Thirukadavur temple part 1 to 10
Courtesy:Sri.Kovai G.Karuppasamy


いいいいいいいいいいいいい
திருக்கடவூர்
(1)
いいいいいいいいいいいいい
பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின் மூலநாதமாய், முடிவிலா நடனத்தின் முதல் சுருதியாய், கால வீணையின் அதிர்வாய் ஓங்கி ஒலித்தது ௐ எனும் ஓங்காரநாதம்.


சிருஷ்டியின் உச்ச லயிப்பில் ஒன்றிருந்த இடகலை பிங்கலை சக்திகள் சலனம் கொண்டன. சற்றேன அதிர்ந்தன. நாதத்தின் கருப்பையில் பிரபஞ்சக் கரு மெல்ல மெல்ல உருக் கொள்வதை உணர்ந்தன.


நாதத்தின் பிறப்பே பிரபஞ்சம். நாதத்தின் இருப்பே உயிர்கள் நாதலயத்தின் நடனமே தொடக்கம். இது நீளும் ஊழிவரை.


மூல சிருஷ்டியின் நிறைவில், உருக் கொள்ளவுள்ள உயிர்களின் இடைவெளியில்லாத சங்கிலியில், முதற்க் கோா்வையான சங்கிலிக்கண்ணி பொருத்தப்பட்ட நேரமது. சக்தி வடிவம் தான் இடகலை. சிவ வுருவம் பிங்கலை. இதில் உழன்று கொண்டிருக்கும் உயிர்களெல்லாம் ஊடுருவியது சிவசக்தி அம்சம்.


ௐ.ௐ..ௐ...ௐ....ௐ.....ௐ......ஓங்காரத்தின் குரல் பிரயோகமாகிக் கொண்டேயிருந்தது. கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு கனன்றது. வாக்கிறந்த பூரணத்திடமிருந்து சூட்சுமக் குறிப்பாய்க் கிளம்பி புறப்பட்டது பிரபஞ்ச ரகசியம்.


ஆதியோகியின் நாதக்கனிவில் மூவகை வுலகம் மூகிழ்விப்பதற்கான சலனங்களைக் கண்ணுற்ற உமையின் உள்ளுணர்வில் புரிபடத் தொடங்கியது பிரபஞ்ச ரகசியம். தன்னை ஆளுடை நாயகனின் உபதேசத்தில் கண்மூடி லயித்தாள் காருண்யை.


இனியெழும் உயிர்களின் வினையாற்றல், வினையேற்றல் இரண்டிற்கும் மெளன சாட்சியாய் இழையோடும் இந்த ஓங்கார நாதம். இதுவே ககன வெளியெங்கும் காற்றாகிச் சுழலும். உயிரியக்க சக்தியின் அலைவீச்சாய் இருக்கும் இந்த காற்று!.


தேவி!, தாவரங்களின் மகரந்த,சேர்க்கை, நாசிப் புலனுக்கு வாசம் புரிதல், உடம்போடு உயிரை இணைத்தல், பொறிபுலன்களை இயக்கச் சக்தியாய் இருத்தல், ஆவியாகிய கடல் நீா் வானகத்தே வாங்கிக் கொள்ளல், என்று படைப்பின் மூலசுவாசமாய் இயங்கும் காற்று. முகிலினை உயிா்க்கச் செய்து மழையினை பிறக்க வைத்தல், தழலினை உந்தி அழித்திடல் என சகலத்திற்கும் காரணமாகும் காற்று.


காற்றின் இழையைக் கைக்கொண்டிருக்கும் வரையே யாக்கையின் இயக்கம். யாக்கையினைத் தாண்டித் தொடரும் காற்றின் சுழல். அந்தச் சுழற்காற்றினை கட்டமைக்கும் வினைகளின் வலை அற்றுப் போகையில் ஏற்படும் வெற்றிடம்தான் முக்தி. இது பிரம்ம விதி. காற்றின் வழியே தன்னில் அமிழ்ந்து, இருமை கடந்து, தன்னையுணரும் யோகக் கலையின் எழுத்தில்லா,விளக்கமே சிவசக்தி சொரூபம்.


பிராணவாயுவின் பிரயோகம், வாழ்வின் மூலம் மட்டுமன்று சக்தி! அதுவே உயிராற்றலின் ஊற்றுக்கண். தன்னில் உள்ள இறைமையை உயிர்கள் உணர்ந்து, மரணம் தாண்டி, பேரின்பத்தில் நிலைத்திட,பிராணனே பிரதானம். கட்டற்றோடும் எண்ணக் குதிரையின் கடிவாளம் பிராணனே. கட்டுக்கடங்கிய அந்தக் குதிரையைக் கட்டும் கம்பமும் பிராணனே.


காற்றாகிய பிராணனின் நுட்பம் உணர உணர சூட்சுமம் பெறும் உயிர்சக்தி. காற்றைப் போலவே இலகுவாகும். அம்பிகே! காற்றிலாமை மரணமெனில் காற்றும் அமுதமாம். பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்திருக்கும் பரத்துவமே பிராண சக்தி. அதுவே ஓங்காரத்திலிருந்து உயிர்த்த அமுதம். ஒவ்வோா் உயிரிலும் இது அடங்கல். இது இயக்கும். இறுதியில் இதுதான் கிடத்தும்.


ஷாம்பவி! இந்த அமுதம் நிரம்பிய பாத்திரமே சரீரம். மரணமிலாப் பெருவாழ்வின் அமுதம் நிரம்பும் கடம் மிருத்யுஞ்சயம். அமுதகடங்களே உடல்கள் என்பதை உணர்த்தும் தலம்தான் திருக்கடவூர் எனப்படும். அமுதக்கடமாய் தன்னை உணர்பவர்களுக்கு அதுதான் கடைசிப் பிறவி. கருவூரில் நுழைவோருருக்குக் கடையூரும் இதுவே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சங்கரி! பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கேற்ற நீ மனோன்மணி, மனசக்தி, பிங்கலையின் மூலவுருவாகிய யாம் புத்தி சக்தி. நாம் அருளிய அமுதமே காற்று. காற்றின் அசைவே பிரபஞ்சம். காற்றுக்கு கால் என பெயரும் உண்டு. காற்றின் இயக்கமே வாழ்க்கை என்னும் தத்துவத்தின், குறியீடாய்த் தாண்டவம் தொடங்குவோம்.


புரிதலெனும் விடையேறும் புனிதனும் புவனங்கள் ஈன்ற நாயகியும் ஆடத் தொடங்கிய ஆனந்த தாண்டவத்தின் அதிர்வில் ஒவ்வொரு மடலாய் மலர்த்தியது பிரபஞ்சத் தாமரை.


நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருநாள் நிழற்கீழ்
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே!


いいいいいいいいいいいいい
*திருக்கடவூர்.*
*(2)*
いいいいいいいいいいいいい
வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் மனத்திலும் முகத்திலும் களைப்பு ஏற்பட்ட சுவடு காணாது புன்னகையே விரிந்து படர்ந்தது. வான்முதல் கடலாழ வரை நீண்டு வளர்ந்திருந்த வாசுகியின் தலை பாகத்தை அசுரர்கள் பற்றிக் கொண்டிருந்தனர். வாசுகியின் வால் பகுதியை அமரர்கள் பற்றிக் கொண்டியிருந்தனர்.
அழுத்தத்தாலும் நெருக்குதலதாலும் வாசுகியிடமிருந்து வெளியானது வெப்பத்தனல். அந்த வெப்பத்தனலில் அசுரர்களின் உடல் உரோமக்கால் மயிர்கள் கருகி செத்தன.
பாற்கடலை அமரர்களுடன் சேர்ந்து நாமும் கடைவதென முடிவான போதே அசுரர் குலம் ஒற்றர்களால் சூழப்பட்டுக் கொண்டார்கள். அவ்வொற்றர்களின் ஒருவனிடமிருந்து செய்தி யொன்று பிறந்தது.
*திருமாலும் தேவேந்திரனும் உடன்படிக்கை செய்து கொண்ட ரகசிய குறிப்பு அது.*
"இந்திரா!" வடவரையை மத்தாக்கி பாற்கடலை கடைவதற்கு வாசுகியைக் காட்டிலும் வலிவுள்ள நாண் வேறொன்றும் கிடையா. பேராற்றலுக்கொரு வடிவம் கொடுத்தால் அதன் பரந்த விரிந்த மார்பில் யக்ஞோபவீதமாய் புரளக்கூடியவை அவை. பூமியை மழலையாக்கி எண்திசை யானைகளுடன் எதிர்க்க விட்டால் பூமிக் குழந்தையின் அரைஞாண் கயிறும் அதுவே.
அமரேசா!" உயிரினங்களில் எது தன் உச்சம் தொடுகிறதோ, அதுவே நான். யானைகளில் ஐராவதமாயிருக்கும் நான், நாகங்களில் வாசுகியாய் இருக்கிறேன். நாகமெனும் உயிர்வகையின் நிகரிலா உச்சம் வாசுகி.விண்டுரைக்க மாட்டாத குண்டலினியின் அசைவு வாசுகியின் அசைவே.
வாசவா!" நிலைபேறுடைய அமுதத்தை நீங்கள் பருக தன்னை ஒப்புக் கொடுக்கும் வாசுகியின் வல்லமை உங்கள் கைகளிலும் திரள வேண்டுமானால் அதற்கான வழியொன்றும் இருக்கிறது. பாற்கடலை கடையும் பொழுது முன்னதாகவே சென்று முதன்முதலாக வாசுகியின் தலைப்பகுதியைப் பற்றியிழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வாசுகியினை கடைந்திழுக்கும்போது அதன் கண் ஒளியைக் காண்போர் சர்வ வல்லமை பேறு கிடைக்கப் பெறுவார்கள்.
சாச்சினா!" இன்னொன்றையும் தொிந்து கொள்ளுங்கள். வாசுகியை வாகமாக கொண்டிருப்பவள் அமுததேவி. வாசுகி பார்க்கின்ற திசையிலேதான் அவளும் திரள்வாள். ஆக முன்னதாக சென்று வாசுகியின் தலைப்பாகத்தை கைப்பற்றியழுத்திப் பிடித்துக் கடைந்து கொள்ளுங்கள். அசுரர்கள் முந்துக் கொண்டால், அவர்கள் உண்ட எச்சில் அமுதத்தை ஏந்திப் பருக வேண்டியவர்களாவீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!! மிகவும் எச்சரிக்கை!!!"
ஆயிரஞ் செவிகள் கொண்ட ஆதிசேஷனைக் காட்டிலும், அதைவிட அதிக செவிகள் கொண்ட அசுரர்குல ஒற்றன் ஓடிப்போய் தம்பட்டமடித்தச் இச்செய்தி, அசுரர்களை ஆனந்தக் கூத்தாடச் செய்தது.
நிமிர்ந்த மேருவில் நாணான வாசுகியை முறுக்கி சுழற்றி கட்டப் பட்டது. இதுதான் சமயமென அதன் தலைப்பகுதியைப் பாய்ந்தோடி வந்து அழுத்தி வளைத்துப் பிடித்துக் கொண்டார்கள் அசுரர்கள்.
அதிர்ந்து போன இந்திரனின் செவிமடுத்தசொல்லை துளியும் கேளாது போயினர் அசுரர்கள்.
வெற்றிமுனையை பிடித்த உணர்வு போல முழு வல்லமையுடன் கடையத் தொடங்கினர் அசுரர்கள்.
அசுரர்கள் இழத்துக் கடைந்த வேகத்திற்கு, இணையாக அமரர்களால் கடைந்திழுக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்கும் போதெல்லாம் உயிர்ச் சேதம் என்னமோ தேவர்களுக்குத் தான் அதிகமாகவே இருந்து வந்தது.
அமுதம் கடைந்து பிழியப்பட்டு வரும்போது பருகிவிட்டால் மரணமிலாப் பேரின்ப பெரு வாழ்வு பெற்றிடலாம் என்று திருமால் நான்முகனுக்குத் தந்த அறிவுறுத்தலின் படியே பாற்கடல் கடையப் படுவதென்றும், அந்தப் பணியில் அந்தப் பணியில் அசுரர்களும் பங்கு பெறுவதென்றும், உருவான உடன்படிக்கை உயிர் பெற்றுக் கொண்டிருந்த வேளை அது.
ஊழியின் எல்லை வரைக்கும் உயிர்தரிக்க வைக்கும் அமுதம் தங்கள் நாவினைத் தீண்டும் நாழிகை நெருங்கி வந்து விட்டதென்று பரபரப்புடன் வாசுகியை கடுஇறுக்கமாக கடைந்தனர் அசுரர்கள்.
வாசுகியின் நாண் மேரு மீது உராய தீத்தணல் அணல் பறந்தது. அழுத்தமான வேகமெடுத்து இழுத்த இழுவையினால் வாசுகியின் தேகம் வலி தினவெடுத்தது. அந்த வலியின் வேதனையில் வாசுகியின் கண்களில் தெரிந்தது தெறித்தது.
அசுரர்கள் கடைய கடைய ஆகாயத்திலிருந்து பேரிடி தோன்றின போல, பூமி இரண்டாய் பிளந்தன போல, பேரொலி ஓசை கேட்க்...................
அமிர்தம்!...அமிர்தம்!!....அமிர்தம்...........அமிர்தம்!!!!"
கடைந்ததில் முதல் பிரவாகமெடுத்து வந்தது புது நஞ்சு.
அதே நேரத்திலும் தன் உடலுமுறுக்கில் தாங்கொண்ணாத வலி வந்த வாசுகியும் தன் நஞ்சை வெளித் தள்ளியது. வானமுதமென எதிர்பார்த்திருந்த வாய்பிளந்த, அசுரர்கள் நஞ்சின் பேரலையில் கருகிச் சாய்ந்தனர். பாதங்கள் ஒடிந்தொழிய ஓடியவர்கள் நாலா திசைகளிலும் திசை காணா முட்டி மோதி நிலத்தில் வீழ்ந்தனர்.
பிறந்த புது நஞ்சு, இறுகப்பெருகி வந்த பெருநஞ்சு, உருக்கி வந்த வேகத்தில் அமரர்கள் குவித்து கூப்பிய கைகளுடன் கயிலால திசை நோக்கி அபயக் குரலெழுப்பினாா்கள்.
அந்நேரம் வானில் வெளிச்சக் குழம்பு. அது எல்லையில்லா தொலைவு விரிந்து பெருகி பரவியது.
*அவனே ஆதிநாதன்!*
*அவனே அணுக்கத் தோழன்!*
*அவனே சிவமேயாகிய சுந்தரன்!*
வெளிச்சக் குழம்புவிலிருந்து தோன்று வந்து கொண்டிருந்தான்.
வந்த வேகத்தில் பெருகி வந்த நஞ்சை, சிவமேயாகிய சுந்தரத் திருக்கரங்கள், பெருக்கெடுத்து திரண்ட நஞ்சை ஒன்றுதிரட்டின. துளியும் சிதறாது, மீதமுமிறாது ஆலகால விஷத்தை உள்ளங்கையில் தேக்கிப் பெற்றுச் சென்றார் ஆலால சுந்தரன்.
*ஆலால சுந்தரா வணக்கம்!*
*ஆதிநாதா சுந்தரா வணக்கம்.* என்று பேரொலி கொண்டு வணங்கினார்கள் தேவர்கள்.
என்ன நிகழ்ந்தென அறியா வண்ணம் நீங்கப் பெறாத மயக்கத்துடன் இருந்த அசுரர்களை, தேவர்கள் அங்குமிங்குமாய் புறந்தள்ளி ஆனந்தக் கூத்தாடினார்கள்.
அள்ளிச் சென்ற ஆலகால நஞ்சை தழும்பாமல், சிதறாமல் பெருமானின் கரங்களில் இருக்க, சிவந்த கைகளில் கருநஞ்சை ஏந்தியிருந்த கண்ணுதற் கடவுள், யாரும் நினைந்திராத வண்ணம் அந்த ஒரு நொடியினில் நஞ்சை அருந்தியுண்டார். கண்டுவிட்ட அமரர்குலம் வியந்து நடுங்கிப் போனது.
நஞ்சுண்ட அடுத்த ஒரு நொடியும் கூடிவிடாது, பெருமானின் தொண்டையை அழுத்தி மிடற்றி இறுக்கியது வடிவாம்பிகையின் வளைக்கரம்.
வாரிதி தந்த நஞ்சை வாரியுண்டருந்திய பெருமானின் திருமிடறு நஞ்சின் வேகம் கருகறுத்தது.
அதே நேரம் அம்பிகை தொண்டையைப் பற்றி நிறுத்திய பரிவால் நஞ்சின் வேகம் உள்ளீரம் குளிர்ந்து மணத்தது.
அருந்தியுண்ட நஞ்சு அமுதமாகிப் போனது. அம்பிகையின் கரத்தால் நஞ்சு அமுதமாகியதால், அம்பிகையின் திருமுகத்தை தொட்டு நிமிர்த்தி, பாற்கடலை நோக்கி சுட்டுவிரல் நீட்டி சுட்டிக்காட்டினார் இறைவன்........

*அங்கே!"*
......................,,,,,,,?,,,????,,,,,,,,??????
இறைவன் சுட்டிய பாற்கடலில் இனியென்ன????????......நாளை வ(ள)ரும்.
*வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்*
*சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா*
*ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்*
*இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி*
*மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்!*
திருச்சிற்றம்பலம்.

To be Continued