நீரிழிவு நோய்: இதனை சர்க்கரை நோய் என்பர். நமது உடலில் சீரணத்திற்கு பங்கு வகிக்கும் முக்கிய உறுப்புகளில் கணையமும் ஒன்று. 6 அங்குல நீளத்திற்கு இரைப்பைக்கு முன்பு வயிற்றுக்கு குறுக்காக அமைந்திருக்கும் உறுப்பே கணையம், கணையத்துள் லங்கர் ஹாரன்ஸ் திட்டுகள் அமைந்துள்ளது, அதிலுள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றது, இன்சுலின் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது, இன்சுலின் அளவு குறையும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுவே நோய் நிலையாகும். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையான அளவைவிட அதிகரிப்பதையே சர்க்கரை நோய் அல்லது மதுமேகம் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம். இந்நோய் உலகத்தில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் உள்ளது. எனினும் இந்தியா போன்ற சில நாடுகளில் மிக அதிக அளவு பாதிப்பு உள்ளது.இந்தியாவில் ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் அதிகளவு பாதிப்பு உள்ளது. வட மாநில மக்கள் இந்த அளவுக்கு பாதிக்கபடுவதில்லை. 35 வயதுக்கு மேல் 8 முதல் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கின்றது. பொதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உணவுக்கு முன்பு 80 முதல் 120/1 லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருப்பது நலம். உணவு உண்ட பின்பு ஒன்றரை மணி நேரத்தில் 160 வரை வந்து பின்பு இரண்டரை மணி நேரத்தில் இயல்பான நிலையை எட்டவில்லை எனில், சர்க்கரை நோய் தாக்கம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் சர்க்கரை நோயாளி தானா? என்பதை உறுதி செய்ய முடியும். உடலில் அத்தனை பிரதான உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும் ஒரே நோய் நீரிழிவு நோய்.


சர்க்கரை நோய் வருவதற்கு பற்பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமானதாக கீழ்கண்ட காரணங்கள் பிரதானபட்டவையாக உள்ளன.
1. பரம்பரையாக இப்பாதிப்பு வரலாம்.
2. தாய், தந்தை இருவரும் பாதிக்கப்பட்டு இருப்பின் குழந்தைக்கு வரமிக அதிக வாய்ப்புகள் உண்டு.
3. தாய், தந்தை இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு இருப்பின் 50 சதவீதம் வரவாய்ப்பு உள்ளது.
4. அதிகளவு இனிப்பு சுவை உணவுகளை அன்றாட வாழ்வில் உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
5. அதிகம் மசாலா சேரும் உணவுகளை விரும்பி உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
6. அதிக எண்ணெய் உணவுவகைகளை உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
7. துரித உணவுகளை விரும்பி உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
8. மன அழுத்தம் காரணமாக வரலாம்.
9. மன நோயிற்கு மருத்துவம் செய்யும் போது அதன் பின்விளைவாக வரலாம்.
10. சில மருந்துகளை பயன்படுத்தும் போது அதன் பக்கவிளைவாக வரலாம்.
11. குழந்தை பேறு காலத்தில் வரலாம். குழந்தை பேறு பெற்றபின் சரியாகிவிடலாம்.
12. குழந்தைகளுக்கும் வரலாம்.
13. எவ்வித காரணமும் இன்றி வரலாம்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
1. சிறுநீர் அடிக்கடி போதல்
2. அதிக தாகம்
3. அதிக பசி
4. அதிக சோர்வு
5. கண்பார்வை குறைதல்
6. உடல் இளைத்தல்
7. உடல் அரிப்பு
8. கை, கால், விரல்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு
9. இல்லற வாழ்வில் இன்பம் குறைதல்
10. கை, கால், மூட்டிகளில் வலி
11. புண் ஏற்பட்டால் ஆறாத்தன்மை
12. பிறப்புறுப்பு மற்றும் மலத்துவாரத்தில் அரிப்பு
13. பிறப்புறுப்பு மற்றும் மலத்துவாரத்திற்கு அருகில் வீக்கம்
14. தோள்மூட்டு வலி
15. கால், பாதங்களில் எரிச்சல்
16. கைகளில் எரிச்சல்
17. உதடு, நாக்கு உலர்ந்து போதல்
18. உடலில் வறட்சி
19. மன உளைச்சல்
20. படபடப்பு தன்மை உடலில் எப்போதும் காணப்படுதல்
சர்க்கரை நோய்க்கான மருந்துவம்:
சித்தமருத்துவம் மதுமேக நோய்க்கு பல வகையான மருந்துகளை கூறுகின்றது, எனினும் அதில் எளிய மருந்துகளை கீழே தரப்பட்டுள்ளது. மதுமேகத்தை பொறுத்தவரையில் சிகிச்சை வகையினை 3 வகையானதாக பிரிக்கலாம்.
  • உணவில் கட்டுப்பாடு
  • உடற்பயிற்சி
  • நீரிழிவு நோய்க்கான மருந்துகள்
குளிர்பானங்களை தவிர்த்தல்
இனிப்புகளை தவிர்த்தல்
அதிக மசாலா, துரித உணவை தவிர்த்தல்


அ) உணவு முறைகள்:
1. இனிப்பு சுவையுடைய உணவு பொருட்களை அறவே தவிர்த்தல்
2. தேன், கருப்புக்கட்டி போன்ற இயற்கை இனிப்பு உணவுகளையும் தவிர்த்தல்
3. அதிக மசாலா சேரும் உணவுபொருட்களை தவிர்த்தல் அல்லது அளவு குறைவாக உண்ணுதல்
4. எண்ணெய் சேரும் உணவுகளை குறைத்து உண்ணுதல்
5. நெய், வெண்ணெய், டால்டா சேரும் பதார்த்தங்களை தவிர்த்தல்
6. குளிர்பானங்களை தவிர்த்தல். பெப்ஸி, கோகோ கோலா, மிராண்டா, 7அப் போன்ற அனைத்துவகை குளிர்பானங்களையும் தவிர்த்தல்.
7. காபி,டீ போன்றவற்றில் சர்க்கரை நீக்கி அருந்தவும்.
8. பால் பொருட்களை முறையாக பயன்படுத்தவும்.
9. கிழங்குகளை உணவில் தவிர்க்கவும். உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சேம்பு கிழங்கு,கருணை கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும்.
10. காரட்,பீட்ரூட் போன்றவற்றை தவிர்க்கவும்.
11. பழங்களை அதிகம் தவிர்க்கவும்.மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் இவற்றை தவிர்க்கவும்.
12. கொய்யா,ஆப்பிள்,பப்பாளி இவைகளை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
13. ஐஸ் கிரீம்,சாக்லேட்,ஸ்வீட்ஸ்,பால் ஸ்வீட்ஸ் போன்றவைகளை அறவே தவிர்க்கவும்.
14. எண்ணெய் அதிகம் சேரும் கொழுப்பு பொருட்களை குறைவாக உணவில் சேர்க்கவும்.
15. அன்றாட உணவில் கீரை அதிகம் சேர்க்கவும்.குறிப்பாக சிறு கீரை,அரைக்கீரை,முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை இவைகளை அதிகம் சேர்க்கவும்.
16. கேழ்வரகு, சோளம், சாமை அரிசி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
17. புரத சத்துப் பொருட்களான கொண்டைக் கடலை, சிறு பயறு,மொச்சை, தட்டாம் பயறு,கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்க்கவும். 18.கத்தரிக்காய்,புடலங்காய்,முருங்கைக்காய்,அவரைக்காய்,வெள்ளரிக்காய்,சுரைக்காய்,தடியங்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ்,பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
19. கோதுமை சேரும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் எளிதில் பசிக்காது.
20. உணவின் அளவை குறைத்து உணவு உண்ணும் வேளையை அதிகமாக மாற்றிக் கொள்ளவும். தினமும் மூன்று வேளை உண்ணுவதை நான்கு வேளையாக மாற்றி உணவு அளவை குறைத்துக் கொள்ளவும்.
ஆ) உடற்பயிற்சி:
மது மேகத்தை கட்டுப்பாட்டில் வைப்பது நடைபயிற்சி ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிட நடைபயிற்சி அவசியம். நடைபயிற்சி செய்வதால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாறி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.மேலும் யோகாசனங்கள் இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க துணை செய்கிறது.
  1. சர்வாங்காசனம்
  2. ஹலாசனம்
  3. உட்டியாகு
  4. நெளலி
  5. பத்மாசனம்
போன்ற ஆசனங்கள் கணையத்தின் பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவுகின்றது. எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது மது மேக நோயின் பாதிப்பை குறைக்கும்.
இ) மருந்துகள்:
மது மேக நோயிற்கு பல்வேறு மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருந்தாலும் அவைகளில் எளிய அதே சமயம் நிறைந்த குணம் தரும் மருந்துகள் இங்கு கொடுத்துள்ளோம்.
1. ஆவாரம் கொழுந்து, கல்மதம், கொன்றை வேர் இவைகள் வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து மோரில் அரைத்து காலை,மாலை இருவேளை 20 நாட்கள் கொடுக்க மது மேகம் குறையும்.
2. ஆவாரை கொழுந்து,ஆவாரம் பூ,ஆவாரை இலை,கீழாநெல்லி,நெல்லி வற்றல் ஆகிய அனைத்தையும் 5 கிராம் அளவு எடுத்து மோர் விட்டு நன்கு அரைத்து பின்பு உலர்த்தி அதை அரை கிராம் வீதம் காலை,மாலை மோரில் கலந்து கொடுத்தால் நீரிழிவு நோய் குறையும்.
3. கடலழிஞ்சில், பூவரசு, மஞ்சணத்தி,ஆவாரை இவைகளின் பட்டைகளை ஓரளவு எடுத்து இடித்து அதன் பொடிகளை அரை கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை இருவேளை உண்ண நீரிழிவு குறையும்.
4. வேப்பம் பட்டை,பேயப்புடல்சீந்தில் இந்த மூன்றையும் ஒரே எடை எடுத்து இடித்துப் பொடி செய்து ஒரு கிராம் வீதம் வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
5. ஆவாரம் பட்டை,வேப்பம் பட்டை,மருதம் பட்டை இவைகளை நன்கு இடித்து அதன் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
6. இலவங்கம், பங்கம்பாளை, மரமஞ்சள் இம்மூன்றினையும் ஒரே எடை எடுத்து பொடித்து ஒரு கிராம் அளவு காலை,மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மது மேகம் குறையும்.
7. மருதம் பட்டை,நாவல் கொட்டை சமஅளவு எடுத்து பொடித்து ஒரு கிராம் வீதம் காலை,மாலை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
8. ஆவாரைத் தூள், மஞ்சள்,பொன்முசுட்டை வேர்,இவற்றை ஒரே அளவு சேர்த்து இடித்து ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொள்ள மது மேகம் குறையும்.
9. அதிவிடயம், அரச வித்து, ஆலம் வித்து மூன்றையும் எடுத்து பொடித்து ஒரு கிராம் அளவு வெந்நீரில் மூன்று வேளை உட்கொள்ள மது மேகம் குறையும்.
10. வெள்ளி லோத்திரம், அகில்கட்டை,சந்தனம் இவைகள் மூன்றையும் ஒரே அளவாய் சேர்த்து பொடித்து அரை கிராம் வீதம் காலை,மாலை இரு வேளை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
11. விலாமிச்சு வேர்,வெள்ளி லோத்திரம்அத்திப்பட்டை மூன்றையும் ஒரே அளவாய் சேர்த்து பொடித்து அரை கிராம் வீதம் காலை,மாலை இரு வேளை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
12. மர மஞ்சள், கருவேலம்பிசின் வகைக்கு 15 கிராம் எடுத்து அதனுடன் மஞ்சள் 7 கிராம்,ஆவாரைப் பூ 7 கிராம் சேர்த்து பொடி செய்து அதனை ஆவியில் வேகவைத்து அப்பொடியை உலர்த்தி காய வைத்து அதனில் ஒரு கிராம் காலை,மாலை,இருவேளை வெந்நீரில் அருந்த மது மேகம் குறையும்.
13. சாதிக்காய்,சாதிபத்திரி,கோரோசனை,காசிக்கட்டி 5 கிராம் எடுத்து பொடித்து ஒரு கிராம் இருவேளையாக காலை,மாலை வெந்நீரில் கொடுக்க மது மேகம் குறையும்.
14. கிராம்பு,சாதிக்காய்,சாதிபத்திரி,அபின் இவைகளை ஒரே எடையாய் கொண்டு கால் கிராம் இரவில் பாலில் கொடுக்க மது மேகம் குறையும்.
15. கருஞ்சீரகம்,சீரகம்,ஓமம்,குரோசாணி ஓமம்,திப்பிலி,கிராம்பு ஒரே அளவாய் எடுத்து பொடித்து கால் கிராம் வீதம் காலை,இரவு ஆகிய இருவேளை வெந்நீரில் கொடுக்க மது மேகம் குறையும்.
16. கடுக்காய்,நெல்லிக்காய்,வேலம்பிசின் இவைகளை சேர்த்து ஒரே எடையாய் எடுத்து பொடித்து ஒரு கிராம் வீதம் காலை,மாலை,வெந்நீரில் சாப்பிட மது மேகம் குறையும்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends