங்கு பூலோகத்தில், சில ரிஷிகளுக்கு அவதார நரசிம்மரின் உக்கிர சொரூபத்தைத் தரிசிக்கும் ஆவல் மேலோங்கியது. தவம் புரிந்துதானே திருமாலை தரிசிக்கமுடியும். எனவே, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் ஆகியோர் கடுந்தவம் புரியத் தொடங்கினர்,


ரிஷிகளின் தவத்திற்கு மனமிரங்கினார் மாலவன். பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால் நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக் கூறினாராம் மகா விஷ்ணு.


பூலோக வைகுண்டம் கீழப்பாவூர்


ரிஷிகளும் அவ்வாறே செய்ய, ரிஷிகளின் தவபூமி வைகுண்டமாக மாறியது. காரணம் மகா உக்கிரமூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் நரசிம்மர், தேவியுடன் காட்சி கொடுத்தார். அர்ச்சாவதாரத் திருமேனியில் எழுந்தருளினார். மன்னர்கள் கோயில் எழுப்பி இந்த நரசிம்மரை ஆராதிக்கத் தொடங்கினர். புராணப் பெருமை பெற்ற பூலோக வைகுண்டமாக விளங்கும் இந்த புண்ணிய ஸ்தலம்தான் தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.


இங்கே உக்கிரமாக இருக்கும் நரசிம்மரை சாந்தப்படுத்த, அவரது சன்னதிக்கு எதிரே மகாலட்சுமி அம்சமாகச் சதுர வடிவில் தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கங்கா நர்மதா சம்யுக்த நரசிம்ம புஷ்கரணி என்பது திருநாமம். நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் இங்கே விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் 16 வகை மூலிகைகளால் நரசிம்மரின் மூல மந்திர ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெறும்.
16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர் கோயில்கள் மூன்று இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம், புதுச்சேரி அருகே சிங்ககிரி மற்றும் கீழப்பாவூர்.
பக்தர்களுக்காக பகவானே இறங்கி வந்து குடிகொண்டுள்ள இத் திருத்தலத்தை பக்தர்கள் தட்சிண அகோபிலம் என்றழைக்கிறார்கள்.


தென்காசி திருநெல்வேலி சாலையில் உள்ள பாவூர்சத்திரம் என்ற ஊரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் சுரண்டை என்ற நகருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.
-கி. ஸ்ரீமுருகன்
http://tamil.thehindu.com/

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends