Announcement

Collapse
No announcement yet.

Idaikadar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Idaikadar sidhar

    Idaikadar sidhar


    நவக்கிரக நாயகர்களை மாற்றியமைத்த திருவண்ணாமலை இடைக்காடர்

    மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடு என்ற ஊர்தான் இடைக்காடர் பிறந்த ஊர் என்று கூறுவர். தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடு என்ற ஊரில் இச்சித்தர் வாழ்ந்தவர் என்பதால் இடைக்காடர் என்று அழைக்கப்பட்டார் எனக் கூறுவோறும் உண்டு.
    நவக்கிரகங்கள்தாம் தத்தம் நிலைப் பாடுகளால் மனிதர்களை ஆட்டி வைப்பவையாகும். அத்தகைய நவக் கிரகங்களை ஆட்டி வைத்தவரான இச்சித்தர், தேவர் இட்ட சாபம் காரணமாக இடையர்களின் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்து எழுத்தறிவு இல்லாது ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்.
    இவர் தமது ஊருக்கு அருகே உள்ள மலைச்சரிவுப் பகுதிக்கு நாள்தோறும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வார். அப்பகுதியில் அவற்றை மேய விட்டுவிட்டு அங்கிருந்து ஒரு மரத்தடியில் தனது சிந்தனையை ஒடுக்கி சிவயோக நிலையில் தனது கொம்பினை ஊன்றி நின்றுவிடுவார். அப்போது உயிர் எங்கோ பறந்துகொண்டிருக்கும்.
    ஒரு நாள் இவ்வாறு மெய்மறந்த நிலையில் இவர் நின்றிருந்த சமயத்தில் வான் வழியே சென்று கொண்டிருந்த நவநாத சித்தர் ஒருவர் இவரை கண்டார். 'எழித்தறிவு அற்ற இந்த மானிடன் சிவத்தில் ஒடுங்கி நிற்கின்றானே! இது எப்படி இவனால் முடிந்தது?' என்று ஐயுற்று அந்த சித்தர் விண்ணிலிருந்து பூவுலகுக்கு இறங்கிவந்து இடைக்காடரிடம், மகனே அங்கு எதனை நீ காண்கிறாய்? எது உன்னிடம் பேசிக் கொண்டுள்ளது? உன்னுடன் உறவாடுவது எது? என்று பலவாறாகக் கேட்டார்.
    நவநாத சித்தர் இவ்வாறு கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார், இடைக்காடர். தம் எதிரே நின்ற சித்தரைக் கண்டதும் இடைக்காடர் பேருவகை கொண்டார். ஐயனே! தாங்களா? தாங்களா என் முன் தோன்றியுள்ளீர்கள்? ஐயோ…. கால் கடுக்க தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்களே சற்று இங்கே அமருங்கள்….. அமருங்கள் என்று தன்னருகே இருந்த தர்ப்பைப்புல் விரிப்பைப் போட்டு அந்தச் சித்தர் பெருமானை இடைக்காடர் உபசரித்தார். பின் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடு ஒன்றைப் பிடித்து வந்து அதன் பாலினைக் கறந்து சித்தரிடம் அளித்து இடைக்காடர் பேரானந்தம் அடைந்தார். பின் சித்தர் பெருமானும் மனம் களித்து இடைக்காடர் தமக்கு அளித்த ஆட்டுப்பாலை வாங்கிப் பருகியதுடன் அவருக்கு மெய்ஞ்ஞான பாலை வழங்கிடத் திருவுள்ளம் கொண்டார். அந்நொடி வரையில் எழுத்தறிவு இல்லாதிருந்த இடைக்காடர் மெய்யறிவு என்னும் ஒளி வெள்ளம் தம்முள் பாயக் கண்டார். பேரானந்தப் அவர் இருந்தார். வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என அனைத்தையும் விரைவில் தெளிவுறக் கற்றுத் தேர்ந்தார்.
    இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர் என்றும், தாம் சமாதி கொள்ளப்போகும் முன்பாக புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக இடைக் காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார்
    ஒரு முறை தம் ஜோதிட ஆய்வின் மூலம் சிறிது காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்படும் என்பதை இடைக்காடர் உணர்ந்தார். முன்னேற்பாடாகத் தம்முடைய ஆடுகளுக்கு எக்காலத்தும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்ன கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்ற தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுத்து சுவரில் உராய்ந்தன. அதனால் மண் சுவரில் இருந்து உதிர்ந்த குறுவரகு தானியத்தைக் காய்ச்சி உண்டு வாழ்ந்தார். இவ்வாறு வரவிருக்கும் பஞ்சத்தை எதிர்கொள்ள இடைக்காடர் தம்மைத் தயார் படுத்திக் கொண்டார்.
    எதிர்பார்த்தபடியே பஞ்சமும் வந்தது. உண்ண உணவும், அருந்த நீரும் இல்லாது மக்கள் மடிந்தனர். இதனால் ஊர்கள் பாழ்பட்டுப் போயின. நாடே மக்கள் நடமாட்டம் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது. ஆனால் இடைக்காடர் மட்டும் என்றும்போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தார்.
    இதைக் கண்டு நவக்கிரக நாயகர்கள் வியந்தனர். இது என்ன விந்தை நாடே பஞ்சத்தால் பாழ்பட்டுப் போய் உள்ளது. இடைக்காடர் மட்டும் எவ்வாறு வழக்கம்போல் வாழ்ந்து வருகிறார்? என்று புரியாமல் தவித்தனர். இதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று கிரக நாயகர்கள் ஒன்பது பேரும் ஒன்றாக கூடி இடைக்காடரின் குடிசைக்கு வந்தனர்.
    நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் போரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இது விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இந்த ஏழையிடம் என்ன இருக்கப் போகிறது வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. இவை எளிய உணவு என்று இகழாதீர்கள். என் உயிரைக் கலந்து நான் தருகிறேன். இவ்வுணவை உண்டு சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள். பிறகு பேசுவோம் என்று தம் குடிசைக்கு வந்த நவக்கிரக நாயகர்களை உபசரித்தார்.
    சித்தரான இடைக்காடரின் வேண்டுதலை மறுக்க முடியாது நவக்கிரக நாயகர்களும் அவர் அளித்த வரகு ரொட்டிகளை உண்டு ஆட்டுப்பாலைப் பருகினார். எருக்கிலைச் சத்து நிறைந்த பால் என்பதால் அதை அருந்தியதும் நவக்கிரக நாயகர்கள் மயங்கி விழுந்தனர். கிரக நாயகர்கள் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டதும் இடைக்காடர் அவை யாவும் எந்தெந்த இடத்தில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்.
    உடனே வானில் கருமேகங்கள் திரண்டு இருண்டது. மழை பொழிந்தது. வறண்ட பூமி குளிர்ந்தது. ஆறு, குளம், குட்டைகள் என யாவும் நிரம்பி வழிந்தன. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் இடம் மாறி அமைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். நொடியில் அவர்களுக்கு இது சித்தர் செய்த அற்புதம் என்பதை உணர்ந்தனர். நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கிய இடைக்காடரின் நுண்ணறிவை மெச்சிய அவர்கள் அவர் வேண்டிய வரங்களை அளித்து விடைபெற்றுச் சென்றனர்.
    இதனால் இடைக்காடரின் புகழ் பாரெங்கும் பரவியது. அவரைத் தரிசிக்கவும், உபதேசம் பெறவும் உலகில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பெருந்திரளாக வந்து கூடினர்.
    ஒரு முறை திருமாலை வழிபடுவோர்க்கு ஓர் ஐயம் உண்டானது. திருமால் பத்து அவதாரம் எடுத்துள்ளாரே இதில் எந்த அவதாரத்தை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்று ஆலோசித்தனர். இதற்கான விடை காணாது தவித்த திருமாலின் பக்தர்கள் சித்தரிடம் இதற்கான விடையைப் பெற்றிடலாம் எனக் கருதி இடைக்காடரிடம் வந்து கேட்டனர். ஆனால் சித்தர் பெருமானாகிய இடைக்காடரோ, ஏழை இடையன் இளிச்சவாயன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
    தங்கள் ஐயப்பாட்டுக்கு விடை தேடி வந்த திருமால் பக்தர்களுக்கு சித்தரின் பதில் சட்டெனப் புரியவில்லை. நீண்ட நேரம் யோசித்தனர். பின் இடையன் என்றால் கிருஷ்ணர், இளிச்சவாயன் என்றால் நரசிம்மர், ஏழை என்றால் சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் என்று முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ணபகவான், நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ இராமபிரான் ஆகிய மூவரையும் வழிபட்டால் விரைவில் இறையருள் கிட்டும் என்பதை உணர்ந்து தெளிந்தனர். தங்களது ஐயப் பாட்டை எளிதில் தீர்த்தருளிய இடைக் காடரின் நுண்ணறிவைப் போற்றி மகிழ்ந்தனர்
Working...
X