Announcement

Collapse
No announcement yet.

Nayagi swamigal & Azhwar songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Nayagi swamigal & Azhwar songs

    Nayagi swamigal & Azhwar songs
    Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
    திருவடி பெருமை


    நாயகி சுவாமிகளும்
    ஆழ்வார் பாடல்களும்
    Continues




    வையம், துரகம், மதகரி, மா, மகுடம், சிவிகை
    பெய்யும் கனகம்,பெருவிலை ஆரம், பிறைமுடித்த
    ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
    செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே


    இந்த பிறவியிலே சிலர் ராஜபோகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தேர், குதிரை, யானை, மணிமுடி, பல்லக்கு, பொற்குவியல், நவமணிமாலைகள் என எல்லா நலன்களும் அவர்களிடம் பொருந்தியிருக்கும். அதற்குக் காரணம் என்னவெனில் சென்ற பிறவியில் அவர்கள் சிறந்த பக்தர்களாக இருந்த மெய்யடியவர்களாக இருந்திருப்பார்கள். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். இது தான் உண்மை.


    நஇல்லாமை சொல்லி, ஒருவர் தம் பால் சென்று, இழிவுபட்டு
    நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
    கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
    செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே


    செல்வரிடத்திலே சென்று நமது வறுமையை எடுத்துச் சொல்லி அவர்களால் இழிவுபடுத்தப்படாமல் இருக்கவேண்டுமா? நாள்தோறும் அபிராமி அம்மையின் திருப்பாதங்களை சரணடைய வேண்டும்? கீழ்மக்களிடம் சென்று இறைஞ்சாமல் இருக்க வேண்டும் எனவும் நல்ல நிலைமையில் என்னைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அன்னையை இறைஞ்ச வேண்டும். அப்படி இறைஞ்சுபவர்கள் அடையும் பயன் என்ன?


    விரவும் புதுமலர் இட்டு, நின்பாத விரைக்கமலம்
    இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
    பரவும் பதமும், அயிராவதமு, பகீரதியும்
    உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே


    அபிராமி அன்னையின் மணமிக்க திருவடித் தாமரைகளை மணம் கொண்ட புத்தம்புதிய மலர்களைக் கொய்து தூவி அருச்சனை செய்தோமேயானால் – அல்லும் பகலும் துதித்தால் – மறுமையிலே தேவர்களும் தொழத்தக்க உயரிய விண்ணுலக இந்திர பதவியையும், அயிராவதம் என்னும் வெள்ளை யானையையும், கங்கையையும், இணையற்ற வல்லமையையும், வச்சிராயுதம் எனும் படைக்கலத்தையும் கற்பகச் சோலையையும் அடைந்து தேவேந்திரனாகவே உயர்வர்.


    சிறக்கும் கமலத் திருவே – நின் சேவடி சென்னி வைக்கத்
    துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
    உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று, அறிவு
    மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும், வருந்தியுமே
    என்கிறார். உடலை விட்டு உயிர் பிரியப் போகும் தருணம் – அறிவு மறைந்து விடும் நேரம் – மோட்சத்தைத் தரும் துணைவரும் நீங்களும் என் முன்னே வந்து திருக்காட்சி வழங்க வேண்டும் என்று வேண்டுகிறார்.


    அருளாளர் மாணிக்கலவாசகர் தான் பாடிய சிவபுராணத்திலே எடுத்த எடுப்பிலேயே


    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தர்ள் வாழ்க
    ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
    தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


    என திருவடிகளையே மிகவும் சிறப்பிக்கிறார்.


    திருவாவடுதுறையிலே திருஞானசம்பந்தர் எப்படிப்பட்ட நிலையிலும் இறைவனின் திருவடியை வணங்குவது குறித்து மிக அருமையாக எடுத்துரைப்பார்.


    இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்
    வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன் கழல் விடுவேன் அல்லன்
    தும்மலோடு அருந்துயர் தோன்றிடுனும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
    கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
    வெந்துயர் தோன்றி ஓர் வெருவுறினும் எந்தாய் உன்னடி அலால் ஏத்தாது என் நா
    வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா
    பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாது என் நா
    பித்தொடு மயங்கி ஓர் பிணிவரினும் அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நா


    கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் காஞ்சியின் குமரகோட்டத்து அருச்சகராகிய காளத்தியப்ப சிவாச்சாரியாரின் புதல்வர். வடமொழியும் தென்மொழியும் கற்றவர். இவர் இயற்றிய கந்தபுராணத்திலே செவ்வேள் மலரடி போற்றி எனவும், 'தய்யதோர் மறைகளாலும் துதிட்டற்கு அரிய செவ்வேள் செய்ய பேரடிகள் வாழ்க எனவும், பன்னிரு தடந்தோள் வள்ளல் பாத பங்கயங்கள் போற்றி எனவும் திருவடிகளைச் சிறப்பிக்கிறார்.


    கச்சியப்ப முனிவர் தனது தணிகைப் புராணத்திலேயும் இருள் வினை துகைத்துச் சேந்த இணை மலர்ப் பாதம் போற்றி எனப் போற்றுகிறார். மயக்கத்தால் வரும் இருவினையையும் மிதித்தலான சிவந்த மலர் போன்ற திருவடிகள் போற்றி என்று பொருள்.
    எல்லப்ப நாவல்ர் தனது திருவிரிஞ்சைப் புராணத்திலே தாளையும் தோளையும் சேர்த்துப் போற்றுகிறார்.
    மலர் சொரிவோம் புகழ்ந்திடுவோம் அவன் கமலத் தாளும் தோளும் சிந்திப்போம்
    என்பார்.
    உமாபதி சிவாச்சாரியார் அருளிய சேக்கிழார் புராணத்திலே முருகனைப் பற்றிப் பாடும் போது,"வடிவேல் எடுத்த ஆறுமுகம் திருவடித் தாமரை இணைகள் அவை போற்றி" என்பார். திருஏரகப் புராணத்தில் "குமர நாயகன் திருத்தாள் போற்றி போற்றி" என்பார். திருவிளையாடல் புராணத்தில் குமரனைப் பற்றிப் பாடும்போது பரஞ்சோதி முனிவர் "வேல் எடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்" என்பார். அதிவீரராம பாண்டியர் அருளிய இலிங்க புராணத்தில் "வேல்கடவுள் பொற்கழலிணை பணிவாம்" என்பார். திருவாரூர் சாமிநாத தேசிகர் அருளிய திருவாடானைப் புராணத்தில் "குமரகுரு முருகன் இருதாள் மலரை அகத்துள் வைப்பாம்" என்பார். அதேபோல அவர் பாடிய செந்தில் கலம்பகத்தில் "மறை இறைஞ்சும் சேவடியும், செந்தூரன் கரம் கொண்ட வேலும் எந்தன் கண்ணை விட்டு நீங்காவே" என்பார். சிதம்பர சுவாமிகள் தனது போரூர்ச் சந்நிதி முறையிலே பாடும் போது போற்றும் போது
    "நோயுற்று இடராமல் நொந்து மனம் வாடாமல்
    பாயிற் கிடவாமல் பாவியேன் – காயத்தை
    ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா நின்
    சீரடிக் கீழ்வைப்பாய் தெரிந்து"
    என தான் எப்படி சாகவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லுவார்.
    இராமலிங்க அடிகளோ தனது திருஅருட்பாவிலே,"சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திருவடிக்கு ஆளாக்குவாய்" என்று கந்த கோட்டத்து முருகனைத் துதிப்பார்.
    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
    வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலே
    என்பார் திருவருட்பாவிலே.
    யாருக்கு இந்த நாதர் பாதமோ அம்மை பாதமோ உண்மையில் நன்றாகப் புலப்படும்.
    சிவவாக்கிய சித்தர் அழகாகக் கூறுவார்
    உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
    விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே
    திருமூலர்
    மந்திரமாவதும் மாமருந்தாவதும்
    தந்திரமாவதும் தானங்கள் ஆவதும்
    சுந்தரம் ஆவதும் துய்நெறி ஆவதும்
    எந்தைபிரான் தன் இணையடி தானே


    திருநாவுக்கரசர் இறைவனின் திருவடி கீழ் வாழ்தலையே தம் வாழ்வின் பெரும்பேறு என்று எண்ணி இறைவனிடம் அன்புடன் பக்தியுடன் வேண்டுகின்றார். பாருங்களேன் அந்த வரிகளை
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
    பெரியபுராணத்திலே காரைக்கால் அம்மையார் எப்படி இறைவனை வேண்டுகிறார் என்பதை மிக அழகாக சேக்கிழார் எடுத்துக் கூறி உள்ளார்.
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும்போது அடியினி கீழ் இருக்க"என்று கேட்கிறார்.


    நான் திருவிளையாடற் புராணத்தைப் படித்தபோது பரஞ்சோதி முனிவர் எப்படி எல்லாம் இறைவாழ்த்திலே திருவடிகளைப் போற்றுகிறார் என்பதைக் கண்டு வியப்புற்றேன்.


    சத்தியாய்ச் சிவம் ஆகித் தனிப்பர
    முத்தியான முதலைத் துதிசெயச்
    சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
    சித்தியானை தன் செய்ய பொற்பாதமே
    எனத் தொடங்குகின்றார். மதுரையிலே தல விநாயகர் பெயர் சித்தி விநாயகர்.


    திருவிளையாடற் புராணத்தைப் படிப்பதாலோ கேட்பதாலோ என்ன நன்மை என்பதைக் கூறவரும்போது,


    திங்கள் அணி திருவாலவாய் எம் அண்ணல்
    திருவிளையாட்டு இவை, அன்பு செய்து கேட்போர்
    சங்கநிதி பதுமநிதி செல்வம் ஓங்கித்
    தகைமைதரு மகப் பெறுவர், பகையை வெல்வர்,
    மங்கல நன்மணம் பெறுவர், பிணி வந்து எய்தார்,
    வாழ்நாளும் நனி பெறுவர், வானாடு எய்திப்
    புங்கவராய், அங்குள்ள போகம் மூழ்கிப்,
    புண்ணியராய்ச் சிவனடிக் கீழ் நண்ணி வாழ்வார்.


    புங்கவர் என்றால் தேவர். போகம் என்றால் இன்பம்


    கடவுள் வாழ்த்திலே சிவனைப் போற்றும்போது


    வென்று உளே புலன் களைந்தார்
    மெய் உணர் உள்ளந்தோறும்
    சென்று அமுதம் ஊற்றும்
    திருவருள் போற்றி, ஏற்றுக்
    குன்றுளே இருந்து காட்சி
    கொடுத்தருள் கோலம் போற்றி
    மன்றுளே மாறி ஆடும்
    மறைச் சிலம்பு அடிகள் போற்றி
    என்று மதுரையின் சிறப்பான கால்மாறி ஆடியதைச் சிறப்பித்து அப்படிப்பட்ட திருவடிகளைப் போற்றுகிறார்.


    சத்தியைப் போற்றும் போது,
    இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்து ஆண்ட
    அங்கயற்கண் எம்பிராட்டி
    அரும்பும் இளநகை போற்றி
    ஆரணநூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி
    வேதமாகிய சிலம்பை ஆரண நூபுரம் எனக் குறிப்பிடுகிறார்.


    சொக்கநாதரை வாழ்த்தும் போது


    பூவின் நாயகன் பூமகள் நாயகன்
    காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு
    ஆவி நாயகன் அங்கயற்கண்ணி, மாதேவி
    நாயகன் அடி ஏத்துவாம்.
    பூவின் நாயகன் பிரமன். பூமகள் நாயகன் திருமால். கா என்று கூறப்படுகிற கற்பகச் சோலையின் நாயகன் இந்திரன்


    அங்கயற்கண்ணியை வாழ்த்தும் போது


    பாண்டியன் மகள் போல் கோலம் கொண்ட அங்கயற்கண் அம்மை இரு பாதப்போது எப்போதும் அகத்துள் வைப்பாம்
    எனவும்,


    தடாதகைப் பிராட்டியாரை வாழ்த்தும் போது,


    செழியர் பிரான் திருமகளாய்க், கலை பயின்று
    முடிபுனைந்து, செங்கோல் ஓச்சி
    முழுதுலகும் சயம் கொண்டு, திறை கொண்டு,
    நந்தி கணம் முனைப்போர் சாய்த்துத்
    தொழு கணவற்கு அணி மணமாலிகை சூட்டித்,
    தன் மகுடம் சூட்டிச், செல்வம்
    தழைவு உறு தன் அரசு அளித்த பெண்ணரசி
    அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்.
    கணம் என்றால் படை, மாலிகை என்றால் மாலை


    முருகக் கடவுளை வாழ்த்தும் போது,


    மறை உணர்ந்தோர் ஆற்றும் அறம் குலவும் மகத்து அழலும்
    அவுணமடவார் வயிற்றின் அழலும் மூழ
    மறம் குலவு வேல் எடுத்த குமரவேள்
    சேவடிகள் வணக்கம் செய்வாம்.


    மகம் என்றால் யாகம், மறம் என்றால் வீரம்


    நாமகளை வாழ்த்தும் போது


    வெண்தோட்டு முண்டகத்தாள் அடிமுடிமேல் கொண்டு வாழ்வாம்.
    தோடு என்றால் இதழ், முண்டகம் என்றால் தாமரை


    நந்தி எம்பெருமானை வாழ்த்தும் போது,


    நந்தி எம்பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்
    என்றும்,


    அடியார்களை – நாயன்மார்களை வாழ்த்தும் போது கூட,


    வஞ்சகர் இட்ட நீல நிறப் பெருங்கடலும், யார்க்கும் அரிய ஏழு பிறப்பு எனும் கடலும் நீத்த பிரான் அடி வணக்கம் செய்வாம்
    (நீத்த-கடந்த)-திருநாவுக்கரசர்


    அளவு இல் வேதம் சாற்றிய தலைவன் தன்னைப்
    பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பால்நாள்
    இரவினில் தூது கொண்டோன்
    இணையடி முடிமேல் வைப்பாம்
    (சுந்தரர் - கண்படுத்தல் – உறங்குதல், பால்நாள் – நடுஇரவு)


    சிந்தை தான் அரன் அடிக்கே செலுத்தினராய்ச்
    சிவானுபவச் செல்வர் ஆகிப்
    பந்தமாம் தொடக்கு அறுத்த திருத்தொண்டர்
    தாள் பரவி பணிதல் செய்வாம்






    திருமூலர் தனது திருமந்திரத்திலே மனிதனோ தேவனோ அசுரனோ அவன் புனிதன் அடியைப் போற்றுகிறான். என்பதை
    போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
    போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
    போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
    போற்றி என் அன்பின் பொலிய வைத்தேனே (பாட்டு 44)


    மனித உடலில் உள்ள ஆறு உறுப்புக்கள் மனித வாழ்க்கையின் ஆறு ஆதாரங்களாக விளங்குகின்றன. மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்னும் இந்த ஆறு உறுப்புகளிலும் மிக முக்கியமான நாளமில்லாச் சுரப்பிகள் அமைந்திருக்கின்றன. இவை சரிவரச் சுரந்தால் தான் உடல் சமநிலையில் இருக்கும். இந்த ஆறு உறுப்புகளிலும் ஆசனம், மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் மூலமாக அகவோசையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் உடல் நலத்துடன் இறைவனைக் காணமுடியும்.


    உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
    துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீக்கி
    அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
    கதிக்கொன்றை ஈசன் கழல் சேரலாமே (பாட்டு 590)


    அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு
    செறிந்த மனத்தராய் செவ்வே ஆர்வம் – அறிந்து அவன்தன்
    பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
    கார்ஓத வண்ணன் கழல் (பூதத்தாழ்வார் 6)


    தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சட்டிப் பாட்லின் இறுதியில் மயில் நடமிடுவோய் மலரடி சரண்ம் எனப் போற்றுவார். குமரகுருபர சுவாமிகளும் தனது கந்தர் கலிவெண்பாவிலே "தாகமுடன் வந்து அடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்து அருளும்" என முருகனின் கருணையைப் புகழ்வார். கந்தர் கலிவெண்பா முடிவிலே
    "இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி
    மும்மைப் பெருமலங்கண் மோசித்துத் – தம்மை விடுத்து
    ஆயும் பழைய அடியாருடன் கூடித்
    தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய
    கடி ஏற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
    அடியேற்கு முன்னின்று அருள்"
    என்று முடிப்பார்.
    பாம்பன் சுவாமிகள் பாடிய தணிகைத் துதிகள் என்னும் பாடலிலே "மள்ளல் வேலன் மாசில் பாதமலரை வணங்குதுமே" என்று பாடுவார்.


    திருப்புகழைப்பாடிய அருணகிரிநாதர் அதன் சிறப்பை முதலில் கூறுவார். அதிலே
    "வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் – கீத
    நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
    குருப் புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
    திருப்புகழைக் கேளீர் தினம்"
    என் தாளின் புகழ் எப்படிப்பட்டது என்பதை விளக்குவார்.


    "நாள் என் செயும்? வினை தான் என் செயும்? நாடிவந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே" எனப் திருவடிகளையும் அதைச் சுற்றியுள்ள அணிகளையும் சிறப்பிப்பார். அதைப் போலவே "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே" என்பார். முருகன் திருவடியே கதி என்பதை எடுத்துக் கூறுமுகத்தான்,
    தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
    காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டிக் கைந் நாற்றி நரம்
    பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
    வேலால் கிரி தொளைத்தோன் இருதாள் அன்றி வேறு இல்லையே" என்பார். இதைப்போலவே "பாலே அனைய மொழியார் தம் இன்பத்தைப் பற்றி என்றும் மாலே கொண்டு உய்யும் வகையறியேன் மலர்த்தாள் தருவாய்" என வேண்டுவார். "இராப்பகல் அற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்கக்
    குராப்புனை தண்டையந் தாள் அருளாய்"


    அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் தொடக்கத்திலே விநாயகர் வணக்கத்திலே,
    "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்"
    எனத் திருவடிகளைப் பணிந்து கந்தர் அனுபூதியை இயற்றுவார்.


    அதிலே மேலும் கூறும் போது கதி பெறுவதற்கான வழியைப் பற்றிக் கூறும் போது
    கெடுவாய் மனனே- கதிகேள் – கரவாது
    இடுவாய் – வடிவேல் இறை தாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே"
    என்பார்.


    விதி வந்தனை செய் விமலன் கழலே
    கதி என்று அடைவார் கடன் ஆவதுவே
    பதி கண் பிணியோடு அழி நல்குரவும்
    மதி சஞ்சலமும் மண்ணாய் விடுமே


    பிரமன் வணங்குகின்ற வீரக்கழல் அணிந்த முருகனின் திருவடிகளை அடைக்கலம் என்று அடைந்தால், பிணியால் ஒடுங்கிய கண்ணும், அழிக்கும் தரித்திரமும் மனக்கலக்கமும் நாசமாகி விடும் என்று அழகாக உபதேசிக்கிறார்.


    அருளைத் தரும் நின் அடியில் பணியார்
    மருளைச் சிதையார் மதிகெட்டவர்
    என்பார்


    ஆளாய் அயில்வேல் அடியில் பணிவார்
    கோளால் பிறரைக் குறிசெய்து அழியார்
    மாளார் சமனால் – மறுகார் பகையால்
    மீளார் வினையால் – வெறுவார் அவமே


    கூர்வேலையுடைய முருகனின் திருவடிகளில் அடிமையாய் வணங்குகின்றவர் வறுமைத் துன்பத்தால் அந்நியரை அணுகி வருந்தமாட்டார். எமனால் மடியமாட்டார். பகைவரால் கலங்கமாட்டார். கருமங்களால் மீண்டும் பிறக்க மாட்டார். வீணே எதற்கும் அஞ்சமாட்டார் என்பது இதன் பொருள்.


    திருவள்ளுவரும் திருவடியின் பெருமையை மிக அருமையாக நமக்கு எடுத்துக் கூறி உள்ளார்.
    கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழார் எனின்


    கல்வி என்றால் பொருள் ஈட்டுவதற்கான கல்வி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நமக்குப் பயன் ஏதும் இல்லை. நாம் ஈட்டிய பொருள் நம்மோடு வரப்போவது இல்லை. பின்னர் எது உண்மையான கல்வி? கடவுளை உணர்ந்து அவர் திருவடியை வணங்கும் எண்ணத்தைத் தோற்றுவிப்பதே உண்மையான கல்வி ஆகும். சரி இந்த உலகத்திலே நீண்ட நாள் நன்றாக் நோய்நொடியின்றி வாழ வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும். இறைவன் திருத்தாளை அடைவதே அதற்குத் தகுந்த வழியாகும்.
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ்வார்.
    வாழ்க்கையிலே துன்பமே வரக்கூடாது என்று கருதுகிறோமோ? அதற்கு வழி என்ன? இறைவன் திருவடியைச் சேர்வது தான் ஒரே வழி.
    வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாருக்கு
    யாண்டும் இடும்பை இல
    மனதில் ஒரே கவலை. அதைத் தீர்க்க என்ன வழி? இதோ அதற்கும் திருக்குறள்.
    தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது
    பிறவி என்னும் பெருங்கடலை நீந்த வேண்டுமா? அவன் இணையடி சேர வேண்டுமா? வழி என்ன?
    அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
    எண்குணங்களை கொண்ட இறைவனை அடைவது எப்படி?
    கோள் இல் பொறி இல் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை
    இறைவனின் திருவடியை போற்றவில்லையா? துதிக்கவில்லையா? நீ பிறவிக்கடலைக் கடக்க முடியாதப்பா. உத்தரவாதம் தருகிறார் திருவள்ளுவர்.
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்.


    பாதுகா சகஸ்ர ஜபம் நாம் கோரிய பலனைத் தரும். முதலில் நாம் நமக்கு வேண்டிய சுலோகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் குளித்துவிட்டு, திருமண் பூசி, நெற்றியில் விபூதியோ குங்குமமோ திருமண்ணோ இல்லாமல் சுலோகத்தைச் சொல்லக் கூடாது. பாதுகா சகஸ்ரத்தை அருளிய மகாதேசிகரை மனதில் நிறுத்தி வணங்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் இந்த திருவடிகளை மட்டுமே நோக்க வேண்டும். திருவடிகளைப் பார்த்துக் கொண்டே 108 முறை அந்த சுலோகத்தை ஜபிக்க வேண்டும். சொன்னவுடனேயே பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. தொடர்ந்து தினசரி ஜபியுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவடியிடம் வந்து மனதை ஒருமைப்படுத்தி ஜபிக்க வேண்டும். இதிலே சந்தேகம் இருக்கக் கூடாது. அதைரியம் கூடாது. ஜபம் முடிந்தபிறகு சுலோகத்தை இயற்றிய மகாதேசிகரை நினைத்து நன்றி சொல்ல வேண்டும். இப்படிக் கூறினால் நல்வாழ்வு கிடைக்கும் என்பதைக் கீழ்கண்ட பாடல் நமக்கு உணர்த்துகிறது.


    சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
    பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
    தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்க
    வானேறப் போமளவும் வாழ்வு.


    இம்மை-மறுமை ஆகியவற்றுக்கு இன்றியமையாதவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை ஆகும். உலகத்தில் உள்ள ஆசைகள் எல்லாமே இந்த நான்கில் அடங்கிவிடும்.


    அரங்கனின் திருவடியை
    அடியார்கள் தலையில் தாங்குகிறார்கள்
    அடியாரின் பாததூளிகள் உலகத்தைக் காக்கும்
    திருவடிகள் நம்மைக் காக்க வேண்டும்
    நம் கோரிக்கைகளில் நாம் வெற்றியடைய அருள வேண்டும்
    திருவடிகளின் பெருமையை மானுடம்
    உணர வழிவகுத்தவர் பரதாழ்வார்
    திருவடி பக்தர்களின் முதல்வரான பரதருக்கு வணக்கம்.


    இராமர் வைத்து பூசித்தவர் அன்றோ இவர். விபீடணனால் கொண்டுவரப்பட்டு திருவரங்கத்தில் தங்கிவிட்டவரல்லவா அவர். இவருக்கு ஒப்பானவர் என்று நாம் யாரையும் சொல்லிவிட முடியாது. எனவே தான் இதைத் திருஅவதாரத் தலம், பெரியகோவில், பூலோக வைகுண்டம், போகமண்டலம் என்றெல்லாம் புகழ்கிறார்கள். ஆழ்வார்கள் பதின்மராலும் பாடப்பட்ட திருத்தலம் இதுவாகும். மிகுதியான பாசுரங்களும் அரங்கநாதர் மீதே பாடப்பட்டுள்ளன.










    காயொடு நீடு கனியுண்டு வீசு
    கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்
    ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
    திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
    வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர்
    நாளும் முறையால் வளர்த்த தீ ஓங்க ஓங்கப்
    புகழோங்க தில்லைத் திருசித்ர கூடம் சென்று சேர்மினே
    (பெரிய திருமொழி 3-2-2


    வைணவம் கூறும் ஐந்துவிதமான பக்திகள்
    தாஸ்ய பக்தி (அடிமை பக்தி)
    சக்யாசக்தி பக்தி (தோழமை பக்தி)
    வாத்சல்யாசக்தி பக்தி (தாய்மை பக்தி)
    சாந்த பக்தி (தந்தை பக்தி)
    மதுர பக்தி (நாயகி பக்தி)


    நாரதர் கூறும் பதினோரு விதமான பக்தி வகைகள்
    குணமகாத்மியாசக்தி பக்தி
    ரூபாசக்தி பக்தி
    ஸ்மரணாசக்தி பக்தி
    பூஜாசக்தி பக்தி
    தாஸ்யாசக்தி பக்தி
    வாத்சல்யாசக்தி பக்தி
    சக்யாசக்தி பக்தி
    காந்தசக்தி பக்தி
    ஆத்மநிவேதனாசக்தி பக்தி
    தன்மயதாசக்தி பக்தி
    பரமவிரஹாசக்தி பக்தி
    பகவத் கீதை குறிப்பிடும் நான்குவித பக்திகள்
    ஆர்த்தித்துவம்
    ஜிஞ்ஞாசத்துவம்
    அர்த்தாத்தித்துவம்
    ஞானத்துவம்
Working...
X