Kedarnath temple
கங்கைக் கரை ரகசியங்கள்! பகுதி - 15
'கேதார்நாத் கோயில்'
'கேதார்நாத் கோயில்' இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் 'மந்தாகினி' ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது.
இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.
இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத்தில் 3584மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமான ஒன்றாகும்.
இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். கேதார்நாத் பதிகம் கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர் என்றே தமிழ் ஆன்மீகம் கேதார்நாத் சிவனை வழிபடுகிறது.
திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன.
இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது.
வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோயிலைச் சுற்றி இருக்கும் நகர்ப்புரங்கள் பெரும் சேதமடைந்தாலும், கோயில் வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கோயிலைச் சுற்றி ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும்வரை கோயில் மூடப்படும் என்று உத்தராகண்ட் முதல்வர் அறிவித்தார்.
கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.
இக்கோயில் ஒரு கல் கோயில் ஆகும். கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், கருவறைக்கு எதிரே சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம்.
கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது.
ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார்.
கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர்.
குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள்.
பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.
---விக்கிப்பீடியா, yarl . com

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends