Announcement

Collapse
No announcement yet.

Anger of Sivasankaral - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Anger of Sivasankaral - Periyavaa

    Courtesy;Sri Subramaniyan Srinivasan


    • வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (21-8-2007)


    "சிவசங்கரரின் சினம்!" (நன்றி: மகாபெரியவாள் தரிசன அனுபவங்கள்)
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அந்த பரமேஸ்வர அவதாரமாக பரபிரம்ம ரிஷியாம் சுகமுனிவரின் மேன்மையோடு திகழ்ந்தும் நம்மிடையே ஒரு சாதாரண மடாதிபதியாக காட்டிக் கொள்வதிலேயே மகானின் தன்னடக்கம் எல்லையை கடந்து நிற்கிறது.
    ஆனாலும் பக்தர்களை நல்வழிப்படுத்த தன் அபார கருணையை மறைத்து மிக மெல்லியதாக கடுமையை வெளிப்படுத்திய சம்பவங்கள் சில உண்டு.
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பரமேஸ்வரருக்கு அருகிலிருந்து கைங்கர்ய பாக்யம் செய்ய கொடுத்து வைத்தவர்களுக்குள் ஸ்ரீமடம் ஸ்ரீ பாலு விசேஷமாக குறிப்பிடத்தக்கவராவார். அவர் சொல்லும் ஒரு அனுபவமிது.
    சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் சிலர் மறைமுகமாக கொடூரமான தவறுகளைச் செய்வார்கள். இவர்களை எதிர்த்து பேசவோ சுட்டிக்காட்டவோ சாமானியர்களுக்கு முடியாது. அப்படியே சொன்னாலும் அதை ஏற்றுக் கொண்டு திருந்த அவர் மனம் இசையப் போவதில்லை.
    ஆனால் நடமாடும் தெய்வத்திற்கு அந்த பெரியவரின் சமூக அந்தஸ்த்தைப் பற்றியெல்லாம் பொருட்படுத்த அவசியமில்லை. ஏனென்றால் யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால் தன்னை நாடி வந்த அந்த பிரமுகரின் நல்லொழுக்கத்தில் மட்டுமே மகானின் நாட்டம் என்பது தெளிவு.
    சிலரை தன் ஆழமான துளைக்கும் பார்வையினாலேயே திருத்துவதுண்டு. சிலரையோ நேரடியாக கண்டித்தே தீரவேண்டுமென்று தன் காருண்யத்தை வெளிகாட்டாமல் கடுமை காட்டுவார்.
    ஸ்ரீ பெரியவா ஒருநாள் பல்லக்கில் அமர்ந்து தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க, எப்போதும் போல பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லோரோடும் புன்முறுவலோடு பேசிக் கொண்டும் அருளாசி வழங்கிக் கொண்டுமிருந்த ஆனந்த தெய்வம் ஒரு பக்தர் வரிசையில் தன்முன் வந்தவுடன் பல்லக்கின் கதவை ஏனோ சடாலென்று சாத்தி விட்டார்.
    அந்த குறிப்பிட்ட பக்தருக்கு மட்டுமில்லாமல் பின்னால் நின்ற மற்ற பக்தர்களுக்கும் ஏமாற்றம். அவர் வேண்டுமானால் தவறு செய்திருக்கலாம் அதற்கு தண்டனையாக அவருக்கு தரிசனம் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். அவரால் மற்றவர்க்கும் தண்டனையா!
    அந்த சமயத்தில் ஒரு அணுக்கத் தொண்டரின் நெருங்கிய உறவினர் தரிசனத்திற்கு வந்ததால், தொண்டர் சற்றே உரிமையுடன் பல்லக்கின் கதவை திறந்தார். ஆனால் ஸ்ரீ பெரியவா உறுதியாக கதவை மூடிக்கொண்டு விட்டார்.
    இப்படி ஒரு முப்பது நிமிடங்களாக அங்கு ஒரு ஏமாற்றமும் ஏக்கமும் கலந்த சூழலாக எல்லோரும் தரிசனத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை!
    காருண்யரின் கருணை கட்டுப்படாமல் வெளிப்பட கதவு திறக்கலாயிற்று.
    மறுபடியும் அந்த பக்தரின் முறைவந்தபோது, சாந்தம் தவழும் சந்திரசேகர பிரானின் திருமுகம் ரௌத்திரத்தினால் சிவந்தது. ஒரு காவித்துணியை தன் கழுத்தில் சுற்றிக் கொண்டார். நீலகண்டரின் கண்டமும் கோபத்தால் சிவத்திருந்ததோ என்னவோ! இந்த காட்சியோடு யாரோ ஒருவருடன் பேசுவதுபோல் முகத்த திருப்பி வைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவா நொந்துக் கொண்டார்.
    "இந்த மனிதர் இப்படித்தான் மத்தவா கழுத்திலே துண்டை போட்டு வட்டி பணத்துக்காக பிழியறார். ஏழைகள் இவரிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இவரோ வட்டிக்கு வட்டி என்று கழுத்தை நெரிக்கிறார். எத்தனை ஏழைகள் இவராலே கஷ்டப்படறா தெரியுமா…தான் செளகர்யமாக இருக்கும்போது ஏழைகளை இம்சை படுத்தறது மகா அதர்மம்…கொள்ளை வட்டி வாங்குவது என்ன நியாயம்.
    அதனால்தான் சில மதங்களிலே சுராபானம் செய்வது, வட்டி வாங்குவது எல்லாம் மகா பாதகம்னு சொல்லியிருக்கு.
    மேலே மேலே அதர்மம் பண்ணிட்டு பாவமன்னிப்புக்கு இங்கே வந்தால் அந்த கேஸெல்லாம் பரிசீலனைக்கு வராது"
    இப்படி மனவருந்தி பேசிவிட்டு கதவை திரும்பவும் மூடிக்கொண்டார் மாமுனிவர்!
    தெய்வமே சினம் கொண்டதில் அவர் தன் பாதக செயலை உணர்ந்துவிட்டிருக்க வேண்டும். தேம்பி தேம்பி அழுதார். பக்தர் இப்படி அழுததில் அங்கிருந்த ஒரு கைங்கர்யம் செய்பவர் ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டார்.
    "எல்லோரும் பெரியவா மாதிரி தர்ம சொரூபமாக இருக்க முடியாது. ஜனங்கள் அப்பப்போ தவறு செய்யறது சகஜம். பெரியவா கருணை காட்டணும்" என்றவுடன் தயாநிதியாய் பெரியவா குளிர்ந்து கதவை திறந்து பக்தரை கூப்பிட்டு பல்லக்கின் அருகே உட்கார சொன்னார்.
    "வட்டிக்கு ஆசைப்பட்டு பல பேரிடம் பணத்தைக் கொடுத்து தினமும் நாயாய் அலைவதை நிறுத்திக்கோ. பேங்கில் டெபாசிட் பண்ணு. அதில் கிடைக்கிற வட்டியே போதும். உனக்கோ வயசாயிடுத்து. அடுத்ததா நல்ல ஜென்மா கிடைக்கிற வழியை பாரு. ஜபம், பூஜை, தியானம், கோயில்னு காலத்தை கழிக்கணும்" என்கிறார் கனிவாக.
    இதுவரை யார் யாரோ எடுத்துரைத்தும் தன் தவறை திருத்திக் கொள்ளாமல் விட்டதால்தானோ என்னவோ அந்த வட்டிகாரருக்கு சாட்சாத் தெய்வமே இத்தனை கடுமையாக தன்னை காட்டிக்கொண்டு கண்டிக்க வேண்டியதாகிவிட்டது போலும். அந்த அளவில் அப்பக்தர் கொடுத்து வைத்தவரே.
    உருகி அழுதபடி அவர் நெடுஞ்சான் கிடையாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளெனும் பரமேஸ்வரரை நமஸ்கரித்தபோது அந்த கருணை தெய்வம் அதை ஏற்றுக் கொண்டது.
    "என் அக்ஞானம் தீர்ந்தது ஐயனே!" என்று தழுதழுக்க அவர் மனம் மாறிய குணவானாய் கன்னங்களில் போட்டுக் கொண்டார்.
    இதமான சொடுக்கு
    மகா பாதகம் என்று கருதப்படும் வட்டி வாங்கி ஏழைகளை இம்சிப்பது போன்ற குற்றங்களுக்கு தன் சினத்தை வெளிப்படுத்தும் ஸ்ரீ பெரியவா இயலாமையால் எளியோர் செய்யும் சிறு குற்றங்களை இதமாக சுட்டிக்காட்டும் பாங்கே அலாதியானதாகும்.
    ஆவணி மாத வெள்ளிக்கிழமை, அன்று வரலட்சுமி விரதம், வழக்கம்போல ஸ்ரீ மகா பெரியவா பூஜை செய்து கொண்டிருந்தார். திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்துவிட்டது. அலங்காரம் ஆகி அர்ச்சனைகள் நடந்தாயிற்று.
    அடுத்து தூப, தீப-நைவேத்யம்.
    தேங்காய்களை உடைத்து வைக்க வேண்டும். ஆனால் வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை காணவில்லை பூஜை தட்டில் கைங்கர்யம் செய்பவர் அதிர்ந்துபோனார். உடனடியாக ஐந்தாறு தேங்காய்கள் வேண்டுமே! சட்டென்று சமையற்கட்டிற்கு ஓடினார். அங்கே இருந்த தேங்காய்களை அங்கேயே உடைத்துக் கொண்டு பறந்து பூஜைக் கட்டுக்கு வந்தார். அப்படியும் நைவேத்தியம் செய்ய ஓரிரு நிமிடங்கள் தாமதமாகி ஸ்ரீ பெரியவா காத்திருக்க நேர்ந்தது.
    பூஜைகள் முடியும் வரை ஸ்ரீ பெரியவா எதையும் கேட்கவில்லை.
    ஸ்ரீ பெரியவா தேங்காய் தாமதமாக வந்ததுபற்றி யாரிடமும் கேட்கவில்லை. பிக்ஷைக்கும் போகவில்லை. மேனேஜரை கூப்பிடச் சொன்னார். ஏதோ சூறாவளி வீசப் போகிறது என்று பயந்தபடி அவர் பெரியவா முன் வந்து பவ்யமாக நின்றார்.
    தேங்காய் தாமதமான விஷயம் மேனேஜரையும் எட்டியிருந்ததில் ஸ்ரீ பெரியவா இது பற்றி கடுமையாக எதையோ கேட்கக் கூடுமென்று பயத்தில் மேனேஜருக்கு படபடத்தது.
    "இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமோன்னோ" ஸ்ரீ பெரியவா இதமாக கேட்க ஆரம்பித்தார்.
    "வ…வ…வரலட்சுமி விரதம்" மேனேஜருக்கு தடுமாற்றம்.
    "உங்க ஆத்திலே பூஜை பண்றதுண்டா?"
    "உண்டு"
    "தாழம்பு, பழங்கள், தேங்காய் எல்லாம் வாங்குவாயா?"
    "வாங்குவேன்"
    "உன் கிட்டே காசு இருக்கு. விலைக்கு வாங்கமுடியும். காசு இல்லாதவா என்ன பண்ணுவா"
    மேனேஜர் பதில் சொல்லவில்லை.
    "இதபாரு…மடத்து சிப்பந்திகளெல்லாம் ஏழைபாழைங்க…சொற்ப சம்பளம் தான்…விலை கொடுத்து தேங்காய் பழமெல்லாம் வாங்க முடியாது. அதனாலே இனிமே வரலட்சுமி விரதம், பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமின்னு பண்டிகைக்கெல்லாம் தேங்காய், பழம், காய்கறிகள், சங்கராந்தின்னா கரும்பு, இஞ்சி மஞ்ச கொத்து எல்லாம் மடத்திலே கைங்கர்யம் செய்றவாளுக்கு வாங்கி கொடுக்கணும்".
    "ஆக்ஞை" என்று வணங்கியபடி மேனேஜர் சொன்னார்.
    "இல்லேன்னா சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்கு வைக்கிற சாமான்கள் மாயமா மறைஞ்சு போயிண்டிருக்கும்"
    யாரும் எதையும் மறைக்கமுடியாத எல்லா அசைவுகளையும் அறிந்த ஈசனாய் ஸ்ரீ பெரியவா காயம் தெரியாதபடி சுளீரென்று போட்ட இதமான சொடுக்கு அங்கிருந்த குற்றவாளியான அந்த நபரையும் உடனே திருத்தித்தானே இருக்கக்கூடும்.
    ஒரு தெய்வ ரகசியம்
    செல்லம்மா பாட்டி எனும் ஸ்ரீ பெரியவாளின் பூரண பக்தைக்கு ஸ்ரீ பெரியவாளெனும் ஈஸ்வரரிடம் ஒரு தனி உரிமையும் இருந்தது.
    நவராத்திரி பூஜை முடித்து தான் பூஜை செய்த புவனேஸ்வரி விக்ரகத்தோடு விடியற்காலையில் தரிசனத்திற்கு வந்தார் அந்த மூதாட்டி.
    விஸ்வரூப தரிசனத்தின் போது செல்லம்மா பாட்டி கொண்டு வைத்திருந்த புவனேஸ்வரியின் மேல் காமாட்சியாம் காஞ்சி முனிவரின் ஸ்பரிசம் பட்டது.
    பக்தை ஏனோ அதை ஒரு சந்தேகப்பார்வையோடு தரிசிப்பதை மகான் நோட்டமிட்டிருக்க வேண்டும்.
    பாட்டியின் மனதை படிப்பது பரமேஸ்வரருக்கு இயலாத ஒன்றா என்ன?
    "ஏன் அப்படி பாக்கறே? நான் விழுப்போட அம்பாள் விக்ரகத்தை தொட்டுட்டேன்னு தோன்றதோ" ஈசனார் மெலிதாக புன்னகையோடு பக்தையை சீண்டினார்.
    மிக சாதுர்யமாக அதை ஆமோதிப்பதுபோல பக்கத்தையும் ஸ்ரீ பெரியவாளிடம் தனக்கிருந்த சுவாதீனத்தோடு "அப்படித்தான் தோணித்து" என்றாள்.
    "உனக்கு ஒன்னு தெரியுமோ….ராத்திரி ஒன்றரை மணிலேர்ந்து மூணு வரைக்கும் தூங்கலேன்னா விழுப்பில்லேன்னு…நான் அப்ப தூங்கறதில்லே" அபூர்வமான ஒரு ரகசியத்தை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா உதிர்க்க அங்கிருந்த அனைவருக்கும் மெய்சிலிர்த்தது.
    இப்பேற்பட்ட மகாஞானி உருவில் நமக்கெல்லாம் அருள் மழைபொழியும் மகாதேவனை மனதில் ஒரு நொடியேணும் பூர்ண பக்தியோடு நினைத்தாலே போதும்; அது நமக்கு சகல சௌபாக்யங்களை அள்ளிதரும் மார்க்கத்துக்கு அழைத்து செல்வது உறுதியன்றோ!
    – கருணை தொடர்ந்து பெருகும்
    (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)
    ——————————————————————————————————————————————————-
Working...
X