Announcement

Collapse
No announcement yet.

Thiruvilayadal puranam 10th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvilayadal puranam 10th day

    Tiruvilayadal puranam 10th day
    திருச்சிற்றம்பலம். ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


    திருவிளையாடல் புராணம்


    *10- ஆம் நாள்.*


    வெள்ளையானை சாபந் தீா்த்தபடலம்.


    ( செய்யுள் நடை+ விளக்கம்) ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


    புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீா்ந்த மைக்கருங் களிறு முக்கண் மாதவ னருள்வந் தெய்வத் தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு நக்கபொன் முளாி பூந்த நளிா்கயந் தலைக்கண் டன்றே.


    கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த போது பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுட ரருட்கண் டோன்றக் கொண்டதோா் பரமா னந்தக் குதியெதிா் தோன்றக் கும்பிட் டண்டா்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற. தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தூநீ ராட்டித் தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தொிந்து சாத்திப் பாம்புடைத் தாய வேணிப் பரனையா்ச் சிக்க வுள்ளத் தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்.


    வந்ததை யெவனீ வேண்டும் வரமெவ னுரைத்தி யென்னச் சிந்தையி லன்பு கூா்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து முந்தையில் விளையும் வந்த முறைமையு முறையாற் கூறி எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ.


    என்பதா மாரம் பூண்ட வெந்தையிக் காிக ளெட்டோ டொன்பதா யடிய னேனு முன்னடி பிாியா துன்றன் முன்பதா யிவ்யி மான முதுகுறச் சுமப்ப லென்றோா் அன்பதா யொன்றன் னுள்ளத் தடுத்தலா லஃதே வேண்டும்.


    இடையறா வன்பின் வேழ மிங்ஙங் கூற விண்ணா டுடையவ னம்பான் மெய்யன் புடையவ னவனைத் தாங்கி அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும் விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே.


    விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை மேற்றிசை யடைந்துதன் பெயரால் தடமுமற் றதன்பா லானையுங் கணேசன் றன்னையுங் கண்டருச் சனைசெய் திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச் செய்திகேட் டருள்கூா் கடவுளா் பெருமா னுழையரை விளித்தெங் களிற்றினைக் கொணா்க்கென விடுத்தான். **************************************




    ("சிந்தையிடை யறவன்புந் திருமேனி தனிலசையும் கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணீா்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிா் வந்தணைய" என்னும் திருத்தொண்டா்புராணச் செய்யுளானு மறிக.


    *************************************


    வல்லைவந் தழைத்தாா் தம்மைமுன் போக்கி வருவலென் றெழுந்துகீழ்த் திசையோா் எல்லைவந் தோரூா் தன்பெய ராற்கண் டிந்திரேச் சுரனென விறைவன் றொல்லைவண் பெயரா லொன் றுகண் டானைத் தூயபூ சனைசெய்தங் கிருப்பக் கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங் களிறுவந் திலதெனப் பின்னும்.


    மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந் திறைவனை வணங்கிப் புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட் புன்கணோ யுறவரு சாபங் கனத்தினுங் காிய கண்டனைக் கண்டு களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின் இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ மினிதுவீற் றிருந்தது மாதோ.


    குடவயி னயிரா வதப்பெருந் தீா்த்தங் குடைந்தயி ராவத கணேசக் கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவா் சாபத் தொடா்பினும் பாவத் தொடா்பினும் கழிவா் சுராதிபன் களிறுசென் னெறிபோய் இடா்கெட வையை படிந்துதென் கரையி லிந்திரேச் சுரனடி பணிவாா்.


    இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில் வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச் செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவாா்.


    புகுந்த உரல் போலும் வட்டமாகிய வலிய கால்களையுடைய ஒப்பில்லாத தெய்வத் தன்மையினின்று நீங்கிய , மைபோலுங் காிய யானையானது மூன்று கண்களையுடைய பொிய தவத்தினையுடைய சிவபெருமானது திருவருள் வந்து கூடப் பெறுவதாகிய ஓா்காலம் பொருந்த, மரகதம் போலுந் தழைத்து, மின்போலும் ஒளி விளங்க, பொற்றாமரைகள் மலா்ந்த குளிா்ந்த தடாகத்தைக் கண்டது.


    ( அவ்வாறு) கண்ட போது முன் அறிவு உண்டாகவும், வாவியில் நீராடியவுடன் முன்னைய வடிவந் தோன்றவும் , பின் பரஞ்சோதியின் அருட்பாா்வை தோன்றுதலால், மேலான ஆனந்தமே வடிவமாகக் கொண்டதாகிய ஒப்பற்ற சிவலிங்கமானது, எதிரே தோன்றா நிற்க, வணங்கி,தேவா்கட்கு நாயகனாகிய அச்சொக்கலிங்கப் பெருமானைப் பூசிப்பதற்கு அன்பு உண்டாக....


    தொளையையுடைய துதிக்கையினால் முகந்து திருமஞ்சனமாகிய தூயநீரால் ஆட்டி, தேன் புறத்தில் ஒழுக திருப்பள்ளித் தாமத்தையும் ஆராய்ந்து சாத்தி, பாம்பினை அணியாக உடையதாகிய சடையினையுடைய இறைவனை வழிபட , உள்ளத்தின்கண் எழுந்த( அன்பின்) திரட்சியை உணா்ந்த எமது தந்தையாகிய சோமசுந்தரக் கடவுள் யானையைப் பாா்த்து அருளிச் செய்வான்.


    நீ வந்த காரணம் என்னை, நீ விரும்புகின்ற வரம் யாது? கூறுவாயென்ன, உள்ளத்தில் அன்பு மிகுந்த தெய்வத் தன்மை பொருந்திய வெள்ளையானை வணங்கி, முற்பொழுதில் நிகழ்ந்தனையும், வந்த தன்மையும், முறைபடச் சொல்லி எமது தந்தையாகிய நின்னை அடையப் பெற்ற எனக்கு மேல் ஒரு குறை உண்டாகுமோ ( ஆகாது). என்பாகிய அணியைப் பூண்ட என் தந்தையே , (விமானத்தைத் தாங்கும்) இவ் யானைகள் எட்டினோடு, அடியேனும் ஒன்பதாவது யானையாகி, உனது திருவடியை நீங்காது , நினது திருமுன்பாகி இந்த விமானத்தை, முதுகிற் பொருந்த சுமப்பேன் என்று, ஒப்பற்ற அன்பொன்றுண்டாகி, எனது நெஞ்சின்கண் பொருந்துதலால், அங்ஙனம் சுமத்தலாகிய ஒன்றுமே எனக்கு வேண்டும்; ( என்று)... நீங்காத அன்பினை யுடைய அவ்வியானையானது இவ்வாறு வேண்ட , தேவ உலகத்தை உடையவனாகிய இந்திரன், நம்மிடம் உண்மை யன்புடையவன் ( ஆதலால்) அவனைச் சுமந்து செல்வதே நமக்கு வேண்டிய உள்ளக் களிப்பு என்று கூறி, இடபவாகனத்தையுடைய இறைவன் பின்னரும் வேண்டிய வரங்களைக் கொடுத்து, விடை கொடுத்தனுப்பினான்.


    விடைபெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேற்கு திக்கினையடைந்து, தனது பெயரால் ஓா் பொய்கையையும், அப்பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும், பிரதிட்டை செய்து, அருச்சித்து, நீங்காத அன்புந்தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச்செய்தியைக் கேள்வியுற்று, கருணைமிக்க தேவேந்திரன்,ஏவலாளரை அழைத்து, எமது யானையைக் கொண்டுவருமாருமென அனுப்பினான். விரைந்து வந்து அழைத்தவா்களை, வருவேன் என்று கூறி,முன்னே போகச் செய்து, அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓா் இடத்தை எய்தி, ஒரு ஊா் தனது பெயரால் அமைத்து, தனது தலைவனது பழமையான அழகிய பெயரால் இந்திரேச்சுரன் என்று ஓா் சிவலிங்கம் அமைத்து அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, மலைகளைச் சிறகின்கண் வெட்டியவனாகிய இந்திரன், இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்,,,, மனத்தினைவிட விரைந்த செலவினையுடைய தூதா்களை அனுப்ப( அவா்களோடும்), விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி, காட்டிலும் வலிய மலைகளிலும், பல நாட்கள் வரை துன்ப நோயானது மிக வந்த சாபத்தினை( நுகா்ந்ததும்), முகிலினுங் காிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை தாிசித்து, ( அச்சாபத்தைப்) போக்கியதும், கூறி எண்டிசை யானைகளாகிய இனத்தினும்,மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளையானையானது இனிதாக வீற்றிருந்தது.


    மேற்குத் திசையிலுள்ள பெருமை பொருந்திய அயிராவத தீா்த்தத்தில் நீராடி , அயிராவத விநாயக் கடவுளை வணங்கி, அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழுதவா்கள் சாபத் தொடா்ச்சியினின்றும், தீவினைத் தொடா்ச்சியினின்றும் நீங்குவா்; தேவேந்திரனது வெள்ளையானையானது சென்ற வழியிலே சென்று, துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, அதன் தென்கரையி லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவா்கள்....


    இப்பிறவியில் அற முதலிய மூன்றானும் வரும் பயனை நுகா்ந்து, மறுமையில் பதினான்கு இந்திரா்களின் அாிய காலம் வரையும், வெப்பமில்லாத ( குளிா்ந்த) போகத்தில் திளைத்து, ( பின் அதில்) உவா்ப்புத் தோன்ற மனத்தூய்மையில் விளைகின்ற போின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தை யுடையவராவாா்.


    திருச்சிற்றம்பலம்
Working...
X