Announcement

Collapse
No announcement yet.

Sangameswarar temple,Bhavani

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sangameswarar temple,Bhavani

    Sangameswarar temple,Bhavani
    Courtesy:Sri.GS.Dattatreyan
    விஸ்வாமித்திரரின் காயத்ரி இலிங்கமும் சங்கமேஸ்வரரின் திருவருளும் - பவானி கூடுதுறை :
    >> பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனும் நாமத்தில் சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார் . இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை ஆகும் . இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.


    >> அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.


    >> விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக இலிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி இலிங்கம் எனப்படுகிறது. காயத்ரி இலிங்கத்தை பூசிக்க விஸ்வாமித்திரரின் பரிபூரண அருளை பெறலாம் .காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை , ஒரு தடவை சொன்னால் போதும், இலட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்


    >> மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரியாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பலன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.


    >> இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், "காயத்ரி லிங்கேஸ்வரர்" அங்கே தானாகவே தோன்றினார்.


    >> இராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளார் .காயத்ரி இலிங்கம் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது படுகின்றது. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன.




    >> இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான
    சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. .


    >> இக்கோவிலில் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாம் நாள் சூரியனின் ஒளி சிவன் சங்கமேஸ்வரர் மற்றும் இறைவி வேதநாயகி மேல் விழுகிறது .வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறம் உள்ள பசுவுக்கு முன்புறம் மட்டுமின்றி பின்புறமும் தலையுடன் காணப்படுவது அற்புத திருக்காட்சியாகும் ...தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 207 ஆம் திருத்தலம் ஆகும் ..


    >> இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.


    >> இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. நாக தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும் ..செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.


    >> குழந்தை பாக்கியம் வேண்டுவதில் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.


    >> இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர் . மாந்தி கிரகத்தின் ரூபத்தில் இச்சனி பகவான் அருளுவதால் மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


    >> அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.


    >> ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.


    >> இக்கோவிலின் பின்புறமுள்ள இரட்டை விநாயகர் கோவில் பகுதியில், காவிரி, பவானி, அமுதநதி போன்ற மூன்று நதிகள் சங்கமிப்பதால், முக்கூடல் சங்கமம், கூடுதுறை, என அழைக்கப்படுகிறது. பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருமையான கோவில் ஒருமுறை சென்று வாருங்கள் ...
Working...
X