Announcement

Collapse
No announcement yet.

DasOpanishad - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • DasOpanishad - Periyavaa

    Courtesy: http://www.kamakoti.org/tamil/Kural8N4.htm
    தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
    அத்வைதம்
    வேதத்தின் முடிவும் சங்கரரின் முடிவும் ஒன்றே
    "வேதாந்தம்" என்று சொன்னால் அதற்கு "வேதத்தின் முடிவு" என்று அர்த்தம்."வேதத்தின் முடிவு" என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் உண்டாகிறது. வேதம் என்கிற புஸ்தகத்துக்கு முடிவான பாகமாக இருப்பது என்பது ஒரு அர்த்தம். வேதத்தின் முடிந்த முடிவான அபிப்பிராயம் எதுவோ, வேதத்தின் பரம தாத்பரியம் எதுவோ, அதற்கும் "வேதத்தின் முடிவு" என்றே பெயர் கொடுக்கலாம். "உன் தீர்மானம் என்ன?" என்று கேட்பதற்கு பதில், "உன் முடிவு என்ன?" என்று கேட்கிறோம் அல்லவா? இப்படி, வேதத்தின் முடிவு என்றால் வேதத்தின் தீர்மானமான் கருத்து, வேதத்தின் உத்தேசம், வேதத்தின் லக்ஷ்யம் என்றும் அர்த்தமாகிறது.
    உபநிஷத்துக்களுக்குத்தான் "வேதாந்தம்" என்ற பெயர் இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு அர்த்தங்களிலும் அது வேதாந்தமாக, அதாவது வேதத்தின் முடிவாக, இருக்கிறது.
    வேத புஸ்தகத்தை எடுத்துக் கொண்டால் முதலில் ஸம்ஹிதை, அப்புறம் பிராம்மணம், அதற்கப்புறம் ஆரண்யகம் என்று மூன்று பகுதிகள் வந்து, கடைசியாக, ஆரண்யகத்தின் முடிவுலேயே உபநிஷத்துக்கள் வருகின்றன.
    வேதத்தின் கருத்தை, அர்த்தத்தை, அபிப்பிராயத்தை எடுத்துக்கொண்டாலும், முன்னே சொன்ன ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் இவற்றில் வருகிற கர்மா, விசாரணை எல்லாவற்றுக்கும் முடிவான மோக்ஷத்தைப் பற்றி நேராக (direct-ஆக) எடுத்துச் சொல்கிற தத்வோபதேசமாக இருப்பவை உபநிஷத்துக்கள்தான்.
    இப்படிப்பட்ட உபநிஷத்துக்கள் நூற்றுக்கு மேல் ஏராளமாக இருந்தாலும், முக்கியமானதாகப் பத்தை பொறுக்கி எடுத்து, ஆதிசங்கர பகவத்பாதாள் பாஷ்யம் (விரிவுரை) எழுதினார். ஈசம், கேனம், கடம், பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம், தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் என்ற அந்தப் பத்துக்குப் பெயர்.
    நம் மதத்தின் வேராக, ஆதார ஸ்தம்பமாக இருக்கப்பட்ட வேதத்தின் முடிந்த முடிவாக, இந்த உபநிஷத்துக்கள் தெரிவிக்கிற தத்வம் அத்வைதந்தான் என்று ஆசார்யாள் தம்முடைய பாஷ்யங்களின் மூலம் விளக்கியிருக்கிறார். 'இல்லை, அவை விசிஷ்டாத்வைதத்தைத்தான் சொல்கின்றன' என்பதாக, நம் ஆசார்யாளுக்குப் பிந்தி வந்த ஸ்ரீ ராமானுஜாசாரியார் பாஷ்யம் செய்திருக்கிறார். அவருக்குப் பிறகு வந்த ஸ்ரீ மத்வாசாரியார் வேதாந்தத்தின் தாத்பரியம் த்வைதம்தான் என்று பாஷ்யம் எழுதியிருக்கிறார். இப்படியே வேதத்தை ஒப்புக்கொள்ளும் அநேக ஹிந்து மதப் பிரிவுகளின் ஆசார்யர்களும், உபநிஷத் தாத்பரியம் தங்கள் தங்கள் கொள்கையைத்தான் சொல்கிறது என்கிறார்கள்.
    உபநிஷத்துக்கள் அத்வைதத்தைச் சொல்லவில்லை என்ற தங்கள் அபிப்பிராயத்துக்கு ஆதரவாக, மற்ற சம்பிரதாய ஆசார்யர்கள் முக்கியமாக என்ன சொல்கிறார்களென்றால், நம் ஆசார்யாள் லோகமெல்லாம் மாயை என்று சொல்வதற்கு மேற்படி தசோபநிஷத்துக்களில் (பத்து உபநிஷத்துக்களில்) நேராக ஆதாரம் இல்லை என்பதுதான்.
    ஜகத்தை மாயை என்று அத்வைதத்தில் சொல்கிறதற்கு உபநிஷத்துப் பிரமாணமில்லை என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
    இது பிசகு.
    ஒவ்வொரு உபநிஷத்தையும் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் சாந்தி மந்திரம் என்று ஒன்று சொல்ல வேண்டும். ஈசாவாஸ்யத்தில் ஆரம்பித்து பிருஹதாரண்யகத்தோடு முடிப்பதாகப் பத்து உபநிஷத்துக்களையும் பாராயணம் பண்ணும்போது, ஈசாவாஸ்யத்தின் முதலில் ஆரம்பமாகவும், பிருஹதாரண்யகத்தை முடிக்கும் போது கடைசியாகவும் வருகிறது ஒரே சாந்தி மந்திரம்தான். அதற்கு என்ன அர்த்தம் என்றால், "பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான உலகம் வந்திருக்கிறது. இப்படி இந்த உலகம் வந்த பின்பும் பிரம்மம் பூர்ணமாகவே இருக்கிறது" என்று அர்த்தம்.
    பிரம்மம் என்பதை "அத:" என்றும், உலகம் என்பதை "இதம்" என்றும் இந்த மந்திரத்தில் சொல்லியிருக்கிறது. "அத:" என்பது அது - அதாவது தூரத்தில் இருப்பது. "இதம்" என்பது இது - அதாவது கிட்டத்தில் இருப்பது. தமிழில் இருக்கிற மாதிரியேதான் ஸம்ஸ்கிருதத்திலும் இருக்கிறது. இப்போது நாம் இருக்கிற ஸ்திதியில் பிரம்மம் நமக்குத் தூரத்திலுள்ள விஷயமாகத்தான் இருக்கிறது; நமக்குத் தெரிவது கிட்டத்திலுள்ள உலகம்தான்.
    தூரத்தில் இருப்பவனைக் கட்டை விரலுக்கு அடுத்த விரலை நீட்டிக் காட்டுகிறோம். இதனால் அதற்கு ஆள்காட்டி விரல் என்று பெயர். பெருமாளும் இப்படியே அது என்று தூரத்திலே காட்டப்பட வேண்டியவராகத்தான் இருக்கிறார். அதனால் அதைப் 'பெருமாள் காட்டி விரல்' என்று கூடச் சொல்லிவிடலாம். இதே விரலை ஆட்டினால் ஒருத்தனை மிரட்டுவதாக அர்த்தம் ஏற்படுகிறது. "உன்னை என்ன பண்ணுகிறேன் பார்!" என்று சொல்லிக்கொண்டு இந்த விரலைத்தான் ஆட்டுகிறார்கள். ஸம்ஸ்கிருதத்தில் 'தர்ஜனம்' என்றால் மிரட்டுவது, அதட்டுவது என்று அர்த்தம். அதனால் இந்த விரலுக்குத் 'தர்ஜனீ' என்றே பேர் வைத்திருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ இப்படி அதட்டுவதை வைத்துப் பேர் கொடுக்காமல், தமிழில் 'அது' என்று எட்டத்தில் இருக்கிற பெருமாளை இது காட்டுவதாக வைத்து, "ஆள்காட்டி விரல்" என்று சொல்லியிருப்பதுதான் பிடித்திருக்கிறது.
    பேர் "தர்ஜினீ" என்றிருந்தாலும், பரம்பொருளைக் காட்டுகிறது என்ற அபிப்பிராயம் நம் சாஸ்திரங்களிலும் இருக்கிறது. வேதத்திலும், அதைவிட அதிகமாக மந்திர தந்திர ஆகமங்களிலும் அநேக முத்திரைகள் பிரயோஜனப்படுகின்றன. விரல்களால் செய்கிற அபிநயங்களுக்கு முத்திரை என்று பெயர். இப்படிப்பட்ட முத்திரைகளில் ஒன்றில், தர்ஜினீ என்ற விரலை ஆளைக் காட்டுகிற மாதிரியே வெளியே நீட்டி, அங்குஷ்டத்தை (கட்டை விரலை) உள்பக்கமாகத் தன்னை நோக்கி நீட்டிக்கொள்வதாக ஒரு முத்திரை உள்ளது. இதற்கு தத்வார்த்தம், "அது என்று எங்கேயோ இருப்பதாக நினைக்கப்படும் பரமாத்மாவேதான் ஜீவனுக்கு உள்ளேயும் இருக்கிறது" என்பது. இங்கே தர்ஜினீ அதட்டலுக்கு இல்லாமல் பெருமாளைக் காட்டவே உபயோகிக்கப்படுகிறது. இந்த முத்திரையில் வரும் தத்வத்தையே ஈசாவாஸ்யத்தில் "தத்தூரே தத்வந்திகே", "தூரத்தில் உள்ளதே கிட்டத்தில் உள்ளே யிருக்கிறது" என்று சொல்லியிருக்கிறது."அப்பாலுக்கு அப்பாலை, உள்ளிலங்கு சோதியை" என்று இதை தேவாரத்திலும் சொல்லியிருக்கிறது.
    நான் மேலே சொன்ன சாந்தி மந்திரத்தில் 'அது' என்று பிரம்மத்தையும், 'இது' என்று ஜகத்தையும் சொல்லியிருக்கிறது. இந்த இடத்தில் 'இது' என்பது ஜீவனைக் குறிக்காமல் ஜகத்தைக் குறிக்கிறது. இப்போது பரமாத்மா நமக்குத் தெரியாமல், ஜகத்துதான் பார்வைக்கு நிஜம் மாதிரித் தெரிவதால், இதையும் பூர்ணம் என்று சொல்லியிருக்கிறது. ஆனாலும் இது வாஸ்தவத்தில் நிஜமில்லை, பூர்ணமில்லை என்பது பின்னால் வருகிற வார்த்தைகளைப் பார்த்தால் நிஸ்ஸந்தேஹமாக [ஐயமற]த் தெரிகிறது. இந்த ஜகத்தான பூர்ணத்தைக் கழித்த பிறகும் அந்தப் பிரம்மம் பூர்ணமாகவே இருக்கிறது என்று பின்னால் வருகிறது. ஜகத் வாஸ்தவமாகவே பூர்ணமாக இருப்பதால் இது ஸாத்யம் இல்லை. பூர்ணம் மைனஸ் பூர்ணம் என்பது ஸைபராகத்தான் வேண்டும். அப்படியில்லாமல் பூர்ணம் மைனஸ் ஜகத் என்பது பூர்ணமே என்றால் அப்போது ஜகத்துதான் ஸைபர் என்று ஏற்படுகிறது. ஸைபர் என்றால் இல்லாதது. இதைதான் மாயை என்பது. 'இறுதி நிலையில் இல்லாமல் போவது; பார்வைக்கு மட்டும் நிஜம் மாதிரித் தெரிவது' - இதுதான் ஆசார்யாள் மாயைக்குக் கொடுத்திருக்கிற லக்ஷணம் (Definition). பார்வைக்கு நிஜம் மாதிரி இருப்பதைத்தான் வியாவஹாரிக (விவகாரத்தில் உள்ள) ஸத்யம் என்று ஆசார்யாள் ஓரளவுக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். இதே அபிப்பிராயத்தில்தான் விவகாரத்தின் view-விலிருந்து [கோணத்திலிருந்து] உபநிஷத்தும் ஜகத்தைப் "பூர்ணம்" என்றது. ஆனாலும் இதை இல்லாமல் பண்ணிக்கொண்டு பாரமார்த்திக ஸத்யமான (எப்போதும் உயர்ந்த ஸத்யமாக மாறாமலிருக்கிற) பிரம்மத்தில் சேரவேண்டும் என்ற ஆசார்யாளின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிற ரீதியிலேயே, உபநிஷத்திலும், இந்த ஜகத்தைக் கழித்த பின்னும் குறைவில்லாமலே பூர்ணமாக இருக்கிற, "அது"வை விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. "இது" போனபின்னும் "அது" அதுவாகவே கொஞ்சம்கூடக் குறைவில்லாமலிருக்கிறது என்று சொன்னால், அப்படிப்பட்ட "அதில்"தான் சேரவேண்டும் என்று உபதேசம் பண்ணுவதாகவே ஆகும்.
    உபநிஷத் பாராயணத்தில் ஆரம்பம், முடிவு இரண்டிலும் வருகிற மந்திரமே மாயைக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.
    * * *
    தசோபநிஷத்துக்களும், இன்னம் அதில் சேராத ச்வேதாச்வதரம், கெளஷீதகி, ந்ருஸிம்ஹதாபினி போன்ற நீண்டகால வழக்கிலே வந்திருக்கின்ற மற்ற உபநிஷத்துக்களும் பொதுவாக ஒரே உத்தேசத்தில் ஏற்பட்டு, ஒரே லக்ஷ்யத்துக்கு அழைத்துப் போகிறவைதான்.
    ஜீவர்கள் என்று நான் இருக்கிறோம். நாம் வாழ்க்கை நடத்துகிற ஜகத் என்று ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் உண்டாக்கி, நடத்திக் கொண்டிருக்கிற ஈச்வரன் என்று ஒருத்தம் இருக்கிறான். 'ஜீவ-ஜகத்-ஈச்வரன் என்கிற இந்த மூன்றும் என்ன? இந்த ஜகத் வியாபாரத்தில் ஜீவன் இன்பத்துக்கும் துன்பத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பது போல் இல்லாமல், இவன் சாச்வதமான இன்பத்திலேயே இருக்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று ஆராய்ந்து, அனுபவ ரீதியில் பதில் சொல்வதுதான் உபநிஷத்துக்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான லக்ஷ்யம். இவை முடிவாகச் சொல்வது என்ன?
    பிரம்மம் என்கிற ஒரு பரம்பொருள்தான் ஜீவன், ஜகத் இரண்டுக்கும் காரணம். அந்தக் காரணமும் அதன் விளைவான ஜீவ-ஜகத்துக்களும் வேறு வேறு இல்லை. ஏனென்றால் பிரம்மத்துக்கு வேறாக எதுவுமே இருக்கமுடியாது. இப்போது ஜகத்தையே நிஜம் என்று நினைக்கிற ஜீவாத்மா, அதை ஒதுக்கிவிட்டு, தன்னையே யார் என்று விசாரம் பண்ணிப் பார்த்து கொண்டால், 'உடம்பு நானில்லை, இந்திரியங்கள் நானில்லை, மனஸ் நானில்லை, புத்தி நானில்லை, பிராணன் நானில்லை' என்று ஒவ்வொன்றும் கழன்று போய் கடைசியில் 'தான் பிரம்மமே' என்று கொள்வான். 'பரமாத்மா என்று ஒன்று ஜீவாத்மாவைப் படைத்தது என்று சொல்வதுகூட ஒரு மாயைதான். ஜகத்தெல்லாம் அந்த மாயையின் விளையாட்டுதான். வாஸ்தவத்தில் பரமாத்மா ஜீவாத்மா என்ற பேதமில்லாமல் ஆத்மா என்று ஒன்றுதான் இருக்கிறது. அந்தே ஒன்றே ஸத்தியம் என்று தெரிந்து கொள்வான். அப்படி சத்தியத்தோடு இரண்டற (அ-த்வைதமாக) இருக்கிற போதுதான் சுக-துக்க ஊசலாட்டம் போய் ஒரே சாச்வத இன்பமாக, சாந்தியாக ஆகிறது. அது தான் மோக்ஷம்.
    இருப்பது ஒன்றுதான். பார்ப்பது பலவாக இருந்தாலும் உள்ளது ஒன்றே என்று அனுபவத்தில் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால் சாச்வத சாந்தியை, ஸதானந்தத்தைப் பெற வேண்டும். இதுதான் உபநிஷத்துக்களின் லக்ஷ்யம்.
    இப்படி நான், அத்வைதந்தான் வேதாந்தத்தின் முடிவான ஸித்தாந்தம் என்று சொன்னால், மற்ற த்வைத, விசிஷ்டாத்வைத ஸித்தாந்திகள் ஆக்ஷேபம் பண்ணக்கூடும். அந்த ஸித்தாந்தங்களின் பெரியவர்களும் இதே உபநிஷத்துக்களுக்குத்தான் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். தங்கள் தங்கள் கொள்கையே ஒளபநிஷதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால் அத்வைதந்தான் உபநிஷத்துக்களின் உபதேசம் என்றால் எப்படி ஏற்பது?
    அத்வைதம் என்பது த்வதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் தழுவி முதல் படிகளில் ஒப்புக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் இந்த ஆக்ஷேபனை வராது.
    உபநிஷத்துக்களில் அநேக விஷயங்கள் அத்வதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று சொல்லும்படியாக மாறுபட்டு இருக்கத்தான் செய்கின்றன. ஓர் இடத்தில் 'ஜீவாத்மா வேறே, பரமாத்மா வேறே, ப்ரபஞ்சம் வேறே' என்பதாகவும், இன்னோரிடத்தில் 'நான் என்கிற உயிர் ஜீவாத்மா; அந்த உயிருக்குள் உயிர் பரமாத்மா; எங்கும் நிறைந்திருக்கும்படியான பரமாத்மா இப்படி ஸர்வாந்தர்யாமியாக இருக்கிறார்' என்பதாகவும், வேறு ஒரு இடத்தில் 'இரண்டும் ஒன்றுதான்' என்பதாகவும், இப்படி அநேக வாக்கியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் உபநிஷத்துக்களில் நடுநடுவே சொல்லியிருக்கும்படியான சில வாக்கியங்களை எடுத்துக் கொண்டு, ஒன்றுக்கொன்று விரோதம்போல் இருக்கிற விஷயங்கள் எல்லாம் முரணானவை அல்ல என்றும், அவை எல்லாமே சரிதான் என்றும் காட்டுகிறார்கள். அத்வைத பிரகாரமாகப் பார்த்தால், பரமாத்மாதான் ஸர்வாத்மகனாக இருக்கிறான் என்றும், விசிஷ்டாத்வைதப் பிரகாரம் பார்த்தால் அவன்தான் அந்தர்யாமியாக உடலில் உயிர்போல் இருக்கிறான் என்றும் அர்த்தம் பண்ணித் தீர்மானம் செய்கிறார்கள். இப்படி இரண்டுக்கும் மத்தியஸ்தம் பண்ணி வைக்கும்படியான வாக்கியங்களை 'கடக வாக்கியங்கள்' என்பார்கள். இந்தக் கடக வாக்கியங்களை எடுத்துக் கொண்டு உபநிஷத்துக்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களே சொல்லப்படவில்லை என்று தீர்மானம் பண்ணுகிறார்கள்.


    தொடரும்
Working...
X