courtesy: www.kamakoti.org
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
புராணம்


நண்பனாகப் பேசுவது


ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமானால் அதை மூன்று தினுசுகளில் நடக்குமாறு பண்ணலாம். ராஜாங்கம் உத்தரவு போடுகிறது போலக் கட்டளை செய்வது ஒன்று. இதற்கு 'ப்ரபு ஸம்மிதை' என்று பெயர். பிரபுவான யஜமானன் வேலைக்காரனுக்கு ஆர்டர் பண்ணுவது போலச் சொல்வது பிரபு ஸம்மிதை. பண்ணா விட்டால் தண்டனை உண்டேயென்று, பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பயத்தோடு கட்டளைப் பிரகாரம் காரியத்தைப் பண்ணியாக வேண்டும். இப்படி அதிகார ஸ்தானத்திலிருந்து கொண்டு உத்தரவாகப் போடாமல் ஒரு சினேகிதன் நம்மிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னாலும் செய்கிறோம். இங்கே பயம் இல்லை. அன்பாலேயே செய்கிறோம். நமக்கு நல்லதையே நினைக்கும் சிநேகிதன் அவன் என்ற நம்பிக்கை இருப்பதால் செய்கிறோம். இப்படி நம்மிடம் நல்ல மனஸ் உள்ள சிநேகிதனுக்கு 'ஸுஹ்ருத்' என்று பெயர். அதனால் நம் ஸகா மாதிரியான ஸ்தானத்திலிருந்து கொண்டு நம்மை நல்ல காரியத்தில் ஏவுவது "ஸுஹ்ருத் ஸம்ஹிதை". இதை விடவும் சுலபமாகக் காரியத்தைச் சாதித்துத் தர வல்லது எது என்றால் பத்தினியின் பிரிய வசனம்தான். யஜமானனின் உத்தரவு பாரமாக இருக்கிறது என்றால், அதையே சிநேகிதன் சொல்லும்போது லகுவாகிறது. இதைவிடவும் லேசாகி விடும், அதையே பத்தினி சொல்கிறபோது. இது மாதிரி ரம்யமாக ஒன்றைச் சொல்லியே செய்யப் பண்ணுவது 'காந்தா ஸம்மிதை' எனப்படும். காந்தா என்றால் பத்தினி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
வேதம் பிரபு ஸம்மிதை, புராணங்கள் ஸுஹ்ருத் ஸம்மிதை, காவியங்கள் காந்தா ஸம்மிதை என்று சொல்வதுண்டு.
யத் வேதாத் ப்ரபு ஸம்மிதாத் அதிகதம் சப்த ப்ராமாணாத் சிரம்
யத் ச அர்த்த ப்ரவணாத் புராண வசனாதிஷ்டம் ஸுஹ்ருத் ஸம்மிதாத்|
காந்தா ஸம்மிதயா யயா ஸரஸதாம் ஆபாத்ய காவ்யச்ரியா
கர்த்தவ்யே குதுகீ புதோ விரசிதஸ் தஸ்யை ஸ்ப்ருஹாம் குர்மஹே||
(வித்யாநாதரின் "பிரதாபருத்ரீயம்"-ச்லோ.8)


"இப்படிச் செய். அப்படிச் செய்" என்று மட்டும் வேதம் சொல்கிறது. ஏன் என்று காரணம் சொல்லாது. காரணம் கேட்டாலே நாம் வேதத்தை அவமரியாதை பண்ணுகிறோம் என்று வேறு சொல்கிறார்கள்! புராணம் என்ன பண்ணுகிறது? "அப்பா, இப்படி செய்வதால் இந்த நண்மை உண்டாகிறது. வேறு தினுசில் செய்வதால் இம்மாதிரியான கெடுதல் உண்டாகிறது" - என்று கதை மூலம் காரணம் சொல்கிறது. காரணம் சொல்வது மட்டும் புராணத்தின் விசேஷமில்லை. அந்தக் காரணத்தை நமக்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிற கதைகளின் மூலமாகச் சொல்லி நாம் அதை விரும்பிக் கேட்கும்படி பண்ணுவதே புராணத்தின் விசேஷம். 'ஹரிச்சந்திரன் இப்படித்தான் செய்தான். நளன் இப்படித்தான் செய்தான். இன்னும் இன்னின்ன பெரியவர்கள் இப்படியிப்படிச் செய்தார்கள். அதனால்தான் நடுவிலே அவர்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள் வந்தாலும், கடைசியில் பரம க்ஷேமமும், இன்றைக்கு நாமும் இன்னம் லோகம் உள்ளளவும் ஜனங்கள் அவர்களை மரியாதை பண்ணும்படியான சாச்வத கீர்த்தியும் உண்டாயிற்று. இதற்கு மாறாக ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன், துரியோதனன் போன்றவர்கள் செய்தார்கள். தாற்காலிமாக அவர்கள் பெரிய ஸ்தானத்தைப் பெற்று ஸந்தோஷம் அடைந்தாலும், கடைசியில் நாசமாகி, உலகம் உள்ளளவும் அபகீர்த்திக்கு ஆளாகியிருக்கிறார்கள்' என்று எடுத்துக்காட்டி நம்மை நல்லவற்றில் தூண்டுகிறது; கெட்டவற்றிலிருந்து தடுக்கிறது. வாஸ்தவத்தில் நடந்த கதைகளைத்தான் புராணம் சொல்கிறது. ஸுஹ்ருத்தான சினேகிதனும் உண்மைக்கு மாறாகப் பேசாமலேதான், ஆனாலும் நம் மனஸ் ஏற்கிற விதத்தில் நல்லதைச் சொல்வான்.


காவியம் என்ன செய்கிறது? கவி என்ன செய்கிறான்? அவன் யதார்த்த உண்மையிலே தன் கற்பனையையும் நிறைய கூட்டிக் கொள்கிறான். கல்பனா சக்தியாலேயே கதைகளைக்கட்டி விடுகிறான். ஒன்றை மிகைபடச் சொல்கிறான், இன்னொன்றை குறைபடச் சொல்கிறான். வேறொரு விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்கிறான் (கூறியது கூறல்) . இதை எல்லாம் செய்வதற்கு அவனுக்கு 'ரைட்' கொடுத்திருக்கிறது. யதார்த்தத்துக்கு கண், காது, மூக்கு வைத்து ஜோடனை பண்ணி அனைவரும் ரசிக்கும்படியாகச் செய்வதே கவியின் காரியம். ஸுஹ்ருத் (நண்பன்) போல் உள்ளதை உள்ளபடி மட்டும் சொல்லாமல், புருஷன் நல்ல வழியில் போக வேண்டுமென்பதற்காகக் காந்தாவானவள் கூட்டியும், குறைத்தும், மாற்றியும் கூடப் பேசி அவனுக்கு ஹிதமாக இருக்கும்படியாக 'நைஸ்' பண்ணி விஷயங்களைச் சொல்லி அவனை சரி பண்ணுவள் என்பது ஐதிஹ்யம். இந்தக் காந்தாவின் ஸ்தானத்தில் காவியமும், பிரபுவின் ஸ்தானத்தில் வேதமும், இரண்டிற்கும் நடுவான ஸுஹ்ருத்தின் ஸ்தானத்தில் புராணங்களும் இருந்து கொண்டு நமக்கு தர்மங்களைச் சொல்கின்றன.