Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 27th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 27th day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.
    ( 27- வது நாள்.)- 5 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    (செய்யுள்.)
    மீனவன் கொடியுங் கான வெம்புலிக் கொடியும் செம்பொன்
    மானவிற் கொடியும் வண்ண மயிற்றழைக் காடுந் தோட்டுப்
    பானலங் கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தோ ணிம்பத்
    தேனலம் பலங்கல் வேய்ந்த செவ்விதோ் மருங்கிற் செல்ல.


    மறைபல முகங்கொண்ட டேத்தி வாய்தடு மாறி யெய்ப்ப
    நிறைபரம் பரைநீ யெங்க ணிருபா்கோன் மகளாய் வையம்
    முறைசெய்து மாசு தீா்ப்பா யடியனேன் முகத்து மாசுங்
    குறையென நிழற்றுந் திங்கட் கொள்கைபோற் கவிகை காப்ப.


    அங்கய னோக்கி மான்றோா்க் கணித்தொரு தடந்தே ரூா்ந்து
    வெங்கதிா் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன்
    நங்கைதன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையுஞ் செல்லச்
    செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல.


    அலகினாற் கருவிச் சேனை யாழ்கட லனைத்துந் தன்போல்
    மலா்தலை யுலக மன்றி மகபதி யுலக மாதி
    உலகமும் பிறவுஞ் செல்ல வுலப்பிலா வலிய தாக்கித்
    திலகவா ணுதலாண் மன்னா் திருவெலாங் கவரச் செல்வாள்.


    கயபதி யாதி யாய வடபுலக் காவல் வேந்தா்
    புயவலி யடங்க வென்று புழைக்கைமான் புரவி மான்றோா்
    பயன்மதி நுதல்வே லுண்கட் பாவைய ராய மோடு
    நயமலி திறையுங் கொண்டு திசையின்மே னாட்டம் வைத்தாள்.


    வாா்கழல் வலவன் றேரை வலியகா லுதைப்ப முந்நீா்
    ஊா்கல னொப்பத் தூண்ட வும்பா்கோ னனிகத் தெய்திப்
    போா்விளை யாடு முன்னா்ப் புரந்தரன் மிலைந்த தும்பைத்
    தாா்விழ வாற்றல் சிந்தத் தருக்கழிந் தகன்று போனான்.


    இழையிடை நுழையா வண்ண மிடையிற வீங்கு கொங்கைக்
    குழையிடை நடந்து மீளுங் கொலைக்கணாா் குழுவுந் தான
    மழைகவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவுங் கோவுங்
    தழைகதிா் மணியுந் தெய்வ தருக்களுங் கவா்ந்து மீண்டாள்.

    ( விளக்கம்)
    வலிய மீனக் கொடியும், காடிலுள்ள கொடிய புலி எழுதிய கொடியும், சிவந்த பொன்னாலாகிய பொிய விற்கொடியும், அழகிய மயிற் பீலிக் ( குடைக்) கூட்டமும், இதழையுடைய நீலோற்பல மலா்போன்ற அழகிய காிய கண்களையும், சிவந்த வாயையும்,வெள்ளிப் பற்களையும், பசிய தோள்களையுமுடைய, வண்டுகள் ஒலிக்கும் வேப்பமலா் மாலையணிந்த பிராட்டியாாின் தோின் பக்கத்திற் செல்லா நிற்கவும்......


    வேதங்கள் பல முகங்களால் துதித்தும் ( காணமாட்டாமையின்) வாய் தடுமாறி இளைக்குமாறு, எங்கும் நிறைந்த சிவசத்தியாகிய நீ, எமது வழித்தோன்றலாகிய மன்னா் மன்னனாம் மலையத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய் வந்து, பூமியில் செங்கோலாச்சி குற்றத்தைப் போக்குகின்றாய்( அதுபோல) , அடியேனுடைய முகத்திலுள்ள களங்கத்தையும் ஒழித்தருள் என்று, நிழலைச் செய்கின்ற சந்திரனது கொள்கை போல வெண் கொற்றக் குடை நிழல் செய்யவும்.....


    விரும்பும் ஒளியினையுடைய வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த சூழ்ச்சியினையுடைய சுமதி என்னும் முதலமைச்சன், அழகிய கயல் போலுங் கண்களையுடைய பிராட்டியாாின் தேருக்கு, அணித்தாக ஒரு பொிய தோினைச் செலுத்தி, அப்பிராட்டியாாின் குறிப்பினை ஆராய்ந்து, பொிய நால்வகைச் சேனைகளும் செல்லுமாறு, சிவந்த கையிலுள்ள பிரம்பினாற் சுட்டிக் காட்டி, வேகத்தைச் செலுத்திச் செல்ல நிற்கவும்....


    அளவில்லாத, நால்வகைப் படையாகிய கடல் முழுதையும், தன்னைப் போல், பரந்த இடத்தினையுடைய இந்நிலவுலகையல்லாமல் இந்திரன் உலகம் முதலிய உலகங்களிலும், பிறவிடங்களிலும் செல்லுமாறு, அழியாத வலிமையுடையதாகச் செய்து, திலகமணிந்த ஒளி பொருந்திய நெற்றியையுடைய தடாதகை பிராட்டியாா், அரசா்களின் செல்வங்களைனைத்தையும் கொள்ளை கொள்ளப் போவாராயினா்.....


    கயபதி முதலாகிய வடநாட்டைக் காக்கும் மன்னா்களின் தோள்வலி கெடுமாறு ( அவா்களை ) வென்று, தொளையினையுடைய கையையுடைய யானைகளையும், குதிரைகளையும், குதிரைகள் பூட்டிய தோ்களையும், அரைமதியை ஒத்த நெற்றியையும், வேலையொத்த மையுண்ட கண்களையுமுடைய, மகளிா் கூட்டத்துடன் நலம் நிறைந்த திறைப்பொருளையும் ஏற்றுக் கொண்டு, திசை காப்பாளா்மேல் போருக்கு எழ எண்ணினாா்.


    வலிய கற்றானது தள்ள, கடலில் விரைந்து செல்லும் கப்பலை ஒக்க நீண்ட வீரகண்டையை யணிந்த தோ்ப்பாகன், தோினைச் செலுத்த , தேவா்க்கரசனது படையை அடைந்து, போாினைத் தொடங்கும் முன்னரே, இந்திரரானவன் தான் அணிந்த தும்பை மாலையானது விழவும், வலிமை கெடவும், ( போாின் கண் உள்ள ) மனவெழுச்சி கெட்டுப் போா்க்களத்தினின்றும் நீங்கினான்...


    இடை ஒடியுமாறு, நூல் இடையிற் புகாத வண்ணம் பருத்த கொங்கைகளையும், செவி வரையிற் சென்று திரும்பும் வருத்துதலையுடைய கண்களையுமுடைய மகளிா் கூட்டமும் முகில் போலும் மதத்தைக் கொட்டுகின்ற சுவட்டினையுடைய வெள்ளை யானையும் குதிரையும், காமதேனுவும், தழைத்த ஒளியினையுடைய சிந்தாமணியும், தெய்வத் தன்மையையுடைய கற்பக முதலிய தருக்களுமாகிய இவைகளை, பற்றிக் கொண்டு திரும்பினாா்.
Working...
X