Nayagi swamigal & Azhwar songs
Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
திருவடி பெருமை


நாயகி சுவாமிகளும்
ஆழ்வார் பாடல்களும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு


ஓம் நமோ வேங்கடேசாய நம
ஓம் நமோ நாராயணாய நம
ஓம் நமோ லட்சுமி நாராயணாய நம
ஓம் நமோ சத்ய நாராயணாய நம
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம
ஓம் கிருஷ்ணாய நம


இன்றைய சத்சங்கத்தில் நாயகி சுவாமிகள் பற்றி கருத்து பரிமாறலாம் என்று சொன்னார்கள். ஆம் காரணம் இருக்கிறது. இன்று சனவரி 8. நாயகி சுவாமிகள் பிறந்த நாள் முக்தி அடைந்த நாள். அதி அற்புதமான நாள். எனவே நாயகி சுவாமிகள் பற்றியும் இவருடைய சிந்தனையும் ஆழ்வார்களின் சிந்தனையும் எப்படியெல்லாம் ஒத்துப் போகிறது என்பதைப் பற்றியும் நாம் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம்.


நாயகி சுவாமிகள் என்பவர் யார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 19ஆம் நூற்றாண்டில் மதுரையில் அவதரித்த ஒரு அருளாளர் அவர். 1843 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் நாள் பின்னிரவு ஆங்கில முறைப்படி 9 ஆம் நாள் அவர் பிறந்தார். நாம் இன்று சனவரி 8ஆம் நாள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் பிறந்தது சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் மிருக சீரிட நட்சத்தித்தில் பிறந்தார். இவர் பிறந்தது மதுரை மாநகரில் பால்மால் குறுக்குத் தெருவில். பால்மால் என்பது ஒரு ஆங்கிலச் சொல். அந்தப்புரத்துக்குச் செல்லும் பாதை என்று இதற்குப் பொருள். இன்றும் இந்த சாலை வழியாகச் சென்றால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையின் அந்தப்புரப் பகுதிக்குச் செல்ல முடியும். நாயகி சுவாமிகள் பிறந்த கிழமையோ குருவாரம். இதனால் தான் இந்த குருபீடத்தில் இந்த மதுரை ஆன்மீகக் குருவைப் பற்றி நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இவரது இயற்பெயர் இராமபத்திரன்.இவர் சிறுவயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாமல் வேலைக்குப் போன இடத்தில் வேலையில் ஆர்வம் இல்லாமல் - குலத்தொழிலான நெசவுத் தொழிலிலும் ஆர்வம் இல்லாமல் ஏதோ பலத்த சிந்தனையில் இருந்தார். தமது 16 வயதில் பாசத்தைத் தவிர்த்து துன்பக் கடலைத் தாண்டுவதற்காகத் துறவறம் பூண்டார். தென்பரங்குன்றத்தில் ஒரு குகையில் 12 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார். இத்ன் பெயர் குகாசிரமம். இவர் அங்கு தவவாழ்க்கை மேற்கொண்டிப்பது அவருடைய தாய்க்கும் தெரியவில்லை. ஒரு பெண்மணி தென்பரங்குன்றத்தில் வாழும் 18 வயதான ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய தாயாரிடமே அந்த ஞானி பற்றித் தகவல் கூறினாள். தன் மகன் தான் அந்த ஞானி என்பதை அந்தத் தாய் அறியவில்லை. ஞானியைப் பார்த்தார். பசு தனது கன்றைக் கண்டவுடன் குரல் கொடுத்து ஓடுவது போல் ஓடி எல்லோர் முன்னாலும் அந்த ஞானி தனது மகன் என்பதை உறுதி செய்துகொண்டார். வீட்டிற்குத் திரும்பிவரும்படி வற்புறுத்தினார். திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார். அம்மா எனக்குத் திருமணமே வேண்டாம் என மறுத்தார். நான் யார் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இடையூறு தரவேண்டாம் என வேண்டி தாயிடம் திருவோடு வழங்கி துறவுக்கு ஆசிவழங்கும்படி வேண்டினார்.
பின்னர் அங்கிருந்து தனக்கு ஒரு குருவைத் தேடி - அதுவும் முருகப் பெருமானின் கட்டளைப்படி- பரமகுடி அருகே உள்ள பருத்தியூரை அடைந்து அங்கிருந்த நாகலிங்க அடிகளாரிடம் சீடனாகச் சேர்ந்தார். அவரிடம் அட்டாங்க யோகத்தைப் பயின்றார் இராமபத்திரர். பல்லாண்டுகள் பயின்று நாகலிங்க அடிகள் சித்திகளைப் பெற்றார். ஆனால் நமது இராமபத்திரரோ பதினெட்டே நாட்களில் சித்திகள் கைவரப் பெற்றார். சித்த என்றால் வங்காள மொழியில் வெந்தது பக்குவமானது என்று பொருள். அதாவது பதினெட்டு நாட்களில் பக்குவமடைந்தார். நாகலிங்க அடிகளார் இவருக்கு'சதானந்த சித்தர்' எனத் திருநாமமிட்டார். அங்கிருந்து சென்று இராமநாதபுரம் அரசரையும் பின்னர் சிவகங்கை மன்னரையும் கண்டார். பக்தியுடன் வரவேற்று உபசரித்தனர் அந்தக் காலத்தில் சோதித்துப் பார்ப்பார்கள் மன்னர்கள். இவரது புலனடக்கத்தைச் சோதித்து அறிந்து கொண்டனர் மன்னர்கள். பின்னர் பல அதிசயங்களை நிகழ்த்தினார். விரிவுக்கு அஞ்சி சுருக்கிக் கூறுகிறேன். பின்னர் ஆழ்வார்த்திருநகரி எனவும் தென்குருகூர் எனவும் வைணவப் பெருமக்களால் போற்றப்படுகிற இடத்தில் இருந்த ராஜயோகியான வடபத்திர அரையரிடம் வந்தார். சதானந்தஅடிகளார் மாதவராஜயோகியானார். ஒருமுறை திருவரங்கத்தில் நாயகி பாவம் மிகுந்து இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து நடனமாடி மயக்கமடைந்தார். அப்போது திருவரங்கம் திருவரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் இதைக் கண்டு பரவசமடைந்து 'நாயகி' பட்டத்தைச் சூட்டினார். அது முதற்கொண்டு இவர் ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் என அழைக்கப்படுகிறார். ஆண்டாள் நாச்சியார் போலவே வேடமிட்டு இறைவன் திருநாமத்தை கூறிக்கொண்டு நடனமிட்டு தெருக்களில் அற்புதமான கருத்தாழமிக்க பாடல்களைப் பாடி பக்திப் பரவசத்தைப் பரப்பினார். இவர் பாடிய பாடல்கள் மிக இனிமையானவை. பாடல்களில் கண்ணன் பற்றிய செய்திகள் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,
சொக்குதே சொக்குதே கிருஷ்ணன் தோள் அழகில் தோழி
திக்கு வேறில்லை இல்லை சேவடி மலர்கள் வாழி
என்பார். நாயகி பாவம் ஏற்று, நாயகியாகவே மாறி, மஞ்சள் குளித்து சேலை உடுத்தி கண்ணனிடம் கொஞ்சி விளையாடியவர் நடன கோபாலர். உண்ணும் உணவு, பருகும் நீர், காணும் காட்சி எல்லாவற்றிலும் கண்ணனைக் கண்டவர்.
தான் முக்தியடையப் போகும் நாளை முன்கூட்டியே அறிந்து கொண்ட நாயகி சுவாமிகள் காதக்கிணறு என்னுமிடத்தில் தனது பிருந்தாவனம் அமையவேண்டுமென முடிவெடுத்தார். 1914ஆம் ஆண்டு. சனவரி மாதம் 6ஆம் நாள் மார்கழி மாதம் 23ஆம் நாள். அட்டமி திதி. தன் முடிவை எதிர்நோக்கி சுவாசபந்தனம் செய்தார். நவமியும் தசமியும் நகர்ந்தன. அன்ன ஆகாரம் இல்லாமல் சமாதி நிலையில் இருந்தார். வைகுண்ட ஏகாதசி வந்தது. இவரது முடிவை அறிந்து சென்னையிலிருந்து அரிகிருஷ்ணன்என்பவர் வந்தார். அரி வந்துவிட்டார் எனச் சீடர்கள் கூறினார்கள். சமாதியில் இருந்தவரும் கலகல எனச் சிரித்தார். ஆமாம் ஆமாம் அரி வந்துவிட்டார். என்னை அழைக்கிறார். என்றார். அழைக்கின்றான் அரிஎன்றார். வானத்தைப் பார்த்தார். வணங்கினார். 8.1.1914 வியாழக்கிழமை உயிர் பிரிந்தது. 12 மணிக்கு மேல் உயிர் பிரிந்தது. ஆங்கில முறைப்படி 9.1.1914. நட்சத்திரம் மிருகசீரிடம். கிழமை வியாழன். பிறந்தது சனவரி 9. இறந்தது சனவரி 9. பிறந்தது வியாழன். இறந்தது வியாழன். பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம். இறந்த நட்சத்திரம் மிருகசீரிடம். எவ்வளவு அற்புதமான ஒற்றுமை. அருளாளர்களுக்குத் தான் இப்படிப்பட்ட விசித்திரங்கள் உண்மைகளாக மாறும். இப்படியாக இராமபத்திரன் சதானந்த அடிகளாக சைவசித்தராக முதலில் வாழ்ந்தார். பின்னர் நடனகோபால நாயகியாக மாறினார்.
ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் பார்க்கவ முனிவருக்கும் அவரது தவத்தைக் கலைக்க வந்த கனகாங்கி என்ற தேவமங்கைக்கும் பிறந்தவர். இவர் திருமாலின் சக்கரத்தின் அம்சம் ஆவார். பிறக்கும்போது பிண்டமாக இருந்ததால் பெற்றோர் இவரை ஒரு புதரில் எறிந்துவிட்டுச் செல்கின்றனர். சிறிது நேரம் கழித்து அழகிய குழந்தையாக மாறி அழத் தொடங்குகிறது அக்குழந்தை. அப்போது ஜெகநாதப் பெருமாள் இவருக்குக் காட்சி தருகிறார். குழந்தையின் குரலைக் கேட்ட திருவாளன் என்னும் புல் அறுப்பவன் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்கிறான். அப்போது குழந்தை இல்லாத ஒரு முதிய தம்பதியினர் சிறிது பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். குழந்தை அப்பாலைச் சாப்பிடுகிறது. சிறிது நாள் கழித்து அக்குழந்தை மீதமிருக்கும் பாலை அப்பெரியவரைச் சாப்பிடச் சொல்கிறது. அவர் மட்டுமல்ல அவர் மனைவியும் சாப்பிடுகிறார்கள். உடனே அவர்கள் இளமையான தம்பதிகளாக மாறுகிறார்கள். அவ்ர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை தான் கணிகண்ணன்.
ஏழு வயதுக்கு மேல் இயற்கையாக உள்ள இறைச் சிந்தனையால் பல மதங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். அந்தந்த சமய நூல்களைப் படிக்கிறார். இறுதியில் சைவசமயமே சிறந்த சமயம் எனத் தீர்மானிக்கிறார். அப்போது அவருக்கு இடப்படுகிற திவ்விய திருநாமம் தான் சிவவாக்கியர். சிவவாக்கியர் ஒரு புரட்சிச் சித்தர். சித்திகள் பல அடைந்தவர். சிவபெருமானின் அருள் பெற்றவர். 500க்கும் மேறப்ட்ட பாடல்களை அப்போது பாடுகிறார்.
ஆன அஞ்செழுத்திலே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்திலே ஆதியான மூவருமு
ஆன அஞ்செழுத்திலே அகாரமும் மகாரமும்
என்றும்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடி மாண்டு போன மாந்தர்காள்
என்றும்
கருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
என்றும்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்ததை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லிரோ?
என்றும்
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
என்றும்
அந்திமாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவும் ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராமராமராமராம என்னும் நாமமே
என்றும்
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனவிலும் அஃதில்லையே
என்றும்
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
என்றும்
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
என்றும்
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே
என்றும்
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாட மாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டும் உண்ர்கிலீரே
என்றும் பலபல தத்துவங்களை சிவபக்தராக இருந்த நமக்கு உபதேசித்தவர் சிவவாக்கியர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இவர் இருக்கும் இடத்திற்கு வந்து இவரை வாதத்திற்கு அழைத்து வெல்கிறார். தோற்ற சிவவாக்கியர் பேயாழ்வாரைச் சரணடைந்தார். திருமால் பக்தரானார்.


சாக்கியம் கற்றோம்
சமணம் கற்றோம்
சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கட்கரியானைச் சேர்ந்தோம் யாம் என்பார் ஆழ்வார். இறுதியில் தான் புறம்தொழா மாந்தராக மாறினார் திருமழிசை ஆழ்வார்.
சரி இந்த திருமழிசை ஆழ்வார் பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோம். சென்னையில் நாம் வாழ்ந்தாலும் திருமழிசை மிக அருகில் இருந்தாலும் பலர் அங்கு செல்லும் வாய்ப்பினைப் பெறவில்லை. திருமழிசைக்குச் சென்றால் நெடுஞ்சாலை மீது சிவபெருமான் கோவில். அருள்மிகு ஒத்தாண்டவர் திருக்கோவில். மேற்கு நோக்கி ஒரு தெருவில் சென்றால் ஆழ்வார் கோவில். அற்புதமான கோவில். நேரில் சென்று பெருமாளைத் தொழுதால் உங்களை அறியாமலேயே உங்கள் கண்களில் நீர் வரும். அவ்வளவு பக்தியை ஊட்டக் கூடிய கோவில் அது. அது தான் ஜெகன்னாதர் கோவில்.
சரி திருமழிசை ஆழ்வார் கதைக்கே வருவோம். ஒருநாள் காளை வாகனத்தில் சிவபெருமான் பார்வதியுடன் திருமழிசைக்கு வருகிறார். பார்வதி அம்மையார் இப்படி கடும் தவம் செய்யும் இவர் யாரோ என இறைவனிடம் கேட்கிறார். அப்போது இவர் சிவவாக்கியர் இவர் தான். என் அருள் பெற்றவர். இப்போது திருமால் அடியவர் ஆகிவிட்டார். நாம் அவருக்கு தரிசனம் தரலாம் என்று கூறி தரிசனம் தருகிறார்கள். வரம் வேண்டுமானால் கேள் என்று சொல்ல பரமபதம் அருளும்படி கேட்கிறார் திருமழிசை ஆழ்வார். அது தம்மால் முடியாது என்கிறார் சிவபெருமான். அதைத் திருமால் தான் தரமுடியும் எனவும் கூறுகிறார். இதனால் அவமதிக்கிறார் ஆழ்வார். உடனே நெற்றிக் கண்ணைத் திறக்கிறார் சிவபெருமான். கலங்கவில்லை திருமழிசை ஆழ்வார். வலது திருவடியின் பெருவிரலிலில் உள்ள ஒரு கண்ணைத் திறக்கிறார் ஆழ்வார். கடுந்தீ வருகிறது. முக்கண் மூர்த்தி பாராட்டிவிட்டு பக்திசாரர் என்ப் பட்டம் கொடுக்கிறான . இதன் பின்னர் பலர் இவரைச் சோதிக்கிறார்கள். எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறார். பிறகு திருவெஃகாவிற்குச் சென்று தங்குகிறார். கூடவே கணிகண்ணனும் செல்கிறான். அப்போது தலைநரைத்த கிழவியை இளமையாக்குகிறார் ஆழ்வார். அது கேட்டறிந்த மன்னன் அவ்வாறு இளமை வரம் கேட்கிறான் கணிகண்ணனிடம். அவன் முடியாது என்கிறான். ஊரை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். உடன் ஆழ்வாரும் செல்கிறார். கணிகண்ணன் போகின்றான் மணிவண்ணா நீ கிடக்க வேண்டா நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் என்று வேண்டுகிறார். இறைவனும் பாயைச் சுருட்டி இவருடன் செல்கிறார். மன்னன் பயந்துபோய் ஆழ்வாரை வேண்டி திரும்பவம காஞ்சிக்கு வரும்படி வேண்ட கணிண்ணன் போக்கொழிந்தான் மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - நீயும் உன் பைந்நாகப் பாயில் படுத்துக் கொள் என்கிறார்.. இவர் சொன்னபடி எல்லாம் இறைவன் கேட்கிறான். அதனால் தான் காஞ்சியில் வெஃகாவில் உள்ள அந்த இறைவனுக்குப் பெயர்சொன்னவண்ணம் செய்த பெருமாள்.
முதல் மூன்று ஆழ்வார்களும் இவரைச் சந்திக்கிறார்கள். மகிழ்கிறார்கள். இவர் நான்காவது ஆழ்வாராகச் சிறக்கிறார். இவர் படைத்த நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் போன்ற அருமையான பாடல்களை நமக்குத் தந்துள்ளார்.


ஆறு சடைக்ரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து


என்று அருமையாக திருமால் ஒருவனே பரம்பொருள் என்று கூறுவார்.
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா என்று திருமாலைப் போற்றுவார். ஒருகாலத்தில் திருமாலுக்கும் சிவனுக்கும் யார் உயர்ந்தவன் என்ற போட்டி வந்தது. பிரமதேவன் ஆணைப்படி தேவதச்சன் விசுவகர்மா இரண்டு மிகப்பெரிய வில்களைச் செய்கிறான். அதை எடுத்துக் கொண்டு இருவரும் போர் தொடுக்கின்றனர். திருமாலின் அம்பு பட்டு சிவன் ஏந்திய வில் உடைகிறது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜனகன் தந்தையானதேவராதன் என்பவனுக்கு அந்த உடைந்த வில்லைக் கொடுக்கிறார் சிவன். அதைத்தான் இராமர் நாண் ஏற்றி சீதையை மணக்கிறார். திருமாலோ சிவனை வென்ற தன் வில்லை ரிசீக முனிவரிடம் கொடுக்கிறார். ரிசீக முனிவரின் மகன் ஜமதக்னி. அவர் மகன் பரசுராமர். அதைத்தான் சீதையின் திருமணத்திற்குப் பிறகு நாண் ஏற்றி பரசுராமனின் கர்வத்தைக் குலைக்கிறார் இராமர். கண்ணன் அவதாரத்திலும் வாணாசுரனுக்காக ஈசன் கண்ணனுடன் போர் தொடுக்க வர முருகன், விநாயகர், ஈசன் எல்லாம் போரில் தோற்று ஓடுகிறார்கள். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கி வாணாசுரனை உயிருடன் விடுகிறார் கண்ணன்.


சைவராக இருந்து வைணவத்தில் சேர்ந்த மற்றொரு மன்னனைப் பற்றி நான் சமீபத்தில் படித்தேன். திருமங்கை ஆழ்வாரின் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். பெரியதிருமொழியில் ஆறாம் திருமொழியில்திருநறையூர் பற்றிய பாடல் தொகுப்பில் பத்துக்கு மேற்பட்ட பாடல்களில் 'கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே எனத் தொடர்ந்து எல்லாப் பாடல்களிலும் வ்ந்தது. அதற்கான விரிவுரையைப் பார்த்தபோது நான் வியந்தேன். கோச்செங்கணான் என்பவன் வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சிவபெருமான் மீது இலைச் சருகு விழுவதைத் தடுக்க சிலந்தி ஒன்று சிவலிங்கம் மேல் வலை பின்னும். தினம் ஒரு யானை வந்து நீரை அபிஷேகம் செய்யும்போது அந்த வலையைக் கலைக்கும். முடிவில் சிலந்தி மடிந்து அடுத்த பிறவியில் சுபதேவர் என்னும் சோழமன்னன் மகனாகப் பிறந்து 73 சிவாலய்ங்களை அதுவும் மாடக் கோவில்கள் என்ற அடுக்குமலைக் கோவில்களைக் கட்டிய சிவபக்தன். பின்னாளில் திருமால் தொண்டில் ஈடுபட்டு திருநறையூரில் பெருமாள் கோவில் கட்டி உள்ளான். இப்படி சைவத்திலும் வைணவத்திலும் அக்காலத்தில் மாறிமாறித் திளைத்தவர்கள் ஏராளம்.

குருபக்திக்கு மிகவும் முன்னுரிமை கொடுத்தவர் நாயகி சுவாமிகள். அன்னையின் மூலம் தான் தந்தை யார் என்று அறிய முடியும். அதுபோல குரு மூலம் தான் இறைவனை நாம் அறிய முடியும். எனவே தான் மாதா பிதா குரு தெய்வம் என நம் முன்னோர்கள் வரிசைப்படுத்தியுள்ளார்கள். நாம் முதலில் வணங்க வேண்டியது நம் அன்னையை. பின்னர் தந்தையை. அதன்பின்னர் குருவை. இறுதியில் தான் இறைவனை வணங்க வேண்டும். முதல் மூவரை புறக்கணித்துவிட்டு இறைவனை நாடினீர்கள் என்றால் எந்தவித பயனும் இல்லை. எனவே தான் தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என மிக அழகாகத் தமிழ் மொழியிலே நம் முன்னோர்கள் நமக்குக் கற்பித்து இருக்கிறார்கள். அப்படியாக தன் தாயின் கையால் திருவோடு வாங்கி துறவறம் மேற்கொண்ட நமது நாயகி சுவாமிகள் குருவை மிகவும் போற்றுகிறார்.


மனமே குருத்தியானம் செய்
சத்குரு தியானம் செய் மனமே
அரி ரூபம் வரும் மனமே
உளம் உருகி அரியை தியானித்தால்
அரி ரூபம் வரும் மனமே
அரி ரூபம் வரும் சத்குரு தியானம் செய்தால்
பிறவாத பேரின்பத்தைப் பெறலாம்
சத்குரு தியானம் மூலம்
என்று நமக்கெல்லாம் மிக அருமையாக உபதேசிக்கிறார் சொளராட்டிர மொழியில்.


குரு த்யான் காரி மொன்னு
தூ சத் குருத்யான் காரி மொன்னு
ஹரி ரூபு அவயி மொன்னு
தியானு ஹால் ஹரி ரூபு அவயி மொன்னு
சத்குரு த்யான் கரேதீஸ் சரிர் சொடி ஜீ பிரி அவ்னாத்தொக் ரீலுவாய்


என்று நச்சென்று கூறுவார். திருமூலர் கூட அப்படித்தானே வலியுறுத்துகிறார்.


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.


இதே கருத்தைத் தான் நமது நாயகி சுவாமிகளும் வலியுறுத்திக் கூறியுள்ளார். நாம் இப்போது குருபீடத்தில் அமர்ந்து இருக்கிறோம். குருவை எப்படி நாம் வணங்க வேண்டும் என்பதை நமக்கு மிக அழகாக நடனகோபால நாயகி சுவாமிகள் கற்றுத் தருகிறார்.
குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கு
வணங்கினால் நாம் செய்த பாபங்கள் எல்லாம் பரிதி முன் பனி போல் மறையும்
திருவடிகளில் வேர் அற்று வீழும் மரம் போல் விழவேண்டும் வணங்க வேண்டும்
நம்மைத் தொட்டுத் தொடரும் முன்வினை நுகர்வினை யாவும் அழியும்
வினைகளைத் தொலைக்க குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கு
என்று நமது குருநாதர் கட்டளையிடுகிறார்.
கடே ஜாட் சொகன் போடி
புள்ளோ கெரே கருமு ஜாய்
பாய்ம்போடி
பாய்ம்பொடேதீஸ் கெரே பாபுனு ஜாய்
என்று மிக அழகாகச் சொல்வார்.


அது மட்டுமல்ல, குருவைப் பணிந்து பக்தி செய்தால் அது வீண்போகாது. உறுதியாகப் பலன் அளிக்கும். குருவினுடைய ஆசியானது நம் முன்னேற்றத்திற்கு அடிகோலும். அடித்தளமாக அமையும்.
குரு பக்தி கெரேத் தெல்லே கோ ஜானா
குருவுஸ அரி மெனி நொம்பி மெல்லேஸ் ரா
பக்தி கெரஸ்தெங்கோ ஏ பார் ரானா
பக்திகரி உபதேஸ் கள்னாஜியேத் ஜெலும் ஜானா


ஆமாம் ஒரு குருவினிடம் அடிபணிந்து அவரிடம் உபதேசம் பெறாவிடில் பிறப்பு-இறப்புச் சுழலிருந்து தப்ப முடியாது என்று அறிவுறுத்துகிறார்.
குருபக்தியே அரிபக்தி. குருபக்தியைப் பற்றிக் கொண்டு இறைவன் மீது உண்மையான பக்தியைக் கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் முக்தி என்னும் வீடுபேறு நமக்குக் கிடைக்கும். திருமழிசை ஆழ்வாரும்,
வீடாக்கும் பெற்றி அறியாது மெய்வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேதமுதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன்
என்பார்.
அதுமட்டுமல்ல
நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் தான் பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்
என்பார்


குருபக்தீஸ் அரி பக்தி தெரி
தெரி நிஜ பக்தி கெரோ
ஸே முக்தி.
என்கிறார் நாயகி சுவாமிகள். குருபக்தி என்று கூறினால் ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தான் நாம் சிறப்பாகக் குறிப்பிட முடி.யும். அப்படிப்பட்ட குருபக்தி. தென்குருகூர் நம்பி சடகோபர் தான் மதுரகவி ஆழ்வாரின் குருநாதர். அவர் தன் குருநாதரையே தெய்வமாகக் கருதியவர். தெய்வத்தைப் பற்றிப் பாடாமல் தன் குருவையே போற்றிப் பாடி திருமாலின் பேரன்பைப் பெற்றவர். மிக அழகாகச் சொல்வார்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
எனவும்,
தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கேஎன்றும் பெருமைபடச் சொல்வார்.


வியாசர் இந்த கலியுகத்தில் கஷ்டங்கள் அணிவகுத்து வந்தாலும் சில நல்ல விஷயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன இந்த கலியுகத்தில். இறைவனை அடைவது மிக எளிது. இறைவனின் நாமத்தைத் கூறி பஜனை செய்தாலே போதும் நமக்கு முக்தி கிடைத்து விடும். ஆனால் முந்தைய யுகங்களில் அப்படி அல்ல. இறைவனை அடைய வேண்டுமா வேள்வி செய்ய வேண்டும் நியமங்கள் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் தானங்கள் தரவேண்டும். கடுமையான தவங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் செய்தால் போதும். இறைவனை எளிதில் அடைந்துவிடலாம். உளம் உருகி இறைவனின் ஆயிரம் நாமங்களை உரக்க இசையோடு சொல்ல வேண்டும். மிக எளிய வழி. நாயகி சுவாமிகள் எப்படி இறைநாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதை நமக்குச் சொல்வார். வெட்கப்படாமல் குரல் ஓங்க உரத்து உச்சரிக்க வேண்டும். முந்தைய யுகங்களில் சத்தம் போடாமல் மனதுக்குள் கூறி தவம் செய்ய வேண்டும். ஆனால் இந்த யுகத்தில உரக்க கூவவேண்டும். கூச்சம் கூடாது. அரிபஜனை செய்ய வேண்டும். தினமும் இறைவன் திருநாமத்தைக் கூறி பஜனை செய்ய வேண்டும் இதுவே இந்த உலகில் மிகச் சிறந்த வழி. அச்சுதா, கோவிந்தா என்று வெட்கத்தை விட்டு உரத்த குரலில் உச்சரிக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுத் தருகிறார் நாயகி சுவாமிகள். வழிகாட்டியதோடு நிற்காமல் அதை அவர் நடைமுறைப்படுத்திக் காட்டினார். நாயகி கோல்த்தில் கையில் தம்புரா வைத்துக்கொண்டு தெருவில் இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஆடிப்பாடி வந்தார். உஞ்சவிருத்தி மூலம் இறைப்புகழைப் பரப்பினார்.
நிச்சு ஸ்ரீஹரி பஜெனெ கேர் மொன்னு
நீ துசுரே வாட் மோட்சிக்
நிச்சு ஸ்ரீஅரி பஜனை கேரி
அச்சுதா கோவிந்தா மெனி
ரெச்சோ செரோ லாஜு சொடி நிகிளி
ஸ்ரீஅரி பஜனை கேரி
என்று சொல்வார். இப்படி இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொலலி மனனம் செய்து பாடுவதால் பிறவித் தளையிலிருந்து விடுபடலாம் என உத்தரவாதம் அளிக்கிறார்.
நடனகோபாலன் நாமம் உச்சரிக்க உச்சரிக்க
நரக வேதனையிலிருந்து மீண்டு செல்லாம்.

To be continued