திருவிடைக்கழி
இறைவர் திருப்பெயர்
: காமேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : காமேசுவரி.
தல மரம் : குரா, மகிழம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.
வழிபட்டோர் : முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர்
ஆகியோர்
திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா.
தல வரலாறு
தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
சிறப்புக்கள்
இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் சேந்தனார், திருவிசைப்பா பாடியுள்ளார்; இவர் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது.
இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் பொதுவாக - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றது.
தற்போது முருகன் தலமாகப் பிறசித்தி பெற்றுள்ளது.
சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயருமுண்டு.
தெய்வயானைக்குத் தனிச் சந்நிதி; தவக்கோல தரிசனம்.
சேந்தனார் முத்தி பெற்ற தலம்.
திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
கோயிலுள் நுழைந்தால், முன்பண்டபத்தில் திருப்புகழ், வேல் விருத்தம் முதலியவை பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.
இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.
தல மரமாகிய "குராமரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.
சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.
இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம்.
கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும், வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக நிலங்களை அளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன.
அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends