தட்சிண கயை - பரசுராமர் கோவில்...!


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சுமார் 10 கி மீ தொலைவில் உள்ளது பரசுராமர் க்ஷேத்ரம்.
பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை.

இவரது ஆயுதம் "பரசு' என்பதால் "பரசுராமர்' ஆனார்.

அதை வைத்துதான் கேரளாவை தோற்றுவித்ததாகவும் சொல் உண்டு..

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும்,
திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும்,
திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால்
ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது என்ற ஐதீகம் உள்ளது .
வல்லம்என்றால் "தலை' என்று பொருள்.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் "திருவல்லம்' எனப்பட்டது.
திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் புராணங்களில் சொல்லபடுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


இந்த புராதன கோயில் சீறிபாயும் கரமனை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது.


திருக்கோவிலின் முன்பு 9 பலிப்பீடங்கள் இருக்கிறது.
தர்ப்பணம் முடிந்ததும் நம் முன்னோர்களுக்கு பலிகர்மம் இந்த பீடங்களில் தான் இடப்படும் .
ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் தன் தாய் ஒரு கந்தர்வனை நதியின் நீரில் நிழலாக பார்த்துவிட்டாள் என்பதற்காக, தந்தையின் ஆணைப்படி தாயின் கழுத்தை துண்டித்தார்.
தன் தாய் கற்பு நெறி பிறழாதவள் என்று தெரிந்தும் தந்தை சொல் தட்டாமல் நிறைவேற்றிய தனயன், அதற்கு பிரதி உபகாரமாக தந்தையிடம் பெற்ற வரத்தின் காரணமாக தாயை உயிர்ப்பித்தார்.
தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவரை ஷத்ரிய அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த ஷத்ரிய வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார்.

அதேசமயம் கல்யாணம் பண்ணிய நிலையில் இருக்கும் அரசர்களை ஒரு வருடம் வரையில் கொல்வதில்லை என்று சபதம் கொண்டார்.

இவருக்கு பயந்தே தசரதன் பல மனைவியரை கல்யாணம் பண்ணினார் என்று செவிவழி கிராமத்து கதைகளுண்டு.


இவ்வேளையில், விசுவாமித்திரரின் யாகங்களுக்கு உதவி செய்துவிட்டு மிதிலைக்குச் செல்லும் வழியில் பரசுராமருக்கும் இராமருக்கும் சின்ன யுத்தம் வர, இராமர் வெல்ல, பரசுராமர் அவரது சக்திகளை எல்லாம் இராமருக்கு வழங்கி தவம் இயற்ற சென்று விட்டார்.

அதுவரை சாதாரண இளவரசனான இராமன் அவதாரமாக மாறினார் என்று கேரள கிராமத்து பக்கம் கதையாக கூறுவர்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார்.

ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார்.

அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார்.

பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார்.


பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அப்பொழுது பரசுராமர் அவருக்கு காட்சி கொடுத்து அருளிய புண்ணிய தலம் இது...
பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.

இந்த பீடத்தை பரசுராமரின் சீடரும்,சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார்.

பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது.


பிரம்மா, விஷ்ணு,சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க பள்ளிக்குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, நீண்ட நாள் வாழ்வதற்கு இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடைபெறுகின்றன.
நோயற்ற வாழ்க்கைக்காகவும், நிம்மதியான மனநிலை வேண்டியும், பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜைசெய்கிறார்கள்.

குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.


முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கிறது.
பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார்.
பரமசிவன் கிழக்கு பார்த்த நிலையில்..
பகவதி மற்றும் கணபதி கோயில்கள் இங்கே இருக்கின்றன.


முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்விக்கப்படும் 'பலிதர்ப்பமன்' என்னும் சடங்கை செய்வதற்காக பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.
'கார்க்கிடக வாவு' எனும் நாளின்போது கரமனா ஆற்றில் புனித நீராடியபின் இந்த சடங்கு செய்யப்படுகிறது.
மேலும் இறந்து போனவர்களின் திதி வரும் நேரத்தில் இங்கு வந்து இந்த பலிபூஜை செய்யவும் நிறையப்பேர் வருகிறார்கள்.


காலைல 5 மணிக்கெல்லாம் பூஜையை ஆரம்பித்து விடுகிறார்கள்.
பொறுமையாக மந்திரங்களை சொல்லி, நாம அதை திருப்பி சொல்லி என்னவெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் சொல்லி தருகிறார்கள்.
கடைசியாக நாம் பலிபூஜை முடிந்ததும் அவர்களுக்கு தரக்கூடிய எள்ளு கலந்த உணவு உருண்டையை தலைக்கு மேலே சுமந்து கோயிலின் முன்புறம் உள்ள ஒன்பது பலிபீடங்களில் உணவை உருட்டி சமர்பிக்கவேண்டும்.
ஏராளமான காகங்களும், புறாக்களும் வந்து கொத்தித் தின்பதைக் கண்டு நம் முன்னோர்கள் வந்து உண்பதாகவே ஒரு சந்தோசம்.
நம் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று புண்ணிய நதிகளுக்கு போய் தர்ப்பனம் கொடுப்பது.


மிச்ச உணவை கொண்டுபோய் வெளியே ஓடிக் கொண்டிருக்கும் கரமனை ஆற்றில் விட்டுவிட்டு கை, கால்களை கழுவி திரும்பி பார்க்காமல் நடந்து கோவிலுக்கு செல்லவேண்டும் இல்லை (முடிந்தால் அதிலேயே குளித்து விட்டும்) கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.


மேலும் இந்த ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் திலஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் வடக்கு மூலையில் வண்ணங்களில் ஏராளமான சோப்புப் பெட்டிகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒரு தகடு இருக்கும்.அகால மரணமடைந்தவர்களுக்கு இதன் அருகே ஓடும் கரமனையாற்றின் கரையில், 13 மாதங்கள் தில ஹோமம் செய்து13வது மாதம் அந்த சோப்புப் பெட்டியை பரசுராமரின் பாதங்களில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர்.

இங்கு அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் செய்ய கூடுகின்றனர். அமாவாசை நாளன்று நடுநிசியில் நடக்கும் ஹோமங்களில் மிளகாய், சுக்கு, வசம்பு கலந்த உணவு பலிபூஜைக்கு இடப்படுகிறது.


கோவிலின் அலுவலகம் காலை 4:30 மணிக்கு திறந்து விடுகிறார்கள்.

பலி, திலஹோமம், அர்ச்சனை,ப்ரசாதம் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி டோக்கன். பலி என்றால் இங்கே பித்ரு தர்ப்பணம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நான்கிற்கும் சேர்த்து டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன் வாங்கும் போதே இறந்தவரின் இறந்த திதி (நட்சத்திரம்) கேட்கிறார்கள்.


தெரியாவிட்டால் பகவானின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் வைத்து தர்பணம் செய்கின்றனர்.


கேரள முறைப்படி வேஷ்டி கட்டிக்கொண்டும், சட்டையை கழட்டி கொண்டும்தான் பலிகர்ம பூஜை செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கு அவர்களின் பெயர் சொல்லி ஹோமத்தில் எள்ளு கலந்து தெளிக்கப்படுகிறது.


இந்த திலஹோமம் விஷேசமாக செய்யப்படுகிறது.

பலிகர்மம் காலை 6.30 முதல் 10.00 வரையும்,திலஹோமம் 6.30 முதல் 10.30 வரையும் செய்கிறார்கள்.
ஆடி, தை,மற்றும் மகாளய அமாவாசை நாட்களிலும், மாத அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் இங்கு கூடுகின்றனர்.

பரசுராமர் ஜெயந்தியும் விசேஷமா கொண்டாடப்படுகிறது.
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்கோவில் நடை திறந்திருக்கும்.