சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(159-வது நாள்.)*
*திருவிளையாடல் புராணத் தொடர்.*
*28-வது படலம்.*
*நாகம் எய்தது.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பாண்டியன் அனந்தகுணனன் சிறந்த பண்பாளன்.


சிவச் சின்னங்களின் மெய்ப் பொருள் தெரிந்து எல்லையற்ற பக்தி கொண்டு சிவநேசச் செல்வனாக விளங்கினான்.


நாடெங்கும் சைவ மணம் நன்கு பரவியது. பாண்டித் திருநாடே சிவவேடம் கொண்டு சிறந்து விளங்கியது.


பாண்டிப் பெருநாடு சிவத்திருநாடாகப் பொலிவதைக் கண்ட சமணக்குரவர் எட்டாயிரம் பேர்களுக்கும் பொறாமை உண்டாயிற்று. பொறாமையின் காரணமாகச் சிவபக்த சிகாமணியாம் அனந்தகுண பாண்டியனைக் கொல்ல வழி தேடினர்.


ஒரு காத அளவிற்கு யாகசாலை அமைத்தனர். அதிலே நெருப்பு வளர்க்கும் குண்டமும் அமைத்தனர் மிகவும் கோரமாக நாடு நடுங்கும் முறையில் யாகத்தைச் செய்தனர்.


யாகத்தின் விளைவாகக் குண்டத்திலிருந்து அரக்கன் ஒருவன் தோன்றச் செய்தனர்.


அவன் தலை படங்காட்டியது. வாய் இருள் கப்பி காட்டியது. வளைந்த அகோர விஷப் பற்கள் வாய்க்கு வெளியிலேயே நீட்டி பயங்கூட்டியது. கண்கள் தீப்பிழம்பாய் சிவந்து எரித்தன. இவைகளோடு அவ் அவுணன் வெளிப்பட்டது ஒரு பெரிய மலையே பெயர்ந்து வந்தது போல இருந்தது. சினம் பொங்கச் சமணர்களைப் பார்த்த அவ்வரக்கன், *எனக்குப் பசியும் தாகமும் அதிகமாக இருக்கிறது.* உடனே நான் என்ன செய்ய வேண்டுமென கட்டளையிடுங்கள்"என்று கூறி இடிமுழக்கமிட்டான்.


சமணர்களும், *"நீ வேகமாகச் சென்று பாண்டியனையும் அவனது ஊரையும் அழித்து உன் பசியைப் போக்கி விட்டு வா,"* என ஏவுதல் செய்து அனுப்பினர்.


பசியாலும்.கோபத்தாலும் தூண்டப் பெற்ற அரக்கன், பெரிய பாம்பு எடுத்துக் கொண்டு மதுரை மாநகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.


பாம்பரக்கன் ஊர்ந்து சென்ற வழியெங்கும் பாழ்பட்டன. பசுமை வயல்வெளிகள் கருகின. நீர் நிலைகள் வற்றி வரன்டன.


பாம்பரக்கன் வருவதை அறிந்த மக்கள் ஓடிச்சென்று பாண்டியனை அடிபணிந்து பாம்பரக்கனின் வருகையைப் பற்றி முறையிட்டனர்.


உடனே பாண்டியன், முன்பு யானையைக் கொன்று, மதுரையைக் காத்த பெருவள்ளலாகிய சுந்தரேசப் பெருமானை பழையபடி நினைத்துப் பார்த்தான்.


இம்முறையும் அவரே காக்க வல்லர் எனக் கருதி கடவுள் முன் வந்து நின்று, *பெருமானே! சமணர்கள் ஏவிய பெரிய அரக்கனொருவன் பாம்புருவெடுத்து ஊரை அழிக்க வந்து கொண்டிருக்கிறான். மக்களையும் எளியோனையும் கருணை காட்டியருள வேண்டும் என மனமுருகி வேண்டுதல் செய்தான்.


பின் சிவபெருமானிடமிருந்து விடை பெற்று நீங்கி வந்தான். பின் பெருமானின் திருவடிகளையே எண்ணிச் சிந்தித்த வண்ணம் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு ஊரின் மேற்கு வாசல் எல்லைக்கு வந்து நின்றான்.


அப்போது பாம்பரக்கன் வருவதைக் கண்டான் அனந்தகுணன். கையிலே வில்லை எடுத்து நாணைப் பூட்டினான். பல வகையான அம்புகளையும் நெருப்புக் கணையையும் தொடுத்து ஏவிவிடுத்தான்.


அனந்தகுணன் அனுப்பிய அத்தனை அம்புகளையும் பாம்பரக்கன் தன் வாயைப் பொளந்து தீப்பிழம்பு தீக்கணல் பிரயோகித்து உமிழ்ந்து அத்தனை அம்புகளையும் நாசம் செய்தான்.


பாண்டியனால் பொறுத்திருக்க முடியவில்லை. மறுபடியும் சோமசுந்தரப் பெருமானை உளமாரச் சிந்தனை செய்து அர்த்த சந்திர பாணம் ஒன்றைப் பிரயோகம் செய்தான்.


அப்பாணமானது பாம்பரக்கனின் உடலைச் சின்னா பின்னமாக்கியது. பாம்பரக்கனின் பெரிய ஓசையொலிகள் சுரம் குறைந்து அலறி மண்ணில் வீழ்ந்தது. மண்ணில் வீழ்ந்த பாரம்பரக்கனின் மரண வேதனையில் கொடிய விஷத்தையும் உமிழ்ந்தான்.


கொடிய கருநாக விஷம் ஊர் முழுவதும் பரவின. நகர மக்கள் விஷத்தின் கடுமையால் மயங்கி வாடிப்போயினர். நச்சு வாயுக்கள் நகர் முழுவதும் பரவி ஊரே நரகமாகிக் கொண்டிருந்தன.


இதைக் கண்ட பாண்டியன் அஞ்சினான், வருந்தினான், மறுபடியும் நேரே திருக்கோயில் புகுந்தான் அண்ணலைப் பார்த்து.......................


*"ஆதி தேவர்கள் வேண்ட நஞ்சினை அமுதாய் உண்டாய்!* இப்போது மதுரை மூதூர் விஷத்தால் அழிகிறது. *"நீரே விஷத்தை கிரகித்துக் காத்தருளும்"* என்று வேண்டினான்.


அன்பருக்கு எளியவரான சோமசுந்தரப் பெருமான் கருணை கொண்டார். தமது ஜடாமகுடத்திலே உள்ள பிறைச் சந்திரனிடமிருந்து அமுதத்தைச் சிறிதே சிந்தச் செய்தார்.


பெருமான் அருளிச் சிந்திய அமுதத் துளி நகர் முழுவதும் பரவியது.


நஞ்சின் கடுமையையும், கொடுமையையும் போக்கி, மதுரத்தை பரப்பியது. மீண்டும் மதுரை மாநகரம் பழைய இயல்பு நிலைக்கு வந்தன. மதுரை இனிமையும் தூய்மையும் கண்டது. மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.


பின் அனந்தகுண பாண்டியன் நாகாபரணமும், சந்திர சேகருமான பெருமானுக்கு ஆளாகி நெடுநாள் ஆண்டு வரலானான்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
திருச்சிற்றம்பலம்.


*திருவிளையாடல் புராணத் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*