Announcement

Collapse
No announcement yet.

தேவார வைப்புத் தலங்கள் - ஒரு அறிமுகம் ...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவார வைப்புத் தலங்கள் - ஒரு அறிமுகம் ...

    தேவார வைப்புத் தலங்கள் - ஒரு அறிமுகம் ...
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.
    எடுத்துக் காட்டாக திருநாவுக்கரசின் 6-வது திருமுறையில் 51-வது பதிகத்தில் (திருவீழிமிழலை பதிகம்) உள்ள 8-வது பாடலைக் காண்போம்.
    அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற்று உள்ளார்
    ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
    தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்
    சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
    நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்
    நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
    வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார்
    வீழிமிழலையே மேவினாரே.
    இப்பாடலில் குறிப்பிடப்படும் பேரூர், தஞ்சைதளிக்குளம், தக்களூர் ஆகிய மூன்றும் வைப்புத் தலங்கள்.
    இவ்வாறு வேற்றூர் பதிகத்தின் இடையில் குறிப்பிட்டுள்ளது போன்று பொது பதிகத்தின் இடையிலும் வைப்புத் தலங்கள் போற்றப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக சுந்தரரின் 7-வது திருமுறையில் 12-வது பதிகத்தில் (திருநாட்டுத் தொகை பொது பதிகம்) உள்ள 6-வது பாடலைக் காண்போம்.
    தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர்
    பன் ஊர் புக்கு உறையும் பரமற்கு இடம் பாய் நலம்
    என்னூர் எங்கள் பிரான் உறையும் திருத்தேவனூர்
    பொன்னூர்நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே.
    இப்பாடலில் குறிப்பிடப்படும் தென்னூர், தேவனூர், பொன்னூர், புரிசை ஆகிய நான்கும் வைப்புத் தலங்கள்.
    இது போன்ற தலங்கள் சிலவற்றிற்கு தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் சென்று தரிசித்துள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் அத்தலத்து இறைவனைப் பாடாமல் இருந்திருக்க முடியாது. தில்லையில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. வைப்புத் தலங்களைப் பற்றி பாடப்பெற்ற பதிகங்கள் சிதைந்து போயிருக்கக் கூடும்.
    தேவார மூவரும் சென்று தரிசித்துப் பாடிய தலங்களைத் தவிர இதர பல தலங்களையும் இவர்கள் தரிசித்த விபரங்களை சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். பல தலங்களுக்கு தனிப் பாடல் கிடைக்காமல் போனாலும் இவைகளும் தொன்மை வாய்ந்த தலங்கள் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. தொன்மை வாய்ந்த இந்த தலங்களை பிற தலங்களின் பாடல்களில் வைத்துப் பாடியதால் இவை வைப்புத் தலங்கள் எனப் பெயர் பெற்றன. ஒரே பதிகத்தில் பல வைப்புத் தலங்களைக் குறிப்பிட்டும் பாடியுள்ளனர்.
    இந்த வைப்புத் தலங்களைப் பற்றியும், இவை இருக்குமிடம், செல்லும் வழி ஆகிய தகவல்களைப் பற்றியும் இந்த இணையதளம் மூலம் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
    தேவார மூவரும் சென்று தரிசித்துப் பாடிய தலங்கள் என்று பலவற்றை சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவற்றில் பலவற்றிற்கு பதிகங்கள் கிடைக்கவில்லை. அதே போன்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வைப்புத் தலங்களின் இன்றைய பெயர்கள் சரியாகத் தெரியாததாலும், அநேக வைப்புத் தலங்களிலுள்ள கோவில்கள் காலத்தால் அழிந்தும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாலும், இன்றைய கால கட்டத்தில் வைப்புத் தலங்கள் என்று உறுதியாக கண்டறியப்பட்டவைகள் மட்டுமே இந்த இணைய தளத்தில் இங்கு குறிப்பிடபட்டுள்ளன.
    தனிப்பாடல் அமையாத காரணத்தால் ஊரின் பெயர் கொண்டு வைப்புத் தலத்தை இன்னதென்று அறிந்து கொள்ள அறிஞர்கள், ஆராச்சியாளர்கள் பெரும் முயற்சி எடுத்து ஆதீன விளக்க நூல்கள் மூலமும், மேலும் பிற கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலமும் தலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த தேடல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.
    இன்றைய உலகில் வைப்புத் தலங்கள் என்று போற்றப்படும் கோவில்கள் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இக்கோவில்களில் அநேகமாக பல காரணங்களால் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. பல கோவில்கள் வழிபாடு இல்லாமல் உள்ளன. உதாரணமாக அரிச்சந்திரம் என்ற வைப்புத் தலக்கோவில் கேட்பாரின்றி தனியே மனித நடமாட்டமின்றி காணப்படுகிறது. கோவிலுள்ள சிலைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. கருவறையில் மூலவர் லிங்கத் திருமேனி மட்டும் பூஜைகள் இல்லாமல், சுத்தம் செய்யப்படாமல் யாரும் கவனிப்பாரின்றி தனியே காட்சி தருகிறார். புதிய கோவில்களைக் கட்ட முற்படுவர்கள் இவ்வாறு கவனிப்பாரின்றி இருக்கும் பழந்திருக்கோவில்களை புதுப்பிக்க முன்வர வேண்டும்
Working...
X