Announcement

Collapse
No announcement yet.

Hooring small boy's innocence- Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Hooring small boy's innocence- Periyavaa

    Hooring small boy's innocence- Periyavaa


    ஸார்…..ஸார்….
    மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பூர்ணகும்ப மரியாதைகளை ஏற்று, ஆஸிர்வதித்து விட்டு வருவார்.


    அதே மாதிரி, ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார் . பலர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படி வேண்டுவதையும், பெரியவா அவர்கள் இல்லங்களுக்கு சென்று திரும்புவதையும், பெரியவாளோடேயே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் பார்த்துக் கொண்டே வந்தான். பத்து வயஸுக்குள்தான் இருந்தான்.


    குழந்தைதானே! குறுகுறுவென்று எல்லாவற்றையும் கவனித்தான். பூர்ணகும்பம் குடுத்து பெரியவாளை அழைக்கும் வஸதி கூட இல்லாமல், வறுமையே துணையாக வளர்ந்து கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஆடைகளிலேயே தெரிந்தது.
    ஆனால், பெரிய பெரிய மனிதர்களும், ஆசார ஶீலர்களும் பெரியவாளை வரவேற்பதைக் கண்டதும், அந்தக் குழந்தைக்கு வேறு எதைப் பற்றியும் சிந்தனை செல்லவில்லை. அவனுடைய ஒரே ஆசை…..பெரியவாளை, தானும் தன் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே!


    அவனுக்கு பெரியவாளை எப்படி கூப்பிட வேண்டும் என்பது கூட தெரியவில்லை! பெரியவா, பெரிய மடாதிபதி! தானோ….குட்டியூண்டு பையன், கிழிஸல் நிக்கரும், பட்டன் கூட இல்லாத சட்டையும் போட்டுக் கொண்டு திரியறோம்! தான் அழைத்தால் வருவாரா? ம்ஹும்! அதெல்லாம் அந்த களங்கமில்லா குட்டி மனஸில் கிஞ்சித்தும் உதிக்கவில்லை! …..
    அவன் தன் பாட்டுக்கு கர்மயோகியாக, தன்னாலான முயற்சியை, தனக்குத் தெரிந்த பாணியில், செய்ய ஆரம்பித்தான்!
    எப்படி?


    "ஸார், எங்காத்துக்கு வாங்கோ ! ஸார், எங்காத்துக்கும் வாங்கோ!.."


    அடிக்கொருதரம் பெரியவாளுக்கு அருகாக சென்று அழைத்துக்கொண்டிருந்தான்.
    பெரியவாளோடு கூட நடந்து கொண்டிருந்தவர்கள், அவனை "பெரியவாளுக்கு தெரியாமல்'!! விரட்டி கொண்டிருந்தனர்.
    "டேய்!…ஷ்ஷ்…போடா அந்தண்ட ….."


    சிலர் அந்தக் குழந்தையின் தோளையும், கையையும் பிடித்து பின்னுக்குத் தள்ளினார்கள். நாம் எல்லாருமே வெளியில் தெரியும் உருவத்தைத்தானே பார்ப்போம்?


    ஆனால், அவனோ விடுவதாக இல்லை. பின்னால் தள்ளப்பட்டதும், தள்ளப்பட்ட அதே வேகத்தில், வேற பக்கமாக பத்தடிக்கு ஒரு முறை பெரியவாளை நெருங்கி,


    "ஸார்…ஸார்…..எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் "


    பெரியவாளை அவன் "ஸார்….ஸார்" என்று அழைத்துகொண்டிருந்தது எல்லாருக்கும் வேடிக்கையாகவும் இருந்தது.
    ஆச்சு! இதோ….அவனுடைய வீடு இருக்கும் தெருமுனை வந்துவிட்டது.! பெரியவா வலப்புறமா திரும்பிவிட போகிறாரே என்று அவனுக்கு ஒரே பரிதவிப்பு!


    "ஸார்…….ஸார்….அந்தப் பக்கம் போய்டாதீங்கோ! ஸார். ….இந்த பக்கமா வாங்கோ……எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ…ஸார்"


    கண்ணீரோடு கெஞ்சினான். நமக்கே மனஸ் உலுக்கும் போது, மஹாமாதாவுக்கு…?
    பெரியவா புன்முறுவலுடன்,


    "கண்ணா…..ஸார் ஆம் [வீடு] எங்கயிருக்குன்னு விஜாரிச்சுண்டு…. அந்த பக்கமா போ…."
    என்று கூறியதும், அந்தக் குழந்தைக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை!


    "இந்தோ! இந்தப் பக்கந்தான்!…இப்டி வாங்கோ…ஸார்…"


    முன்னால் வழி காட்டிக் கொண்டு, ஓடினான். அந்த குழந்தையின் வீடு பக்கத்து தெருவில் தான் இருந்தது.
    வீடு வந்ததும், "விர்"ரென்று உள்ளே ஓடினான்…..


    "அம்மா!…யார் வந்திருக்கா பாரு! ஸார் வந்திருக்கார்..ம்மா!…"


    புண்டரீகனுக்காக அவன் வீட்டு வாஸலில் அவன் குடுத்த "செங்கல் "ஆஸனத்தின் மேல் காலங்காலமாக நிற்பது பகவானுக்கு ஒன்றும் புதுஸு இல்லையே!! இன்றும் அந்தக் குழந்தையின் ஆசைக்காக, அவன் வீட்டு வாஸலில் நின்றான் நம் கருணாமூர்த்தி!


    பெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், அத்தனை பேரும் வெளியே ஓடி வந்து, குளித்தோ, குளிக்காமலோ, படார் படாரென்று பெரியவா பாதங்களில் விழுந்தனர்.


    இந்த குட்டிப் பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள்! பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாத அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்கு மட்டுமே வஸப்பட்டு, இதோ! 'ஸார் ' நிற்கிறார்! காஷாயமும், தண்டமும், பாதக் குறடும், பக்தர் குழாமுமாக!


    அவளால் நினைத்தாவது பார்க்க முடியுமா? இப்படியொரு எளிமையான தர்ஶனத்தை? அதுவும் அவளுடைய பொத்தல் குடிஸை வாஸலில்! ஏழைப்பங்காளன்! நினைத்தாலே மனஸை என்னவோ செய்கிறது. கண்கள் கண்ணீரை கொட்டுவதை நிறுத்த முடியாது.
Working...
X