ஸ்ரீ:
அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?
"ஸ்ரீதரா! கிட்டு மாமா வந்துருக்காடா, வந்து ஸேவிச்சு அபிவாதி பண்ணுடா! விசேஷமா ஆசீர்வாதம் பண்ணுவார்" என்று ஆத்துக்குள் ப்ரவேசித்த கிட்டு மாமாவைப் பார்த்ததும் அம்மா ஸ்ரீதரனைக்குக் குரல் கொடுத்தாள்.

ஸ்ரீதரனுக்கு 11 வயசு, 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ரொம்ப சுட்டி. "மாசிக் கயிறு பாசி படரும்னு யாரோ சொன்னான்னு எனக்கு பரிட்சை சமயத்துல பூணலை போட்டு வச்சுட்டு, ஆத்துக்கு ஒரு ப்ராஹ்மணா வரப்டாது, ஓடியாடா, ஸேவிடா, அபிவாதிபண்ணுடான்னு அம்மாவின் தொல்லை தாங்க முடியல!" என்று முணுமுணுத்துண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தான் ஸ்ரீதரன்.

"ஓ இந்த மாமாவா?! ரொம்ப நாளாச்சே இந்த மாமாவைப் பார்த்து? முன்னெல்லாம் வரும்போது, "உனக்கு ஒரு குட்டிக் குதிரை வாங்கி வச்சுருக்கேன், அதுக்கு இன்னும் வால் வளரல, அடுத்த தரம் வரச்சே, கண்டிப்பா கொண்டுவரேன்னு" ஒவ்வொரு தரமும் ஏமாத்துவாரே! அந்த மாமாவா"?
என்றான் ஸ்ரீதரன்.
"அடேய், யமகாதகண்டா நீ! நன்னா ஞாபகம் வச்சிண்டிருக்கியே"! - கிட்டு மாமா.
"அதுசரி, பூணலுக்கு ஏன் மாமா வரலை?" - ஸ்ரீதரன்.
"ஒனக்கு பூணல்னு தெரியாம, முன்னாடியே வடதேச யாத்ரைக்கு ஒத்துண்டுட்டேன், அதண்டா வரமுடியலை"-கிட்டு மாமா.
"போகட்டும் மாமா, இப்பவாவது, ஞாபகமா வந்தேளே! குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுங்கோ"-அம்மா.
"அதுக்குத்தானடிம்மா வந்திருக்கேன், ஸேவிடா கண்ணா"-கிட்டு மாமா.
ஸ்ரீதரன் அவைர ஸேவித்து அபிவாதி பண்ணினான் "அபிவாதயே ஆங்கீரச, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ, த்ரையாருஷேய, ப்ரவரான்வித, பாரத்வாஜ கோத்ர:, ஆபஸ்தம்ப ஸூத்ர:, யஜூர் ஸாகா அத்யாயி, ஸ்ரீதர சர்மாநாம அஹம் அஸ்மிபோ:"- என்றான்.
"ஆயுஷ்மான் பவா ஸ்ரீதர சர்மாஆ... ஆ...ன்! நன்னாச் சொல்றடா அபிவாதி, யாரு சொல்லிவச்சா? அப்பாவா? வாத்யார் மாமாவா?"-கிட்டு மாமா.
"மாமா அப்பாதான் மொதல்ல அபிவாதி சொல்லிவச்சா, அதுக்கப்பறம் ஆத்துக்கு வரவாளையெல்லாம் ஸேவிச்சு அபிவாதி பண்ணச்சொல்லி அம்மா தொந்தரவு பண்ணிண்டிருக்கா. ஒருதரம் நம்ப திருப்பதி கோவிந்தன் மாமா வந்திருந்தா, ஸேவிச்சு அபிவாதி சொன்னேன். என்னடா தப்பு தப்பா சொல்றே, நான் சொல்லித்தரேன்னு சொல்லி சொல்லிக்கொடுத்தா. கரெக்டா இருக்கா மாமா"? - ஸ்ரீதரன்.
"ரொம்ப கரெக்ட்டா இருக்குடா கண்ணா"! - கிட்டு மாமா.
"மாமா என்ன சாப்ட்றேள்"?-அம்மா.
"என்னம்மா புதுசா கேக்கறே. உனக்குத் தெரியுமே எனக்கு என்ன புடிக்கும்னு"! - கிட்டு மாமா.
"மாமா பரிட்சை கிட்ட வந்துடுத்து, நான் படிக்கணும், மாடிக்குப் போகட்டுமா"? - ஸ்ரீதரன்.
"நன்னா படிச்சு நெறைய மார்க்கு வாங்கி, நம்பர் ஒண்ணா வருணம்டா நீ!
ரொம்ப நன்னாருப்பேடா கொழந்தை! ஆமாங் ...! நீ அபிவாதி சொன்னியே அது எதுக்குச் சொல்றதுன்னு தெரியுமாடா ஒனக்கு"? - கிட்டு மாமா.
"மாமா, போன வாரம் வாசு மாமான்னு ஒருத்தர் வந்தார், அவரை ஸேவிச்சு அபிவாதி பண்ணுன்னு அம்மா சொன்னான்னு, ஸேவிச்சு அபிவாதி பண்ணிட்டு அந்த மாமாகிட்ட இதத்தான் நான் கேட்டேன், அந்த மாமா சொன்னா, டேய், ஒங்கப்பன்ட்ட கேள்டா இத, அவனுக்குத் தெரியரதான்னு பாப்போம் அப்படின்னுட்டு போயிட்டார். அதுக்கப்பறம், அப்பாகிட்ட கேட்டேன், இருடா வாத்யார் மாமா வரட்டும் கேக்கறேன்னார்"! - ஸ்ரீதரன்.
"வாத்யார் மாமாவை கேட்டுட்டு என்ன சொன்னான் ஒங்கப்பா"? - கிட்டு மாமா.
"வாத்யார் மாமாவை அப்பா கேட்டபோது நான் அங்கதான் இருந்தேன்.
வாத்யார் மாமா சொன்னார், அடேய், இதப்பத்தி எங்க வாத்யார்கிட்ட கேக்கணும்னு எனக்குத் தோணவேல்ல, கேட்டுட்டு வந்து சொல்றேண்டான்னார்" - ஸ்ரீதரன்.
"கேட்டுட் வந்து என்ன சொன்னார்"?- கிட்டு மாமா.
"மாமா, அதுக்கப்பறம் அவர் இந்தப்பக்கம் வரதேயில்லை, போன் பண்ணினா,
கட்பண்ணிடறார்"-ஸ்ரீதரன்.
"மாமா இந்தாங்க ஒங்களுக்குப் பிடிச்ச மோர்" - அம்மா
"ஆஹா! இந்த பங்குனி வெய்யக்காலத்துக்கு ஏத்தமாதிரி, அளவா ஜலம் உட்டு, அளவா உப்பு போட்டு, இஞ்சியைத் தட்டிப்போட்டு, பச்ச மொளகாயை சின்ன சின்னதா வெட்டிப்போட்டு, பெருங்காயப் பவுடரை துளி அதிகமாவே போட்டு, கடுகு திருமப்பாரி, அதுல குளுகுளுன்னு நாலு ஐஸ் கட்டியையையும் போட்டு, கொத்தமல்லி கருவேப்பிலையை கிள்ளிப்போட்டு, நீ குடுக்குற மோர் இருக்கே, நிஜமாச் சொல்றேன், இந்த தேவாம்ருதம், தேவாம்ருதம்னு சொல்றாளே, அதெல்லாம் பிச்சை வாங்கணும்"- உணர்ச்சிபொங்க ச்லாகித்தார் கிட்டு மாமா.
"மாமா, ஐஸ் மோரை கையில வச்சுண்டு, ஐஸ் வைக்கறேளா? பேச்ச மாத்றேளா?
உங்களுக்கும் அபிவாதின்னா என்னன்னு தெரியாதா"? - ஸ்ரீதரன்.
"ஏண்டா, பரிட்சைக்குப் படிக்கணும் நாழியாடுத்துன்னியே! ஆத்துக்கு வரவாளெல்லாம் வம்பிழுக்கறதே ஒனக்கு வேலையாப்போச்சு"! - அம்மா.
"கோமளா, கொழந்தையைக் கோவிச்சுக்காதே, ஆர்வமா இருக்கான், தோ, மோரைச் சாட்டுட்டு அவனுக்கு நன்னா விவரமாச் சொல்றேன்"- கடைசிச் சொட்டு மோரையும் அண்ணாந்து கவிழ்த்துக்கொண்டே சிதறிய குரலில் சொன்னார் கிட்டு மாமா.

"சரி மாமா, எனக்குத் தளிகை வேலை தலைக்குமேல இருக்கு, நீங்க எதானும் வம்பு பேசுங்கோ, நாம்போறேன் உள்ளே"! என்று அம்மா தளிகை அறைக்கு விரைந்தாள்.
கிட்டுமாமா அபிவாதிக்கு விளக்கம் சொன்னாரா இல்லையா?
தொடரும் .....

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends