இரும்பை மாகாளம் கோவிலின் தலவரலாறு:


தல புராணம்: கடுவெளி சித்தர்:கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான். தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.


தலப் பெருமை: இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம்.


சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் "மகாகாளநாதர்" என்ற பெயர் பெற்றார்.


திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறையில் மண்டு கங்கை சடையில் கரந்து என்று தொடங்கும் பதிகத்தை இக்கோவிலில் பாடியுள்ளார்.


நன்றி http://shivatemples.com/index_t.php மேலும் தகவல் அறிய:
http://shivatemples.com/tnaadut/tnt31.php

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சைவ சமயத்தின் பெருமைகளை அறிய ஒரு பிறவி போதாது. நம் சமயத்தை நன்கு அறிவோம். பிறர்க்கும் பகிர்ந்திடுவோம்.